-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை, மேல் முறையீட்டு வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பின் முக்கியமான விவரங்கள்:

‘திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம்’
‘திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம்’ என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கோயில் செயல் அலுவலர், மதுரை ஆட்சியர், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு ஜன. 6இல் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றும் வசதியுடன் கூடிய கல் தூண், தமிழில் ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த தூண் அமைந்துள்ள இடம், உரிமையியல் நீதிமன்றத்தால் கோயிலின் சொத்து என அறிவிக்கப்பட்ட மலையின் ஒரு பகுதியில் உள்ளது. தற்போது வரை அந்த இடத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோரவில்லை.
இந்த வழக்கு விசாரணையின் போதுதான் முதல்முறையாக வக்பு வாரியம் சார்பில், விளக்குத் தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்று தீய உள்நோக்கத்துடன் கூடிய வாதம் முன்வைக்கப்பட்டது.
கடந்த 1994-ஆம் ஆண்டு ரிட் மனுவில் நீதிமன்றம் தர்கா சொத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவுக்கு அப்பால் என்ற கட்டுப்பாடுடன், கோயிலுக்குச் சொந்தமான மலையில் வேறு எந்தப் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கான இடத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த வழிகாட்டுதலின் நோக்கம், பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். தீபம் ஏற்றுவதற்கான மாற்று அல்லது கூடுதல் இடத்தை தேர்வு செய்யும் போது, தர்கா சொத்தின் பாதுகாப்பு மட்டுமே கட்டாய நிபந்தனையாகும்.
இங்கு ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படும் கல் தூண், தர்கா அமைந்துள்ள உச்சியை விடத் தாழ்வான ஒரு பாறை உச்சியில் இருப்பதால், அது தீபம் ஏற்றுவதற்கு உகந்த இடமாகும். கார்த்திகை தீபம் மற்றும் பிறபண்டிகைகளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். மலை அடிவாரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் அதைப் பார்த்து வழிபடுவர். ஒளி என்பது சிவபெருமானின் உருவகம் என திருமூலர் கூறியுள்ளார். உயரமான இடத்தில் விளக்கேற்றும் வழக்கம் இருக்கும் போது, கோயில் சொத்தின் எல்லைக்குள் ஒரு இடம் கிடைக்கும் போது, அது ஒழுக்கம் மற்றும் பொதுக் கொள்கைக்கு விரோதமாக இல்லாத போது, பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோயில் நிர்வாகம் மறுக்க எந்தக் காரணமும் இல்லை.
விளக்கேற்றுவதற்காக கோயிலைச் சேர்ந்த சிலரை மட்டும் தூண் பகுதிக்கு அனுமதித்து, பக்தர்களை மலையடிவாரத்தில் நின்று வழிபட செய்வது ஒன்றும் சமாளிக்க முடியாத செயல் அல்ல. ‘இந்தக் கூட்டத்தால் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும், கூட்ட நெரிசல் ஏற்படும், சமூகங்களிடையே நல்லிணக்கமின்மை ஏற்படும்’ என்பது போல சித்தரிப்பது, சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதா கவோ, அல்லது சமூகங் களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தயக்கத்தையோ காட்டுகிறது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லாத வழக்கம் என்று அரசும், கோயில் நிர்வாகமும் கூறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அரசு அச்சப்படுவது அபத்தமானது. அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும். எந்த அரசும், தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக் கூடாது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக் கூடும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம், அவர்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்துக்கு எதிராக சந்தேகம் கொள்ள வைக்கவே இது செய்யப்படுகிறது.
இதை இரு சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைவதற்கு, மாநில அரசு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அமைதியான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் இரு சமூகங்கள் இடையிலான இடைவெளியைக் குறைத்திருக்க முடியும். துரதிருஷ்டவசமாக இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளன.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை, அந்தந்த சமூகங்களின் விழாக்களின் போது தேவைக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி, செயல்படுத்துவதன் மூலம் மோதல் இல்லாமல் அமைதி மட்டுமே நிலவும் என நம்புகிறோம். எனவே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும்.
தமிழ் மாதமான கார்த்திகையில், வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபம் ஏற்றும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும்.
-இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
$$$

மீண்டும் மேல் முறையீடு: அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கக் கூடிய தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது; தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நாம் பின்பற்ற வேண்டும்; முன்னுதாரணங்கள் இருக்க வேண்டும்; அந்த அடிப்படையில் திருப்பரங்குன்றம் தீபத் தூணிலே தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இன்று நீதியரசர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் சிலர் சென்று, பொதுமக்களுக்கு மட்டும் தடை விதித்து, தீபத் தூணிலே தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை சட்டத்துக்குப் புறம்பாகத் தந்திருக்கிறார்கள். எனவே, இதன் மீது தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருக்கிறது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் தாங்கள் அனுமதி அளிப்பதாக நீதிபதிகள் சொல்ல வேண்டும். ஆனால், எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது. இதற்கு முன் ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் எல்லாம் யாருமே தீபத் தூணிலே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்த கோரிக்கை வந்தபோது, இது கூடாது; நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றுதான் சொன்னார்.
ஆனால், இன்று நீதியரசர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். தீர்ப்பை நாம் ஒன்றும் சொல்ல முடியாது; அதை களங்கப்படுத்த முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு சட்டத்துக்கு முரண்பாடான ஒரு செயல் என்ற அடிப்படையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர எங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். யாரோ ஒருவர் அனுமதி கேட்டதால், அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்வது முழுக்க முழுக்கத் தவறு. இதுவரை இல்லாத ஒரு பழக்கத்தை, வழக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக உள்ளே நுழைப்பது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. எனவே, இதை நாங்கள் எதிர்க்கிறோம்.
இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி. ஒருசாரார் இதில் புகுந்து விளையாடப் பார்க்கிறார்கள். எனவே, இதை அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய எங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
-என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
$$$

தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, அதன் இந்து விரோத மனப்பான்மையை பிரதிபலிப்பதாக, பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் மற்ற மூத்த தலைவர்கள் சநாதன தர்மத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி, கேலி செய்து, தாக்கி வருகின்றனர். இவை தற்செயலாக நடந்த நிகழ்வுகள் அல்ல.
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி, சநாதன தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என்று கண்டிக்கத்தக்க ஒரு விஷயத்தை உதயநிதி ஸ்டாலின் மிகவும் துணிச்சலாகப் பேசினார். அதன்பிறகு, முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் முயற்சி, நீதிமன்ற உத்தரவு இருந்தும் காவல் துறையால் தடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாக முருகப் பெருமானை வணங்கி தீபங்கள் ஏற்றப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிச. 4-ஆம் தேதி தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநில அரசு இந்த மரபுகளைக் கடைப்பிடிக்க அனுமதிக்கவில்லை. தமிழக அரசின் முடிவுக்கு எதிராக பக்தர்கள் நீதிமன்றத்தை மீண்டும் நாடினர். இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேலும் ஒரு தீர்ப்பை வழங்கினார். தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கத்தை தொடர அவர் அனுமதி அளித்தார்.
ஆனால், நீதிபதியின் அந்த உத்தரவுக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்தது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது இந்து தர்மத்துக்கு எதிரானது; சநாதன தர்மத்துக்கு எதிரானது; பாரபட்சமானது. திமுக அரசின் இந்து விரோத மனப்பான்மையை இது தெளிவாகக் காட்டுகிறது.
உண்மையில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக, இண்டியா கூட்டணி ஆகியோரின் வெறுப்புணர்வையே இது காட்டுகிறது.
-என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.
- நாளிதழ் செய்திகள் (07.01.2026)
$$$