மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…

-முத்துவிஜயன்

ஒருவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் ஒரே குறிக்கோளுக்காக வெவ்வேறு முறைகளில் போராடினர். இவர்களுக்கு என்ன ஒற்றுமை? இந்தியாவின் மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி இவர்களை நடக்கச் செய்த சக்தி எது?

ஜூலை 23 என்ற நாள் இம்மூவரின் வாழ்வில் பெற்ற இடம் தான் இவர்களை இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது. தேசபக்தியே இவர்களை இணைத்தது; வழிநடத்தியது.

மராட்டிய கேசரி

“சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்” என சிங்கநாதம் செய்தவர் லோகமான்ய பாலகங்காதர திலகர். ஆங்கிலேய ஆட்சிக்கு சாமரம் வீசி வந்த காங்கிரஸ் கட்சியை, விடுதலைக்குக் குரல் கொடுக்கும் போராளி இயக்கமாக மாற்றியவர் திலகர்.

1856, ஜூலை 23 அன்று மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் திலகர் பிறந்தார். தாயார்:  பார்வதி பாய், தந்தை:  கங்காதர சாஸ்திரி.  திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராய் இருந்தார். திலகர், ‘கேசவராவ்’ என்று மூதாதையர் பெயராலும், ‘பாலன்’ என சிலரால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.

இளம் வயதில் இவர் சட்டம் படிக்க முடிவு செய்தபோது உறவினர்கள் சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்” என்றனர். அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.

அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்த திலகர், அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.

மேலும் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வு ஊட்டும் விதமாக சில நண்பர்கள் இணைந்து 1881ம் ஆண்டு மராட்டி மொழியில் ‘கேசரி’ என்ற பத்திரிகையும் (இன்றும் நடந்து வருகிறது) ஆங்கிலத்தில் ‘மராட்டா’ என்ற பத்திரிகையும் தொடங்கினார். கேசரி பத்திரிகை, ஆங்கிலேய ஆட்சியின்  அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டது. அது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை ‘கேசரி’ இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார்.  விடுதலை செய்யப்பட்ட பின் 1880இல் நண்பர்களுடன் சேர்ந்து ‘டெக்கான் எஜூகேசனல் சொஸைட்டி’யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே ‘பெர்க்யூஷன் காலேஜ்’ ஆனது.

1885ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். 1896ஆம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார்.

அந்த நேரத்தில் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் பஞ்சத்திலும், நோயிலும் அவதியுறும் வேளையில், இப்படிப்பட்ட கொண்டாட்டம் தேவையா? என்று திலகர் பத்திரிகையில் எழுதினார்.

1897ஆம் ஆண்டு இந்தக் கட்டுரைகளைக் காரணம் காட்டி,  16 மாதங்கள்  கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கிலேய அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை ‘லோகமான்யர்’ என்று அழைத்தனர்.

1898இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். 1907ஆம் ஆண்டு நாக்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது மிதவாத, தீவிரவாத கருத்துடையோரிடையே மோதல் ஏற்பட்டது. எனினும், விடுதலையில் தீவிர ஆர்வம் உடையோர் திலகர் தலைமையில் ஒருங்கிணைந்தனர். தமிழ்கத்தின் வ.உ.சி., மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் திலகர் அணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில், சில இளைஞர்கள் அந்நிய ஆட்சியைக் கவிழ்க்க பயங்கரவாத இயக்கங்களைத் தொடங்கினர். அதற்கு காங்கிரஸ் தீவிரவாதத்  தலைவர்களே காரணம் என கருதிய ஆங்கில அரசு, திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றோரை கைது செய்தது. அப்போது ராஜதுரோக வழக்கில், ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு திலகர் அனுப்பப்பட்டார்.

இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 1914இல் விடுதலை அடைந்தார்.

நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் விரைவில் சுதந்திரம் கிடைக்கும் என்ற  திலகர், சத்திரபதி சிவாஜி முடிசூடிய நாளை விழாவாகக் கொண்டாடி, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். விநாயக சதுர்த்தியை விடுதலைப் போராட்டத்தின் ஓர் அங்கம் ஆக்கியவரும் திலகரே.

1919க்குப் பிறகு மகாத்மா காந்தி இந்திய அரசியலில் மைய இடம் பிடிக்கத் தொடங்கினார். அப்போது,   “இந்தியாவுக்கு எதிர்காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்” என்று திலகர் தெரிவித்தார்.

1920ஆம் ஆண்டு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத  திலகர், தனது 63வது வயதில்  இறைவனடி (1920,  ஆகஸ்ட் 1)  சேர்ந்தார்.  

“திலகர் பெயரைச் சொன்னாலே மனதில் அன்பு ஊறும்; ஆண்மை பெருகும்” என்று மகாகவி பாரதி எழுதி இருக்கிறார். கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, இதழியல் என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பாலகங்காதர திலகரின் பெயரை நாமும் கூறுவோம்.  

வாழ்க திலகன் நாமம்!

-மகாகவி பாரதி

பல்லவி

வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!

சரணங்கள்

நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே!
எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க) 1

கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான் – நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
அகழி வெட்டினான்
சொல் விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக்
கொடியைத் தூக்கினான் (வாழ்க) 2

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன் பெயர்
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சி யவன் பெயர்
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர். (வாழ்க) 3

$$$

உ.பி. தந்த இளம்புயல்

காசியில் சுதந்திரக் கனலை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அதைத் தடுக்க முயன்ற ஆங்கில சப்-இன்ஸ்பெக்டர், ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சுவாமி சங்கரானந்தரை லட்டியால் அடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்த இடத்துக்கு காசி வித்யா பீடத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் ஊர்வலமும் வந்து சேர்ந்தது. அந்த ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சிறுவன் இந்தக் காட்சியைக் கண்டான். அகிம்சை முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறார்களே என எண்ணினான். உடனே கோபம் உச்சிக்கேறியது. ஒரு கல்லை எடுத்தான், குறி பார்த்தான், அடித்தான், சப் இன்பெஸ்க்டர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.

சிறுவன் சிரித்தவாறு கம்பீரமாக நின்றிருந்தான். சப்-இன்ஸ்பெக்டர்,  ‘அந்த பையனைப் பிடி, பிடி’ என்று கத்தினான். கான்ஸ்டபிள்கள் ஓடிவந்து அந்தச் சிறுவனைப் பிடிப்பதற்குள் அந்தச் சிறுவன் காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பிவிட்டான். அந்த சிறுவன் தான், சந்திரேசகர ஆசாத்.

இப்படி சிறுவயதிலேயே வீர சாகசம் செய்த சந்திரசேகர ஆசாத்தின் இயற் பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டபோது அவரது வயது 15. அப்போதே நீதிமன்றத்தில் சுவாரஸ்யமான பதிலை அளித்து நீதிபதியை கோபமுறச் செய்தார். அதன் பிறகே  ‘சந்திரசேகர ஆசாத்’ என அனைவராலும் அறியப்பட்டார்.

ஆசாத், 1906, ஜூலை 23இல் உத்தரப்பிரதேச மாநிலம், சபுவா மாவட்டம் ‘பாப்ரா’ என்ற ஊரில் பிறந்தார். அப்பா சீதாராம் திவாரி. அம்மா ஜக்ராணி தேவி.

சிறுவனாக இருக்கும்போதே வில் வித்தை கற்றார். இவரது அம்மாவிற்கு, சந்திரசேகரை சமஸ்கிருதம் படிக்கச் செய்ய வேண்டும் ஆசை. எனவே காசிக்கு அனுப்பினார்.

சப்-இன்ஸ்பெக்டர் மண்டையை உடைத்துவிட்டு தலைமறைவாக இருந்த போது, சந்திரசேகருக்கு ஒரு செய்தி வந்தது. ‘நாளை கல்லூரியில் ஹிந்தி பரீட்சை நடக்கிறது. அதைப் புறக்கணிக்க வேண்டும். அதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்’ என்று.

மறுநாள் காலை திட்டமிட்டபடி போராட்டம் நடந்தது. அப்போதும் போலீஸார் கையில் சிக்காமல் தப்பித்தார். ஆனாலும் போலீசார் அவரை தேடிச் சென்று 1922, பிப்ரவரி 12 அன்று கைது செய்தனர். அதன் பின் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு. பிப்ரவரி 21 அன்று அந்த வழக்கு நடந்தது.

நீதிபதி  “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.

“என் பெயர்…………. என் பெயர்…………..” என ஒரு கணம் ஏதோ நினைத்தவன் போல் நிறுத்தி “ஆசாத்” என சத்தமாக்க் கூறினார்.

இந்தப் பதிலைக் கேட்ட நீதிபதியும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கு கூச்சலும் குழப்பமும் நிகழ்ந்தது.

“சைலன்ஸ்! சைலன்ஸ்!” என்ற நீதிபதி, “உன் அப்பா பெயர் என்ன?” என்று கேட்டார்.

“விடுதலை” என்று பதில் சொன்னார் சந்திரசேகர்.

நீதிபதி பொறுமையிழந்து “சரியா சொல்லு, உன் வீடு எங்கே என்று?” என்றார்.

“என் வீடு சிறைச்சாலை!” என்றார் சந்திரசேகர்.

நீதிபதிக்கு கோபம் பொங்கி வந்தாலும், வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டே, “உன் வேலை என்ன?” என்று கேட்டார்.

“ஆங்கிலேயர்களை பாரதத்திலிருந்து விரட்டுவது” என பதிலளித்தார் சந்திரசேகர்.

கோபம் கொண்ட நீதிபதி தீர்ப்பை எழுதத் தொடங்கினார்.

“ஆசாத் என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த காங்கிரஸ் சுதந்திர வீரன் இந்தியக் குற்றவியல் சட்டம் 504 பிரிவின்படி போலீசாரை மிரட்டிய குற்றம் செய்திருக்கிறான். 447 பிரிவின்படி அனுமதியில்லாமல் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் நுழைந்திருக்கிறான். 143- ஆவது பிரிவின்படி அமைதியைக் குலைத்திருக்கிறான். இவை அனைத்தும் மதிப்புள்ள ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செய்துள்ள குற்றங்களாக இருந்தாலும், சிறுவன் என்ற காரணத்தால் நீதிமன்றம் இவனுக்கு 12 பிரம்படி தண்டனை விதிக்கிறது.” என்று முடித்தார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி, ஒத்துழையாமைப் போராட்டத்தை சில காரணங்களால்  கைவிட்ட பிறகும், கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

அப்போது ராம் பிரசாத் பிஸ்மில் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர்  ‘இந்துஸ்தான் குடியரசு’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்தார். இந்த அமைப்பில் சந்திரசேகர ஆசாத் சேர விரும்பினார். அதில் சேர்வதற்காக விளக்குத்தீயில் தன் கையை சுட்டுக்கொண்டு தனது மன உறுதியை நிரூபித்தார்.

1925-ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். அப்போது ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க முனைந்தது. சந்திரசேகர ஆசாத், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு போன்றவர்கள் இணைந்து சோஷலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாகக் கொண்டு இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை மாற்றி “இந்துஸ்தான் சோசலிஷக் குடியரசு அமைப்பு” என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

1931, பிப்ரவரி 27 அன்று அலகாபாத் பூங்காவில் இயக்க நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸார் சுற்றி வளைத்துக்கொண்டனர். நண்பர்களைத் தப்பிக்க  போலீஸாரிடம் போரிட்டார். அப்போது அவர் காலில் குண்டடிபட்டது. போலீஸாரிடம் சிக்க விரும்பாத ஆசாத்,  தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அப்போது ஆசாதுக்கு வயது 25 மட்டுமே.

ஆசாத்துடைய வாழ்க்கை, கொள்கைக்காக சமர்ப்பணம் ஆனது. பிறழாத தேசபக்தி கொண்ட லட்சியப் பற்று ஒன்றே அவருடைய வாழ்க்கை மூச்சு.

$$$

தமிழகத்தின் வீரமுரசு

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில்,  பாலகங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்க முடியாத தியாகசீலர்கள். தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்படக் காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர்  ‘வீரமுரசு’ எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோராவர்.

சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்: 4 அக்டோபர் 1884, பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு.  இவரது தந்தையார் ராஜம் ஐயர்,  தாயார் நாகம்மாள்.

இவர் கோவை, புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிக். தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.  

சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினார்.

1906இல் ஆங்கிலேய வைஸ்ராய் கர்சான், வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தார். நாட்டில் இந்தப் பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது.  எங்கும் ‘வந்தேமாதரம்’ எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி  கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம், சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ மகாகவி பாரதி தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார்.  இவரது பேச்சில் அனல் வீசியது. அந்தச் சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது.

1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள்,  வ.உ.சி. , சிவா உள்பட பலர் மீது ராஜதுரோக வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றார்; அப்பீலில் அது குறைக்கப்பட்டது. வ.உ.சி. கோவை சிறையிலும், சிவா சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். சிவா

ஆறாண்டு காலம் சிறைத் தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிவா சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் தொழுநோய். இதனை அவர்  ‘கொடியதோர் வியாதி கொல்லுது என்னை’ என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். ‘ஞானபானு’ எனும் பெயரில் இவர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும்,  வ.வே.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர்  ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார்.

இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையான பின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாஸை கொல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923-இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது.  இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதை எதிர்த்து மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார்.

இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார்.

இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்டார். வாழ்வின் இறுதியில், சிவா  1925, ஜூலை 23இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். அப்போது அவருக்கு வயது 41 மட்டுமே.

இன்று பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் கம்பீரமாக எழுது நிற்கிறது. எனினும் சிவாவின் ஆசைப்படி இன்னமும் இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெறவில்லை. அதனை நிறைவேற்றுவது நமது கடமை.

$$$

One thought on “மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…

  1. மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி. இந்தக் கட்டுரை சுதந்திரப் போராட்டத்தில் தங்களது வாழ்க்கையை ஆஹூதி செய்து கொண்ட மூன்று புரட்சிப் போராளிகள் பற்றி எழுச்சி தரும் நிகழ்ச்சிகளைக் குறித்ததாய் இருந்தது.
    மூன்று புரட்சிப் போராளிகள் திருவடிகளிலும் பணிந்து வணங்குகிறோம். அவர்கள் நல்லாசிகளை வேண்டுகிறோம்.
    சந்திரசேகர் ஆசாத்தின் ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாறு கன்னடத்தில் பாபு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் “அஜேய” என்ற தலைப்பில் ஒரு பெரிய நூலாக எழுதப்பட்டது.
    அது தமிழில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் ஒரு க்ஷேத்திர அதிகாரியாக உள்ள திரு. ஹெச். எஸ். கோவிந்தா அவர்களாலும் அடியேனாலும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு “விஜய பாரதம்” தமிழ் வார இதழில் மூன்று ஆண்டுகள் தொடராக வெளி வந்தது.

    Liked by 1 person

Leave a reply to பு ந. சங்கரராமன். Cancel reply