தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 7

-வ.மு.முரளி

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் சித்தம் காக்கும் திருமுருகன்பூண்டி பற்றி இன்று காண்போம்...

  • காண்க: பகுதி- 6

சித்தம் காக்கும் திருமுருகன் பூண்டி

மிகப் பழமையான திருமுருகன் பூண்டி தொல்பொருள் சின்னமாக அறிவிக்கப்பட்டதாகும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சீரடைய இத்தலத்தின் சண்முக தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தங்களில் நீராடி, ஈசனை வழிபடுவதும் குணமடைவதும் இத்தலத்தின் சிறப்பாகும்.

திருச்செந்தூரில் சூரமத்மனை வதம் செய்த பிறகு தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் போக்க முருகன் வழிபட்ட தலம் இது; ஞானத்தின் அதிபதியான கேதுபகவான் ஈசனை வழிபடும் தலமும் இதுவே என்கிறது தலபுராணம். இங்கு கேது பகவானுக்கு தனி சந்நிதியும் உண்டு.

திருமுருகனால் நிறுவப்பட்டு வழிபடப்பட்ட பரிகாரத் தலம் என்பதால் ‘திருமுருகன் பூண்டி’ என்று பெயர் பெற்ற இத்தலத்தின் இறைவர் திருமுருகநாதர். இறைவியின் நாமம் ஆவுடைநாயகி. மூலவர் சந்நிதியின் வலப்புறம் ஆறுமுகக் கடவுளுக்கு தனி சந்நிதி உள்ளது.

தனது உற்ற தோழர் சுந்தரரின் பொருளை ஈசனே வேடன் வடிவில் வந்து பறித்து நிகழ்த்திய வேடுபறித் திருவிளையாடலின் மூலமாக சுந்தரரின் பெருமையை உலகறியச் செய்தார் ஈசன். திருமுருகன் பூண்டி திருத்தலத்தில் வேடுபறிக்குழி இன்றும் உள்ளது. இந்த நிகழ்வை ஆண்டுதோறும் வேடுபறி உற்சவமாகக் கொண்டாடுகின்றனர்.

தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருளை திரும்பப் பெறக் கோரி சுந்தரர் இத்தலத்து இறைவன் மீது பாடினார். இப்பதிகம் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவருக்கு வேடுவன் திருடிய பொருளைக் காட்டிய விநாயகர் ‘கூப்பிடு விநாயகர்’ என்ற பெயரில் தரிசனம் தருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. திருப்பூரிலிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும், அவிநாசியிலிருந்து 4 கி.மீ. தூரத்திலும் திருமுருகன் பூண்டி உள்ளது. இழந்த பொருளை மீட்க வேண்டுவோர் இத்தலத்தில் பிரார்த்திக்கலாம் என்பது பக்தர்தம் நம்பிக்கை. சிற்பத் தொழிலிலும் திருமுருகன் பூண்டி சிறந்து விளங்குகிறது.

திருமுருகன்பூண்டியில் முருகநாதர் திருக்கோயிலின் இடப்புறம் தனி வளாகத்தில் மாதவி வனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்த முல்லை வனத்தில் ஈசனை வழிபட்டு கேது பகவான் கிரஹப் பதவி அடைந்தார் என்பது புராணக்கதை. எனவே இங்கு  கேது பகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். இது கேது பரிகாரத் தலமாக வழிபடப்படுகிறது.

இத்திருக்கோயிலில் பழமையான கல்வெட்டுகள் உள்ளன. வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்கு கிடைத்துள்ளன.

சுந்தரர் அருளிய
திருமுருகன்பூண்டி பதிகம்

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  1 

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  2 

பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  3 

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங் கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  4 

தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  5 

விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  6 

வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும் உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் ஏது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  7 

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  8 

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.  9 

முந்தி வானவர் தாந்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர் பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் ஒன்றுந் தாமி லரே. 10

(தொடர்கிறது)

$$$

Leave a comment