ஆசாரச் சீர்திருத்தம்    

“வேண்டியவர்கள் எல்லாம் பூணூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்கள் எல்லாரும் பூணூல் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்றுபோலே, இல்லா விட்டாலும் ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்” என்றேன்.   “அன்பே சிவம்” என்று பிரமராயர் சொன்னார்.

ஹிந்துக்களின் கூட்டம்    

ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்; ஜனத் தொகை குறையும் போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும் போதே தூங்குகிறார்கள்; அவர்கள் கண்ணிருந்தும் குருடர்.

வருங்காலம்    

வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மனவுறுதியினாலும், பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பி வாருங்கள். உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க.

மதிப்பு

இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால், அவன் ராஜாங்கம் முதலிய ஸகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும்.

பாரதி கருவூலத்தின் அரிய வைரம்

39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த ஓர் அதியற்புத உயர் மானுடர் மகாகவி பாரதி. அதுவும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராளியாக இருந்ததால் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகி, கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு, வாழ்க்கையுடன் போராடியே குறுகிய காலத்தில் அமரரானவர் அவர். அவரது போராட்ட வாழ்வுக்கு சான்று பகர்பவையாக அவரது கடிதங்கள் விளங்குகின்றன. இந்நூலில் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. காசியில் இருந்து தனது இளம் மனைவி செல்லம்மாளுக்கு 1901இல் பாரதி எழுதிய கடிதம், ஒரு சாமானியனாக வாழத் துடித்த ஒரு சுதந்திரப் பறவையை இனம் காட்டுகிறது.

பருந்துப் பார்வை

காசியிலே ஹிந்து ஸர்வகலா சங்கம் கட்டும் போது பல மாளிகைகள் ஹிந்து சிற்பத்தைத் தழுவியிருக்க வேண்டும். நவீன பாடசாலைகளுக்குரிய லக்ஷணங்கள் குறையக் கூடாது. ஆனால், சிற்பத்தின் மேனி சுதேசிய விஷயமாக இருக்க வேண்டும். பாரத தேசத்துச் சிற்பிகளிலே தமிழ்நாட்டு ஸ்தபதிகள் ஒரு முக்கியமான அங்கமாவர். வங்கத்திலே மஹா கீர்த்தியுடன் சோபிக்கும் நவீன சாஸ்திரிகளில் நாயகராகிய அவனீந்த்ர தாகூர் கூட இக்காலத்திலும் தமிழ்நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாக மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

விசாரணை

பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும்  என்பதை அநேக நீதிசாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார்களின் தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின் கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.

பழைய உலகம்

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸப்படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப் பற்றி எனக்கு அதிக சிரத்தையில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவது தான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு.

உடம்பு

நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. காரஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப் படுத்தும் வஸ்துக்கள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.

மிருகங்களை நாகரீகப்படுத்தும் வழி       

இரண்டு சிக்கிமுக்கிக் கல்-துண்டுகளை ஒன்றுக் கொன்று தட்டினால் தீயுண்டாக்கி விடலாம். இத்தனை கோடானுகோடி அடிமை ஜந்துக்களுக்கும் இன்று வரை இந்த சாதாரண யுக்தி புலப்படாமல் போனது வியப்புக்குரிய செய்தி யன்றோ? இதுபற்றியே, முற்கால ரிஷிகள் தீயை முதற் கடவுளாகப் போற்றினர் போலும். மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியையும் பூமண்டலாதிக்கத்தையும் அவன் நியாயமான வழியில் உபயோகப் படுத்தவில்லை.

குரு

காசுக்கும் அதிகாரத்திற்கும் எல்லாருந்தான் வாயைப் பிளக்கிறார்கள். ஆனாலும்,ரோமபுரியில் கிறிஸ்தவக் குருக்கள் ஐரோப்பா எல்லை முழுதிலும் பூமியாட்சி விவகாரங்களில் தலையிட்டு, ராஜாக்களுடன் கூடியும் பகைத்தும் கலகங்கள் ஏற்பட்டுத்தியது போல் நமது தேசத்துப் புரோஹிதரும் குருக்களும் செய்ததில்லை.

தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை

...எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்று மனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.  தமிழ்நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்? என்ன காரணம்?

நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

...நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும்....

பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்

பெண்ணுரிமைக்கான கூட்டம் நிகழ்வதையும் கூட செய்தியாக்கி மகிழும் இதழாளர் பாரதியை இங்கே நாம் தரிசிக்கிறோம். அது மட்டுமல்ல, தனது புதல்வி தங்கம்மாளைக் கொண்டு, சீனப் பெண் புரட்சியாளர் (சியூ சீன்) தொடர்பாக வெளிநாட்டுப் பத்திரிகையில் வெளியான விவரத்தை தமிழாக்கிப் படிக்க வைத்திருக்கும் பாரதியின் தீவிர உணர்வு கவனித்தற்பாலது. மேலும், சியூ சீன் எழுதிய புரட்சிக் கவிதையைத் தமிழாக்கி தனது புதல்வியையே வாசிக்கச் செய்திருப்பது, அவரது பெண்ணுரிமை தாகத்தைக் காட்டுகிறது....

தமிழ்நாட்டு நாகரீகம்

...ஔவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஔவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஔவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்....