அனுமன் எழுகின்றான்! (கவிதை)

-வ.மு.முரளி

இன்று அனுமன் ஜயந்தி. பக்தி மற்றும் சக்தியின் அடையாளமான அனுமனை வணங்குவோம்! பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கவிதை இங்கே... 

“சிவப்புப் பழமென
கதிரவனைச் சிறுவயதில்
பறிக்கப் பாய்ந்த
பாலகன் நீ!
படைக்கும் கடவுளின்
பாசத்தைப் பெற்றவன் நீ!

வால்வலிவும் தோள்வலிவும்
வரமாகப் பெற்றவன் நீ!
வாயு புத்திரன் நீ!
வாசி யோகம் உணர்ந்தவன் நீ!

கலைகள் அனைத்தையும்
கரைத்துக் குடித்தவன் நீ!
குறும்பால்,
முனிவர் இட்ட சாபத்தால்
மறந்தவன் நீ!

தேவர்களின் அதிபதியின்
அரவணைப்பை
அடைந்தவன் நீ!
சிவனின் அம்சம் நீ!
சிரஞ்சீவி ஆனவன் நீ!

ராமனை இதயம் ஏத்திய
கவின் மிகு தூதுவன் நீ!

ஆற்றலின் விருட்சங்கள்
வித்தாய்
அமிழ்ந்திருக்கும்
வீரியன் நீ!

சீதை தவிக்கின்றாள்.
ஸ்ரீ ராமன் வாடுகிறான்
அஞ்சனை மைந்தா
உன் ஆற்றலை மறந்தாயா?

மொத்தத்தில் பலத்தின்
முழு உருவம் நீயன்றோ?
உன் ஆற்றல் நீயுணர்ந்தால்
உலகேழும் உன் கீழே!
அலைகடலும் உன்னுடைய
ஆற்றலுக்கு நிகரில்லை…”

ஜாம்பவான் சொல்லுகிறான் –
ஜாதகம் புரிகிறது.
சாம்பல் பறந்தோடி
தணலும் ஒளிர்கிறது…

“ஸ்ரீ ராமா என்று சொல்லி
தேகத்தை உருக்காக்கு!
சிவசிவனே என்று சொல்லி
சீற்றத்தை உருவாக்கு!
உடலைப் பெருக்கிவிடு!
உள்ளாற்றல் வெளிப்படுத்து
சத்தியம் வெல்லுமடா –
சாதனம் ஆகிவிடு!”

அனுமன் எழுகின்றான்.
அற்புதமாய் மிளிர்கின்றான்.
ஹூங்காரம் இடுகின்றான்.
குன்றாக வளர்கின்றான்.

வானரர்கள் ஆர்ப்பரிக்க,
வானவர்கள் பூத்தூவ,
கடவுளர்கள் கண்சிமிட்ட,
கண்மணியான் எழுகின்றான்.

இனியென்றும் இருளில்லை;
இடரில்லை, துயரில்லை.
பாரதத் தாய் தலைப்பிள்ளை
அனுமன் இருக்க
அச்சமில்லை!

  • நன்றி: முகநூல் பதிவு

$$$

Leave a comment