தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 2

-சேக்கிழான்

‘செங்கோன்மை’ அதிகாரத்தில் மன்னரின் இலக்கணத்தை நேர்மறையாக கூறியவர், ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் எதிர்மறையாகக் கூறுகிறார். இவ்வாறு நேர்மறை- எதிர்மறையாகக் கூறி ஒரு கருத்தை மிகவும் ஆழமாக விளக்குவது திருவள்ளுவருக்கு புதியதல்ல. இதோ, ஒரு கொடுங்கோலன் எவ்வாறு இருப்பான், அதற்கான காரணங்கள் என்ன என்று பத்து குறட்பாக்களில் கூறுகிறார் திருவள்ளுவர்...

பகுதி- 1: திருக்குறளில் செங்கோன்மை

2. வெறுக்கப்படும் கொடுங்கோன்மை

“திருக்குறள் பொருளதிகாரத்தின் பெரும்பகுதி   அர்த்தசாஸ்திரத்தின்  சாரத்தில் இருந்து எழுதப்பட்டது. கெளடில்யர் என்பவர் எழுதிய நூல் அது. பொருளதிகாரத்தில் உள்ள அத்தனை விஷயங்களும் அதில் உள்ளன. அர்த்த சாஸ்திரமும் புருஷார்த்தமும்,  திருக்குறளுக்கு ஐநூறு, அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை” என்று கூறுவார், மறைந்த தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி (1930- 2022). அவர் மேலும் கூறுகிறார்:

“…திருக்குறளானது அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. இதை அனைத்திந்திய ரீதியில் ‘புருஷார்த்தம்’ என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று நான்கு பகுதிகள். இதையே வேதங்களும் கூறுகின்றன. வேதத்தை அறத்திலே கொண்டு வந்தவர்கள் தர்ம சாஸ்திரம் எழுதியவர்கள். அவர்கள் வேதத்தைக் காட்டிலும் காலத்தால் பிற்பட்டவர்கள். முதலாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தவர்கள்.

 “புருஷார்த்தம் என்பது நம் சங்க இலக்கியங்களிலேயே குறிக்கப்பட்டிருக்கின்றது.  ‘அரசனானவன், அறத்தையும், பொருளையும், இன்பத்தையும்  நாட்டுகின்றான்’ என்று இரண்டு மூன்று இடங்களில் வருகின்றது. ‘அறம் பொருள் இன்பம் ஆற்றும் பெரும’ என்று புறநாநூற்றில் பாடல் இருக்கிறது. ஆக சங்க காலத்திலேயே, அறம் பொருள், காமம் ஆகியவை இருந்திருக்கின்றன. அறம் என்பது தர்மம், பொருள் என்பது அர்த்தம், காமம் என்பது இன்பம். ஆக மூன்றும் புருஷார்த்தங்கள். இது அடிப்படைத் தத்துவம், மனித நெறி. ஆகவே, மனிதன் எப்படி நெறியுடன் வாழவேண்டும் என்று வரையறுத்து அதை மிக அழகாக, வலுவாக தமிழிலே எழுதப்பட்டதுதான் திருக்குறள்.

இதே விஷயங்கள் தர்ம சாஸ்திரங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. சாஸ்திரங்களிலெல்லாம் மிகவும் பழமையானது மனுவினுடைய தர்ம சாஸ்திரம். இந்த மனுவினுடைய தர்மத்தை நம்முடைய கல்வெட்டுகள் எல்லாம் கூறுகின்றன. நம் அரசர்கள் எல்லோரும் கூறுகின்றார்கள். பல அரசர்கள், தங்களை ‘மனுவுக்குச் சமமானவன்’ என்று சொல்லி இருக்கின்றார்கள். பாண்டிய மன்னன், தன்னைப் பற்றிச் சொல்லும் பொழுது  ‘மனுபவன்’ அதாவது, அறத்தை நிலை நிறுத்துவதிலே நான் மனுவுக்கு ஒப்பானவன் என்று சொல்கிறார். பல்லவர்கள் தங்களை மனுதர்ஷித மார்க்கத்தில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். சோழ மன்னர்கள் அத்தனை பேரும் மனுவையே தங்களின் நீதிக்கு எடுத்துக்காட்டாகக் கொள்வார்கள். ‘மனு நீதிச் சோழன்’ என்பது இன்றுவரை வழங்கும் வழக்கு…”

(நன்றி: விகடகவி நேர்காணல்- 2018)

இக்கருத்து முற்றிலும் உண்மை. சாணக்கியர் எனப்படும் கௌடில்யர் காலத்தால் திருவள்ளுவருக்கு முற்பட்டவர் (பொது யுகத்துக்கு முன் 375- 283). அவர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர்.  நாட்டை மன்னர் சிறப்பாக வழிநடத்த உதவும் வகையில் அவர் எழுதிய வழிகாட்டி நூலே ‘அர்த்தசாஸ்திரம்’.

அந்நாளில் இந்நூல் பாரதம் முழுவதிலும் குருகுலங்களில் பயிலப்பட்டது. அதன் தாக்கம் திருவள்ளுவரிடம் இருப்பது வியப்பல்ல. ஒரு நல்ல மன்னர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணமாக ‘செங்கோன்மை’ அதிகாரத்தில் (அதி- 55) பத்து குறட்பாக்களைக் கூறிய திருவள்ளுவர், ஒரு மன்னர் எப்போது செங்கோன்மைக்கு மாறான கொடுங்கோலனாக மாறுகிறான் என்பதையும் அடுத்த அதிகாரமான ‘கொடுங்கோன்மை’யில் (அதி- 56) கூறுகிறார். இவை அனைத்தையும் அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் கூறியிருப்பதைப் படித்தால் வியப்பு மிகுகிறது.

கொடுங்கோலனான நந்த மன்னை வீழ்த்தி, மௌரியப் பேரரசை நிறுவக் காரணமான சாணக்கியரின் பொருள் பொதிந்த ராஜ்ய பரிபாலன அறிவுரைகள் பல, திருக்குறளின் பொருட்பாலில் இடம் பெற்றிருப்பது மிகவும் பொருத்தமானதே.   

‘செங்கோன்மை’ அதிகாரத்தில் மன்னரின் இலக்கணத்தை நேர்மறையாக கூறியவர், ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் எதிர்மறையாகக் கூறுகிறார். இவ்வாறு நேர்மறை- எதிர்மறையாகக் கூறி ஒரு கருத்தை மிகவும் ஆழமாக விளக்குவது திருவள்ளுவருக்கு புதியதல்ல.  இரவு (106) – இரவச்சம் (107)- கல்வி (40) – கல்லாமை (41), நட்பு (79) – கூடாநட்பு (83), நட்பாராய்தல் (80)- தீநட்பு (82) என இருமைகளை தனி அதிகாரங்களில் விளக்கிச் செல்லும் அதே பாணியில், செங்கோன்மை (55)- கொடுங்கோன்மை (56) என்ற இருமையையும் திருவள்ளுவர் இரு அதிகாரங்களில் விளக்கமாக அளித்திருக்கிறார்.

இதோ, ஒரு கொடுங்கோலன் எவ்வாறு இருப்பான், அதற்கான காரணங்கள் என்ன என்று பத்து குறட்பாக்களில் கூறுகிறார் திருவள்ளுவர் (பொருள் விளக்கத்திற்கு நன்றி: திரு.மு.வ.)….

கொடுங்கோன்மை அதிகாரம்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து

     திருக்குறள்- 551

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

     திருக்குறள்- 552

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், செல்லும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் (பறிப்பதை) போன்றது.

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.

     திருக்குறள்- 553

நாள்தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசுதிருக்குறள்

    திருக்குறள்- 554

 (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

    திருக்குறள்- 555

 (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

    திருக்குறள்- 556

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

    திருக்குறள்- 557

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

    திருக்குறள்- 558

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

    திருக்குறள்- 559

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

    திருக்குறள்- 560

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 2

Leave a comment