திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 10

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -10)
உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரத்தில் சமரசத்திற்கு தயாரா?

உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், சமரசம் மூலம் தீர்வு காணத் தயாரா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

முன்வரலாறு:

மதுரை மாவட்டம், எழுமலை ராம. ரவிகுமார், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என மனு செய்தார். இதுபோல பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனு செய்தனர். இவற்றை டிச. 1இல் அனுமதித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்’ என உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து கோயில் செயல் அலுவலர், ‘150 ஆண்டுகளுக்கு மேல்  உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டப பகுதியில் மட்டுமே தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்தூணில் ஏற்றப்பட்டது என்பதற்கு ஆவணம் இல்லை. தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்’ என மேல்முறையீட்டு மனு செய்தார்.

இதுபோல ஆட்சியர், காவல் ஆணையர், அற நிலையத் துறை இணை ஆணையர், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து 20 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.

தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘தீபத்தூணில் ராம.ரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என டிச. 4இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அவமதிப்பு வழக்கு டிச.9இல் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து மீறப்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் தொடர்பாக சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல் வெளியிடும் திட்டம் உள்ளதா என்பதை அறிய தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டிச.17 இல் காணொளியில் ஆஜராக வேண்டும்’ என உத்தர விட்டார்.

அதை எதிர்த்து தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., காவல் ஆணையர் தரப்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு டிச 17ஆம் தேதி 3வது நாளாக விசாரணைக்கு வந்தன. வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர்கள் அப்துல் முபின், ஹாரூன் ரஷீத்; ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங்; ராம.ரவிகுமார், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், நிரஞ்சன் எஸ்.குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

தீபத்தூண் பகுதி தர்காவிற்கு சொந்தமானது – அப்துல் முபின்:

 திருப்பரங்குன்றம் ஒட்டுமொத்த மலையும் கோயிலுக்குச் சொந்தமானது. நெல்லித்தோப்பு, தர்கா, அதற்கு செல்லும் படிக்கட்டு, புது மண்டபம் மற்றும் அருகிலுள்ள பகுதி தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது என 1920இல் சிவில் வழக்கில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தீபத்தூண் என அழைக்கப்படும் பகுதி தர்காவிற்கு சொந்தமானது. லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவில் தீபத்தூண் என குறிப்பிடப்படவில்லை. இதற்கு முந்தைய எந்த வழக்குகளிலும் அத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதில் தீபம் ஏற்றும் நடைமுறை ஏற்கனவே இல்லை.

தர்கா மண்டபப் பகுதியைக் கடந்துதான் அத்தூணிற்குச் செல்ல முடியும். மாற்று வழி இல்லை. அப்படிக்கட்டுகளில் சாதாரண நாட்களில் ஹிந்துக்கள் சென்றுவருவதில் ஆட்சேபம் இல்லை. வழிபாட்டிற்குச் சென்றுவந்தால் அது ஆக்கிரமிப்பிற்கு சமம். அது சிக்கந்தர் மலை என்று பல நூற்றாண்டுகளாக அழைக்கப்படுகிறது.

தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் குதிரைச்சுனையும், அதை ஒட்டி தூணும் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறைக்கும் உரிமை உள்ளது. தொல்லியல் துறையிடம் தனி நீதிபதி கருத்து கோரவில்லை.

இணக்கமான சூழல் நிலவ விரும்புகிறோம். கோயில் நிர்வாகம், அறநிலையத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே நீதிமன்றக் கண்காணிப்பில் சமரசத் தீர்விற்கு வழிவகை செய்ய வேண்டும் என தனி நீதிபதியிடம் வலியுறுத்தினோம். அது பற்றி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.

நீதிபதிகள்: சமரச தீர்வு காண வேண்டும் என்பதில் தற்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளீர்களா?

அப்துல் முபின்: அதே நிலைப்பாட்டில் உள்ளோம்.

நீதிபதிகள்: சமரசத் தீர்வின் நிலைப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரிடம் விபரம் கோரப்படும். தர்காவிற்கு சொந்தமான பகுதி அளவீடு செய்யப்பட்டுள்ளதா, சொந்தமான பகுதி தொடர்பான ஆவணங்கள் உள்ளதா?

அப்துல் முபின்: அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் உள்ளன. (ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது).

இரு முறை பிரச்சினை – விகாஸ் சிங்:

திருப்பரங்குன்றத்தில் ஹிந்து, முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தில் 2 முறை பிரச்சினை எழுந்தது. அப்போது அமைதி பாதித்தது. அப்போது தீபம் ஏற்ற அனுமதி அளிக்கவில்லை. தற்போது தனிநீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீபம் ஏற்றப்படும் இடத்தைத் தவிர மாற்று இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது ஆகம சாஸ்திரத்திற்கு எதிரானது.

தர்காவிற்கு சொந்தமான பாதை வழியாக சென்றுதான் அத்தூணில் தீபம் ஏற்ற முடியும். இதை அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

தமிழகத்தில் ஒரு நடிகரை (விஜய்) பார்ப்பதற்காகக் கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் இறந்தனர். தூணில் தீபம் ஏற்றுவதைப் பார்க்க பல லட்சம் பக்தர்கள் ஒன்று கூடுவர். அதற்குரிய பாதுகாப்புக் கட்டமைப்பு வசதிகள் தூண் அமைந்துள்ள பகுதியில் இல்லை.

நீதிபதிகள்: அனைவரையும் தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி அனுமதிக்கவில்லை. ராம.ரவிக்குமார் மற்றும் இதர மனுதாரர்களுடன் 10 பேரைத்தான் தீபம் ஏற்ற அனுமதித்துள்ளார்.

விகாஸ் சிங்: அப்போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டது. அமைதியை நிலைநாட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் ஆணையரை உடனடியாக ஆஜராக தனி நீதிபதி உத்தரவிட்டார்.

அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகுமாறு தனி நீதிபதி உத்தரவிட்டது ஏற்புடையதல்ல.

ராம.ரவிக்குமார் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்கிறார். அவர் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பொது அமைதி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இப்பிரச்சினை குறித்த விவாதம் பற்றி எரிகிறது.

தனி நீதிபதி எடுத்துக்கொண்ட சத்தியபிரமாணத்திற்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

வெங்கடேஷ்: தனி நீதிபதி பற்றி இவ்வாறு குறிப்பிடுவது துரதிர்ஷ்டவசமானது. ஏற்புடையதல்ல.

தீபத்தூண் தான் – குரு கிருஷ்ணகுமார்: 

மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான். மலையில் தனி நீதிபதி ஆய்வு செய்தபின்தான் அத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அத்தூணில் தீபம் ஏற்றும் நடைமுறை இருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாமல் தடுக்கப்பட்டது. இதனால் தனி நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

ஒரு வழக்கு அடிப்படையில் உயர்நீதிமன்றம், ‘எதிர்காலத்தில் தேவையெனில் வேறு இடத்தில் தீபம் ஏற்றும் வகையில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்கலாம்’ என 1996இல் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி அனைவரும் பார்க்கும் வகையில் தீபம் ஏற்ற முடிவெடுக்கலாம் என்பது தெளிவாகிறது. இதை எதிர்த்து தற்போதுவரை தர்கா, கோயில் நிர்வாகங்கள் மேல்முறையீடு செய்யவில்லை.

மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என 2014இல் தாக்கலான வழக்கில் தர்கா நிர்வாகத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்கவில்லை எனக் கூறி தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.

மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பக்தர்கள் மனு அளித்தால் அதை கோயில் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அறங்காவலர் குழு இல்லையெனில் செயல் அலுவலர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. அறங்காவலர் குழு உள்ளபோது அதற்குரிய பணியை செயல் அலுவலர் மேற்கொள்ள முடியாது. அவர் தன்னிச்சையாக மனுவை நிராகரித்தது ஏற்புடையதல்ல.

நெல்லித்தோப்பிற்கு செல்லும் பாதை 2 ஆகப் பிரிகிறது. ஒரு பாதை தீபத்தூணுக்கும், மற்றொரு பாதை தர்காவிற்கும் செல்கிறது.

நெல்லித்தோப்பிற்குச் செல்ல மலை அடிவாரத்திலுள்ள படிக்கட்டுப் பாதை தர்காவிற்கு சொந்தமானது அல்ல. அது கோயிலுக்குச் சொந்தமானது. மலை மேல் உள்ள பாதை மட்டுமே தர்காவிற்கு சொந்தமானது.

கோயிலுக்குரிய பாதை மூலம் தர்காவிற்குச் செல்வதை யாரும் தடுக்கவில்லை. அவ்விவகாரத்தில் எங்கள் தரப்பில் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்தால் நிலைமை என்னவாகும்? நாங்கள் யாரையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

நீதிபதிகள்: 1996இல் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தீபத்தூண் என எதுவும் குறிப்பிடவில்லை. மாற்று இடம் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டார். அரசு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்கிறது.

சிலர் மலையை சமணர் குன்று என்கின்றனர். அறநிலையத் துறை அத்தூணை சர்வே கல் என்கின்றது. இச்சூழலில் தனி நீதிபதி 3வது நீதிபதிக்குப் பரிந்துரைத்திருக்க வேண்டும். இத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முடிவிற்கு எப்படி வந்தார்?

குரு கிருஷ்ணகுமார்: 1996 தீர்ப்பின்படி மற்ற இடம் எனில் மலையின் ஒட்டுமொத்தப் பகுதியை குறிக்கும். தீபத்தூண் இருக்கும் இடத்தைக் குறிப்பிடவில்லை என்பதால் அதில் தீபம் ஏற்ற முடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியுமா? தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.

நீதிபதிகள்: சமரசத் தீர்விற்கு உங்கள் தரப்பில் தயாரா?

குரு கிருஷ்ணகுமார்: எங்கள் தரப்பு மனுதாரர்கள், வழக்கறிஞர்களிடமிருந்து அறிவுறுத்தல் எதுவும் இல்லை. நீதிமன்றம் வலியுறுத்துவதால் நிலைமை அவர்களிடம் எடுத்துக் கூறப்படும்.

அரசுத் தரப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,  டிச.17-இல் காணொளியில் ஆஜராக வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்.

நீதிபதிகள்: தடை விதிக்க வாய்ப்பில்லை. தனி நீதிபதியிடம் முறையிடலாம்.

-இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் வழக்கை டிச. 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

***
கோயில் நிர்வாகத்தின் முரண்பட்ட கருத்துக்கள்

  • டிச. 12இல் வழக்கு விசாரணையின்போது கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி,  “நீண்டகால நடைமுறையை மீறி தீபம் ஏற்றும் இடத்தை அடிக்கடி மாற்ற முடியாது. அது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது நில அளவை எல்லையைக் குறிக்கும் சர்வே கல். அது கிரானைட்டால் ஆனது. அதில் தீபம் ஏற்றுவது பாதுகாப்பற்றது. அதில் தீபம் ஏற்றுவதற்குரிய கட்டமைப்பு இல்லை” என வாதிட்டார்.
  • டிச.15இல் நடந்த விசாரணையின்போது அதே கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதிட்டது: ம.பி.யிலிருந்து வந்த சமணர்கள் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உள்ளிட்ட 8 இடங்களில் கி.மு.3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் போன்ற கட்டமைப்பு கீழக்குடியில்குடி சமணர்மலையில் தூண், கீழவளவு மலையில் 2 தூண்கள், கர்நாடகா, சரவணபெலகுளாவில் உள்ள தீபத்தூண் போல உள்ளது. இத்தூண் போன்ற கட்டமைப்பு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரியது அல்ல. இரவில் தீபம் ஏற்றுவர். அதன் வெளிச்சத்தில் அமர்ந்து விவாதிப்பர்.  இதற்காக மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் சமணர்கள் தூண்களை நிறுவினர். இது பற்றிய குறிப்புகள் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘சமணமும், தமிழும்’ தலைப்பிலான புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இத்தூண்களை ஹிந்துக்கள் உரிமை கொண்டாட முடியாது”  என வாதிட்டார்.

இப்படி ஒரே வழக்கில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் நில அளவைக்கல் என்றும் சமணர் தூண் என்றும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து முரண்பட்டுள்ளனர்.

  • (தினமலர்- 17.12.2025)

$$$

மலை மீது இருப்பது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக தாக்கலான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், ‘அது தீபத்தூண் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என, தமிழக அரசுத் தரப்பு தெரிவித்தது. அனைத்துத் தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை,  நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு டிச. 18இல்  5வது நாளாக நடந்தது.

தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், மனுதாரர்களான ராம. ரவிகுமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரும் ஆஜராகினர்.

ராமன்: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆதாரத்தை ராம. ரவிகுமார் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசுத் தரப்பில், தர்கா நிர்வாகம் உள்ளிட்ட யாருக்கும் ஆதரவான நிலைப்பாடு எடுக்கவில்லை. தர்கா நிர்வாகம், தனியாக மேல்முறையீடு செய்து வழக்கறிஞரை நியமித்து வாதத்தை முன்வைத்துள்ளது.

1923 சிவில் வழக்கு அடிப்படையில் மதுரை கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் திருப்பரங்குன்றம் மலையை ஆய்வு செய்தார். அவர், ‘மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளது. வேறு வழிபாட்டு தலத்திற்குரிய கட்டுமானம் எதுவும் இல்லை’ என தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

காலம் காலமாக தீபம் ஏற்றும் இடத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் ஏற்ற உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்கை, தனி நீதிபதி வேணுகோபால், 2014இல் தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு, 2017இல் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான மற்றொரு வழக்கில், 1996இல் விசாரித்த நீதிபதி கனகராஜ், ‘மனுதாரர் அறநிலையத் துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக வேண்டும்’ என உத்தரவிட்டார்.

1923 முதல் 2025 வரை பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில், தீபத்துாண் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இவ்விவகாரத்திற்கு ஏற்கனவே சட்ட ரீதியாக தீர்வு காணப்பட்டுவிட்டது. அதற்கு மீண்டும் உயிரூட்ட முடியாது. தற்போது, ராம. ரவிகுமார் தாக்கல் செய்த மனு மீது, தனி நீதிபதி தவறான முடிவு எடுத்து உத்தவிட்டுள்ளார்.

உச்சிப்பிள்ளையார் கோவில், மலையின் பாதியில் அமைந்துள்ளது. அங்கு, 100 ஆண்டுகளுக்கு மேல் தீபம் ஏற்றப்படுகிறது. அந்நடைமுறையை ஒரே நாள் இரவில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி மாற்றியமைக்க முடியாது.

வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி, நாடு சுதந்திரம் அடைந்தபோது, வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலையில் தற்போதும் தொடர வேண்டும்; மாற்றம் செய்ய முடியாது.

ராம. ரவிகுமார் தரப்பு ‘மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்’ என  மட்டுமே குறிப்பிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பியது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை செயல் அலுவலர் நிராகரித்துள்ளார். இதுபோன்ற சூழலில், அறநிலையத் துறை சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவின்படி, நான்கு கட்ட நிலையில் இணை ஆணையர், ஆணையர் உள்ளிட்டோரிடம் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அரசு பாண்டி மனு அளித்துள்ளார். அதைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தயார்.

நீதிபதிகள்: இவ்விவகாரத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொண்டே செல்வது?

எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், கார்த்திகேயன்: சூபி கலாசாரத்தைப் பின்பற்றி தர்காவில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்ற ஆட்சேபிக்கப்படுகிறது. மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்பதற்கு கோயில் நிர்வாகம் வெளியிட்ட புத்தகத்திலேயே குறிப்பு உள்ளது.

மலையிலுள்ள கல்லத்திமரம், கோயிலின் தலவிருட்சமாகும். அதில், தர்கா தரப்பினர் கொடியைக் கட்டி வைத்துள்ளனர். கோயிலுக்குச் சொந்தமான அப்பகுதியை, தர்கா தரப்பில் உரிமை கோர வாய்ப்புள்ளது.

அரசு தரப்பில் கூறுவது போல, அறநிலையத் துறையின் குறிப்பிட்ட சட்டப்பிரிவின்படி கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளித்தல் உள்ளிட்ட சில விஷயங்களுக்காக மட்டுமே அதிகாரிகளை அணுக முடியும்.

மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி செயல் அலுவலரிடம் மனு அளித்ததும், கோயில் நிர்வாகம் தரப்பு விரைவாகச் செயல்பட்டு, தீபத்தூணை மூடி மறைத்துள்ளது. அதனால்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது உள்ளிட்ட இதர நிவாரணங்கள் கோரப்பட்டது. அது தீபத்தூண்தான் என்பதற்கு போதுமான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.

-இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை ஜன. 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது- என்று  உத்தரவிட்டனர்.

  • (தினமலர்- 19.12.2025)

$$$

மேல் முறையீட்டு வழக்கு:  தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் டிச. 18இல் 5 வது நாளாக நடந்தது.

மனுதாரர்கள் ராம. ரவிகுமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர்.

இன்றைய விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல் அட்டர்னி ஜெனரல் ராமன் வாதாடியதாவது: 

தனி நீதிபதி அல்லது இந்த அமர்வு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், ‘ தீபத்தூண்’ குறித்து தோற்றம் மற்றும் அமைப்பு தொடர்பான எந்தவொரு உறுதியான தரவுகளோ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை.

இந்த விஷயத்தில் ஏற்கனவே ஒரு பாரபட்சமான மனப்பான்மை நிலவுவதாக மனுதாரர்கள் கருதுகின்றனர். தீபத்தூண் என்னவென்று இன்னும் உறுதியாக தெரியாததால், இந்த விஷயத்தில் மாநில அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பவில்லை. தீபத்தூண் பிரச்சினை எழுவதற்கு முன்பே, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல் தூண்களின் முக்கியத்துவத்தை சரி பார்க்கும் நோக்கத்துடன் அரசின் கீழ் உள்ள நில அளவைத் துறை நடவடிக்கை தொடங்கியுள்ளது.

தற்போதைக்கு அந்தத் தூண் எப்போது நிறுவப்பட்டது என்பதை அறிவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. முழுமையான விசாரணைக்குப் பிறகே தரவுகள் கிடைக்கும்.

1920 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், மாவட்ட நீதிபதி மலையையே ஆய்வு செய்ததாகவும், மலையின் உச்சியில் உள்ள ஒரே கட்டடம் தர்ஹா மட்டுமே என்று சில கண்டுபிடிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது எனக்கூறி அட்டர்னி ஜெனரல் அந்த உத்தரவை படித்துக் காட்டினார். அந்த உத்தரவில்,  ‘குன்றின் உச்சியில் உள்ள படிக்கட்டுகளுக்கு மேலே இருக்கும் ஒரே புனித இடம் அந்த தர்ஹாவும் அது தொடர்புடைய கட்டடங்களும் தான்’ எனக் கூறினார்.

தொடர்ந்து பி.எஸ்.ராமன் வாதாடியதாவது: 

முன்பே தீபத்தூண் இருந்து இருந்தால் ,1920 ல் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருப்பார். தற்போது அந்த தீபத்தூண் என்றால் என்ன? அது எப்போது என்ன நோக்கத்திற்காக நிறுவப்பட்டது என்று சொல்வதற்கு எந்தத் தகவலும் இல்லை.

தீபத்தூணில் விளக்கு ஏற்றுமாறு கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட முடியுமா என்பது தான் தனி நீதிபதி முன்பு இருந்த ஒரே கேள்வி. தனி நீதிபதி தனது உத்தரவில் 1945 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைக் குறிப்பிட்டார். அதில், கோயிலின் ஒவ்வொரு பக்தருக்கும் வழக்கமான திருவிழாக்களை வழக்கமான முறையில் நடத்துவதற்கும், அதில் வழக்கமான முறையில் பங்கேற்பதற்கும் அடிப்படை உரிமை உண்டு என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

கோயில் நிர்வாகம் செயல்படும் விதத்தில் அதற்கு ஒரு சட்டப்பூர்வ கடமை உள்ளது என்ற முடிவுக்கு வருவதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. பாரம்பரியம் குறித்து தீர்மானிக்க கோயில் செயல் அலுவலருக்கு என்ன அதிகாரம் உள்ளது எனக் கேட்கிறார்கள். அதற்கு வாரியம் தான் முடிவெடுத்து இருக்க வேண்டும். அவர்கள் ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால், வேறு வழிகள் உள்ளன. தவறான நபரிடம் தவறான கேள்வியைக் கேட்டால் எல்லாம் மாறிவிடும். இந்த வழக்கை சிவில் வழக்குக்கு அனுப்பக் கூடாது என்ற மனுதாரர்களின் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால், அது சிவில் வழக்கு அல்ல என்பதற்காக அல்ல. மாறாக அதற்கான தீர்வு ஹிந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு 63இல் உள்ளது.

அவர்கள் செய்ய வேண்டியதுஎல்லாம் தற்போதைய நடைமுறையைப் பின்பற்றுவது மட்டுமே. அதில் இருந்து அவர்கள் தவறினால், 1945 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பொருந்தும். மேலும் சிவில் உரிமை உள்ளது. தேவையான வழிகாட்டுதல்கை ளவழங்கலாம் என நீதிபதிகள் கூறலாம்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, ஒரு மத அமைப்பின் நிறுவப்பட்ட நடைமுறைகளை தீர்மானிக்கும் அதிகாரம் இணை ஆணையர் அல்லது உதவி ஆணையருக்கே உள்ளது. மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ஹிந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் பிரிவு s63ன் கீழ் அந்த மனுவை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.s63 சட்டப்பிரிவானது மாற்றுத்தீர்வு அல்ல. அதுவே சரியான தீர்வு.

ஆபத்து அடிப்படையில் செயல் அலுவலர் மனுவை நிராகரித்து விட்டதாக மனுதாரர்கள் கூறுவது சரியல்ல. ஏற்கனவே, ஒரு வழக்கம் உள்ளது. நல்லிணக்கத்தின் மற்றும் அமைதியான திருவிழா நடைபெறுவதற்காக நான் தற்போதுள்ள வழக்கத்தை தொடர்வேன் என்றும் செயல் அலுவலர் கூறினார். தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அதே இடத்தில் விளக்கு ஏற்றுவதை நான் உறுதி செய்வேன் எனத் தெரிவித்தார்.

தற்போதுள்ள வழக்கம் குறித்து இந்த மேல்முறையீட்டில் இந்த நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல. அது உரிய முறையில் தீர்ப்பளிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது தொடர்பான பிரச்சினை அல்ல. மாறாக நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா என்பது பற்றியது.

அனைத்து ரிட் மனுதாரர்களும் முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் என்னவென்றால், மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவதே பொருத்தமான இடம் என்பதும், சிலரை மட்டும் ஏற்ற அனுமதிப்பதால், மற்றவர்களின் உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய அவர்களின் அடுத்த வாதமும் ஆகும்.

100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மலை இருந்து வருகிறது. இது திடீரென்று தோன்றவில்லை. இத்தனை ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோயில் தான் விளக்கு ஏற்றுவதற்கு பொருத்தமானது என்று கோயில் பக்தர்கள் நினைத்து இருந்தால், நாம் எப்படி 2025 டிசம்பரில் அமர்ந்து தீபத்தூண்தான் மிகவும் பொருத்தமானது என்று சொல்ல முடியும்?

திருவண்ணாமலையில் 5 அல்லது 10 பேர் சென்று விளக்கு ஏற்றுவதாக அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள். தீபம் ஏற்றப்பட்டவுடன் ஒவ்வொரு பக்தரும் மேலே செல்லலாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அது உண்மையா என எனக்கு தெரியாது.

-இவ்வாறு அவர் தனது வாதத்தை முடித்தார்.

வழக்கறிஞர் ஸ்ரீராம்: தற்போதைய மனுக்களை இந்த நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு தடையாக, 2014 ஆம் ஆண்டு வழக்கை அரசு தலைமை வழக்கறிஞர் முன்வைத்தார். அந்த வழக்கில் பக்தர் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அரசு வழக்கறிஞர் ஏற்கனவே அந்த நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டு விட்டார். ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு குறித்தே கேள்வி.

இது ஒரு வழக்கமாக இருந்ததா இல்லையா என்பது குறித்த சர்ச்சை பற்றிய பிரச்சினை அல்ல. உச்சிப் பிள்ளையார் கோயிலில் விளக்கேற்றுவது மட்டும் தான் ஒரே வழக்கமா என்பது தான் கேள்வி. இந்த ஒரு வழக்கத்தை மீண்டும் உயிர்பிப்பதா அல்லது மீட்டெடுப்பதா என்பது பற்றியது.

1920 ஆம்ஆண்டு உத்தரவில் விவாதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் பின்னணியில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கோயில் நிர்வாகம் செய்த ஒரே சலுகை அடிப்படையிலான பின்வாங்கல் தான் உச்சிப்பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றுவது. செயல் அலுவலர் தனது நிலைப்பாட்டை மனுக்களில் ஏற்கனவே தெளிவபடுத்திவிட்டதால் ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு பிரிவு 63ன் கீழ் நடக்கும் நடவடிக்கைகள் பொருத்தமற்றதாக இருக்கலாம் எனக்கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக்கோரிக்கை வைத்தார்.

மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன்: தன்னால் முடிவெடுக்க முடியாது. என்று கோயில் செயல் அலுவலர் கூறவில்லை. அதை அவர் நிராகரித்துவிட்டார். அரசு வழக்கறிஞர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. மாறாக மாவட்ட ஆட்சியருக்காக ஆஜராகிறார். ஒரு மதச்சார்பற்ற அரசு, மதங்களைப் பற்றி எவ்வளவு பேச முடியும்?

அவர்கள் சிக்கந்தர் தர்காவில் விளக்குகளை ஏற்றுகிறார்கள். சூபி கலாசாரம் அதற்கு அனுமதிக்கிறது. அவர்கள் மதச்சார்பற்றவர்கள். அதனால், தீபத்தூணில் விளக்கேற்றுவதை ஏன் தடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி – என அவர் தனது வாதங்களை முன்வைத்தார்.

பக்தர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன், புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டி தனது வாதங்களை முன்வைத்தார். இந்த தீபத்தூண் என்பது ஏதோ ஒரு புதிய கருத்து அல்ல.என்ன செய்ய வேண்டும் என நீதிபதி முடிவு செய்திருக்கக் கூடாது என அவர்கள் வாதம் வைக்கின்றனர். அந்த மனுவில் உள்ள கோரிக்கையைப் பார்த்தால்,’ நீதிமன்றம் பொருத்தமானதாகக் கருதும் வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம்’ என்பது. இது எல்லா மனுக்களிலும் உள்ள ஒரு பொதுவான கோரிக்கையாகும். அங்கு செல்லாமல் நீண்ட காலத்துக்கு எதுவும் நடக்காமல் இருந்தால், தானாகவே அவர்கள் அந்த சொத்தின் மீதும் உரிமை கோரத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே சமணக் குகைகளுக்கு பச்சை நிறம் பூசப்பட்டு இருந்தது. புகார் எழுந்த பிறகு அது அகற்றப்பட்டது. என்று அவர் தனது வாதத்தை முடித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

  • (நாளிதழ் – 19.12.2025)

$$$

நக்கீரருக்கு திருப்பரங்குன்றம் மலையில்

ஜோதிப் பிழம்பாக காட்சி தந்த முருகன்

மதுரை: ”திருப்பரங்குன்றம் மலையில் நக்கீரருக்கு, ஜோதிப் பிழம்பாக முருகன் காட்சி தந்தார். அந்த ஜோதியின் அடையாளமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. தேவேந்திரன், மலை மேல் ஒரு கல்யாண மண்டபத்தையும், எல்லோரும் தங்குவதற்கு ஒரு மண்டபத்தையும், கோயிலையும் கட்டியதாக புராணம் கூறுகிறது” என மதுரை வழக்கறிஞரும், அர்ச்சகருமான சங்கரன் கூறினார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், நக்கீரருக்கு ஜோதி பிழம்பமாக முருகன் காட்சி தந்ததாலேயே அதன் அடையாளமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்கிறார் சங்கரன்.

தினமலர்  நிருபரிடம் அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலையும், மலை மேல் தீர்த்தமும், சுனை, கோயிலும், தீபமும் முருகனுக்கே என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. பதினெண் புராணத்தில் ஒன்றான, ஸ்ரீ ஸ்கந்த புராணம் திருப்பரங்குன்றம் ஸ்தலத்தின் புராணம். அதில் சங்கர சம்ஹிதையில் சிவரஹஸ்ய காண்டத்தில் சுப்ரமணியர் அவதாரம், காரணம், சரித்திரம் கூறப்படுகிறது.

இதிலிருந்து தான் பின்னாளில் முருகனின் வழிபாட்டை, பெருமையை பல நுால்கள் கூறுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய பராக்ரமம், சுப்பிரமணிய தத்துவம் போன்ற பழமையான நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

தல புராணத்தின்படி, திருப்பரங்குன்றம் மலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயர் இருந்தது தெரிய வருகிறது. மலையே சிவலிங்க வடிவமாக இருக்கிறது. 14 விசேஷமான தீர்த்தங்கள் உள்ளன. அதில் மலையிலிருந்து 9 தீர்த்தங்கள் உற்பத்தியாகின்றன.

தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவரான நக்கீரருக்கு சாப விமோசனம் அருளி பாதாள கங்கை எனும் தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி பின் அவருக்கு மலையின் மேல் மலை முகட்டில் ஜோதி ரூபமாக முருகன் காட்சி தந்தார். அதனால் மலை மேல் ஜோதியின் அடையாளமாக தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனுக்கு பிரம்மனால் தேர் செய்து திருவிழா எடுத்ததையும் புராணம் கூறுகிறது. தேவேந்திரன், மலை மேல் ஒரு கல்யாண மண்டபத்தையும், எல்லோரும் தங்குவதற்கு ஒரு மண்டபத்தையும், கோயிலையும் கட்டியதாக புராணம் கூறுகிறது. அந்த மண்டபத்தின் எச்சங்கள் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டன.

பாண்டவர்கள் நீராடிய தீர்த்தம் ஒன்று உள்ளதாகவும், அவர்கள் ஒரு மாத காலம் தங்கியிருந்தாகவும், ராமபிரான் வந்து வழிபட்டதாகவும் நுால்கள் வழியாக அறிய முடிகிறது.

சுவாமி சுப்பிரமணியர் புரோகிதராக வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு ஒரு விவாஹ விதியை உருவாக்கி பிரம்மாவை வைத்து வேள்வி நடத்தியதால் அவருக்கு ‘புரோகித மூர்த்தி’ எனும் பெயரும் உள்ளதாக கடம்பவன புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலங்களில் வந்த சில மதங்களின் அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் பிறநாட்டு அரசர்களின் படையெடுப்புகளால் ஏற்பட்டவை என்று அறிய முடிகிறது.

ஹிந்து உரிமைகள் ஒவ்வொரு முறையும் அக்னிப் பரீட்சை செய்து பார்த்து தான் உரிமை போராட்டம் நிறைவேறுகிறது. அரசியலமைப்பு சாசனத்தில் மதஉரிமை பாதுகாக்கப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு கோயிலிலும் அதன் மதச்சடங்குகள், பூஜைகள் வழிபாடுகள் சார்ந்த விஷயங்களில் அரசோ, கோயில் நிர்வாகமோ தலையிட உரிமையில்லை என பல வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் தீபம் எங்கே எப்படி யாரால் ஏற்றப்பட வேண்டும் என்பதை கோயில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுவது மத சுதந்திரத்திற்கு எதிரானது. அதை ஆகமத்தில் தகுதியுள்ள அர்ச்சகர்கள் தான் முடிவு செய்ய முடியும். இவ்வாறு கூறினார்.

  • (தினமலர்- 19.12.2025)

$$$

தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவுக்கு அனுமதி

திருமங்கலம்: திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு 2026 ஜன. 6இல் நடக்க உள்ளது. டிச. 21இல் மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்றத்திற்கான ஊர்வலம் நடக்க உள்ளது.

இதற்கான அமைதிக் கூட்டம் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் உதவி ஆணையாளர் சசி பிரியா, தாசில்தார் கவிதா, தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் சார்பில் 2026 ஜனவரி 6இல் நடக்க உள்ள சந்தனக்கூடு திருவிழா, 2025 டிசம்பர் 21இல் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்ற நிகழ்வுக்கு, கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை இந்த ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. வழக்கமான வீதிகளில் ஊர்வலம் செல்லும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் திருவிழாவினை நடத்த வேண்டும்.

புதிய நடைமுறைகளை ஏற்படுத்தவோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிகளை வெடித்தலோ கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் தர்கா நிர்வாகத்தினர் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

  • (தினமலர் – 19.12.2025)

$$$

Leave a comment