வஜ்ராயுதமும் பாசுபதாஸ்திரமும்

– கருவாபுரிச் சிறுவன்

‘பொருள் புதிது’ தள ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான திரு. கருவாபுரிச் சிறுவன், செண்பகவல்லி அணைக் கால்வாய் சீரமைப்பு குறித்து இத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். விரைவில் நடைபெறவுள்ள சட்ட்சபைத் தேர்தலில் இந்தக் கோரிக்கை பிரதான இடம் பெறுவது விவசாயிகளின் கனவை நனவாக்கும். இக்கட்டுரை, செண்பகவல்லி அணை கட்டுரைத் தொடரின் இறுதிப் பகுதி....

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் 
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளான் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்கல்  உறுவீர் மனம் பற்றி வாழ்மின் 
சாதுக்கண் மிக்க இறையே வந்து சார்மின்களே!
 
     -திருஞானசம்பந்த நாயனார்.

மனிதர்களின் சிறப்பு 

இந்த உலகிலுள்ள  மாமனிதர்களின் சிறப்பினைப் பற்றி… 

*  ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்றார் ஔவை பிராட்டியார்.

*  ‘வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின், மனிதப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’  என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் திவ்விய தேவார  வரிகள். 

*  ‘மனிதனால்  செய்ய முடியாத மகத்தான காரியங்கள் என்று எதுவுமில்லை’ என்பது சுவாமி விவேகானந்தரின் புகழ் பெற்ற பொன்மொழிகள். 

*  ‘பல யுகங்கள் தவமிருந்த இந்த மானிடப் பிறப்பினை பெற்றோம்’ என்பது பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் பிரானின் அமிர்தவாக்கு

ஆக, மனிதப்பிறப்பு மிகவும் உயர்ந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். 

ஆதனால் தான்,  “என்னை  நன்றாக இறைவன் படைத்தனன்” என திருமூல தேவ நாயனாரும் மனிதப்பிறப்பிற்கு கட்டியம் கூறுகிறார். 

ஆனால் காலந்தோறும் இந்த மனித சமூகத்தில், காரணமில்லாத காரியத்தில் போட்டி, பொறாமை, தான் என்ற அகம்பாவம், பணபலம் உள்ளவர்களின் ஆதிக்கம், எதையும் அலட்சியம் செய்யும் மனப்போக்கு போன்றவை யாவும் மனிதர்களிடமும் மறைமுகமாகவும், நேரிடையாகவும்  புரையோடி வருகின்றன.

இவற்றால் அவர்களின்  தினசரி வாழ்வாதாரமும் பிரச்சினைக்குள்ளாகி விட்டது. இது அவர்களது தெரியுமா… என்பது கூட தெரியாது. அந்த அளவு மக்களை மயக்கி வைத்துள்ளது நாட்டையாளும் தீய சக்திகள். நிற்க.

உயர்ந்த மேன்மையான சிந்தனையைச் செயல்படுத்தும் மாண்புடைய பெரிய மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. எண்பது வயது வரை வாழ்ந்து சமூக சீர்த்திருத்தங்களுக்கு முன்னோடியான திருநாவுக்கரசு சுவாமிகளே  “குறிக்கோள் இலாது கெட்டேன்” என நம் நிலையை உணர்ந்த முயலுக்கிறார்.

கொண்டதே கோலம், கண்டதே காட்சி என மக்கள் வாழ்கிறார்கள் என்பது சமகால யதார்த்தம்.  

தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்ட விவசாயப் பெருமக்கள் கடந்த 65 ஆண்டுகளாக உயர்ந்த குறிக்கோளான செண்பகவல்லி தடுப்பணைக் கால்வாய் தண்ணீர் தொடர்பாக மாநில அரசிடம் முறையிட்டு வரும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா… அவர்களின் வாழ்வாதாரம் சரி செய்யப்படுமா… என்பதே விவசாயிகளின் மனதில் எழும் எண்ணமாக அமைந்துள்ளது. 

இதை செயல்படுத்திக் காட்டுகிறோம் என  பொய் பிரசாரம் செய்து இன்றுவரை வந்த அரசியல்வாதிகள் அனைவரும் தன்னை முன்னிருத்திக் கொண்டு  அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொண்டார்கள் என்பதே உண்மை.  

தேவை வஜ்ராயுதம் 

வஜ்ராயுதம் என்பது தேவலோகத் தலைவனாகிய இந்திரனிடம் இருக்கும் பலம் பொருந்திய ஆயுதம். அவனே,  எட்டு திக்குகளுக்கும் தலைவன்;  இடி, மின்னல், காற்று, மழை,  அக்னி போன்ற இயற்கை வளங்களுக்கும், விவசாயத்திற்கும் அதிபதி என வேதங்களும், சங்க இலக்கியங்களும் ஏனைய பிற நூல்களும் போற்றுகின்றன.

அவனுடைய வஜ்ராயுதம் போன்ற உறுதி படைத்த உள்ளமும், எடுத்த செயலில் வெற்றி அடையக்கூடிய திண்மமும்  செண்பகவல்லி தடுப்பணைக் கால்வாயில் தண்ணீர் வரத்தை விரும்பும்   விவசாயிகளிடம் காலங்காலமாக உள்ளது. 

இப்போதுள்ள சூழலில் அதனைப் பற்றிய புரிதலும் தெளிவும் இன்றைய தலைமுறையினரான ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மனதில் எழ வேண்டும். அது வார்த்தையாகி செயல் வடிவம் பெற வேண்டும் என்பதே. 

இது தனிநபர் சார்ந்த பிரச்சினை அல்ல… எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரம் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். 

இன்றைய யுவன், யுவதிகள் ஏ.ஐ. தொழில் நுட்பம்,  ஆடம்பரம், கவர்ச்சி, திரைப்படம்,  நடிகர், நடிகையை நோக்கி அவர்களையே முழுவாழ்வு என நம்பி மாயையில் வாழ்கிறார்கள். யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.   

 மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான தண்ணீர்ப் பிரச்சினை ஒரு மாநிலத்திற்குரியது அல்ல. இது தேசிய பிரச்சினை. இதனைக் கைக்கொள்ள, சுமுகமாகப் பேசி செயல்படுத்த இன்றைய இளைஞர்களுக்கும் அக்கறையும், விழிப்புணர்வும் வேண்டும். அதற்கு, வஜ்ராயுதம் கொண்ட உள்ளத்தையும் உடலையும் பெறுவற்கு அவர்கள் ஆயத்தமாகிக்கொள்ளுதல் அவசியம்.  சிந்திக்க. 

அஞ்சல் என்ற கரதலமும் கணபணக்கங் கணமும்
         அரைக்கிசைந்த புலியுடையும் அம்புலிச் செஞ்சடையும் 
கஞ்சமலர்ச் சேவடியும் கணைகழலும் சிலம்பும்
       கருணைபொழி திருமுகமும் கண்களொரு மூன்றும் 
நஞ்சுண்ட மணிமிடறும் முந்நூலும் மார்பும் 
       நலந்திகழ் வெண் ணீற்றொளியும் மறிமானும் மழுவும் 
பஞ்சடிச் சிற்றிடை யுமை யொப்பனை பகமுமாய் 
      பால்வண்ணன் உளத்திருக்க பயமுண்டோ எமக்கே! 

     -வரதுங்க ராம பாண்டியர்

வழிகாட்டும்  வரதுங்கர்: 

வற்றாத கருணை மிகுந்தது  கரிவலம் வந்த நல்லூர். புண்ணிய பூமியான இத்தலம் பல்வேறு அருமையும் பெருமையும் கொண்டது. 

இத்தலத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர் ஸ்ரீமான் வரதுங்க ராம பாண்டியர். இப்பெருமகனார் இத்தலத்தில் வாழும் ஆன்மாக்கள் மற்றும் இன்றி சிவம் சம்பந்தமுடையவர்கள் யாராக இருப்பினும் அனைவரும்  நற்கதி அடையும் பொருட்டு, காப்புச் செய்யுளுடன், திருக்கருவை அந்தாதிகளையும், பிரமோத்திர காண்டம் என்னும் அருள் நூலையும் அருளிச் செய்துள்ளார். 

தன்னுடைய குடிமக்களாகிய பிரஜைகள் சகல விதமான நலன்களைப் பெறுவதையே உயரிய குறிக்கோளாகக் கொண்டு நாட்டை ஆண்ட வம்ச பரம்பரையில் தோன்றிய மன்னர்களில் ஞானச் சூரியனாகத் திகழ்ந்தவர் இம்மன்னர்பிரான். 

பூத உடலைவிட்டு தன்னுடைய ஆத்மா பிரியும் வரை மக்கள் நலனையே எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நினைத்துக் கொண்டே இருந்ததனால் தான், இத்தலத்தில் நித்திய சொரூபியாகத் திகழும் கருவைக் களவீசன் திருவடி மீது மேற்கண்ட எழுச்சி மிகுந்த பாடலைப்  பாட முடிந்தது. 

அப்பாடல் அவருக்காக மட்டுமல்ல… இன்று செண்பகவல்லி அணைக் கால்வாயில் தண்ணீர் வராதா! வராதா!வராதா…  எனத் தவித்துக் கொண்டு இருக்கிறோமே, நமக்காகக்தான் இப்பாடலைப்  பாடினார் என நினைக்கத் தோன்றுகிறது. 

பாடலைக் கூர்ந்து கவனியுங்கள்…. 

கங்கா மாதாவை மட்டும் பாடலில் அமைத்திருக்க மாட்டார். ஏனென்றால் உயிர்களாகிய நாம் அவளின் அருமை அறிந்து செய்த தவறுக்கு திருந்தி வருந்தி பொருந்தி அவளை அன்போடு அழைக்க வேண்டும் என்பதற்காகக் தான் இப்பாடலை இப்படிப் பாடினாரோ என்னவோ! 

வாழ்க!  வரதுங்க ராம பாண்டிய மன்னரின் திருவடி. வளர்க! அவரது திருநாமம்.  

இலக்கணம் வகுத்த குமரகுருபரர்: 

திருச்செந்துார் முருகப் பெருமான் திருவருளாலும், அன்னை அங்கயற்கண்ணி அம்மையின்  தண்ணருளாலும் சைவத்தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் பங்காற்றியவர் சற்குரு குமரகுருபர சுவாமிகள். 

சுவாமிகளின் படைப்புகளில் வேதம் ஆகமம், புராணம், தோத்திரம், சாத்திரம், விஞ்ஞானம் மற்றும் பல தரப்பு செய்திகள் விரவி இருப்பதைக் காணலாம். 

சுவாமிகள் முதன் முதலில் திருவாய் மலர்ந்தருளியது கந்தர் கலி வெண்பா.  இந்நூலினை  ‘குட்டிக் கந்தபுராணம்’ என்று சொல்லும் வழக்கம் இன்றும் கல்வியாளர்களிடமும் ஏனையோரிடமும் உள்ளது.

குறிப்பாக, இப்பெருமானார் குழந்தைகளுக்காக அருளிச் செய்த திருநூல்களில் சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் என்னும் இரு நுால்கள் குறிப்பிடத்தக்கவை. அதிலுள்ள கருத்துரைச்சாரங்களை  பத்து வயதுக்குள் குழந்தைகள் படித்து கரைகண்டு பூரணமாகி இருக்க  வேண்டும்  என்பது சான்றோர்களின் துணிபு. 

ஒவ்வொருவரும் தான் கொண்ட குறிக்கோளுடன் செயல்பட்டால் அக்காரியத்தில் வெற்றி அடையலாம். அதற்கு  அன்றே இலக்கணம் வகுத்து தந்து இருக்கிறார்  குமரகுருபர சுவாமிகள். 

நீதி நெறி விளக்கம் 53 வது பாடலில்,    “உயரிய குறிக்கோளை உடையவர்கள் உடலுக்கு ஏற்படும் வருத்தத்தைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.  பசி வந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். உறக்கம் என்பதே அவர்களிடம் இருக்காது.  பிறரால்  உண்டாக்கப்படும்  தீமையை அவர்கள் ஒரு போதும் தீமையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தனக்கு வசதி, வாய்ப்பு வேண்டும் என ஒரு போதும் நினைக்க மாட்டார்கள். மற்றவர்கள் வேண்டுமென்றே அவமரியாதை செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய பண்பு நலன்களை கொண்டவர்களே செயலில் வெற்றி பெறுவார்” என்கிறார் குமரகுருபர சுவாமிகள். 

மெய்வருத்தம் பாரார்  பசி நோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி 
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

பாரதியார் தந்த பாசுபதா அஸ்திரம்: 

வானளாவி எழும்பும் கட்டிடம் விண்ணுயர்ந்து நிற்பதற்கு அதன் அஸ்திவார அடித்தளம்  ஆதாரமாக விளங்கும். அதுபோல ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு நேர்த்தியான  கட்டமைப்பு  வேண்டும். 

செண்பகவல்லி தடுப்பணைக் கால்வாயில் தண்ணீர் வருவதற்கு விவசாயிகளுக்கு வஜ்ராயுதம் மட்டும் இருந்தால் போதாது. கர்ணனுடன் கூடவே பிறந்த கவச குண்டலம் போலவே விவசாயிகளிடம்  பிறந்தநாள் முதலே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களுடன் இருக்கும் பாசுபதா அஸ்திரத்தை பயன்படுத்த வேண்டும்.

அதை  ஒரு முறை மட்டும் பயன்படுத்துவதாக இருக்கக் கூடாது. அதை நான்கு முறை பிரயோகம் செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிறார் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார். 

அந்த பாசுபதா அஸ்திரம்  என்னென்ன தெரியுமா?

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் 
தெளிந்த நல்லறிவு வேண்டும்!  

நினைத்ததை முடிக்கும் ஆற்றல், நற்செயல்கள், திடமான உள்ளம், தேர்ந்த அறிவு இவை நான்குமே ஒரு செயலுக்கு ஆற்றல் மிகுந்த பாசுபதா அஸ்திரமும், வானளாவிய கட்டிடம் எழுவதற்குரிய அஸ்திவாரம் என பொருத்திக் கொண்டு படியுங்கள். பாசுபதா அஸ்திரம் என்பது பொருத்தமாகத் தெரியும்.  

நற்செயலை நினைத்து செயலாக்கும் போது அதில் இருந்து பின்வாங்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது செய்பவருக்கும், செய்யப்படும் செயலுக்கு இழுக்கு என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவ தேவ நாயனார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.

செய்யப்படும் செயலுக்கு இழுக்கு செய்பவரின்  முன்வினை வசத்தால் மூண்டது என்பார்கள் முக்காலம் உணர்ந்த அருள் ஞானிகள். 

சரி! அந்த வினையை எப்படி எதிர் கொள்வது, எப்படி கடந்து செல்வது, எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடைய தடையாக இருக்கும் அதை  உடைக்க வழிவகை தான் என்ன என யோசித்தால்… அவர்கள் அதற்கும் உபதேசம் செய்து இருக்கிறார்கள்.  

தூளாகும் வினைகள்: 

ஆதிகுரு திருஞானசம்பந்த பிள்ளையின்  அருட்பாடல்கள் எல்லாமே அதிரடி தான். அவர்களுடைய திருப்பாடல்கள் யாவும் தன்னம்பிக்கை நிறைந்ததாகவும், மறுமலர்ச்சியை உண்டு பண்ணுவதாகவும் நிறைந்து இருக்கும். 

எல்லாமே சொல்லிச் சொல்லி சொன்னதைத்தான் செயல்படுத்துவார். அவருடைய திருப்பாடல்களைப் படித்தவர்கள் நன்கு உணருவார்கள். 

நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பரின் மீது அவர் சாற்றிய அருட் பனுவலைப் பாடியும், ஆடியும் சொன்னாலே போதுமாம், சொல்பவரின்  அருவினைகள் யாவும் கெட்டு விடும் என்பது ஆளுடைய பிள்ளையின் அருள்வாக்கு. 

அக்கருத்தமைந்த பாடல் இதோ… 

 பெருந்தண்மா மலர்மிசை அயனவன் 
           அனையவர் பேணு கல்வித் 
திருந்துமா மறையவர் திருநெல்வேலி
          யுறை செல்வர் தம்மைப் 
பொருந்து நீர்த்தடமல்கு புகலியுள்
         ஞான சம்பந்தன் சொன்ன 
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக்
        கெடும் அருவினையே!

திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு அற்புதத்தலம் திருச்செந்துார். இத்தலம் தேவார வைப்புத்தலமாகவும், திருப்புகழ் தலமாகவும், ஆதிசங்கரர், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மு.ரா. அருணாச்சலக் கவிராயர், பாம்பன் சுவாமிகள், தேவராய சுவாமிகள், வாரியார் சுவாமிகள்  இன்னும் எத்தனையோ அருட்கவிகள் எல்லாம் பாடிப்பரவிய தலமாகத் திகழ்கிறது. நூற்றிற்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களைக் கொண்ட  பெருமையினை உடையது இது. 

இத்தலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் முருகப் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி நெற்றியிலே திருநீற்றை அணிந்தால் ஏற்கனவே வந்த வினைகளும், வருகின்ற வலிமையான வினைகளும் கலங்கி அது நீர்த்துப் போய் விடும் என்கிறார், தன் பெயரைச் சொல்ல விரும்பாத புலவர் ஒருவர். 

குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தத் திரட்டில் காணப்படும் அப்பாடலைப் படியுங்கள். அனைத்துத் தீவினை நீக்கத்திற்கும், நல்வினை ஊக்கத்திற்கும் அது உதவும். 

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே - செந்தில் நகர் 
சேவகா எனறு திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை. 

சங்க இலக்கிய நூற்களுக்கும் பக்தி இலக்கிய நூற்களுக்கும் மிகப் பெரிய பாலமாக இருப்பது நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை. 

இந்நூலினை பழங்காலத்தமிழ் குடிகள் பாராயணம் செய்து கந்தவேளை வழிபாடு செய்துள்ளார்கள் என்பார் கி.வா.ஜ. 

திருமுருகாற்றுப்படையின் தனிச்சிறப்பினைக் கருதிய புலவர் பெருமகனார் ஒருவர் அதற்கு பாயிரப்பாடல்கள் இயற்றியுள்ளார்.  

அதில், “ஒரு முறை நெஞ்சில் உளமார ஒருக்கால் நினைத்தாலே போதும் முருகப்பெருமான் இரு கால்களுடன் முன் தோன்றுவார். எவ்வளவு இக்கட்டான சூழலிலும் அப்பிரபுவினுடைய வேல் தோன்றும்” என்கிறார். 

இப்படி பெயர் தெரியாத புலவர் பாடிய பாடல்களை அபியுக்தர் வாக்கு என சொல்லுவர்.  

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 
ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன். 

கந்தனின் காட்சி கிடைக்க வேண்டும், முருகப் பெருமானின் திருவருளை முன்னின்று பெற்று எடுத்துக் கொண்ட அருஞ்செயலில்  வெற்றி அடைய வேண்டும் என்றால் அதற்கு எந்நிலையிலும் கலங்காத உள்ளம் வேண்டும். 

தான் கொண்ட கொள்கையில் இருந்து தளராத உள்ளம் வேண்டும் என்ற வெற்றி வேட்கை கொண்ட சொற்களுக்கு முடியாட்சியை எதிர்த்த முதல் மஹான் அப்பரடிகளின் அருள் வாக்கு மகுடமாக இருக்கும். 

மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல் 
தலைவனாகிய ஈசன் தமர்களைக் 
கொலைசெய் யானை தன் கொன்றிடு கிற்குமே. 

பல கொடுமைகளை அனுபவித்த திருநாவுக்கரசு சுவாமிகளின் வாழ்வு, நமக்கு நல்லதொரு வழிகாட்டி. இதைப் பின்பற்றிய தேசியகவியின் வாக்கினை கேட்டாலே மனதிற்கு தெம்பும் திராணியும் உண்டாகும்.  

இதோ… அவரது உற்சாகம் மிகுந்த வரிகள்….

அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
இச்சகத்துள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதினும் 
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!

மேலும், நெஞ்சிலுள்ள துணிவு, நேர்மையான செயல், மண்ணும் பயனுற வேண்டும் என்கிற பரந்து பட்ட உயர்ந்த எண்ணத்தினால்  ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்ற உழவாரப்படையாளியின்  திருவாக்கு அரணாக அமைகிறது. 

நிறைவாக, “நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். கையில் பணம் இல்லை. உடலில் வலுவில்லை. உதவி செய்ய நண்பர்கள் இல்லை. என்று யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே. தயங்காதே. இலக்கை நோக்கி அடிஎடுத்து வை. தொடர்ந்து முன்னேறுவாய். சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும் நோக்கத்தை அடைந்தே தீருவாய். அதை யாராலும் தடுக்க முடியாது. அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்” என அன்றே உபதேசித்த  சுவாமி விவேகானந்தரின் திருமொழிகளை  65 ஆண்டு காலமாக செண்பக வல்லி தடுப்பணைக் கால்வாய் தண்ணீருக்காகப் போராடும் விவசாயப் பெருமக்கள் மனதிலும், வாக்கிலும், செயல்பாட்டிலும் இன்னும் இறுக்கமாகவும், தீவிரமாகவும் , அழுத்தி இருத்திக் கொள்ள வேண்டும். 

மேலும், தென்தமிழக மக்களின் உயிர்ப்பாக விளங்கும் செண்பகவல்லி அணைக் கால்வாய் மீண்டும் புத்துயிர் பெற… 

செய்யனே திருஆலவாய் மேவிய 
    ஐயனே! அஞ்சல் என்றருள் செய்
சித்தனே திருஆலவாய் மேவிய 
   ஐயனே அஞ்சல் என்றருள் செய்
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச் 
   சொக்கனே அஞ்சல் என்றருள் செய்
நண்ணார் புரம் மூன்று எரிஆலவாய் 
   அண்ணலே அஞ்சல் என்றருள் செய்
செங்கண் வெள்விடையாய் திருஆலவாய் 
  அங்கணா அஞ்சல் என்றருள் செய்
துார்த்தன் வீரம் தொலைத்து அருள் 
  ஆலவாய் ஆத்தனே அஞ்சல் என்றருள் செய்
 எண்திசைக்கு எழில் ஆலவாய்மேவிய 
   அண்டனே அஞ்சல் என்றருள் செய்
தாவினான் அயன்தான் அறியாவகை 
  மேவினாய் திருஆலவாயாய் அருள்
சிட்டனே! திருஆலவாய் மேவிய 
   அட்டமூர்த்தியனே அஞ்சல் என்றருள்
தஞ்சம் என்று உன் சரண் புகுந்
  தேனையும் அஞ்சல் என்றருள்!

-என  திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கினைக் கொண்டு  மீனாட்சி சொக்கநாத பிரபுவின் திருவடியில் விண்ணப்பம் செய்து பிரார்த்திக்கிறோம். 

இந்த நற்சிந்தனையில் ஈடுபடும் அனைவருடைய உள்ளத்திற்கும் உடலிற்கும் வலிமை சேர்க்கும் விதமாகவும், உற்சாகம் தரும் வரியாகவும் பல குருநாதர்கள் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களில் சற்குருநாதராகிய தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் திருவாக்கினை இங்கே நினைவில் கொள்வது சாலச் சிறந்ததாகும். 

 முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ என்னும் திருவாக்கு  செண்பகவல்லி அணை விவசாயப் பெருமக்களுக்கு தோன்றாத்துணையாக இருந்து அருள் செய்யும் என்பதே நல்லவர்களின் எண்ணம். அது வண்ணமயமாக்கப்படும் என்று கூறி, இவற்றுடன் இணைந்து மெருகூட்டும்  ஏனைய பாடல் வரிகளும் செண்பகவல்லி அணைக்கால்வாய் உடைப்பை சரிசெய்ய ஒவ்வொரு அன்பர்களின் பிரார்த்தனையில் ஆத்மார்த்தமாக உதவும் என நம்புகிறோம். 

விவசாயிகளின் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருவள்ளுவ தேவ நாயனாரின் வாக்கினை தலைமேற்கொள்வோமாக. 

ஏரிநிறைந்தனைய செல்வன் கண்டாய் 
இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்

-என்ற அப்பர்பிரான் திருவாக்கின் படி சிவபெருமானே, மீண்டும் செண்பகவல்லி அணைக் கால்வாய் வழியாக நன்னீர் என்னும் தண்ணீராகப்  பாய்ந்து  தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாய மக்களின் நீண்ட நாள் கனவினை நனவாக்குவார்  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

அந்நாளும் வெகுதொலைவில் இல்லை. எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் அந்த நன்னாள் உள்ளது என்று கூறி இந்த அருஞ் செயலை சிந்திக்காத யாவரே ஆயினும் அவர்களது, 

கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக 
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள் நயந்த 
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைந்து 
எல்லோரும் வாழ்க இசைந்து! 

-என்ற வள்ளல் பெருமகனார்  வடலூர் ராமலிங்க சுவாமிகளின் திருவாக்கினையும், 

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய வேண்டும்” என்ற  நாச்சியார் திருமொழியினையும், சிந்தித்தும் வந்தித்தும் சிரமேற்கொண்டு நல்லது விரைவில் நடக்கும் என நம்புகிறோம். 

இதற்கான ஆழ்ந்த பிரார்த்தனையை தினமும் அனைவரும் செய்வோம். 

வாழ்வில் வளம் பெறுவோம். 

வாழ்க வளத்தோடு என்று கூறி வருவாள் செண்பகவல்லித்தாய் தொடரினை நிறைவு செய்கிறோம்.  

எண்ணிய எண்ணியாங்கு எய்துப  எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

     -திருவள்ளுவர் 

மனதில் உறுதி வேண்டும்
    வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
   நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப் பட வேண்டும்
   கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
   தரணியில் பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும் 
   காரியத்தில் உறுதி வேண்டும் 
மண் பயனுற வேண்டும்
   வானமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்!
   ஓம் ஓம் ஓம்!

   -தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார்

வெற்றி ஒன்றே எங்கள் இலக்கு: 

செண்பகவல்லி தடுப்பணை கால்வாய்க்கு தண்ணீர் வர வேண்டும் என அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் விவசாயப் பெருங்குடிமக்களே! 

தங்களுடைய தரப்பு நியாயங்களை, இவ்விஷயத்தில் அடைந்து வரும் இடர்பாடுகளை தக்கோர் மூலம் தக்கவரிடம் இன்னும் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்து விளக்க தயாராகுங்கள். தொடர்ந்து இதற்கான வழிமுறைகளை பேரன்புடைய பெரியோர்கள்,  அறிவுசால்புடைய இளைஞர்கள் ஆகியோரின் துணை கொண்டு கண்டறியுங்கள். இதற்காக,  நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டாம். வீணான விரயச் செலவுகளையும் தவிர்க்க முயற்சிப்போம்.  

 65 ஆண்டு காலம் போராட்டம் போதும். அடைந்தே தீருவோம் செண்பகவல்லி தடுப்பணைக் கால்வாய் தண்ணீரை என்ற உறுதியை மேலும் தீவிரப்படுத்திக் கொள்வீர்களாக.

‘பகைத் தொழில் மறந்து வையகம் வாழ்க நல்லறத்தே’  என்ற தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரின் வாக்கிற்கு இருமாநிலங்களும் இலக்கணமாகும் நன்னாளை எதிர்பார்க்கிறோம். 

வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு! 

                 ஓம் சக்தி!

$$$

Leave a comment