-கருவாபுரிச் சிறுவன்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது...

தரும மழை முகில் பொழிக! தரணியெலாம்
பயிர் விளைக! சைவ மேற்
பெருமண மங்கல மாதர் மைந்தர் குழா
மக்களொடும் பெருகி வாழ்க!
மரு மலர் மார் பரசர்குடி மகிழ்வெய்தும்
படிகாக்க மாறாச் செல்வத்
திருமருவு தென்காசிச் சிவபெருமான்
பூசனைகள் சிறக்க மாதோ!
-அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்
தலபுராண மகத்துவம்
ஒவ்வொரு திருத்தலத்தின் பெருமையையும் அதன் சிறப்பினையும் சொல்லும் தல புராணங்கள் அந்த தலத்திற்குரிய பண்பாட்டை, நவ நாகரிகத்தை, பழக்க வழக்கங்களை, தொன்மையான நடைமுறையை செய்யுள் வடிவில் விளக்கும் ஆவணங்களாகும்.
இக்கருத்தை முறையான தகவல்களை முறைப்படி தரும் பதிவு செய்யப்பட்ட பத்திரத்திற்கு நிகரானது என்றும் தல புராண பதிப்பாசிரியர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், உ.வே.சாமிநாதய்யர் போன்ற பெரியவர்கள் தன் நூற்களில் குறிப்பிடுவதுண்டு.
அந்த வகையில் ஒவ்வொரு தலத்திற்கும் வடமொழியில் இருந்த தல புராணச் செய்திகளை தமிழ்ப் படுத்தியும், செய்திகளை உள்வாங்கியும் முதன்முதலாக வட்டாரப் புலவர்களை கொண்டும், அந்தந்த தலத்திற்குரிய அபிமான புலவர்களைக் கொண்டும் தமிழ் புராண நூற்களை இயற்றியும், பதிப்பிக்கும் பணியில் பெரும் செல்வந்தர்களும், ஆஸ்திக அன்பர்களும் ஈடுபட்டார்கள்.
தலபுராண நூற்களைப் போற்றியும் பாதுகாத்தும், மீண்டும் புதுக்கியும் எழுதி வெளியிடுவது தலைமுறையைப் பாதுகாக்கும் மகத்தான பணி என காஞ்சி மகா பெரியவர் அருளாசி வழங்கியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மிகசிறப்புடைய புராண வரலாற்றுச் செய்திகளை கொண்ட தென்காசியும், திருக்கருவை என்னும் கரிவலம் வந்த நல்லுார் என்னும் திருத்தலமும் பிற்கால பாண்டிய மன்னர்களின் தலைநகராக திகழ்ந்தவை என்பது தமிழ் இலக்கிய வரலாற்று தொல்லியல் அறிஞர்களின் முடிந்த முடிபான கூற்றாகும்.
தென்காசி தல புராணம்
தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு பதினான்கில் ஒன்றான குற்றாலம், தென்காசி பகுதியில் அமைந்த தலமாகும். மற்றொன்றான திருநெல்வேலி இதன் அருகில் அமைந்த தலமாகும்.
அருணகிரிநாத சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், கவிராஜ பண்டாரத்தைய்யர் இன்னும் பல புலவர்களால் போற்றப்பட்ட இலஞ்சி, பண்பொழி திருமலைக்கோயில் போன்றவை யாவும் இத்தலத்தின் கண் அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் பிரான் காலங்களில் இந்நகரில் செழிப்புற்று விளங்கிய எட்டு திசைகளிலும் உள்ள திருமடங்களில் ஒன்று புலியூர் மடம். இதன் அப்போதைய அதிபதி அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் அவர்களால் இயற்றப்பட்டது தென்காசி தல புராணம்.
இம்மடத்தின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தலைவராக வகித்த தெட்சணாமூர்த்தி சுவாமிகள் இந்நூலிற்கு சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார்கள்.
இக்கோயிலின் தர்மகார்த்தாக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 1926இல் இதற்கு அரும்பதவுரை எழுதி உபகரித்த பெருமகனார், சித்தாந்த பூஷணம் பேட்டை ஈஸ்வர மூர்த்தி பிள்ளையவர்களுடைய தகப்பனார் த. ஆறுமுக நயினாப் பிள்ளை ஆவார்.
திரிகூட ராஜப்பக் கவிராயரின் வம்ச பரம்பரையில் வந்த மேலகரம் சொ. சுப்பிரமணியக் கவிராயர் இந்நூலைப் பரிசோதித்து சரிபார்த்து வெளியீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
30 படலங்களையும் 4 700க்கும் மேற்பட்ட செய்யுளை கொண்ட இந்நூலில் உள்ள செண்பக விநாயகர் துதியை பாடி மீண்டும் சிந்தனைக்குள் செல்வோமாக.
உருவமலி நாகத்தை மாவிலங்கை யொருகோட்டை யுடையு வாவை வெருவமுனைத் தருட் கண்ணை விரும் பலரைச் சிந்துரத்த வேழந்தன்னை கருவுயிர்க்கப் பாலை முன்னர்க் காக்க வெழு முன்னோனை யாவாசிக் காசித் திருவரைத் தியிரைசைச் செண்பக வாரணத் திணையாம் சிந்தை செய்வாம்.
அன்றும் இன்றும் என்றும் தென்காசி நகரத்தின் முழுமுதற் தெய்வமாகிய செண்பக விநாயகரை சிந்தையில் கொண்டால் கரு வுருவாவதற்கு முன்பிருந்தே காப்பான் என்கிறார் அழகிய சிற்றம்பலமுடைய தேசிகர்.
செண்பக பாண்டியர்
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விந்தன் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் பராக்கிரம பாண்டியன். இவனே வடக்கே உள்ள காசி விசுவநாதருக்கு தெற்கே ஒரு கோயிலை எழுப்ப வேண்டும் என விருப்பம் கொண்டான். அவனது பக்தியை மெச்சி அவரது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றி வைத்தார்.
அதனால் அவனை ‘காசி கண்ட பராக்கிரம பாண்டியன்’ என்றும், செண்பகவனமாக இருந்த இக்காட்டினைத் திருத்தி தென்காசி நகரையும் , திருக்கோயிலையும் சமைத்தவன் என்பதால் ‘செண்பகப்பாண்டிய மன்னன்’ என்றும் பெயர் பெற்றான் என்கிறது தென்காசி தல புராணம்.
மேலும், தமிழக அரசு அறிநிலையத் துறை சார்பில் வெளியீடு செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட திருக்கோயில்கள் வரலாறு, காசி விசுவநாதர் கோயில் வரலாறு ( வசனம்) ஆகிய நூற்களில் செண்பக பாண்டிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் தெளிவாக எடுத்து எழுதப்பெற்றுள்ளது என்பது இங்கு நினைவூட்டும் செய்தியாகும்.
செண்பகக் காடு எங்கு இருக்கிறது, செண்பக பாண்டிய மன்னன் என்னும் பராக்கிரம காசி கண்ட மன்னன் தமிழகமா அல்லது கேரளாவில் ஆட்சி செய்தானா என்பதையும் வாசகர்களின் தெளிவான சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.
நிறைவாக, குற்றாலம் பொதிகை மலைத்தொடரில் தொடங்கி தென்காசி, சொக்கம்பட்டி, கடைய நல்லுார் புளியங்குடி, சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், செண்பகத்தோப்பு வரைக்கும் செண்பக மரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி காணப்பட்டுள்ளது; காணப்படுகிறது. (குற்றாலத்தில் செண்பகாதேவி அருவி உண்டு).
அதனால் தான் நம் முன்னோர்களால் இம்மலைத்தொடரின் அடிவாரத்தில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு ‘செண்பகவல்லி தடுப்பணை’ என தெள்ளத் தெளிவாக பெயர் வைத்துள்ளார்கள்.
அப்படி இருக்க செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீர்திருத்தும் பணிக்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உரிமை எப்படி போனது என்பதுதான் இன்று வரை புரியாத புதிராக உள்ளது.
தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மக்களின் வாழ்வாதார தண்ணீரை மறித்து மடை மாற்றம் செய்த நல்லவர்கள் ‘வாழ்க’!
மக்களுக்காக உருவாக்கப்பட்ட தண்ணீர்த் தடாகத்தை வைத்து கடந்த 60 ஆண்டுகாலமாக அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் காலில் செண்பகவல்லி அணை தொடர்பான கோப்புகள் அனைத்தும் மிதிபட்டு வருவது கூடுதல் சோகம்.
அரசுகளின் அலட்சியத்தால் இரு தலைமுறை மறந்துபோன தென்தமிழகத்தைச் செழிக்க வைத்த ஓர் அணைக்கட்டின் மறக்கடிக்கப்பட்ட வரலாற்றை திரும்பிப் பார்க்கவும், திருத்தி எழுதவும் ஒரு தர்மவானை, நீதிமானை, சத்தியவானை, பேராண்மை மிக்கவனை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது செண்பகவல்லி அணை.
பல்வேறு போராட்டங்களின் முடிவில், நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அரசின் நிலைப்பாட்டை நீதிதேவதையே நீயே கேள் என, உள்ளத்திற்குள் இன்று வரை குமுறிக் கொண்டு இருக்கிறார்கள் விவசாயப் பெருமக்கள்.
இப்பிரச்சினையைச் சரி செய்ய தனிப்பட்ட முறையில் விவசாயிகளுக்கு தார்மிக அனுமதியை அரசு முன்வழங்க வருமா என்ற கேள்வியை முன் வைத்து இச்சிந்தனையை நிறைவு செய்து மற்றொரு கோணத்தில் வரும் பகுதியில் சிந்திப்போமாக.
வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு!
$$$