பிப். 14: தமிழகம் விழிப்படைவது எப்போது?

-வ.மு.முரளி

1997ஆம் வருடம், டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம்.

ஸ்ரீ. தனுசு ஜி என்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிணத்துக்கடவு வந்திருந்தார். அவர் பிராந்த விவஸ்தா பிரமுக் (மாநில அளவிலான நிர்வாகி) பொறுப்பில் இருந்தார். நான் அப்போது கிணத்துக்கடவு வட்டச் செயலாளராக இருந்ததால், அவருடன் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனது டி.வி.எஸ்.50 மொபட் வாகனத்தில் அவரை அமர வைத்துக்கொண்டு பல ஊர்களுக்கு அழைத்துச் சென்றேன். சமுதாயத்தின் பலதரப்பட்ட பிரமுகர்களைச் சந்திப்பது அவரது திட்டமாக இருந்தது.

அப்படி, நாங்கள் சென்று சந்தித்தவர்களில், திரு. எஸ்.வெங்கடாசல கவுண்டர் முக்கியமானவர். அவர், கிணத்துக்கடவு ஒன்றியம், கொண்டம்பட்டி கிராமத்தின் மிகப்பெரிய நிலக்கிழார்; பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் (அப்போது தமிழ் மாநில காங்கிரஸ்). அவரது வீட்டில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு முடிந்த பின்னர், சாதாரணமாக பல விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது தனுசு ஜி, திரு. வெங்கடாசல கவுண்டர் அவர்களிடம் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். அவர் சொன்னதன் சாராம்சம் இது:

”ஐயா, நீங்கள் அரசியல் கட்சியில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். மாநிலத்தை ஆளும் திமுகவுடன் உங்கள் கட்சி நட்புறவுடன் உள்ளது. தற்போது கோயம்புத்தூரில் நடந்து வரும் நிகழ்வுகள் நல்லவையாகத் தெரியவில்லை. அங்கு உக்கடம் பழைய மார்க்கெட் பகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன…

காவல் துறை உயரதிகாரிகளை எங்கள் இயக்க நிர்வாகிகள் சந்திக்கும்போது, கோவையில் பயங்கரத் தாக்குதல்களை நடத்த அல்-உம்மா இயக்கத்தினர் திட்டமிட்டிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறுகின்றனர். அதுகுறித்து அரசு நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினாலும், அரசு நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கிறது. அல்-உம்மா இயக்கத்தினர் மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பதை உள்ளூர் திமுக நிர்வாகிகள் – மு.ராமநாதன் போன்றவர்கள் தடுப்பதாக, அவர்கள் புலம்புகின்றனர்…

முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளுக்காக, திமுக அரசு அல்-உம்மா இயக்கத்தினரை ஆதரிக்கிறது. இது மிகவும் ஆபத்து. திமுக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, உக்கடம், ஆத்துப்பாலம் போன்ற பதற்றமான பகுதிகளில் அமைந்திருந்த காவல் சோதனைச் சாவடிகளை பலவந்தமாக அகற்றியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உள்ளூர் எம்.எல்.ஏ.வும் எம்.பி.யும் திமுகவை தவறாக வழிநடத்துகிறார்கள்.

இந்த நிலை நீடித்தால், தமிழகத்தின் மிகப் பெரிய பொருளாதார நகரமான கோவையில் பயங்கரவாதச் செயல்கள் நடந்துவிடும். இதனைத் தடுப்பது, உங்களைப் போன்ற கூட்டணிக் கட்சியினரின் கடமை…”

-இவ்வாறு கூறினார் தனுசு ஜி. திரு. வெங்கடாசல கவுண்டர் அவர்களும் இதுதொடர்பாக பல கருத்துகளைக் கூறினார். திமுக நண்பர்களிடம் அது குறித்துப் பேசுவதாகவும் குறிப்பிட்டார். 

அதன்பிறகு மேலும் பலரைச் சந்தித்தபோதும், இதே விஷயத்தை தனுசு ஜி வலியுறுத்தினார். கோவையில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்ற பரிதவிப்பை அவரிடம் கண்டேன்.

***

இன்று தனுசுஜி உயிருடன் இல்லை. ஆனால், அவர் எச்சரித்தது, 1998, பிப்ரவரி 14ஆம் தேதி நடந்துவிட்டது. கோவை மாநகரின் 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அவற்றில் 58 பேர் பலியாகினர்; 200க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அன்று கோவையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வருகை தர இருந்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானியைக் கொல்லவும், கோவையைச் சீர்குலைக்கவும் இந்த தொடர் குண்டுவெடிப்புகளை அல்-உம்மா பயங்கரவாதிகள் நடத்தினர்.

இந்த குண்டுவெடிப்புகளை நேரில் கண்டவன் நான். ஆர்.எஸ்.புரத்தில் இரண்டு இடங்களில் சுமார் 50 அடி தொலைவில் இந்தக் கொடிய குண்டுவெடிப்புகளைக் கண்டு மயக்கமானேன். எங்களுடன் வந்த மற்றொரு வேனின் ஓட்டுநர் (நாச்சிபாளையத்தைச் சார்ந்தவர்) அந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அன்று இறையருளால் தப்பினேன். 

இந்த குண்டுவெடிப்பின் விளைவாக, கோவை மாநகரமும், கொங்கு மண்டலமும் பொருளாதார வளர்ச்சியில் பல ஆண்டுகள் பின்தங்கின. இந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இன்னமும் கூட இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. அதன்பிறகு, அல்-உம்மா தடை செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பல குற்ற வழக்குகளில் தண்டனையும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், காவல் துறை சரியாக வழக்கை நடத்தாததால், பல குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையும் கோவை மாநகரம் கண்டது.

இவை அனைத்தையும் விட, முஸ்லிம் பயங்கரவாதிகளை ஆதரித்த குற்றத்தால், திமுகவை தமிழக மக்கள் நிராகரித்தனர். அடுத்து நடந்த லோக்சபா தேர்தலில் திமுக இடம்பெற்ற கூட்டணி 8 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் படுதோல்வி கண்டிருந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக உள்ளிட்ட கட்சிகள் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) 31 இடங்களில் வென்றன. மக்கள் அந்த அளவுக்கு திமுக மீது கடும் வெறுப்பைக் காட்டினர்.

***

நடந்து முடிந்த நிகழ்வுகளே வரலாறு ஆகிறது. வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவனுக்கு உலகம் புதிய பாடங்களைக் கற்பிக்கும். இதனை 1998 அனுபவங்களில் இருந்து திமுக உணர்ந்ததாகத் தெரியவில்லை. அன்று, திமுக அரசு நியாயமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்காமல் பாதுகாத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

கோவை குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான அல்-உம்மா நிறுவனர் சையத் அகமது பாஷா, இந்த வழக்குகளில் பிரதானக் குற்றவாளி. அவரும் அவரது சகாக்கள் 16 பேரும் ஆயுள்சிறைத் தண்டனை பெற்றனர். ஆனால், கோவை சிறையில் அவருக்கு ஆடம்பரமான வாழ்க்கை சட்டவிரோதமாக அமைத்துக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இறுதிக்காலத்தில் அவருக்கு சிறப்பு பரோல் ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது (நீதிமன்றத்தில் எஸ்.ஏ.பாஷா பரோல் கேட்டபோது தமிழக அரசு ஆட்சேபிக்கவில்லை).

அவ்வாறு அவர் வீட்டில், சிகிச்சையில் இருந்தபோது மரணம் அடைந்தார் (2024 டிசம்பர்). அவரது இறுதிப் பயணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த திமுக அரசு மறைமுகமாக உதவியது. குண்டுவெடிப்பு குற்றவாளியை ஒரு கதாநாயகன் போல ஆராதித்து கோவை மாநகர இஸ்லாமியர்கள் பலர் சென்றது இன்னமும் நெருடலாகவே இருக்கிறது.

ஒரு குண்டுவெடிப்புக் குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு ஐந்தாயிரம் போலீஸார் பாதுகாப்புக் கொடுத்து உடன் நடந்தனர். அதனை கோவை மாநகரம் மன வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

***

கோவை தொடர் குண்டுவெடிப்புகள் தமிழக வரலாற்றில் ஓர் ஆறாத ரணம்.  ‘தமிழகம் அமைதிப் பூங்கா’ என்ற சொத்தையான வாதம், 1991இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட போதே பல்லிளித்துவிட்டது. 1993இல் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் சென்னையில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட போது (11 பேர் பலி), தமிழகம் பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிய வந்தது.

இந்தியாவில் கேரளத்திலும் தமிழகத்திலும் மட்டும்தான் இந்து இயக்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்காகவே கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் தமிழகத்தில் முக்கியமான இந்து இயக்கத் தலைவர்கள் பலர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தொடர்ந்து கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இது எதுவும் தெரியாதது போல தமிழக மக்கள் கடந்து சென்றனர். அரசியல் மாயை அவ்வாறு செய்து வைத்தது.

கோவையில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாதே என்று பரிதவித்த தனுசு ஜியை இப்போது என் மனக் கண்களில் காண்கிறேன். தனது வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல், எனது சிறு வாகனத்தில் தொற்றிக்கொண்டு கிராமச்சாலைகளில் பயணித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தப் போராடிய அவரைப் பற்றி நினைக்கும்போதே, கண்கள் கசிகின்றன.

இந்த நாடும் சமுதாயமும் காக்கப்பட வேண்டும் என்று போராடும் இந்து இயக்கத்தவர்களை  ‘மதவெறியர்கள்’ என்று கூறும் அரசியல் கட்சிகள் (திமுக, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள்), சட்டவிரோதமாகச் செயல்படுவோரையும் குண்டுவெடிப்பு நிகழ்த்துவோரையும் கண்டால் சர்வாங்கமும் ஒடுங்கிக் குழைகின்றனர். எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு!

***

இன்று 2026, பிப்ரவரி 14.

கோவையில் அந்த தொடர் குண்டுவெடிப்புக் கொடூரம் நிகழ்த்தப்பட்டு 28 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், மாநில அரசோ, தமிழக மக்களோ இன்னமும் விழிப்புணர்வு பெறவில்லை; அரசியல் கட்சிகள் திருந்தவில்லை.

நாம் எங்கே போகிறோம்? நமது எதிர்காலம் என்னவாகப் போகிறது? மீண்டும் கொடிய நிகழ்வுகள் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

சாமானிய இஸ்லாமிய மக்களில் பெரும்பாலோர் இந்த பயங்கரவாதிகளை ஆதரிப்பதில்லை. ஆனால் அதனை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் தயங்குவதே பிரச்சினை. அதேபோல அரசியல் கட்சி சார்ந்த இந்து மக்களில் பலரும் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை விரும்புவதில்லை. ஆனால், அவர்களும் சுயநலனுக்காக அமைதி காக்கின்றனர். இவ்விரு தரப்பினரின் செயலற்ற மௌனமே, மக்களைப் பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மாறி விடுகிறது.

கோவை குண்டுவெடிப்பு நடந்த 1998ஆம் ஆண்டிற்குப் பிறகும் கூட, மருத்துவர் அரவிந்த் ரெட்டி (வேலூர்), ஆடிட்டர் ரமேஷ் (சேலம்), வெள்ளையப்பன் (வேலூர்), சுரேஷ் (சென்னை), சசிகுமார் (கோவை) உள்பட 20க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனரே! காவல் துறை என்ற ஏற்பாடும், அரசு நிர்வாகம் என்ற ஒன்றும் உண்மையிலேயே உள்ளனவா?

விழிப்புணர்வுள்ள சமுதாயமே தன்னைக் காத்துக் கொள்ளும். ஒற்றுமையான சமுதாயமே அரசியல்ரீதியாக பலன்களைப் பெறும். இந்த மாநிலம் அமைதிப்பூங்காவாகத் திகழ வேண்டுமானால் வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றாக வேண்டும். இவையே பிப்ரவரி 14இல் நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

$$$

Leave a comment