நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அதிகாரிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்தவர்கள் மீது பிப். 2இல் நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையின்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார் (ஜன. 9). திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு அரசுத் தரப்பில் முறையாக பதில் அளிக்காவிட்டால், பிப். 2-இல் அவமதிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.

‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கட்நத 2025 டிச. 1-இல் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. அதையடுத்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களுடன் சென்று மனுதாரர் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச. 3-இல் உத்தரவிட்டார்.

அதன்படி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களுடன் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற (டிச். 3) மனுதாரர் ராம. ரவிகுமாரை 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறிய போலீசார் மலைக்கு மேல் செல்ல அனுமதிக்கவில்லை.

அதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோருக்கு எதிராக மனுதாரர்கள் ராம. ரவிகுமார், பரமசிவம், சோலை கண்ணன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு  2026 ஜன. 9ஆம் தேதி  விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் காணொளி வழியாக ஆஜராகினர்.

அப்போது நீதிபதி, ‘நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட விளக்கம் என்ன?’ என கேள்வி எழுப்பினார்.

அரசுத் தரப்பில், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு மனுக்கள் நேற்று (ஜன. 8)  இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. நேரமின்மை காரணமாக மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை’ எனக் கூறப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?’ என்று கேட்டார். அதற்கு அரசுத் தரப்பில், ‘அடுத்த விசாரணையின் போது எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என பதிலளிக்கப்பட்டது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  “முழுமையாக ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டும், அரசுத் தரப்பில் எழுத்துபூர்வ பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது (ஜன. 6, 2026).  ‘தீபத்தூண் அமைந்துள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது’ என்பதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதி வழங்கப்பட்டது? கொடியேற்றியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதில் ஏதேனும் முரண் உள்ளதா? கல்லத்தி மரத்தில் கொடியேற்ற கோயில் தரப்பிடம், தர்கா தரப்பு அனுமதி பெறவில்லை. இதற்கு என்ன செய்யலாம்? நீங்களே பரிந்துரையுங்கள்” என்றார்.

கோயில் தரப்பில், ‘தர்கா நிர்வாகத்தின் செயல் அத்துமீறல் தான். அனுமதியில்லாமல் கல்லத்தி மரத்தில் கொடியேற்றியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டது.

‘கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டால், அந்தப் புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நீதிபதி, ‘நீதிமன்ற உத்தரவு வேண்டுமென்றே நிறைவேற்ற மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுத்தவர்களை அப்படியே விடுவதா?’ என்று கேட்டார்.

மாவட்ட ஆட்சியர், துணை காவல் ஆணையர் ஆகியோர், ‘நாங்கள் சுயமாக முடிவெடுத்துச் செயல்பட்டோம். எங்களை யாரும் நிர்பந்திக்கவோ, அறிவுறுத்தவோ இல்லை’ என்றனர்.

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘கோயில் செயல் அலுவலரிடம் நீதிமன்ற உத்தரவை நீங்களாகவே அமல்படுத்தவில்லையா,  அல்லது அமைச்சர் சேகர்பாபு அமல்படுத்தக் கூடாது என்று சொன்னாரா? நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் வருத்தம் தெரிவித்தோ, விளக்கம் அளித்தோ இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை’ என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 

‘நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் டிசம்பர் 2025 முதல் வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. மீண்டும் 17.12.2025 அன்று பட்டியலிடப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், தங்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கக் கூடாது என்பதற்கான காரணத்தை இப்போது வரை அவர்கள் தெரிவிக்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என 1.12.2025-இல் பிறப்பித்த உத்தரவை கோயில் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்கவே மாவட்ட ஆட்சியர் 144 தடையாணை பிறப்பித்தார்.

அந்தத் தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்த போதும், துணை ஆணையர் இனிகோ திவ்யன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை மீண்டும் தடுத்தார். இந்த நிகழ்வுகளுக்கு முறையாக விளக்கம் அளிக்கப்படாவிட்டால், 02.02.2026 அன்று நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். விசாரணை 02.02.2026-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’

-என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

  • நாளிதழ் செய்தி (10.01.2026)

$$$

Leave a comment