வந்தே மாதர மந்திரச் செய்யுள்கள் 

-கருவாபுரிச் சிறுவன் 

தெய்வத்திற்கும் தமிழுக்கும் செய்யுள் இயற்றி தொண்டு செய்வது மட்டுமல்ல... இந்த தேசத்தின் விடுதலைக்கும் எங்களது பங்கு உண்டு என்கிறார்கள் பெரும் புலவர்கள் சேற்றுார் முகவூர் கந்தசாமிக் கவிராயரும், மதுரை சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும். இக்கவிராயர்களின் ‘வந்தே மாதரம்’ பாடல்களை  பெருமையுடன் வெளியிடுகிறது  ‘பொருள் புதிது’ இணையதளம்…. 

முருகப் பெருமானின் பக்தர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான சற்குரு அருணகிரிநாத சுவாமிகள் கடல் பரப்பிலுள்ள மணலை எண்ணி விடலாம். ஆனால் பூமியில் மனிதர்கள் எடுக்கும்  பிறப்பினை அளவிட்டுச் சொல்ல முடியாது என்பார். 

அதுபோல இந்த பாரதத்தாயின் விடுதலைக்காக  அல்லல்பட்டு, அரும்பாடு பட்டு,  செக்கிழுத்து, சிறை சென்று பல வித இன்னல்களை அனுபவித்து,சொல்ல முடியாத கொடுமைகளைத் தாங்கி இச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்  எண்ணில் அடங்கார். அவர்களைக் கணக்கிட முடியாது. இதுபோல எத்தனையோ தெரியாத சுதந்திர தியாகிகளை உருவாக்கியவை, இப்பகுதியில் வாழ்ந்த கவிராயர்களின் கனல் ததும்பிய எழுத்துக்கள்.   

அந்நியரின் அநீதிகளையும், அவற்றை எதிர்த்துப் போரிடுவதால் ஏற்படும் பயன்களையும்  தனது எழுத்தாலும், சொல்லாலும் மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திய பெரும் பங்கு வட்டாரப் பகுதியில் வாழ்ந்த கவிராயர்களையே  சாரும். 

எங்கள் ஊரில் இருந்து மேற்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது செண்பகாபுரம் என்னும் கிராமம். இவ்வூரில் சுந்தரக்கவிராயர் என்பவர் ஒருவர் வாழ்ந்தார் என்றும், அவர் தேசப்பக்திப் பாடல்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார் என்றும், வைகாசி விசாக நன்னாளில் காவடிச்சிந்து பாட வரும் பெரியவர் ஒருவர் கூறுவார். அவர் பாடிய பாடல் அவரோடு புதைந்து விட்டன. 

கரிவலம்வந்த நல்லூருக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது பால்வண்ணநாதபுரம். இதன் அருகே உள்ள சிறு கிராமம்தான் சின்னியா புரம். இங்கு வாழ்ந்தவர் தான் தெய்வீகக்கவி  கு.சிதம்பரக்கவிராயர். அவர் இயற்றிய தேசிய மங்களம், தேசபக்தி மங்களம்  போன்ற  பாடல்கள் யாவும்  அன்னாருடன் ஐக்கியமாகிக் கொண்டன. நிற்க.   

வானாளாவி எழும்பி நிற்கும் பல அடுக்கு மாடி கட்டிடங்களின் அஸ்திவாரம் கண்களுக்குத் தெரியுமா? தெரியாது அதைப்போலத் தான் இக்கவிராயர்களின் தேசபக்திப் பாடல்கள். 

தெய்வத்திற்கும் தமிழுக்கும் செய்யுள் இயற்றி தொண்டு செய்வது மட்டுமல்ல… இந்த தேசத்தின் விடுதலைக்கும் எங்களது பங்கு உண்டு என்கிறார்கள் பெரும் புலவர்கள்  சேற்றுார் முகவூர் கந்தசாமிக் கவிராயரும், மதுரை சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும். 

இவர்கள் இருவருமே இறையருள் பெற்ற புனிதர்கள்; தமிழுக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த அருளாளர்கள்; தான் கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு மிக்க உத்தமர்கள்; கடைசி மூச்சு உள்ள வரை தமிழ், தமிழ், தமிழ் என்று வாழ்ந்தவர்கள். 

இவ்விருவரும் தேசம், தெய்வம், தமிழ் – இம்மூன்றையும் முக்கண்ணாக பாவித்தார்கள். மூன்றையும் ஒரே நேர்கோட்டில் கண்டவர்கள் தான் இந்த வட்டாரக் கவிராயர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.

இக்கவிராயர்களின்  ‘வந்தே மாதரம்’ பாடல்களை  பெருமையுடன் வெளியிடுகிறது  ‘பொருள் புதிது’ இணையதளம்…. 

விவேகபானு பத்திராதிபர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர் இயற்றிய கவிகள் 

                       சந்தப்பாட்டு 

எங்கா னாலும் நலஞ்செயுமே யின்பே 
       யோருரு வங்கொளுமே
செங்கோல் ஆதி வயந்தருமே செந்தே 
       னாம்ருசி தந்திடுமே
இங்கே பாயுள் பணந்தருமே எந்தாய் 
      வீரம் வளர்ந்திடுமே
மங்கா வாழ்வு தரும் பதமே 
      வந்தே மாதர மந்திரமே.- 1

                                      வேறு

சந்தோ ஷாகரம் முன்போல் ஓர் தரம் 
          சம்பூர ணோதயம் கொண்டே மேலெழும்
செந்தே வாமிர்தம் இன்ப மேவிடும் 
          தென்பார் மாதவம் பொன்போல் வாளெனும்
நந்தாய் வாழ்பதம் நன்றே கூர்பலம்
        நம் போல் வார் மனஞ் சென்றே சேர்திடம்
வந்தோர் யாரையும் தன்பா லேகொளும்
        வந்தே மாதரம் வந்தே மாதரம். - 2

                                           வேறு

எல்லாருஞ் சகோதரரென் றெண்ணச் செய்யும்
       எப்பொருளும் நம்தேசத் திருக்கச் செய்யும்
கல்லாரும் பல கலைகள் கற்கச் செய்யும்
        கைத்தொழிலும் வர்த்தகமும் கதிக்கச் செய்யும்
நெல்லாதி விளை பொருள்கள் நிலவச் செய்யும்
         நித்தலும் நம் பொருள் நமக்கே நிலைக்கச் செய்யும்
வல்லாண்மைப் போர்வெல்லும் வகையும் செய்யும்
        வந்தே மாதர மெனுந்தாய் வணக்கந் தானே - 3 

சாதிமத பேதமெனும் பெருநோய் கொண்டு 
      தவிக்குநமக் கிரங்கிநமைத்  தருந்தா பான
மேதினிமான் கொடுத்த அரு மருந்தே போல 
      விளங்குவதாம் ஒற்றுமையை விளைப்ப தாம்எப்
போதும் நலம் புரிவதுமாம் எதிர்த்தோ ருள்ளம்
       புழுங்கி நடு நடுங்கவென்று புரப்ப தாகும்
மாதிரம் விண் புவிமுழுதும் முழக்கஞ் செய்யும்
      வந்தே மாதரம் எனுந்தாய் வணக்கந் தானே - 4 

தந்தேகத் தினிலொரு சாண் கும்பிக் காகத் 
           தருஞ்சோற்றுச் சிறுதொழிலே தகவா எண்ணிச் 
சந்தேகத் துடன்பயந்து தாயை வேண்டார்
          சழக்குரையைப் புறந்தள்ளித் தருமம் பேணி 
நந்தேசம் செழிப் பெய்த நமது செல்வம் 
       நம்மிடத்தே நிலைத்திருக்க நாடிக் கூடி 
வந்தே மாதரம் என்னச் சொல்வோம் வெல்வோம்
     மாணவர்காள் சுதேசத்தாய் மலர்த்தாள் போற்றி - 5 

சோழவந்தான் வித்துவான்

ஸ்ரீமத் அரசஞ் சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியன

அந்தா மரையய னந்தா வுருவுட்
        னன்பா னீருண வின்பால் வாழ்வுற 
நந்தா வளமல கின்றே யாமுற
      நங்காய் நீயருள் கின்றா யேமுறு
சிந்தாகுலமற நண்பார் மணிவகை
     செந்தா தாதிய தந்தாய் நீதா 
வந்தே மாதரம் வந்தே பாடுது 
      வந்தே மாதரம் வந்தே மாதரம். - 1 

தருந்தே கம்பல விருந்தே வளர்நிலை 
      தம்பா லாசுற வந்தேய் நோயென
வருந்தீ தன்பகை பொழிந்தே கெடநமர்
      மைந்தோ டே நலமுன்போன் மேவிட
இருந்தே யம்பல கொளுமபா ரதமெனு
      மெந்தாய் மாதருள் வந்தே யீதொரு
மருந்தே தந்தனள் வருந்தே மினியது 
      வந்தே மாதரம் வந்தே மாதரம் - 2 

                               வேறு 

பண்பார் காசினி  நந்தாய் மாணிசை 
        பண்டே போலுற நின்றிடு மே
நண்பால் வாழுந ரெண்சீர் யாவையும்
       நன்றே தாமுற வந்தெழு மே 
விண்பா லாரும ணண்பா ளாரெனின்
     வென்போ யோடிட முந்துறு மே
மண்பால்  யாமினி நண்பா லோதுவம்
     வந்தே மாதர மந்திர மே - 3

                              வேறு 

வந்தேமா தரமென்னும் மந்திரத்தா
             லெய்தாத வரமுமில்லை
நந்தேய மக்களுக்கு நலந்தருவ
           திது போலந் நாட்டுமில்லை 
முந்தேயு மந்திரம் போ லொருசிலர்க்கே
           யாவதன்று முற்று மாகும்
வந்தறே்றுக் கொண்மினெல்லா வாழ்வுக்கும்
          வித்திதுதான் மறக்கொணாதே  
                        வந்தே மாதரம்! - 4 

வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு!

$$$

Leave a comment