-வ.மு.முரளி
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் கரூவூர் என்கிற கரூரைக் காண்போம்...

- காண்க: பகுதி- 3
பசு வழிபட்ட கருவூர்
இவ்வுலக உயிர்கள் அனைத்தும் ஈசன் முன்பு சமமானவையே என்பதை உணர்த்துகிறது, பசு வழிபட்ட கருவூர் (தற்போதைய கரூர்) திருத்தலம். இங்குள்ள சுயம்பு வடிவான லிங்கம் மீது பசுவின் குளம்படிகளைக் காணலாம். இவரை ஆனிலையப்பர் என்றும் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
காவிரியின் துணை நதியான அமராவதி ஆற்றங்கரையில், கரூர் நகரின் மையப்பகுதியில் பிரமாண்டமான ஆலய அமைப்புடன் உள்ளது பசுபதீஸ்வரர் கோயில். இங்குள்ள இறைவியின் பெயர் சுந்தரவல்லி. ஆனந்த வல்லி என்ற பெயருடன் பழைய கோயிலிலும் இறைவி தரிசனம் தருகிறார்.
இக்கோயிலின் நூற்றுக்கால் மண்டபம் காண வேண்டியதாகும். கருவறையிலுள்ள மூலவர் மீது பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சூரியஒளி விழும்படி ஆலயக் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது கரூர். கந்தபுராணத்தில் கூறப்படும் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை மிக்கது இக்கோயில் என்று தலபுராணம் கூறுகிறது.
பதினென் சித்தர்களுள் ஒருவரும் ராஜராஜ சோழனின் குருவுமான கருவூர்ச் சித்தர் வாழ்ந்த இடம் இது. இக்கோயிலில் கருவூர்ச் சித்தருக்கு தனி சந்நிதி உண்டு.
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. கருவூர்ப் பதிகம், இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. 14ஆம் நூற்றாண்டில் கரூர் வந்த அருணகிரிநாதர், இக்கோயிலில் குடிகொண்டுள்ள முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. கோவையிலிருந்து 121 கி.மீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 115 கி.மீ. தூரத்திலும், ஈரோட்டிலிருந்து 65 கி.மீ. தூரத்திலும் கரூர் உள்ளது. ஈரோடு- திருச்சி ரயில்மார்க்கத்திலும் கரூர் உள்ளது. 63 நாயன்மார்களுள் ஒருவரான புகழ்ச்சோழ நாயனார் கருவூரை ஆண்ட மன்னராவார். எறிபக்த நாயனார் பிறந்த தலமும் இதுவே.


திருஞானசம்பந்தர் அருளிய
கருவூர்ப் பதிகம்
தொண்டெ லாமலர் தூவி ஏத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயும் அன்பரே. 1
நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார் குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்தம் அன்பரே. 2
விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 3
முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியு ளார்கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே. 4
பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யர்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 5
தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 6
பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளும் நாதரே. 7
கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்தலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 8
உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே. 9
புத்தர் புன்சமண் ஆதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே. 10
கந்த மார்பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யில்துய ராய தீர்வரே. 11
(தொடர்கிறது)
$$$