நீதிபதி பதவி நீக்கம் சாத்தியமா?

-ஜனனி ரமேஷ்

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவிநீக்கம் செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 107 பேர் அறிவிக்கை அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் அநீதியை நிலைநாட்டத் துடிக்கும் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர் என்பதால்தான் திரு. ஜி.ஆர்.எஸ்.ஸை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. இந்நிலையில் நீதிபதி பதவிநீக்கம் எளிதல்ல என்கிறார் எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ்…

இந்தியா விடுதலை பெற்ற நாள் தொடங்கி இதுவரை 8 நீதிபதிகளைப் பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அறிவிக்கை அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவொரு நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அரசியல் தலையீட்டுக்கும், அதிகாரத்திற்கும் அஞ்சாமல் நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது.  நீதித் துறையின் சுதந்திரத்தையும், நீதிபதிகள் பதவி நீக்க விதிகளையும், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களுக்கு நிகராக, டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வல்லுனர் குழு வடிவமைத்துள்ளது. நீதிபதிகளைச் சுற்றி கடுமையான சட்டப் பாதுகாப்பு வளையம் இருப்பதாலும், நடைமுறைகள் நீண்டவை மற்றும் சிக்கலானவை என்பதாலும்,  ஆளும் கட்சியே நினைத்தாலும் கூட எந்த நீதிபதியையும் பதவி நீக்கம் செய்ய முடியாது.

உச்சநிதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் பதவி நீக்க வழிமுறைகள்

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதிகள் 124 (4) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 217, 218 (124{4} உடன் படிக்க) உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கச் செயல்முறைகளை விவரிக்கின்றன. குற்றம் சுமத்தப்பட்ட நீதிபதி நடத்தை தவறினார் அல்லது செயல்திறன் அற்றவர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.   
  • நீதிபதி பதவி நீக்கத் தீர்மான அறிவிக்கையில் (IMPEACHMENT), மக்களவை உறுப்பினர்கள் 100 அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 கையொப்பமிட வேண்டும்.
  • அறிவிக்கையை ஏற்கலாமா, நிராகரிக்கலாமா என மக்களவைத் தலைவர்/ மாநிலங்களவைத் தலைவர் முடிவெடுப்பார்
  • அறிவிக்கை ஏற்கப்பட்டால், குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, அரசியல் சட்ட நிபுணர் என மூவர் குழு நியமிக்கப்படும். 
  • ஒரே நாளில் இரு அவைகளிலும் தீர்மான அறிவிக்கை முன்வைக்கப்பட்டால், இரண்டும் ஏற்கப்பட்ட பின்னர், இரு அவைத் தலைவர்களும் குழு உறுப்பினர்களைக் கூட்டாக நியமிப்பார்கள்.
  • குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து, பதவி நீக்கம் அவசியமா, அவசியமில்லையா என குழு பரிந்துரைக்கும். நீதிபதி தனது தரப்பு வாதங்களையும் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும்.
  • நீதிபதி தானாகவே பதவியை ராஜிநாமா செய்ய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வலியுறுத்துவார்.
  • நீதிபதி தானாகவே ராஜிநாமா செய்து விட்டால் விசாரணை நின்றுவிடும். மாறாக, நீதிபதி மறுத்தால், அவருக்கு வழக்குகள் ஒதுக்கப்படாது. குழுவின் அறிக்கையையும், நீதிபதியின் வாதங்களையும், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பி வைப்பார். நீதிபதியைப் பதவி நீக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைப்பார். 
  • குழுவின் அறிக்கை இரு அவைகளிலும் வைக்கப்படும். அறிக்கையிலுள்ள தவறான நடத்தை அல்லது செயல் திறன் இல்லாமை நிரூபிக்கப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
  • வாக்கெடுப்பிற்கு முன் சம்பந்தப்பட்ட நீதிபதி தனது வாதங்களை எடுத்துரைப்பார்.
  • பதவி நீக்கத் தீர்மானம் வெற்றி பெற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ‘சிறப்புப் பெரும்பான்மை’ அவசியம். அவையின் மொத்த உறுப்பினர்களில் ‘பாதிக்கு மேற்பட்ட’ உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  அல்லது, அவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களுள் ‘மூன்றில் இரண்டு பங்கு’ உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  
  • பதவி நீக்கத் தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்றால் பிரச்சினை அத்தோடு முடிந்துவிடும். வெற்றி பெற்றால் நீதிபதியின் பதவி நீக்கத் தீர்மானத்தில் குடியரசுத் தலைவர் கையொப்பமிடுவார். 

பதவி நீக்கத் தீர்மானத்திற்கு உள்ளான நீதிபதிகள் விவரம்:

1. நீதிபதி வி.ராமசாமி, பஞ்சாப் & ஹரியானா நீதிமன்றம், 1993

சுதந்திர இந்தியாவில் பதவி நீக்க நடவடிக்கைகளுக்கு உள்ளான முதல் நீதிபதி இவர்தான். பஞ்சாப் & ஹரியாணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் வீட்டிற்காக வரையறுக்கப்பட்ட தொகையை விடவும் அதிகம் செலவு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குழு விசாரணையில் நிருபணமாகவே, மக்களைவையில் பதவி நீக்கத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது.

2. நீதிபதி சௌமித்ரா சென், கொல்கத்தா நீதிமன்றம், 2011

நிதி முறைகேட்டில் ஈடுபட்டதால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ‘உள்-அலுவலக விசாரணைக்கு’ உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்யப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பரிந்துரைத்தார். 2009இல் அவரைப் பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால், மக்களவையில்  தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே நீதிபதி சௌமித்ரா சென் பதவியை ராஜநாமா செய்தார்.

3. நீதிபதி பி.டி.தினகரன், சிக்கிம் உயர்நீதிமன்றம், 2011

நீதிபதி தினகரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க,  மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் ஹன்சாரி மூன்று நபர் குழுவை அமைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அஃப்தாப் ஆலம், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  கேஹர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தனிப்பட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, ராவ் நியமனத்தை எதிர்த்தும், விசாரணையை ரத்து செய்யவும், உச்சநீதி மன்றத்தை நாடினார். ராவைக் குழுவிலிருந்து நீக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி சிங்வி உத்தரவிட்டாலும், வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். நீதிபதி தினகரன் தானொரு தலித் என்பதால், வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்று கூறி, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

4. நீதிபதி பர்திவாலா, குஜராத் உயர்நீதி மன்றம், 2015

தேசத் துரோக வழக்கு விசாரணையின் போது, ‘இட ஒதுக்கீடு நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து விட்டது’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.  அவரது சாதிவெறிக் கருத்தைக் கடுமையாக எதிர்த்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவரைப் பதவி நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கியதைத் தொடர்ந்து அவர் மீதான பதவி நீக்கத் தீர்மானம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

5. நீதிபதி கங்குலி, மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றம், 2015

நீதிபதி கங்குலி மீது குவாலியர் பெண் நீதிபதி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைச் சுமத்தினார். தலைமை நீதிபதி அமைத்த உள்-அலுவலகக் குழு பாலியல் வன்கொடுமையை நிருப்பிக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்ற முடிவிற்கு வந்தது. இதற்கிடையே மாநிலங்களவையில் அவரைப் பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது, பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க, ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனக் குழு சமர்ப்பித்த  அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

6. நீதிபதி சி வி நாகார்ஜுன ரெட்டி, ஆந்திரா & தெலுங்கானா உயர்நீதி மன்றம், 2016/17

கீழமை நீதிமன்ற தலித் நீதிபதியை அவமதித்ததாகவும்,  வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தொடக்கத்தில் பதவி நீக்கத்தை ஆதரித்தவர்கள்,  பின்னர் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால், கையொப்பமிட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 50க்கும் கீழே சென்றதால் இரு தீர்மானங்களும் முன்னோக்கி நகரவில்லை.

7. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உச்ச நீதி மன்றம், 2018   

முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக இணைந்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர்.  அதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாகவும், சிலருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர்கள், அவரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். ஆனால், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் அலுவல் நிர்வாக முறை சார்ந்தவை என்றும், தவறான நடத்தை அல்ல என்றும் கூறி, தீர்மானத்தை ஏற்கவில்லை.

8. நீதிபதி எஸ் என் சுக்லா, அலகாபாத் உயர்நீதி மன்றம், 2018

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில் 2018இல் இவர் மீது உள்-அலுவலகக் குழு விசாரணைக்கும், பதவி விலகவும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி சுக்லா பதவி விலக மறுத்துவிட்டார். அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அலகாபாத் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியை அறிவுறுத்தினார். பிரதமருக்கு கடிதம் எழுதி அவரைப் பதவி நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வரவும் பரிந்துரைத்தார். ஆனால், நாடாளுமன்றம் அவர் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வர முனையவில்லை. 2020இல் ஓய்வு பெறும் வரை எந்த வழக்கும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. பதவியும் விலகவில்லை.

நடத்தை தவறுதல் மற்றும் திறமையின்மை ஆகிய விதிகளின் கீழும், மேலே பட்டியலிட்டுள்ள 12 படிகளையும் வெற்றிகரமாகக் கடந்தால் மட்டுமே, நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்தச் சங்கிலி ஏதேனும் ஓரிடத்தில் அறுந்தாலும் வழக்கு அத்துடன் முடிந்துவிடும்.

தவறிழைக்கும் நிதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதில் தவறில்லை. ஆனால், நேர்மையாகவும், நியாயமாகவும், அதிகாரத்திற்கு அஞ்சாமலும் நீதி வழங்கும் நீதிபதிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி உள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. 

  • (நன்றி: தினமணி– 16.12.2025)

$$$

Leave a comment