பட்டியல் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!

-ஆசிரியர் குழு

ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளில் பங்கு கேட்டு, மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் அரசியல்ரீதியாக நிர்பந்தம் செய்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கை நியாயமற்றது என்பதை விளக்கி, ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பறிபோகக் கூடாது என்று  வலியுறுத்துகிறது, இக்கட்டுரை. ஆந்திர பிரதேசத்தில் இயங்கும்  ‘எஸ்.சி., எஸ்.டி. ஹக்குல சம்க்ஷேம வேதிகா’ வெளியிட்ட ஆங்கில நூலின் சுருக்கம் இது. சென்னையில் உள்ள நந்தனார் அறக்கட்டளை சிறு நூலாக வெளியிட்டுள்ள இக்கட்டுரையை, நமது தளத்தில் பதிவு செய்கிறோம்…

நந்தனார் நாயனார்

சமர்ப்பணம்:

  • திருநாளைப்போவார் நாயனார் (என்கிற) ஸ்ரீ நந்தனார்
  • சுவாமி சகஜானந்தர்
  • டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

உள்ளடக்கம்:

1. பொதுநல வழக்கின் பின்னணி

2. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மாபெரும் தவறு

3. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் கூறியது என்ன?

4. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய உறுப்பினர் செயலாளரின் மாற்றுக் கருத்து

5. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையை ஏன் நிராகரிக்க வேண்டும்?

6. பட்டியல் சமுதாயத்தினர் யார்? ஜனாதிபதி உத்தரவு என்ன சொல்கிறது?

7. உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கூறுவது என்ன?

8. சர்ச்சுகளின் புதிய புதிய உத்திகள்

9. கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் பின்தங்கியவர்களா?

10.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எஸ்.சி. எதிர்ப்பு, சிறுபான்மை சார்புக் கொள்கைகள்.

11. பட்டியல் சமுதாயத்தினர் முன்புள்ள சவால்கள்

12. மதம் மாறுவதால் ஒருவன் தன் ஜாதியை இழக்கிறானா?

13. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், என்ன பாதிப்பு?

14. நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையம் அமைக்கப்பட்டது சரியான முடிவு

15. இறுதியாக…


சுவாமி சகஜானந்தர்

1. பொதுநல வழக்கின் பின்னணி

2004 தேர்தலுக்குப் பிறகு, திருமதி சோனியா காந்தியின் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு அமைந்தது. டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக ஆக்கப்பட்டார். இந்த அரசு இரண்டு முறை அதாவது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது. இதற்கு முந்திய காங்கிரஸ் அரசுகளில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் ஆட்சிக் காலங்கள், சிறுபான்மையினரை திருப்தி செய்வதாக இருந்தாலும், அவை எஸ்.சி., .எஸ்.டி. வளர்ச்சிக்காகவும் இருந்தன. ஆனால் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மாறிவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில், ராஜீந்தர் சச்சார் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

ராஜீந்தர் சச்சார் கமிஷன் அறிக்கை மீதான விவாதத்தின் போது, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மக்களவையில், ’வளங்கள் மீதான முதல் முன்னுரிமை சிறுபான்மையினரின் உரிமையாகும். இது எங்கள் அரசாங்கத்தின் கொள்கையாகும். எனவே எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தின் பலனும் முதலில் சிறுபான்மையினருக்கே வழங்கப்பட வேண்டும்’ என்று அறிவித்தார்.

மன்மோகன் உரையில், பட்டியல் சமுதாயத்தினர் (SC) மற்றும் பழங்குடியினர்கள் (ST) பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பட்டியல் சமுதாயத்தினர் மற்றும் பழங்குடியினர்கள் பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர். அவர்கள் பல துறைகளில் பாகுபாடு காட்டப்பட்டனர். எனவேதான், நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், பல்வேறு காரணங்களால், எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்களின் வளர்ச்சி நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை.

இந்த நாட்டை 800 வருடங்கள் முஸ்லிம்களும், 200 வருடங்கள் கிறிஸ்தவர்களும் (பிரிட்டிஷ்) நம் நாட்டை ஆண்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் ஆளும் வர்க்கமாக இருந்தனர். முஸ்லிம்களிலும் கிறிஸ்தவர்களிலும் ஏழைகள் சிலர் இருக்கலாம். ஆனால் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டிற்கான அளவுகோல், பொருளாதார அடிப்படையோ, வறுமையோ அல்ல.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள்,  ‘எங்கள் மதத்தில் ஜாதி மற்றும் தீண்டாமை இல்லை. சகோதரத்துவம் எங்கள் மதத்தின் சிறப்பு’ என்று பலமுறை அறிவித்துள்ளனர். ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் ஏற்பாட்டில், 2004 டிசம்பர் 16 அன்று  ‘இந்திய கத்தோலிக்க பிஷப் காங்கிரஸ்’ 48 எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்த 48 எம்.பி.க்களில் 34 பேர் கிறிஸ்தவர்கள். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் 2004-இல் எஸ்.சி. சமுதாயத்திலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி ஒரு பொதுநல மனு தாக்கல் (WP(C)180/2004) செய்தனர்.

அப்போது மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த மனுவில்,  ‘மதம் மாறிய பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க தங்கள் அரசு விரும்புவதாக’ அறிவித்தது. அப்போது உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம்,  ‘உங்கள் கருத்துக்கு ஆதரவாக ஏதாவது தரவுகள் சமர்ப்பிக்க முடியுமா?’ என்று கேட்டது.

அதையடுத்து, மதம் மாறிய பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எஸ்.சி. பட்டியலில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் 2005 செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியின்  ராஜ்யசபா உறுப்பினராகவும், மொழியியல் சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் அதற்கு முன் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

2. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம்: ஐ.மு.கூட்டணி அரசின் மாபெரும் தவறு

தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் என்பது, பட்டியல் சமுதாயத்தினர் (SC) மற்றும் பழங்குடியினர்கள் (ST) நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எஸ்.சி. இடஒதுக்கீட்டை மதம் மாறிய பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்துவது, உண்மையான இந்து பட்டியல் சமுதாயத்தினரை மோசமாக பாதிக்கும் மிக முக்கியமான முடிவு. மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் இந்த முடிவு குறித்து, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் கருத்தைக் கேட்கவில்லை. அது ஒரு இமாலய தவறு.

மறைந்த பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, 1996ஆம் ஆண்டில், மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கும் மசோதா தயாரிக்கப்பட்டது. அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், எஸ்.சி.–எஸ்.டி.  ஆணையத்தின் தேசியத் தலைவருமான திரு.வெங்கடராமையா அந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தார். அந்த நடவடிக்கை எஸ்.சி. சமுதாய வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்ற குறிப்பைத் தயாரித்து, அந்தக் குறிப்பை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பினார். இதன் விளைவாக அந்த மசோதா முன்மொழிவு திரும்பப் பெறப்பட்டது.

திரு. சூரஜ்பன் தலைமையிலான தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், எஸ்.சி. சமுதாயத்திலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கக் கூடாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் இந்தக் கருத்துகளுக்கு எதிராக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பலரது கருத்துகளைக் கேட்டது. எஸ்.சி. அமைப்புகளிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வந்தன. இறுதியாக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தனது அறிக்கையை 2007 மே 10 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

3. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் கூறியது என்ன?

மேலே கூறப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அந்த ஆணையம் அளித்த பரிந்துரை இது:

 “அரசியலமைப்பின் (பட்டியல் சமுதாயத்தினர்) ஆணை 1950 பத்தி 3-இல், முதலில் இந்து பட்டியல் சமுதாயத்தினருக்காக மட்டுமின்றி, பின்னர் சீக்கியர் மற்றும் பௌத்தர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் (ஜெயின்), பார்சிகள் இதன் வரம்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஷரத்து முழுவதுமாக தகுந்த நடவடிக்கை மூலம் நீக்கப்படவேண்டும். இதனால் பட்டியலின ஜாதி அந்தஸ்தை மதத்திலிருந்து முற்றிலும் விலக்கி, பட்டியல் சமுதாயத்தினரையும், பட்டியல் பழங்குடியினரைப் போல முழுமையாக மதத்தை விலக்க வேண்டும்” என்கிறது ரநீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம்.

4.  நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய உறுப்பினர் செயலாளரின் மாறுபட்ட கருத்து:

ஆனால், இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர்  திருமதி. ஆஷாதாஸ், ஐஏஎஸ், பின்வரும் மாறுபட்ட கருத்தை சமர்ப்பித்திருந்தார்:

(நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தில் திருமதி ஆஷாதாஸ் மட்டுமே எஸ்.சி. உறுப்பினர். ஆணைய அறிக்கைக்கு எதிராக விரிவான ஒன்பது பக்க மறுப்புக் கருத்தை அவர் அளித்துள்ளார்.)

4.1)  பட்டியல் சமுதாயத்தினரின் வரலாற்றுப் பின்னணி, அரசியலமைப்பு மற்றும் பட்டியல் சமுதாயத்தினர் யார் என்பதைப் புரிந்துகொள்ள, அதன் தோற்றத்தைக் கண்டறிவது முக்கியம்.  ‘பட்டியல் சமுதாயத்தினர்’ என்ற சொல் முதன்முறையாக இந்திய அரசமைப்பு சட்டம் 1935-இல் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் 1936ஆம் ஆண்டின் இந்திய அரசு பட்டியல் சமுதாயத்தினர் ஆணையை வெளியிட்டது. 1936 ஏப்ரல் 30-இல் வெளியிடப்பட்ட இந்த ஆணையின் 3வது பத்தியில்,  ‘எந்த ஒரு இந்திய கிறிஸ்தவரும் அட்டவணை ஜாதியின் உறுப்பினராகக் கருதப்படக் கூடாது’ என்று கூறுகிறது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராக இருந்த சர் டென்சில் இபெட்சன், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட ஜாதிகளை 17 குழுக்களாக வகைப்படுத்தினார்.

இருப்பினும், அவர்களின் இந்துப் பின்னணி குறித்து விவாதங்கள் எழுந்த போது, 100 சதவீதம் இந்துக்களாக இருப்பவர்களை அடையாளம் காண்பதற்கு அளவுகோல்கள் உருவாக்கப்பட்டன. அவர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்கள் – மேல் ஜாதிக்காரர்களுடன் அவர்களுக்குள்ளான  தொடர்பு, கடவுளை வழிபடுவதற்கு உள்ள தடை, கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுப்பு என்பது போன்றவை. 1880-ஆம் ஆண்டிலேயே பட்டியல் சமுதாயத்தினரை அடையாளம் காண்பது என்பது இந்து சமுதாயத்தில் உள்ளவர்கள் குறித்தே இருந்தது என்பது வெளிப்படையானது.

இந்த அளவுகோல்களை வேறுவிதமாகக் கூறினால், அருவருக்கத்தக்க நடைமுறையாக இருந்த தீண்டாமை என்னும் பாகுபாடு மட்டுமே இதற்குப் பொருந்தும்.

4.2) அட்டவணையில் குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ப்பதற்கான அடிப்படை இந்திய அரசு (பட்டியல் சமுதாயத்தினர்) ஆணை 1936, மற்றும் அதைத் தொடர்ந்து 1950இன் அரசியலமைப்பு (பட்டியல் சமுதாயத்தினர்) ஆணையாகும்.

பிரிட்டிஷ் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் என்னவெனில், இந்துக்கள் இடையே இருந்த கொடிய தீண்டாமைப் பழக்கத்தின் காரணமாக, கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியோரைப் பட்டியலிடுவதே ஆகும். இந்த நாட்டில் தீண்டாமை நோய்க்கு அடிப்படைக் காரணம் இந்து மதமே.  1936 மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட ஜாதிகள் பட்டியலில் ஜாதிகள் சேர்க்கப்படுவதற்கு மதம் மிக பெரிய காரணியாக இருந்தது.                 

அரசியலமைப்பு (பட்டியல் சமுதாயத்தினர்) ஆணை 1950-இல்,  1956 ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. பட்டியலின சீக்கியர்களும் அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரிவில் சேர்க்கப்பட்டனர். பின்னர் 1990-ஆம் ஆண்டில், மற்றொரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. பட்டியலின பௌத்தர்களும் அந்தப் பிரிவில் கொண்டு வரப்பட்டது.

5. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையை ஏன் நிராகரிக்க வேண்டும்?

இந்த ஆணையம் தேசிய மற்றும் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையங்களின் கருத்துகளையும். செயலாளர் கருத்துகளையும் பரிசீலிக்கவில்லை.

6. பட்டியல் சமுதாயத்தினர் யார்? ஜனாதிபதி உத்தரவு என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341வது பிரிவின் ஷரத்து(1)இன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, கீழ்காணும் உத்தரவைப் பிறப்பித்தார்.

1. இந்த ஆணை அரசியலமைப்பு (பட்டியல் சமுதாயத்தினர்) ஆணை 1950  என்று அழைக்கப்படும்.

2. இந்த உத்தரவின் விதிமுறைக்கு உட்பட்டு, இந்த ஆணையில் உள்ள அட்டவணையில் (XXIIஇன் பகுதிகளில்) குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிகள், இனங்கள் அல்லது பழங்குடி உறுப்பினர்களை, பட்டியல் சமுதாயத்தினராகக் கருத வேண்டும்.

அதாவது இந்து, சீக்கியர் அல்லது பௌத்த மதத்தில் இருந்து வேறுபட்ட ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒரு நபர், பட்டியல் சமுதாயத்தினரின் பிரிவாகக் கருதப்பட மாட்டார்கள்.

7. உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் கூறுவது என்ன?

இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கேள்வி நீதித் துறையின் கவனத்தை ஈர்த்தது.

இந்தியக் குடியரசுத் தலைவர்,  தனது அதிகாரங்களின் மூலம் வெளியிட்ட அரசியலமைப்பு (பட்டியல் சமுதாயத்தினர்) ஆணையில், 1950-இல் இடம் பெற்றுள்ள குழுக்கள் மட்டுமே பல்வேறு சட்டங்கள், விதிகள் மற்றும் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பலன்களைப் பெறத் தகுதியானவர்கள் என்று கூறுகிறது.

இதை எதிர்த்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சிலர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்கள் இந்த ஆணையின் மூலம் இந்து மற்றும் சீக்கிய மதத்தில் உள்ள எஸ்.சி. மக்கள் மட்டுமே பலன்களைப் பெறுகிறார்கள்; இந்த ஆணை அரசியலமைப்பிற்கு முரணானது என்று  வாதிட்டனர்.

அப்போதைய (1986) இந்திய தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு (பென்ச்), இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து, இந்து மற்றும் சீக்கிய மதங்களில் உள்ள சமூகங்கள் மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து பெறத் தகுதியுடையவர்கள் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பை உறுதி செய்தது.  (AIR 1986 SC 733).

ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பென்ச் 1976-இல் இதே பிரச்சினையை நீண்ட காலம் விவாதித்தது. ஒரு மாணவர் எஸ்.சி.க்கு உண்டான ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பினார். அவரை எஸ்.சி.யாகக் கருதி அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் அவர் எஸ்.சி. அல்ல; கிறிஸ்தவர் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து புகார் வந்தது. அவரது சேர்க்கையை உறுதி செய்யலாமா, வேண்டாமா? என்ற சர்ச்சை எழுந்தது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறியதால், அவர்களுக்கு எஸ்.சி.யின் பலன் கிடைக்கக் கூடாது என்று பென்ச் கூறியது.

அந்த மாணவர் மருத்துவக் கல்லூரியில் சேரும்போது அவர் இந்து மதத்தைப் பின்பற்றும் ஆதி ஆந்திராவாக இருந்ததால், அவர் கல்லூரியில் சேரும் போது கிறிஸ்தவர் அல்ல என்று அவரது சேர்க்கை உறுதி செய்யப்பட்டது. அடிப்படைக் கொள்கை என்னவென்றால், கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தும் நபரை எஸ்.சி.யாகக் கருத முடியாது என்று உயர்நீதிமன்ற பென்ச் தெரிவித்தது

சமீபத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஒருவர் எஸ்.சி.க்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடத் தகுதியுடையவர் அல்ல என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலில் தேவிகுளம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) சார்பில் சட்டசபை உறுப்பினராக ராஜா தேர்வு செய்யப்பட்டார். அது செல்லாது என கேரள உயர் நீதிமன்றத்தில் யு.டி.எஃப். (காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி) வேட்பாளர் டி.குமார் மனுத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி பி.சோமராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராஜா நீண்ட காலத்திற்கு முன்னரே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதால் அவரை இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருத முடியாது என்று கூறி, அவரது தேர்தல் செல்லாது என தனது தீர்ப்பில் (2023/KER/16955) கூறியுள்ளார்.

அவர் பின்பற்றப்படும் சடங்குகள் கிறிஸ்தவ அல்லது இந்து பாரம்பரியத்தின்படி உள்ளதா என்பதைத் தீர்மானிக்க அவரது திருமணத்தின் புகைப்படங்களை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொண்டது. ராஜா உறுப்பினராக இருந்ததாகக் கூறப்படும் குண்டலாவில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் குடும்பப் பதிவேடு, ஞானஸ்நானம் பதிவு மற்றும் அடக்கம் பதிவு ஆகியவற்றை நீதிமன்றம் ஆய்வு செய்தது. திருமண நிகழ்ச்சியின் பதிவுகள் மற்றும் புகைப்படங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், ராஜா தேர்தல் வேட்பு மனுவைச் சமர்ப்பித்த போது அவர் உண்மையில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தார் என்று உறுதிப்படுத்தியதுடன், அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

8. சர்ச்சுகளின் புதிய புதிய உத்திகள்:

கிழக்கிந்திய கம்பெனி பாரதத்தில் நுழைந்தபோது, கிறிஸ்தவ தேவாலயங்கள் (சர்ச்சுகள்) அவர்களுடனேயே பாரதத்தில் நுழைந்தன. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரிய தேவாலயங்களைக் காண முடியும். அனைத்தும் இந்து மன்னர்கள் அவர்களின் வழிபாட்டுக்காக தானமாகக் கொடுத்த நிலம் மற்றும் நிதியில் கட்டப்பட்டவை. ஆனால் கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்து சமுதாயத்தைப் பகுப்பாய்வு செய்து முதலில் பட்டியல் சமுதாய மக்ளை மதம் மாற்ற அவர்கள் முடிவு செய்தனர். அதற்கேற்ப தங்களது மதமாற்ற நடவடிக்கைகளுக்கான உத்தியைத் திட்டமிட்டனர்.

1740-இல் வாடிகன்,   ‘தீண்டாமைக்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை’ என்று அறிவித்தது. (கிறிஸ்தவத்தில் ஜாதிமுறையோ, ஜாதிப் பாகுபாடுகளோ இல்லை. கிறிஸ்தவத்தில் சகோதரத்துவம் இருக்கிறது. கிறிஸ்தவத்தில் சேர்ந்தால் சமூக சமத்துவம் கிடைக்கும் என்றது).

அப்போது, தென்னிந்தியாவில் அதிக அளவிலான எஸ்.சி., எஸ்.டி. மக்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். வட இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் போது அனைத்து ஜாதியினரும், குறிப்பாக எஸ்.சி. மக்களும் அவர்களின் அடக்குமுறையால் இஸ்லாத்தைத் தழுவினர்.

சர்ச்சுகளின் முதல்கட்ட உத்தி:

1928 நவம்பர் 26, அன்று சைமன் கமிஷன் முன்பு, இந்திய கிறிஸ்தவ அமைப்புகளின் அகில இந்திய மாநாடுக் கூட்டமைப்பு  ‘இந்திய கிறிஸ்தவர்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இல்லை, அனைவரும் ஒரே கிறிஸ்தவர்கள்’ என்று  பிரகடனம் செய்தனர்.

1940 -ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி முன்பு, மேற்கண்ட அமைப்பு,  ‘கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை, தீண்டாமை இல்லை. நாங்கள் ஜாதியவாதத்திற்கு எதிரானவர்கள், எங்களுக்கு தனித் தொகுதிகள் வேண்டாம்’ என்று ஒரு வேண்டுகோளை சமர்ப்பித்தது.

1928 நவம்பர் 5 அன்று மும்பை மாகாண அரசு, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை அறிய ஸ்டார்ட் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவில் டாக்டர் அம்பேத்கரும் உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு பாக்ஸி கமிஷன்,  ‘தீண்டாமை தான் பட்டியல் ஜாதியினரை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்’ என அறிவித்தது.

1931-ஆம் ஆண்டு, ஜே.ஜே.ஹட்டன் தலைமையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம், மக்கள் முன்பு பத்து கேள்விகளை வைத்து, தீண்டத்தகாத ஜாதிகளை அடையாளம் கண்டது. இதன் அடிப்படையில் 1935-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, சட்டத்தை நிறைவேற்றியது. பட்டியலியின ஜாதிகளை வரையறுக்கும் இந்த ஏற்பாட்டில்,  ‘எந்த இந்திய கிறிஸ்தவரும் பட்டியல் ஜாதியாக கருதப்பட மாட்டார்கள்’ என்று தெளிவுபடுத்தப்பட்டது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருந்தனர். அரசியலமைப்பு சபையில் மூன்று கிறிஸ்தவ உறுப்பினர்கள் இருந்தனர். இந்த மூன்று உறுப்பினர்களும், ’கிறிஸ்தவத்தில் தீண்டாமை இல்லை, எனவே எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை’ என்று கூறினார்கள்.

அரசியலமைப்பு விவாதங்களின் போது,  ‘இந்துக்களில் தீண்டாமை உள்ளது. தீண்டாமையை அகற்ற, எஸ்.சி. இடஒதுக்கீடு எஸ்.சி. இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்’ என்று பலமுறை கூறப்பட்டது.

சர்ச்சுகளின் இரண்டாம் கட்ட உத்தி:

பட்டியலின கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றொரு உத்தியைப் பின்பற்றினர்.  ‘சர்ச் பதிவேடுகளில் உங்கள் கிறிஸ்தவப் பெயரை வைத்திருங்கள். இடஒதுக்கீடு பெற அரசுப் பதிவுகளில் இந்துப் பெயரைப் பயன்படுத்துங்கள்’ என்றனர். இந்தப் புதிய உத்தி 1960-களுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சர்ச் தலைவர்களின் ஆதிக்கத்தால் மதம் மாறிய அனைத்து கிறிஸ்தவர்களும் தங்களை இந்து எஸ்.சி.களாக அறிவித்துக் கொண்டனர்.

அரசாங்கத்திடம் உள்ள மக்கள்தொகைப் பதிவேட்டில் உள்ள கிறிஸ்தவ மக்கள்தொகையும், உண்மையான கிறிஸ்தவ மக்கள்தொகையும் முற்றிலும் வேறுபட்டவை. உண்மையான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அரசிடம் உள்ள எண்ணிகை குறைவு. இதற்கு  ‘கிரிப்டோ கிறிஸ்டியன் திட்டம்’ என்று பெயர். மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், அரசு சான்றிதழ்களிலும், மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பெரும்பாலோர் அரசுக்கு தவறான தகவல்களை அளித்திருக்கின்றனர். இது சட்ட விரோதமானதாகும்.

சர்ச்சுகளின் மூன்றாம் கட்ட உத்தி:

தொடர்ந்து கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகளால் அதிக எண்ணிக்கையிலான எஸ்.சி.க்கள் மதம் மாற்றப்பட்டு விட்டனர். இப்போது பல அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், எஸ்.சி. கிறிஸ்தவர்களே ஆவர். அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றன. 2004-14க்கு இடையில் திருமதி சோனியா காந்தி திரைக்குப் பின்னிருந்து ஒரு வலுவான கிறிஸ்தவ அரசாங்கத்தை நடத்தி வந்தார். தேசத்தை அரசியல் ரீதியாக தங்கள் பிடியில் எடுத்துச் செல்ல இதுவே சரியான தருணம் என்று திருச்சபை உணர்ந்தது. எனவே உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தது.

9. கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் பின்தங்கியவர்களா?

பாரதத்தில் படிப்பறிவு கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, அதிக படிப்பறிவு கொண்டவர்களாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்துக்களின் படிப்பறிவு விகிதம் 65.1 சதவீதம். ஆனால் கிறிஸ்தவர்களின் படிப்பறிவு விகிதம் 80.3 சதவீதம்.

கிறிஸ்தவர்களின் தனிநபர் வருமானம் அதிகம்.

முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் பிற சமூகங்களை விட கிறிஸ்தவ சமூகத்தில் வேலையின்மை கணிசமான அளவில் குறைவாக உள்ளது.

10.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எஸ்.சி. எதிர்ப்பு, சிறுபான்மை சார்புக் கொள்கைகள்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசியலமைப்புச் சட்டம் மூலம் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பிரிவு 15(5)ன் படி மத்திய அரசால் நடத்தப்படும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2005ஆம் ஆண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கூறின.

ஒருபுறம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எஸ்.சி., எஸ்.டி.களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில்லை. ஆனால், மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்கக் கோருகின்றனர்.

2006 மார்ச் 10, அன்று ஐ.மு.கூட்டணி அரசு, ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி.களுக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை’ என சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கை மூலமாக, ஐ.மு.கூட்டணி அரசாங்கம், எஸ்.சி. சமுதாய மக்களின் 56 ஆண்டு கால உரிமைகளைப் பறித்தது.

ஓர் உதாரணம்: காங்கிரஸ் தலைமை அனைத்து காங்கிரஸ் மாநிலங்களுக்கும் ஒரு விஷயத்தை அறிவுறுத்தியது. மதம் மாறிய கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் எஸ்.சி. பட்டியலில் சேர்க்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியது. அதன்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது எந்த ஒரு அரசியல் கட்சியும் (பாஜக தவிர்த்து)  எஸ்.சி, எஸ்.டி, மேம்பாடு பற்றிக் கவலைப்படுவதில்லை; சிறுபான்மையினர் பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

11. பட்டியல் சமுதாயத்தினர்களுக்கு முன்புள்ள சவால்கள்:

பொய்யான ஜாதிச் சான்றிதழ்கள்

ஜனாதிபதி உத்தரவில் எஸ்.சி. சமுதாயப் பட்டியல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. பல உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆயினும், மொத்த இந்தியாவிலும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், தமிழ்நாட்டில் பல மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எஸ்.சி. ஜாதிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் எஸ்.சி. என்ற பெயரில் கல்வி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு வசதிகளைப் பெறுகின்றனர்.

பல எஸ்.சி. கிறிஸ்தவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், எம்.பி.யாகவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகவும் ,இந்து எஸ்.சி. ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அமைச்சர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். பல கிறிஸ்தவ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எஸ்.சி. இட ஒதுக்கீட்டில் பதவிகளை அனுபவித்து வருகின்றனர். கல்வித் துறையில் எஸ்.சி. இட ஒதுக்கீட்டில அதிக எஸ்.சி. கிறிஸ்தவ மாணவர்கள் சேர்க்கை பெறுகின்றனர்.

ஒரு கிறிஸ்தவர் ஏதேனும் பதவியில் எஸ்.சி. இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார் என்றால், ஒரு இந்து எஸ்.சி. தனக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு வாய்ப்பை இழந்துவிட்டார் என்றே அர்த்தம். இது போன்ற பொய்ச் சான்றிதழ் வழக்குகள் லட்சக்கணக்கில் உள்ளன. லட்சக்கணக்கான உண்மையான எஸ்.சி. மக்கள் தங்களின் அரசியலமைப்பு உரிமைகளை இழக்கும் போது, நமது நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

அரசியல் சாசனத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக பொய்யான ஜாதிச் சான்றிதழை வழங்கி சலுகைகளை அனுபவித்து வந்த கிறிஸ்தவர்கள், இப்போது எஸ்.சி. இந்துக்களுக்கு இணையாக மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் அதிகாரப்பூர்வமான இடஒதுக்கீடு வேண்டும் என்று கோருகின்றனர். எஸ்.சி. அந்தஸ்து கோருவது வேறு. ஆனால், இத்தனை வருடங்களாக சட்டவிரோதமாக அனுபவிப்பதும், நிர்வாகம் மற்றும் நீதித்துறை மௌனமாகப் பார்ப்பதும் பெரும் தவறு.

தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் இந்தப் பிரச்சினையை பலமுறை தங்கள் அறிக்கையில் எழுப்பியுள்ளது. பலமுறை நாடாளுமன்ற துணைக் குழுக்கள் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளன. ஆனால் இன்று வரை சரியான நடவடிக்கை இல்லை.

மதம் மாறிய கிறிஸ்தவர்களிடமிருந்து புதிய பாகுபாடு

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் ஒரு வலுவான தலைமையுடன் மிகவும் கட்டமைக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். இந்து எஸ்.சி. சமுதாயத்தில் அவ்வாறு இல்லை. அது தலைமை இல்லாத, குரல் இல்லாத சமூகமாக உள்ளது.

எஸ்.சி. இந்துக்கள் உயர்ஜாதி இந்துக்களிடமிருந்தும், எஸ்.சி. கிறிஸ்தவர்களிடமிருந்தும் ஒரே சமயத்தில் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர். இந்த இரண்டாவது வகை பாகுபாடு இன்றும் பத்திரிகை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்தால் கவனிக்கப்படவில்லை.

கிறிஸ்தவர்கள், எஸ்.சி. இந்துக்களை  ‘சாத்தான்களை வழிபடுபவர்கள்’ என்று கூறுகிறார்கள். ஒரு பகுதியில் கணிசமான எஸ்.சி. கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தால், அந்தப் பகுதியில் எஸ்.சி. இந்துக்கள் கோயிலில் ஒலிபெருக்கி வைக்க முடியாது; இந்துப் பண்டிகைகளை கொண்டாட முடியாது; இந்துக்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களிலும்கூட கோயில்களைக் கட்ட முடியாது.

இத்தகைய உதாரணங்கள், தென்னிந்தியாவில் அதிக அளவில் உள்ளன. கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களில், மதம் மாறிய எஸ்.சி. மக்கள் மட்டுமே பலன்களைப் பெற முடியும்.

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு, தங்கள் ரத்த உறவுகளைக்கூட முறித்துக்கொள்ளத் தயாராக உள்ளனர். எஸ்.சி. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே ஒரு பெரிய சுவர் உள்ளது. இந்தச் சுவர் கிறிஸ்தவ நம்பிக்கைகளால் எழுப்பப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி. இந்துக்கள் மட்டுமே.

12. மதம் மாறுவதன் மூலம் ஒருவன் தன் ஜாதியை இழக்கிறானா?

இந்து சமுதாயத்தில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒருவிதமான குலதெய்வம், பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. யாரும், சிவன், ராமர் அல்லது கிருஷ்ணருக்குப் பதிலாக இயேசுவை வணங்கலாம். ஆனால் பழைய ஜாதி வழக்கங்களைப் பின்பற்றுவதில்லை. குழந்தைப் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு நேரத்தில் சில பழக்க வழக்கங்களை அவர்கள் பின்பற்றுவதில்லை. பழைய ஜாதி பழக்க வழக்கங்கள், குலதெய்வ பூஜையைப் பின்பற்றத் தயாராக இல்லை என்றால், எப்படி பழைய ஜாதியில் இருக்க முடியும்?

கிறிஸ்தவத்தைத் தழுவுவதன் மூலம் கிறிஸ்தவ கலாச்சாரம் மற்றும் மதவாழ்க்கை முறைகளை சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். அப்போது, சொந்த சகோதரியின் திருமணத்தை, ஜாதி வழியில் கொண்டாடும் போது அவர்கள் கலந்துகொள்ளத் தயாராக இல்லை. தன் தாய், தந்தை இறந்து போனால் கூட இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதில்லை.

உங்கள் கடந்த கால ஜாதிய பழக்க வழக்கங்களைப் பின்பற்ற நீங்கள் தயாராக இல்லாத போது,  அந்த ஜாதி மட்டும் எப்படித் தொடர முடியும்? எனவே மதம் மாறினால் அவன் ஜாதியை இழந்து விடுகிறான்.

13. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் என்ன பாதிப்பு?

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கட்டுக்கோப்பான சமூகங்கள்; அதுமட்டுமல்ல, அவர்கள் எப்போதும் ஆக்ரோஷமானவர்கள். அவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளில் வலுவானவர்கள். மறுபுறம் இந்துக்கள் மென்மையானவர்கள்.

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டால் எஸ்.சி. முஸ்லிம்கள் – பிற முஸ்லிம்கள் என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அதேபோல எஸ்.சி. கிறிஸ்தவர்கள் – பிற கிறிஸ்தவர்கள் என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எஸ்.சி. கிறிஸ்தவர்கள், எஸ்.சி. முஸ்லிம்கள் என்ற பெயரில் பொது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களும் அந்த இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கவும் வாய்ப்புள்ளது.

ஒரு ஆட்டையும் ஒரு புலியையும் ஒரே இடத்தில் வைத்தால் ஆடு எப்போதுமே தோல்வி நிலையில்தான் இருக்கும். ஆட்டின் உயிரைக் காக்க வேண்டுமானால், புலியை ஆட்டிடம் இருந்து பிரிக்க வேண்டும். எஸ்.சி. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எஸ்.சி. இந்துக்களும் ஒரே குழுவில் இருக்கக் கூடாது;  அவர்கள் பிரிக்கப்பட்டால் மட்டுமே, எஸ்.சி. இந்துக்களின் உயிர்களையும் உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.        

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்பட்டால் என்ன நடக்கும்?

பட்டியல் சமுதாயப் பகுதிகளில் இந்துக்களுக்கும் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்கனவே பதற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது இன்னும் அதிகரிக்கும். இது எஸ்.சி. மக்களை மொத்தமாக மதம் மாற்றுவதற்கும், இந்திய வரைபடத்தில் இருந்து எஸ்.சி. இந்துக்கள் காணாமல் போவதற்கும் வழி வகுக்கும்.

1950 குடியரசுத் தலைவரின் ஆணையில் இந்துக்கள் யார் என்று வரையறுத்திருந்த போதிலும், பல உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இருந்த போதிலும், மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பொய்யான எஸ்.சி. சான்றிதழ்களைப் பெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகள், பல்வேறு அரசாங்கப் பதவிகள், எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை, எஸ்.சி.க்கு உண்டான சலுகைகள் மூலமாக அனுபவித்து வருகின்றனர். இது அனைத்துப் பதவிகளையும் கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்க வழிவகுக்கிறது. மற்றும் இது கிறிஸ்தவ அரசுக்கு வழிவகுக்கிறது.

இதனால் எஸ்.சி. மக்களின் வளர்ச்சி நின்றுவிடும்; அவர்கள் மேலும் ஏழ்மை அடைந்து விடுவார்கள். எஸ்.சி. இந்துக்களுக்கு ஆதரவாக இந்துக்கள் தர்ம பிரசாரம் செய்யும்போது, கிறிஸ்தவர்கள் இந்து ஆர்வலர்கள் மீது பொய்யான எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை (தடுப்புச்சட்டம்) வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். இது கிறிஸ்தவ அரசுக்கு வழி வகுக்கிறது. அதாவது இந்துக்கள் தங்கள் தர்மத்தை இந்த மண்ணில் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

14. நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையம்  அமைக்கப்பட்டது சரியான முடிவு

இந்து மதத்திலிருந்து சீக்கிய மதம், பௌத்த மதம் அல்லாத பிற (இஸ்லாம், கிறிஸ்த) மதங்களுக்கு மாறிய எஸ்.சி. மக்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராய, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் தனிநபர் ஆணையம் ஒன்றை நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு அமைத்துள்ளது. 2023 மே 7-இல் நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையம் அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று சிலர் வாதிடுகின்றனர். சிலர் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளனர். நீதிமன்றம் அதன் தீர்ப்பைச் சொல்லட்டும்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் மொழியியல் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இருந்தார். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை ஏன் நிராகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே சில விஷயங்கள் வாசகர் முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் எஸ்.சி. சமுதாயத்திலிருந்து வந்தவர். மேலும் அவர் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். அவர்  அனைத்து அம்சங்களிலும் அனுபவம் மிக்கவர். தவிர, அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். அவர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது மிகச் சரியானதாகும்.

15. இறுதியாக…

பல தலைமுறைகளாக எஸ்.சி. இந்துக்களாகிய நாம், உயர்ஜாதி இந்து சமூகத்தால் சமூகப் பாகுபாட்டை எதிர்கொண்டோம். 800 ஆண்டுக்கால முஸ்லிம் அடக்குமுறையின் போதும், 200 ஆண்டுக் கால ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் கூட நாம் இந்து சமுதாயத்தை விட்டு வெளியேறவில்லை. சுவாமி ரவிதாசர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பாபு ஜகஜீவன்ராம் ஆகியோர் நம்முடைய முன்மாதிரிகள் ஆவர். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நமது உரிமைகளைக் கருத்தில் கொண்டு நம்முடைய பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்வது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் பொறுப்பாகும்.

நாம் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு முக்கியமான கட்டத்தில் அவர்கள் இந்து சமுதாயத்தை விட்டு வெளியேறினர். அந்தச் சில பிரிவுகளில் வறுமை இருந்திருக்கலாம். காகா காலேல்கர் ஆனையம் முதல் மண்டல் ஆணையம் வரை அனைத்து ஆணையங்களும் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப 1 % இடஒதுக்கீட்டை (பிற்பட்டோர் பிரிவில்) பரிந்துரைத்தன. அவர்களுக்கான இந்த ஒதுக்கீட்டை நாம் ஆதரிக்கிறோம்.

***

டாக்டர் பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர்

.

காத்திருக்கும் பணிகள்:

இத் தருணத்தில் நாம் உடனடியாக சில பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அவை:

நாம் அனைத்து எஸ்.சி. அமைப்புகளையும் தொடர்பு கொண்டு அவர்களுடன் பேச வேண்டும்;  அனைத்து உண்மைகளையும் அவர்கள் முன் வைக்க வேண்டும்;  அவர்களின் எழுத்துப்பூர்வ ஆதரவை கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

இது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும்; அவர்களின் கருத்துகளை அறிந்து, நமது கண்ணோட்டத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

எஸ்.சி. சமுதாய அறிவுஜீவிகளைத் தொடர்பு கொண்டு, எஸ்.சி. மக்களின் கருத்தைத் திரட்டுவதில் அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு, நம் நோக்கத்திற்கு ஆதரவாக செய்தித்தாள்கள், இதழ்களில் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமது இந்தக் கருத்து வரலாறு, சமூகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது. எனவே, மக்கள் கருத்தைத் திரட்டுவோம்.

சத்யமேவ ஜெயதே! தர்மமே வெல்லும்!

***

தொடர்புக்கு:

நந்தனார் அறக்கட்டளை,
எண்: 11, லக்ஷ்மி நகர் இரண்டாவது குறுக்கு,
நேரு தெரு, சோழிங்கநல்லூர்,
சென்னை– 600 119.

அலைபேசி: 94430 49042
email: swamysahajanandatrust23@gmail.com

இந்நூலை பிடிஎஃப் கோப்பில் படிக்க…

$$$

Leave a comment