திருப்பரங்குன்றம்: தன்னையே எரித்துக் கொண்டார் பூர்ணசந்திரன்!

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுத்த தமிழக அரசைக் கண்டித்து, தீக்குளித்து தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் பூர்ணசந்திரன் என்ற இளைஞர். தமிழகத்தையே உலுக்கியுள்ள - ஆனால் மரத்துப் போன தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் -  இந்தக் கொடிய பலிதானம் குறித்த செய்தி…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரியும், தி.மு.க. அரசின் நிலைபாட்டைக் கண்டித்தும், மருந்து விற்பனைப் பிரதிநிதி பூர்ணசந்திரன் (40), மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ‘தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் நான் ஹிந்து’ என உருக்கமாக ஆடியோவும் வெளியிட்டுள்ளார்.

மதுரை, நரிமேடு, மருதுபாண்டியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணசந்திரன், மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பூர்ணசந்திரன் ஓய்வு நேரங்களில் சரக்கு வாகனம் மூலம் காய்கறி, பழவிற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

டிச. 18ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு சரக்கு வாகனத்துடன் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள போலீஸ் அவுட்போஸ்ட் சந்திப்பில் உள்ள ஈ.வெ.ரா. சிலை அருகேயுள்ள ஆளில்லா போலீஸ் பூத்திற்குச் சென்று, உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்களும், அவ்வழியே வந்த துணைமேயர் நாகராஜனும் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் பூர்ணசந்திரன் கருகி இறந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடியோ வாக்குமூலம்:

தற்கொலைக்கு முன் பூர்ணசந்திரன், வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

மதுரைக்காரங்க எல்லோருக்கும் திருப்பரங்குன்றத்தில தீபம் ஏற்றுவதில் உடன்பாடில்லை என நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. அதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படை வீடு. அதில் தீபம் ஏற்றுவதால் மதுரைக்குத்தான் பெருமையே தவிர, யாருக்கும் பாதகமில்லை. அங்கே தர்கா இருக்கு. அது அமைதியான இடம். அங்கிருந்து 15 மீட்டர் தள்ளி தீபத்தூண் உள்ளது. அதில் தீபம் ஏற்ற வேண்டும் என கோர்ட் சொல்லியுமே அதை தடுக்கிறார்கள். அது ஏனென்று தெரியலை. மதுரைக்கு பெருமை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது அதை எங்கிருந்தாலும் பார்க்கலாம். இதன்மூலம் எத்தனை கோடி பக்தர்களுக்கு முருகனின் அருள் கிடைக்கும்! தீபம் ஏற்றும் போது மாற்றுத்திறனாளிகள் வெளியே வந்து இறைவனை ஒளி வடிவில் பார்க்க முடியும். அதை ஏன் அரசு தடுக்கிறது. இதனால் தர்காவுக்கு எந்த பாதிப்பும் வராது. என்கூட படித்த இஸ்லாமியர்கள் பலர் உள்ளனர். அப்படி இருக்கும்போது அரசு தடுத்து மதுரையில் இருவேறு மதத்தினர் இடையே கலவரத்தைத் தூண்டுவதற்காக ஓட்டு அரசியல் பண்றதுக்காக இந்த அரசு நடப்பதாக நான் நினைக்கிறேன்.

எங்க வீட்டில எல்லோரும் தி.மு.க. தான். எங்கப்பா திருமணத்திற்குகூட கலைஞர் கைப்பட வாழ்த்துச் செய்தி எழுதி அனுப்பி உள்ளார். இப்படிஇருக்கையில் இந்த விஷயத்தில் மனக் கஷ்டமாக இருக்கு. ஒரு ஹிந்துவாக இருந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி எனத் தெரியலை. அனைத்து ஹிந்துக்களும் யோசிக்கணும். இவ்வளவு பேர் போராடுகிறார்கள். முருகனின் முதல்படையான திருப்பரங்குன்றத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஒரு நீதிபதியே நினைத்து சி.ஆர்.பி.எப். வீரர்களை அனுப்பி ஏற்றணும் எனச்சொன்னார். ஆனால் மாநில அரசு தடுத்தது.

திருப்பரங்குன்றம் விஷயத்தில் அரசு எடுப்பது தவறான முடிவு. கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை மதிக்காம தமிழக அரசு இவ்வாறு நடந்துகொள்வது, பெரும்பான்மையாக வாழக்கூடிய ஹிந்து சமயத்திற்கு கொடுமையானதாகக் கருதுகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில்தான் தடை விதித்திருந்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கு மணிமகுடமாக மலை உச்சியில் தீபம் ஏற்றியிருக்கிறார்கள். ஆனால் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவது தடைபட்டு மோட்சதீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி வருகிறார்கள். இது தவறான விஷயம். இதை அரசு கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத் துறைதான் எடுத்து இவ்வழக்கை நடத்தி இருந்தால் ஹிந்து அமைப்புகள் போராட வேண்டிய அவசியம் இல்லை எனக்கருதுகிறேன்.

இதுவே ஒரு பள்ளிவாசலுக்கு நடந்திருந்தால் வக்பு வாரியம் கட்டாயம் செயல்படுத்தியிருக்கும். 300 ஆண்டுகள் வரை தடைப்பட்டிருந்தால்கூட அவர்கள் போராடியிருப்பார்கள். அவர்களது ஒற்றுமையைக் காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து சமயத்தினர் மத எண்ணத்தில் கட்டுக்கோப்பாக இருந்து போராட மாட்டோம் என்கிறோம். அதனால்தான் அரசு இப்படி செயல்படுகிறது.

என் உடல் மீது தீபம் ஏற்றுகிறேன்:

இதன்மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால், பெரியார் சிலை முன்பு என் உடல் மீது தீபம் ஏற்றி, கடவுள் இல்லை என்று சொன்னவர் முன், கடவுளுக்காக இவ்விஷயம் செய்கிறேன்.

அந்த நீதிபதிக்கு என் நன்றிகள். 2026இல் தேர்தலுக்குப் பின் அடுத்த ஆட்சியிலாவது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக என் உயிரையும் பொருட்படுத்தாது இவ்வாறு செய்ய உள்ளேன்.

என்னை நினைத்து என் குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு மனநல டாக்டர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். என் குடும்பத்திற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மனஉளைச்சல் காரணமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இது என் சுய முடிவு. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என் உடம்பில் தீபம் ஏற்றி, பெரியார் சிலை முன்பு போலீஸ் அவுட்போஸ்டிற்குள் உயிரை தியாகம் செய்கிறேன்.

ஆன்மிக பூமி மதுரையில் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என இரண்டு படை வீடுகள் உள்ளன. அறுபடை வீடுகளில் இரண்டு படை மதுரையில் இருப்பது பெருமை. மீனாட்சி கோயில், அழகர்கோவில் என உள்ள ஆன்மிக பூமியான மதுரையில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சி நடத்த முடியவில்லையே என மனஉளைச்சலுக்காக என் உடலில் தீபம் ஏற்றி போலீஸ் பூத்திற்குள் உயிரை மாய்த்துக்கொள்ள உள்ளேன்.

-இவ்வாறு வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளார்.

பூர்ணசந்திரன் ஆடியோவில் மேலும் கூறுகையில், ”திருப்பரங்குன்றத்தில் போய் நிகழ்த்தலாம் என நினைத்தேன். நான் ஒரு காரியம் பண்றேன். அதனால் கோயிலுக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பெரியார் சிலை முன் நடத்துகிறேன். கடவுள் இல்லை என்று சொன்னவர் முன்பு, கடவுளுக்காக ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்” எனக் கூறி ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என தனது பேச்சையும், மூச்சையும் நிறுத்திக்கொண்டார்.

  • (தினமலர்- 19.12.2025)

***

தலைவர்கள் அஞ்சலி:

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.

பூர்ண சந்திரன் மரணத்துக்கு, பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பா.ஜ.க. மாநிலச் செயலாளர் ராம சீனிவாசன் வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பிறகு கூறியதாவது:

பூர்ண சந்திரனின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. நேற்றுமுதல் இந்தத் துக்கம் தமிழர்களின் தொண்டையை அடைக்கிறது. தர்மத்திற்காக வாழ வேண்டுமே தவிர தர்மத்திற்காக இறக்கக் கூடாது. அதை பா.ஜ. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது  என்றார்.

மனைவி கண்ணீர்:

இறந்த பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி, ”ஆண்டுதோறும் அண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போல, திருப்பரங்குன்றம் மலையிலும் தீபம் ஏற்றினார்களே, இந்த முறை தீபம் தீபத்தூணில் ஏற்றவில்லையே என்று கணவர் பூர்ணசந்திரன் புலம்பி வந்தார். அவர் சிவ பக்தர். மாதம் 3 முறை சதுரகிரி மலை சென்று வந்தார்” என கண்ணீருடன் தெரிவித்தார். இந்துமதிக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆறுதல் கூறினார்.

ரூ. 1 கோடி வழங்கணும்:

இறந்த பூர்ணசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை அவமதித்து அதை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசால் மனவேதனை அடைந்து மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இன்று அமாவாசை நாளில் பூரண சந்திரன் மறைந்து விட்டார். இதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. அதுபோல பூரணசந்திரன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியும், அவரது மனைவி இந்துமதிக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும். ஹிந்து முன்னணி, பாஜ சார்பில் பூரண சந்திரன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அப்போது அவருடன் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் உடன் இருந்தார்.

அண்ணாமலை இரங்கல்:

இதற்கு இரங்கல் தெரிவித்து தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர், நரிமேடு பகுதியைச் சேர்ந்த முருக பக்தர், பூர்ணசந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, பூர்ணசந்திரன் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும் அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இதுபோன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பா.ஜ.க. சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் பூர்ணசந்திரனின் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

$$$

One thought on “ திருப்பரங்குன்றம்: தன்னையே எரித்துக் கொண்டார் பூர்ணசந்திரன்!

Leave a comment