-திருநின்றவூர் ரவிகுமார்

இ. ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும்
இ-4. உலகப் பார்வையில் தெளிவு
காண்க: அத்தியாயம்- 15
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது, ஆரம்பத்தில் ஸ்ரீ அரவிந்தர் அதில், ஆன்மிகத் தளத்தில், தலையிட்டதாகத் தெரியவில்லை. சீடர்களுடன் பேசும்போது யுத்தம் பற்றிய பேச்சு வருவது இயல்பாக இருந்தது. ஆசிரமத்தில் அப்போது வானொலி இல்லை. செய்தித்தாள்களைப் படித்து அதுபற்றிப் பேசும்போது ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு, யுத்த யுக்திகள் பற்றிய அறிவு வெளிப்பட்டது.
மே 1940 இல் ஹிட்லர் பிரான்ஸ் மீது தாக்குதல் ஆரம்பித்து, ஹாலந்து, பெல்ஜியத்தை கைப்பற்றி விட்டார். இங்கிலாந்தில் செம்பர்லின் விலகி, வின்சென்ட் சர்ச்சில் பிரதமர் ஆகிவிட்டார். அவர் பிரான்ஸுடன் இணைந்து கொள்வதாகச் சொன்னார். ஆனால் பிரான்ஸ் அதை ஏற்க மறுத்து விட்டது; ஹிட்லருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும், பிரான்ஸ் செய்தது தவறு என்றனர். நல்ல வாய்ப்பை பிரான்ஸ் நழுவ விட்டதாகக் கூறினர். ஆசிரமத்துக்கு வானொலி வந்தது. ஸ்ரீ அரவிந்தர் அதில் செய்திகளையும் தலைவர்களின் உரைகளையும் கேட்டார்.
பிரான்ஸ் பணிந்ததும் ஹிட்லரின் கவனம் இங்கிலாந்துப் பக்கம் திரும்பியது. இங்கிலாந்தைக் கைப்பற்றி 1940 ஆகஸ்ட் 15 ஆம் தேதி லண்டனில் இருந்து வானொலியில் உரையாற்றப் போவதாக ஹிட்லர் அறிவித்தார். அதைக் கேட்டதும் ‘நம்முடைய பணிக்கு இவர் எதிரி’ என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தர், ‘அந்த நாள் ஹிட்லரின் வாழ்வில் முக்கியமான நாளாக அமையும்’ என்றார்.
இங்கிலாந்தின் மீது போருக்கு முன்னோட்டமாக விமானங்களை ஏவினார். ஆகஸ்ட் 15 இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது. அன்று அது ஹிட்லரின் 180 விமானங்களை சுட்டு வீழ்த்தியது. ஹிட்லர் நடத்திய மிகப்பெரிய வான் தாக்குதல் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. இதைப் பற்றி சர்ச்சில் தனது நூலில் பெருமிதத்துடன் எழுதியுள்ளார். அந்தப் பின்னடைவால், இங்கிலாந்தைத் தாக்கும் திட்டத்தை ஹிட்லர் ஒத்தி வைத்தார். ஸ்ரீ அரவிந்தர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து விழுந்திருந்தால், அடுத்ததாக ஹிட்லரின் கவனம் ஆசியா பக்கம் திரும்பி இருக்கும். ஆசியாவில் உள்ள இந்தியாவுக்கு அது பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது அவரது கருத்து.
சாதாரண அறிவும் மனமும் கொண்டவர்களுக்கு ஆன்மிக சக்திகள் பௌதிக உலகின் மீது மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாது. ‘தன்னைப் பற்றி அரவிந்தர்’ என்ற நூலில் , “ஆரம்பத்தில் இரண்டாம் உலகப் போரில் ஆர்வம் காட்டாத அரவிந்தர் ஹிட்லர் தன்னை எதிர்ப்பவர்களை அழிக்கப் போவதாகவும் நாஜியிசமே உலகை ஆளும் என்றும் கூறியபோது போரில் தலையிட்டார். சாதாரணமானவர்களுக்கும் தெரியும்படி நேச நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். பிரிட்டிஷ் அரசிடம் யுத்தநிதி அளித்தார். உள்முகமாக தனது ஆன்மிக சக்தியை நேச நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுத்தினார். ஹிட்லரின் அசுர சக்தியை தடுத்து நிறுத்த தனது ஆன்ம பலத்தைப் பயன்படுத்தினார்” என்று இருக்கிறது.
சென்னை ராஜதானியின் ஆளுநருக்கு ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் கையெழுத்துடன் கடிதமும் யுத்த நிதியும் அனுப்பினர். அந்த அறிக்கை பிரிட்டிஷ் அரசு செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. பாண்டிச்சேரிக்கு வந்த பிறகு வெளிப்படையாக முதன்முதலில் ஸ்ரீ அரவிந்தர் அரசியலில் தன்னை வெளிப்படுத்திய தருணம் அது . ஸ்ரீ அரவிந்தரின் நிலைப்பாடு ஆசிரமத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்காதவர் மட்டுமின்றி, ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசை எதிரியெனக் கூறியவர் ஸ்ரீ அரவிந்தர். இந்த நிலையில் அவரது நிலைப்பாட்டை மற்றவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை; ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஆசிரமவாசிகள் பலரும் தீவிர தேச பக்தர்கள். ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக தனிமனித வன்முறையைப் பின்பற்றுவது தவறில்லை என்று கருதுபவர்கள். அவர்கள் கொதித்துப் போனார்கள்.
ஒரு சீடர் அன்னைக்கு கேள்வி கேட்டு கடிதம் அனுப்பினார். அன்னை, “தெய்வீக காரியங்களுக்காக ஸ்ரீ அரவிந்தர் நிதி உதவி செய்துள்ளார். நீங்கள் உதவி செய்தால் அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் உதவி” என்று பதில் எழுதினார்.
வேறு ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதத்தில், “இது நாடுகள் மற்றும் அரசுகள் இடையே நடக்கும் போர் என்று நாம் நினைக்கக் கூடாது. இது தெய்வ சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே நடக்கும் போர். நேச நாடுகள் பக்கம் பல்வேறு குறைகள் இருக்கலாம். ஆனால் அவற்றின் வெற்றி மானுட இனத்தின் பரிணாம முன்னேற்றத்திற்கான பாதையை அமைக்கும். அதற்கு எதிரான சக்திகள் வெற்றி பெற்றால் மனித இனம் பின்னடைவைச் சந்திக்கும். பரிணாம வளர்ச்சி தடைபடும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஹிட்லர் வென்றிருந்தால் அது எப்படிப்பட்ட இருளில் உலகை ஆழ்த்தியிருக்கும் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் புரியும். அப்போது பலருக்கும் முன்னுரிமை எதற்கு என்பதில் குழப்பம் இருந்தது.
சுதந்திர வீரர் விநாயகர் தாமோதர சாவர்க்கரும் “ஹிந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி பெற வேண்டும்” என்றார். பிரிட்டிஷார் தங்கள் ராணுவத்தில் பெருவாரியாக முஸ்லிம்களை சேர்த்துக் கொண்டனர். ஹிந்துக்களில் பெருமளவில் பட்டியல் இனத்தவரை சேர்த்துக் கொண்டனர். மற்ற ஜாதியினரை, குறிப்பாக வீரப் பரம்பரையைச் சேர்ந்தவர்களை, சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்களது விசுவாசம் பற்றி பிரிட்டிஷாருக்கு சந்தேகம் இருந்தது. ஹிந்துக்கள் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று தடைச் சட்டம் போட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருந்தனர். இரண்டாம் உலகப்போர் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு ஹிந்துக்கள் பிரிட்டிஷாரிடமிருந்து ஆயுதப் பயிற்சி மட்டுமின்றி ஆயுதங்களையும் பெறலாம். பின்னர் அதை அவர்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று சாவர்க்கர் கருத்து தெரிவித்தார்.
அதைத்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சற்றே வேறு வகையில் செய்தார். இந்திய தேசியம் பற்றி தெளிவான கருத்துக் கொண்டவர்கள், தீவிர தேச பக்தர்கள் எல்லோரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. அதிகார அரசியலில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்த காங்கிரஸ் போன்ற கட்சிகள் மட்டுமே வேறு விதமாகச் செயல்பட்டதையும் பார்க்கிறோம்.
“அரசியல் களத்தில் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி, மற்ற தலைவர்களை விட தெளிவான கருத்துக்கள் ஸ்ரீ அரவிந்தருக்கு இருந்தன” என்று வரலாற்றாளரான ஆர்.சி.மஜூம்தார் குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது.
தொடர்கிறது…
$$$