விமான விபத்துகளில் பலியான இந்திய பிரமுகர்கள்

சேக்கிழான்

இன்று காலை மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த விமான விபத்தில் மாநில துணை முதல்வர் அஜித் பவார் பலியாகி இருக்கிறார். விமான விபத்துகளில் அரிய மானுட உயிர்கள் பலியாவது அவ்வப்போது நிகழ்கிறது. இந்தியாவுடன் தொடர்புடைய சில முக்கியமான விமான விபத்துகள் பற்றிய தொகுப்பு இங்கே…

1945

கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி, இன்று தைவான் என அழைக்கப்படும் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.  இவர்தான், விமான விபத்தில் பலியான முதல் இந்திய அரசியல் தலைவர். (இவர் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்ற நம்பிக்கையும் உண்டு. நேதாஜி சென்ற விமான மாயமானது உண்மை).

1966

‘இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை’ என புகழப்படும் விஞ்ஞானி டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா, 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, ஏர் இந்தியா விமானம் பிரான்ஸ் அருகே விபத்தில் சிக்கியதில் பலியானார். அவருடன் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

1973

புதுதில்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்திய ஏர்லைன்ஸ் விமானம், 1973, மே 31ஆம் தேதி விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 48 பயணிகள் பலியாகினர். அவர்களுள், மத்திய எஃகு துறை அமைச்சரும் தமிழகத்தைச் சார்ந்தவருமான மோகன் குமாரமங்கலம், கம்யூனிஸ்ட் தலைவர் (எம்.பி.) பாலதண்டாயுதம் ஆகியோர் முக்கியமானவர்கள்.

1980

கடந்த 1980, ஜூன் 23ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனும் லோக்சபா எம்.பி.யுமான சஞ்சய் காந்தி சிறிய விமானத்தில் (சாகசப் பயணம்) பயணித்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானார்.  

1991

கொல்கத்தாவிலிருந்து இம்பால் வழியாக திமாபூர் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மணிப்பூர் மாநிலம், தாங்கிங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 69 பேரும் பலியாகினர். இவர்களுள் மணிப்பூர் முன்னாள் துணை முதல்வர் இரெங்பாம் டோம்போக், முன்னாள் மாநில கல்வி அமைச்சர் கெய்ஷம் பிரா ஆகியோரும் அடங்குவர்.

1994

1994ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி பஞ்சாப் மாநில அரசின் சூப்பர்-கிங் விமானம் மோசமான வானிலை காரணமாக மாண்டி (ஹிமாசல்) அருகே விபத்துக்குள்ளானதில் மாநில ஆளுநர் சுரேந்திர நாத் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாகினர்.

1997

1997ஆம் ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி, அருணாசலப் பிரதேசம், தவாங் அருகில் நிகழ்ந்த ராணுவ விமான விபத்தில், அன்றைய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் என்.வி.என். சோமு (திமுக) உயிரிழந்தார். அவருடன் ஒரு ராணுவ அதிகாரியும் இரு விமானிகளும் பலியாகினர்.

2001

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருமான மாதவராவ் சிந்தியா, கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம், கான்பூருக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்க செஸ்னா தனி விமானத்தில் சென்றபோது, உ.பி. மாநிலம், மெயின் புரி அருகே நிகழ்ந்த விபத்தில் பலியானார்.  அவருடன், தனி செயலாளர், பத்திரிகையாளர்கள் நால்வர், விமானிகள் இருவர் பலியாகினர்.

2002

மக்களவைத் தலைவரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான ஜி.எம்.சி. பாலயோகி கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டம், கைகலூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவர்து பாதுகாப்பு அதிகாரியும் விமானியும் உடன் பலியாகினர்.

2004

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா, 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பாஜக வேட்பாளர்களுக்காக ஆந்திரப் பிரதேச  மாநிலத்தில் அரசியல் பிரசாரம் மேற்கொள்ள ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது, விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.  திருமணமாகி, கர்ப்பிணியாக இருந்த சௌந்தர்யா, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாக்கியது.

2005

2005ஆம் ஆண்டு மார்ச் 321ஆம் தேதி (உ.பி.) ஷஹரான்பூரில் நிகழ்ந்த சொந்த ஹெலிகாப்டர் விபத்தில், தொழிலதிபரும், ஹரியாணா மாநில மின்சக்தித் துறை அமைச்சராக இருந்தவருமான (காங்கிரஸ் கட்சி) ஓம் பிரகாஷ் ஜிண்டால் தன்னுயிரை இழந்தார். அவருடன் பயணித்த மாநில விவசாயத் துறை அமைச்சரும் முன்ன்னள் முதல்வர் பன்சிலாலின் மகனுமான சுரேந்திர சிங் உள்ளிட்ட மூவர் பலியாகினர்.

2009

பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதல்வராக இருந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி(காங்கிரஸ் கட்சி)  கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி திருப்பதி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் உதவியாளர்கள் இருவர், விமானிகள் இருவரும் உயிரிழந்தனர்.

2011

அருணாசலப் பிரதேச முதல்வராக இருந்த தோர்ஜி காண்டு (காங்கிரஸ் கட்சி), கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 30இல் பயணித்த ஹெலிகாப்டர் மாயமானது. பிறகு அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் பலியானது கண்டறியப்பட்டது. அவருடன் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

2021

இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாகப் பொறுப்பேற்ற பிபின் ராவத், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன், அவரது மனைவி, அதிகாரிகள், வீரர்கள் மற்றும் 14 பேர் உயிரிழந்தனர்.

2025

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன்-கேட்விக் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒருவர் தவிர, 241 பேர் விபத்தில் பலியாகினர். குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானி, நாட்டையே உலுக்கிய இந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். விமானம் கல்லூரிக் கட்டடம் மீது மோதியதில் அங்கிருந்த 19 பேர் உயிரிழந்தனர்.

2026

மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த தனியார் விமானம், பாராமதியில்  2026, ஜனவரி 28ஆம் தேதி காலை விபத்துக்குள்ளாகியதில் பலியானார். அவருடன் விமானிகள் இருவர், அவரது பாதுகப்பு அதிகாரி, உதவியாளர் ஆகியோரும் பலியாகினர்.

***

மேலும் சில பெரும் விமான விபத்துகள்

1971

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் ஏவ்ரோ விமானம் 1971ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தமிழகத்தின் மேகமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 40 பயணிகளில் 31 பேர் பலியாகினர்.

1976

மும்பையிலிருந்து 1976ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சென்னை கிளம்பிய இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தின் எஞ்சின் செயலிழந்ததால் மும்பையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துள்ளானது. இதில் பயணித்த 95 பேரும் பலியாகினர்.

1978

மும்பையிலிருந்து துபைக்கு 1978ஆம் ஆண்டு, ஜனவரி1 ஆம் தேதி, 190 பயணிகள், 23 விமானப் பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம், பாந்த்ரா அருகே கடலில் விழுந்ததில் அனைவரும் பலியாகினர்.

1982

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம், 1982 ஜூன் 21ஆம் தேதி மும்பை சாஹர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 17 பேர் பலியாகினர். 94 பயணிகள் உயிர் தப்பினர்; இந்திய அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணாவும் உயிர் தப்பியவர்களுள் ஒருவர்.

1985

கனடாவின் டொரொண்டோ நகரிலிருந்து இந்தியாவின் மும்பைக்கு வந்துகொண்டிருந்த கனிஷ்கா- இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், 1985ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடுவானில் காலிஸ்தான் பயங்கரவாதியால் வெடிகுண்டு கொண்டு தகர்க்கப்பட்டது. இதில், விமானத்தில் பயணித்த 22 இந்தியர்கள் உள்பட 329 பேர் பலியாகினர்.

1988

மும்பையிலிருந்து அகமதாபாத் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 1988 அக்டோபர் 19ஆம் தேதி அகமதாபாதில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 133 பேர் பலியாகினர்; இருவர் காயமடைந்தனர்.

1990

மும்பையிலிருந்து பெங்களூர் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 1990 ஆம் ஆண்டு, பிப்ர்வரை 14ஆம் தேதி பெங்களூரில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 146 பேரில் 92 பயணிகள் பலியாகினர்.

1993

ஔரங்காபாத்திலிருந்து மும்பை கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், விமான ஓடுபாதையில் சரக்கு வாகனம் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 55 பயணிகள் பலியாகினர்; 63 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

2000

கொல்கத்தாவிலிருந்து தில்லி சென்ற தனியார் பயணிகள் விமானம் (அல்லயன்ஸ்), பிகார் மாநிலம், பாட்னா அருகே விபத்துக்குள்ளானதில் 55 பேர் பலியாகினர். விமானம் தரை மீது மோதியதில் அங்கிருந்த ஐவர் உயிரிழந்தனர்.

2010

துபையிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம், 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி  மங்களூர் அருகே விபத்துக்குள்ளானதில் 158 பயணிகள் பலியாகினர்.

***

(குறிப்பு: உயிரிழப்பு குறைவான சிறிய விபத்துகள், இந்தியாவில் விபத்துக்குள்ளான வெளிநாட்டு விமானங்கள் குறித்த தகவல்கள் இதில் சேர்க்கப்படவில்லை).

$$$

Leave a comment