-வ.மு.முரளி
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரப் பாடல்களில் இடம்பெற்ற 13 வைப்புத்தலங்கள் குறித்து இன்று காண்போம்...

- காண்க: பகுதி- 8
தேவார வைப்புத் தலங்கள்
தேவார வைப்புத் தலங்கள் என்பவை, தேவாரத்தில் தனிப்பதிகம் பாடப்பெறாமல், வேறு தலப் பதிகத்தின் இடையிலும், பொதுப் பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும். இவையும் சைவர்களால் போற்றப் படுகின்றன.
நமக்குக் கிடைக்கப்பெற்ற தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற தலங்களின் எண்ணிக்கை: 276. அதேபோல, தேவாரப் பதிகங்களில் இடையே இடம்பெறும் வைப்புத் தலங்களின் எண்ணிக்கை: 147. இவற்றில் கொங்குநாட்டில் உள்ள வைப்புத்தலங்களின் எண்ணிக்கை: 13.
கொங்கு மண்டலத்தில் உள்ள தேவார வைப்புத் தலங்கள் (மாவட்ட வாரியாக):
- தருமபுரி – 1
- சேலம் – 1
- நாமக்கல் – 4
- ஈரோடு – 1
- திருப்பூர் – 4
- கோவை – 2.
இவற்றுள் கோவை மாவட்டம், பேரூரிலுள்ள பட்டீஸ்வரர் திருக்கோயில், அற்புதமான சிற்பங்கள் கொண்ட கனகசபை உலகப் புகழ் பெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமையானது. தொல்லியல் துறை கண்காணிப்பில் இக்கோயில் உள்ளது.
வைப்புத்தலங்களின் பட்டியல்:
| வ.எண் | வைப்புத்தலம் | மாவட்டம் | ஆலயம் | பாடியோர் | பாடல் * |
| 1 | அவல்பூந்துறை | ஈரோடு | புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் | அப்பர் | 6 – 71 – 11 |
| 2 | ஏளூர் | நாமக்கல் | கைலாசநாதர் திருக்கோயில் | அப்பர் | 6 – 70 – 5 |
| 3 | குமரிக்கொங்கு / மோகனூர் | நாமக்கல் | அசலதீபேஸ்வரர் திருக்கோயில் | அப்பர் | 6 – 70 – 9 |
| 4 | குரக்குத்தளி/ சர்க்கார் பெரியபாளையம் | திருப்பூர் | சுக்ரீஸ்வரர் திருக்கோயில் | சுந்தரர் | 7 – 47 – 2 |
| 5 | கொல்லியறப்பள்ளி/ கொல்லிமலை | நாமக்கல் | அறப்பளீஸ்வரர் திருக்கோயில் | அப்பர் சம்பந்தர் | 6 – 70 – 1 5 – 34 – 1 2 – 39 – 4 |
| 6 | தகடூர் / தருமபுரி | தருமபுரி | மல்லிகார்ஜுனர் திருக்கோயில் | சுந்தரர் | 7 – 12 – 1 |
| 7 | தோழூர் | நாமக்கல் | சோழீஸ்வரர் திருக்கோயில் | அப்பர் | 6 – 70 – 5 6 – 71 – 4 |
| 8 | பரப்பள்ளி / பரஞ்சேர்வழி | திருப்பூர் | மத்யபுரீஸ்வரர் திருக்கோயில் | அப்பர் | 6 – 71 – 1 |
| 9 | ஆன்பட்டிப் பேரூர் | கோவை | பட்டீஸ்வரர் திருக்கோயில் | அப்பர் சுந்தரர் | 6 – 7 – 10 6 – 51 – 8 6 – 70 – 2 7 – 47 – 4 7 – 90 – 10 |
| 10 | மாட்டூர் / சேவூர் | திருப்பூர் | வாலீஸ்வரர் திருக்கோயில் | சம்பந்தர் சுந்தரர் | 2 – 39 – 7 7 – 47 -1 |
| 11 | மூலனூர் | திருப்பூர் | சோழீஸ்வரர் திருக்கோயில் | சுந்தரர் | 7 – 12 – 3 |
| 12 | மொக்கணீசுவரம் | கோவை | மொக்கணீஸ்வரர் திருக்கோயில் | சுந்தரர் | 7- 080 -1 |
| 13 | தாழையூர் | சேலம் | தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் | சுந்தரர் | 7 – 12 – 1 |
* பாடல் குறிப்பு: திருமுறை – பதிக எண்- பாடல் எண் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.
(தொடர்கிறது)
$$$