வேணு முதலி விசித்திரம்‌

-மகாகவி பாரதி

வேணு முதலி என்ற ஒருவரைப்‌ பற்றி முந்தைய கதையில்‌ பாரதி குறிப்பிடுகிறார்‌. இந்த வேணு முதலியின்‌ ஞானானுபவங்‌களைப்‌ பற்றியது இந்தக்‌ கதையும்‌. வேதபுரமென்பது புதுவையின்‌ பெயர்‌. இக்‌ கதையும்‌ முதலில்‌ ௬தேசமித்திரனிலும்‌, பிறகு 1920-ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌  மித்திரன்‌ காரியாலயம்‌ வெளியிட்ட  ‘கதாமாலிகா’ என்ற நூலிலும்‌ பிரசுரமாயிற்று.

வேதபுரத்து வேணு முதலி நம்முடைய ஹிந்து தர்மத்தைக்‌ கண்‌ போலே கருதுகிறான்‌. அன்னிய மதங்களில்‌ அவனுக்குக்‌ கோபம்‌ கிடையாது. பற்றும்‌ கிடையாது. நமக்கும்‌ அவனுக்கும்‌ இந்த விஷயத்தில்‌ சற்றே அபிப்பிராய பேதம்‌ உண்டு. நான்‌ ஸமரஸவாதி, அவன்‌ பச்சை ரிக்வேதம்‌.

இவன்‌ நேற்று மாலை இருபது, முப்பது கிறிஸ்தவப்‌ புஸ்தகங்கள்‌, துண்டுப்‌ பத்திரிகைகள்‌, குட்டிப்‌ புஸ்தகங்கள்‌ இவற்றை ஒரு பெரிய மூட்டையாகக்‌ கட்டிக்கொண்டு வந்து என்‌ மேஜையின்‌ மேலே எள்ளுப்‌ போட இடமில்லாமற்படி விரித்தான்‌. இங்கிலீஷிலும்‌ தமிழிலும்‌ முழுமையில்‌ ஒன்று. புதிய ஆகமம்‌ இரண்டு பிரதி. மத்தேயு, லூக்‌, யோவான்‌, மார்க்‌, என்ற நான்கு தலைச்சீடர்‌ எழுதிய ‘சுவிசேஷம்‌’ (அதாவது இதிஹாஸம்‌), தனித்தனியாகப்‌ பதிப்பிக்கப்‌பட்ட குட்டிப்‌ புஸ்தகங்கள்‌, லண்டன்‌ பதிப்பு – நேர்த்தியான சித்திரங்கள்‌- பளபளப்பான காயிதம்‌- கால்‌ காலணா விலை. ஆனால்‌ தமிழ்‌ மாத்திரம்‌ கொஞ்சம்‌ தெளிவில்லாமலும்‌ விஜாதீயமாகவும்‌ இருக்கிறது. மேற்படி புஸ்தகங்களை யெல்லாம்‌ ஒவ்வொன்றாக எனக்குக்‌ காட்டினான்‌.

‘உன்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டனவா?’, ‘நீ புண்யம்‌ செய்வதில்‌ பிரயோஜனமில்லை யென்பதை நீ அறி வாயா?’ ‘ஒரு நேர்த்தியான ஆடு மேய்ப்பவன்‌’ என்று பலவிதமான மகுடங்களிட்டு கிறிஸ்தவ மத ஸ்தாபனம்‌ பண்ணி இனாமாகக்‌ கொடுக்கப்படும்‌ துண்டுப்‌ பத்திரிகைகளும்‌ பல கொண்டு வந்திருந்‌தான்‌. இதை இவன்‌ ஏன்‌ வாங்கினானென்று எனக்குத்‌ தெரியவில்லை. இவனோ வீர ஹிந்து, அதாவது பூமி முழுவதையும்‌ அன்னிய மதங்கள்‌ இல்லாமல்‌ கிறிஸ்து மதத்தைச்‌ சேரும்படி செய்ய வேண்டுமென்று கிறிஸ்தவப்‌ பாதிரிகள்‌ விரும்புவது போல இந்த வேணு முதலி பிற மதங்களில்லாமல்‌ உலக முழுவதையும்‌ ஹிந்து மதமாகச்‌ செய்துவிட வேண்டுமென்ற தோக்கமுடையவன்‌. அவன்‌ பணம்‌ கொடுத்துக்‌ கிறிஸ்தவப்‌ புஸ்தகங்கள்‌ வாங்கினது எனக்கு வியப்புண்டாக்கிற்று. “ஏன்‌ வாங்கினாய்‌?” என்றேன்‌.

வேணு முதலி:- “அத்தனையும்‌ சேர்ந்து ஒன்றரை ரூபாய்க்கு மேலே போகவில்லை காணும்‌. சண்டை சமயத்தில்‌ இவன்‌ காசைக்‌ கண்‌ தலை தெரியாமல்‌ செலவிடுகிறான்‌ என்று நினைத்துவிட வேண்‌டாம்‌. பாவ மன்னிப்பு விஷயமான காயிதங்களெல்லாம்‌ இனாமாக வாங்கினேன்‌, அறியவும்‌” என்றான்‌.

நான்‌ புன்னகை செய்தேன்‌. “எப்பொருள்‌ யார்‌ யார்‌ வாய்க்‌ கேட்பினும்‌ அப்பொருள்‌ மெய்ப்பொருள்‌ காண்பதறிவு” என்ற குறளை எடுத்துச்‌ சொன்னேன்‌.

வேணு முதலி சொல்லுகிறான்‌ :- “காளிதாஸரே, நான்‌ இவற்றை யெல்லாம்‌ வாசித்துப்‌ பார்க்கும்‌ பொருட்டாகவே வாங்கினேன்‌. ஏற்கனவே இந்த இலாகாவில்‌ பல பகுதிகள்‌ வாசித்திருக்கிறேன்‌. ஏனென்றால்‌ இந்த யுத்தம்‌ முடிந்தவுடனே நான்‌ ஐரோப்பாவுக்குப்‌ போவேன்‌. அங்கே ஹிந்து தர்மத்தை நிலைநிறுத்தப்‌ போகிறேன்‌. ஆதலால்‌ எனக்கு ஐரோப்பாவில்‌ ஏற்கனவே வழங்கி வரும்‌ மதத்தைப்‌ பற்றி ஸம்பூர்ண ஞானம்‌ இருக்க வேண்டுமென்று கருதி இவற்றை வாங்கினேன்” என்றான்‌.

மேலும்‌ வேணு முதலி, மேற்படி கிறிஸ்து மதப்‌ புஸ்தகங்களின்‌ விஷயமாக ஏதெல்லாமோ சொல்லிக்‌ கொண்டிருந்தான்‌. முதல்‌ நாளிரவு குளிர்ந்த காற்றில்‌ படுத்துறங்கினபடியால்‌ எனக்குக்‌ கொஞ்சம்‌ இலேசான தலைநோவு போலிருந்தது. நான்‌ கொட்டாவி விட்டேன்‌.

அப்போது வேணு முதலி பளிச்சென்று எழுந்து நின்றான்‌. மீசை நுனிகளைக்‌ கண்ணுக்குள்ளே திருகிவிட்டுக்‌ கொண்டான்‌. கண்‌ணிலே குத்திற்று, பிறகு இரண்டு காதுக்குள்ளேயும்‌ இழுத்து விட்டுக்‌ கொண்டான்‌. கடகடவென்று சிரித்தான்‌. “காளிதாஸரே, உம்முடைய கொட்டாவி, குறுகுறுப்பு எல்லாவற்றையும்‌ ஒரு நிமிஷத்‌துக்குள்‌ ஓட்டி விடுகிறேன்‌, பார்க்கிறீரா?” என்றான்‌.

“செய்‌” என்றேன்‌.

வேணு முதலி மார்க்‌ எழுதின சுவிசேஷத்தில்‌ பதின்மூன்றாம்‌ அதிகாரத்தைத்‌ திருப்பிப்‌ பின்வருமாறு வாசிக்கலானான்‌:-

“யேசு சொல்லுகிறார்‌:-

“ஒருவனும்‌ உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாக இருங்‌கள்‌…… புத்தங்களையும்‌, யுத்தங்களின்‌ செய்திகளையும்‌ கேள்விப்‌படும்போது கலங்காதேயுங்கள்‌. இவைகள்‌ சம்பவிக்க வேண்டியதே. ஆனாலும்‌ முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாக ஜனமும்‌ ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும்‌ எழும்‌. பூமியதிர்ச்சிகளும்‌ பல இடங்களில்‌ உண்டாகும்‌. பஞ்சங்களும்‌ கலகங்களும்‌ உண்‌டாகும்‌. இவை வேதனைக்கு ஆரம்பம்‌. நீங்கள்‌ எச்சரிக்கையாக இருங்கள்‌”…… என்று தொடங்கி அரை மணி நேரம்‌ வாசித்‌தான்‌.

கடைசியாக, “அந்‌ நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்‌ பிறகு சூரியன்‌ அந்தகாரப்படும்‌. சந்திரன்‌ ஒளி கொடாது. வானத்‌தின்‌ நக்ஷத்திரங்கள்‌ விழும்‌. வானங்களிலுள்ள சக்திகள்‌ அசைக்‌கப்படும்‌. அப்போது மனுஷ குமாரன்‌ மிகுந்த வல்லமையோடும்‌ மஹிமையோடும்‌ மேகங்களின்‌ மேல்‌ வருவதை உலகத்தார்‌ காண்‌பார்கள்‌” என்று வாசித்து முடித்தான்‌.

பிறகு என்னை நோக்கி, “காளிதாஸரே, இந்தக்‌ கதையின்‌ குறிப்‌பென்ன? மனுஷ குமாரன்‌ யார்‌?” என்று கேட்டான்‌. “எனக்‌கொன்றும்‌ சரியாக விளங்கவில்லை? என்றேன்‌. வேணு முதலி சொல்லுகிறான்‌:-

“அப்படியானால்‌ சொல்லுகிறேன்‌, கேளும்‌. இதற்கெல்லாம்‌ ஐரோப்பாவிலுள்ளவர்கள்‌ வெளிப்படையாக அர்த்தம்‌ சொல்லுகிறார்கள்‌. யுகமுடிவில்‌ யேசுநாதர்‌ வரப்‌ போவதாகவும்‌ அப்போது மேற்கண்ட உற்பாதங்களெல்லாம்‌ நடக்குமென்றும்‌ அவர்கள்‌ நினைக்கிறார்கள்‌. நான்‌ இதற்கெல்லாம்‌ அத்யாத்மப்‌ பொருள்‌ சொல்லுகிறேன்‌, கிறிஸ்து மதம்‌ ஆசியா கண்டத்தில்‌ உண்டானது. மதங்களே ஆசியாவில்‌ தான்‌ பிறந்தன. ஐரோப்பியருக்கு ஞான சாஸ்திரம்‌ ஏற்படுத்தத்‌ தெரியாது. ஆசியாவிலிருந்து கொண்டு போன ஞான சாஸ்திரங்களையும்‌ அவர்கள்‌ நேரே அர்த்தந்‌ தெரிந்து கொள்ளவில்லை. மேற்படி மார்க்‌ எழுதின வசனங்களின்‌ மனுஷ குமாரன்‌ என்பது நம்முடைய யோக சாஸ்திரங்களில்‌ சொல்லியபடி மனுஷனுக்குள்ளே ஆத்ம ஞானத்தால்‌ பிறப்போனாகிய குமார தேவன்‌, அதாவது ஸுப்ரமண்ய மூர்த்தியாகிய அக்னி தேவன்‌. மனுஷ்யனுக்குள்ளேயே ஏழு லோகங்களும்‌ இருக்கின்றன. தேவர்‌, அஸுரர்‌, இராக்ஷஸர்‌, சித்தர்‌, சாத்தியர்‌, கின்னரர்‌, கிம்புருஷர்‌, பூத, ப்ரேத, பிசாசரர்‌, மனுஷ்ய ம்ருக பக்ஷி நாகர்‌ முதலிய சகலமும்‌ நம்‌ முடைமய அந்தக்கரணத்திலேயே உள்ளவையாகும்‌. மேற்‌ சொல்லிய யுத்தங்கள்‌ பூமியதிர்ச்சிகள்‌ முதலியன வெல்லாம்‌ அந்தக்கரணத்தில்‌ ஞானகுருவாகிய ஸுப்ரமண்ய மூர்த்தி தோன்றி ஜீவன்‌ முக்தியாகிய அமிர்த நிலையைக்‌ கூட்டுவதற்கு முன்பு தனக்குள்ளே தோன்றும்‌ பல உத்பாதங்களாகக்‌ கருதப்படும்‌. இதற்கெல்லாம்‌ ஐரோப்பியக்‌ கிறிஸ்தவர்‌ உட்பொருள்‌ கொள்ளாமல்‌ புறப்பொருள்‌ கொள்வது அவர்களுடைய ஞான சாஸ்திர பரிச்சயக்‌ குறைவைக்‌ காட்டுகிறது” என்றான்‌.

எனக்கு ஸந்தோஷ முண்டாயிற்று, தலைநோவு பறந்தோடிப்‌ போய்விட்டது. வேணு முதலியைக்‌ கட்டித்‌ தழுவிக்கொண்டு, “வேணு முதலியாரே, ஐரோப்பாவில்‌ ஹிந்து தர்மத்தை நிலைநிறுத்தும்‌ தகுதி உமக்குண்டென்றே கூறலாம்‌” என்றேன்‌. வேணு முதலியார்‌ நகைத்து விடைபெற்றுக்‌ கொண்டு சென்றார்‌. நான்‌ உடம்பு நேராகிப்‌ பாட்டெழுதத்‌ தொடங்கினேன்‌.

$$$

Leave a comment