புதுவையில் பூத்த யோக மலர்- 14

-திருநின்றவூர் ரவிகுமார்

இ.  ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும்

 இ-2.  போரில் யோகி

1926 நவம்பர் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தர் யோகஸித்தி நிலையை அடைந்த பிறகு முழுக்க முழுக்க தனிமையில் ஆழ்ந்தார். சீடர்களும் நண்பர்களும் அவரைச் சந்திப்பது அரிதானது. வழக்கமான மாலை நேர உரைகள் நின்று போயின. ஸ்ரீ அரவிந்தர் கடிதங்கள் எழுதினார் என்றாலும் அவரைப் பார்ப்பதை சீடர்களும் மற்றவர்களும் விரும்பினர் . எனவே அவர் தரிசனம் கொடுக்கும் தினங்கள் அன்னையுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாள், அவர் யோகஸித்தி அடைந்த நாள், அன்னையின் பிறந்தநாள் ஆகிய மூன்று நாட்கள் தரிசன தினங்களாக தீர்மானம் செய்யப்பட்டன. அந்த நாட்களில் இருவரும் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனமும் ஆசியும் வழங்குவார்கள். அரவிந்தரின் ஆசியுரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாக ஆனது.

1938 நவம்பர் மாதம் 24 தரிசன தினத்தன்று அதிகாலை குளிப்பறைக்குச் செல்லும் போது திடீரென்று ஸ்ரீ அரவிந்தர் விழுந்துவிட்டார். அங்கு கிடந்த புலித் தோலின் தலை அவரது வலது காலை பலமாகத் தாக்கியது. அவர் எழுந்திருக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அடுத்த அறையில் இருந்து அன்னைக்கு பலமான அதிர்வுகள் ஏற்பட்டன. அவர் சற்று நிதானித்தார். அதிர்வுகளைக் கவனித்தார். ஸ்ரீ அரவிந்தருக்கு ஏதோ ஆகியிருக்குமோ என்று அவர் இருந்த அறைக்கு வந்தார். வீழ்ந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே மாடிப்படி அருகே சென்று உதவிக்கு ஆட்களை அழைத்தார். அம்பாலால் புராணியும் மற்றவர்களும் வந்தார்கள். வந்தவர்கள் அரவிந்தரைத் தூக்கி நிறுத்தினர். நிற்க சிரமப்பட்ட அவரை படுக்கையில் கிடத்தினர். இவ்வளவும் தரிசன நேரத்திற்கு ஓரிரு மணிக்கு முன்பாக நடந்தது.

நல்வாய்ப்பாக , தரிசனத்திற்காக குஜராத்தில் இருந்து வந்திருந்த சீடரும் அனுபவம் மிக்க மருத்துவருமான  மணிலால் உடனடியாக வந்தார். சோதித்துப் பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார். ஆசிரமத்திலிருந்த மற்றொரு மருத்துவரான பாரன் வந்தார். ஸ்ரீ அரவிந்தர் முகத்தில் வழக்கமான புன்னகையுடன் உடல் மட்டும் தளர்வாய் படுத்துக் கிடப்பதையும், அன்னையின் தெய்வீக முகம் கவலையில் ஆழ்ந்திருப்பதையும் மருத்துவர் ஸ்ரீ அரவிந்தரை பரிசோதித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார். ஸ்ரீ அரவிந்தரின் ஆண்மை மிக்க கட்டுடல் மேனியும் தோலின் நிறமும் அவருக்கு வேதங்களில் சொல்லப்படும் பொன்னிற மேனி கொண்ட தேவ புருஷனைப் பற்றிய வர்ணனைகள் நினைவுக்கு வந்தன என்று குறித்துள்ளார்.

மருத்துவர் மணிலால் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் ஸ்ரீ அரவிந்தர் பதிலளித்தார். வலது தொடை எலும்பு முறிந்துள்ளதாக மணிலால் சொன்னார். எதுவும் சொல்லாமல் அதை ஸ்ரீ அரவிந்தர் கேட்டுக்கொண்டார். ஆசிரமவாசிகளுக்கு விஷயம் பரவியது. கவலையுடன் எல்லோரும் முற்றத்தில் கூடி விட்டனர். அவர் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அங்கு அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனின் மகளும் இருந்தார். ஸ்ரீ அரவிந்தரை தரிசிப்பதற்காகவும் ஆலோசனைகளைப் பெறவும் அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார்.

பாண்டிச்சேரியில் மருத்துவ வசதிகள் குறைவாக இருந்தன. எனவே அருகில் இருந்த கடலூரில், பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளரான டாக்டர் ராவுக்கு ஆள் அனுப்பப்பட்டது. கவலையில் இருந்த ஆசிரமவாசிகளுக்கு அன்று மாலை அன்னை தரிசனம் தந்து கருணையுடன் அவர்களது கண்ணீரைத் துடைத்தார். டாக்டர் ராவ் வந்தார். பரிசோதித்தார். பின்னர் மெட்ராஸில் (சென்னையில்) இருக்கும் எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் நரசிம்ம ஐயரை அழைத்து வர அன்னையின் அனுமதியுடன் சென்னை சென்றார். டாக்டர் ஐயர் வருவதற்குள் எக்ஸ்ரே படம் பிடிக்கப்பட்டது. ஐயர் அதைப் பார்த்து இரண்டு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றார். கால் அசையாமல் இருக்க மாவு கட்டு போடப்பட்டது. முறிந்த எலும்பை ஒட்ட வைக்க கால் உயர்த்தி கட்டப்பட்டு அதில் எடை குண்டு தொங்க விடப்பட்டது. சில வாரங்கள் இப்படியே இருக்க வேண்டும் என்றார் டாக்டர் ஐயர். அவரிடம் நிலைமையைத் தெரிந்து கொள்ள அன்னை கேட்ட கேள்விகளில் இருந்து, அவரது மருத்துவ விஷயங்கள் தொடர்பான அறிவைக் கண்டு டாக்டர் ஐயர் வியந்து போனார்.

ஸ்ரீ அரவிந்தரை 24 மணி நேரமும் பார்த்துக்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டது. அதுவரை அவருடன் இருந்த ஒரே உதவியாளரான சம்பக்லால் , நீண்டகால சீடரான புராணி, டாக்டர் பிச்சர்லால் என்ற அனுபவம் மிக்க ஆசிரம மருத்துவர், மூல்சங்கர் என்ற இளம் சீடர், டாக்டர் பாரன் , டாக்டர் சத்யேந்திரா ஆகியோர் அதில் இருந்தனர். டாக்டர் மணிலால் குஜராத் திரும்பிப் போவதைத் தள்ளி வைத்துவிட்டு உடனிருந்தார். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கும் உடலை அசைப்பதற்கு உதவியாளர்கள் தேவைப் பட்டதேயன்றி மற்றபடி எந்த சிரமமும் யாருக்கும் கொடுக்கவில்லை ஸ்ரீ அரவிந்தர்.

ஸ்ரீ அரவிந்தருக்கு நேர்ந்த விபத்தின் குறிப்பு என்னவென்று பின்னாளில் கேட்ட போது,  “தரிசனத்தைத் தடுக்க ஏற்கனவே எதிர் சக்திகள் பலமுறை முயன்றுள்ளனர். அவற்றின் எதிர்ப்பை பலமுறை வென்று உள்ளேன். அவை என்னை விட்டுவிட்டு அன்னையைத் தாக்க முயற்சித்தன. நான் அவரைக் காப்பாற்ற முனைந்தேன். அவை என்னைத் தாக்காது என்று நினைத்து சற்றே தவறிவிட்டேன்” என்றார்.

எதிர்ப்பு சக்திகள் என்றால் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு,  “நல்லவற்றை எதிர்க்கும் சக்திகள் வேத காலம் முதலே இருந்து வருகின்றன. ஜாராஸ்டீரியா மற்றும் ஐரோப்பாவிலும் பண்டைக் காலத்தில் அவை இருந்துள்ளன. சாதாரண உலகியல் கண்ணோடும் மனத்தோடும் வாழும் வரை அவற்றை நாம் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் வேறொரு தளத்தில், சக்தி தளத்தில், நாம் ஊடுருவி பார்க்கும்போது அவை உலகியல் போக்கில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும்  உலகின் போக்கை நல்லவற்றிலிருந்து திசை திருப்ப முயல்வதையும் காண முடியும். இது உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் விழிப்புணர்வுத் தளத்தில் இந்த சக்திகள் இயங்குகின்றன. தாழ்ந்த, தெய்வீகத் தன்மையற்ற, அறியாமை கொண்ட, உண்மை மற்றும் ஒளிக்கு எதிரானவை இவை. மனிதனையும் மனிதக் கூட்டத்தையும் தாக்கி, அவனின் நிலையை திரிபடையச் செய்து அவனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வைத்திருக்கின்றன” என்று அமானுஷ்ய உலக நிகழ்வுகளை பற்றி விளக்கினார்.

உலகில் அப்போது நடந்து கொண்டிருந்த விஷயங்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க நமக்கு சற்று புரிதல் ஏற்படலாம். முசோலினியும் ஹிட்லரும் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். ரஷ்யா ஸ்டாலினின் ஆட்சியில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்பெயினில் உள்நாட்டுப் போர். இவற்றையெல்லாம் எதிர்கொள்ள முடியாமல் ஜனநாயக சக்திகள் தடுமாறிக் கொண்டிருந்தன. பிரிட்டனும் பிரான்சும் ஹிட்லருடன் பேச்சு வார்த்தை நடத்தி முனீச் ஒப்பந்தம் (1938 செப்டம்பர்) மூலம் சமரசத்தை நாடின.

அக்டோபர் மாதம் அன்னை பிரான்ஸில் இருந்த அவரது மகன் ஆண்டீரிக்கு எழுதிய கடிதத்தில்,  “இந்த உடன்படிக்கை நீடிக்காது. ஹிட்லர் ஏமாற்றுகிறார். மனித செயல்களுக்கு பின்னால் மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் அவர்களை இயக்குகின்றன. குறிப்பிட்ட முடிவுகளை நோக்கி அவர்களை நகர்த்துகின்றன. அந்த சக்திகளின் விளையாடல் மிகவும் சிக்கலானது. பொதுவான மனித அறிவுக்கு விழிப்புணர்வுக்கு எட்டாதவை அவை. எளிய புரிதலுக்காக, எளிமையான விளக்கமாக இதை தெய்வீக சக்திகளுக்கும் அசுர சக்திகளுக்கும் இடையேயான மோதல் என்று சொல்லலாம். இந்த மோதலில் எண்ணிக்கையின் பலத்தை விட தரத்தின் வலிமையே முக்கியம். அசுர சக்திகள் இப்போது ஹிட்லர் மூலமாகச் செயல்படுகின்றன. ஹிட்லர் மோதலை, போரைக் கொண்டு வருவார். மனித விழிப்புணர்வு நிலையில் செயல்படும் எந்த அரசாங்கமும் போரை விரும்பாது. ஆனால் அதை இப்போதைக்கு தள்ளிப் போடலாமே தவிர தவிர்க்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

போருக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள ஜனநாயக சக்திகளுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்குத்தான் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தான ஓராண்டுக்குள் 1939 செப்டம்பரில் ஹிட்லர் போலந்தைத் தாக்கினார். அது இரண்டாம் உலகப்போருக்கு அச்சாரமானது. ஸ்ரீ அரவிந்தருக்கு ஏற்பட்ட விபத்தும் அன்னையின் கடிதமும் அந்த வகையில் வரவிருக்கும் நிகழ்வுகளின் முன்னெச்சரிக்கையாக குறிப்பிடத்தக்கது என்று அவர்களது சீடர்களால் கருதப்பட்டது.

தொடர்கிறது…

$$$

Leave a comment