திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்- 2

-போலி மத நல்லிணக்கம், பி.ஆர்.மகாதேவன், சுந்தர்ராஜசோழன்

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்... இது பகுதி - 2
சில்பியின் ஓவியம்:
கூர்ந்து கவனித்தால் தீபத்தூண் தெரியும்!

1. போலி மத நல்லிணக்கம்

-லக்ஷ்மி மணிவண்ணன்

மத நல்லிணக்கம் பற்றி இந்து விரோத ஈத்தறை திமுகவினரிடம் இருந்து பாடம் பயில வேண்டிய அவசியம் எந்த ஒரு இந்துவுக்கும் கிடையாது. ஏன் அதை போலி மத நல்லிணக்கம் பேசும் கிறித்தவர்களிடம் இருந்தோ, முஸ்லிம்களிடம் இருந்தோ கூட கற்றுக் கொள்ளும் அவசியமும் எந்த ஒரு இந்துவுக்கும் கிடையாது.

நல்லிணக்கம் என்பதும் விட்டுத் தருவதும், இந்துவின் இயல்புகள். ஏனெனில் இந்து வாழ்வியல் நல்லிணக்கத்தை அவனுக்கு சிறு வயது முதலே ஏதேனும் ஒரு வடிவில் கற்றுத் தருகிறது. இந்த நல்லிணக்கம் அவனுக்கு சக மனிதனோடு மட்டுமல்ல, சக உயிரிகளுடனும், தாவரங்களுடன், பிரபஞ்சத்துடன் என நுட்பமாக தொடர்பு கொண்டு செல்லக் கூடியது. இந்து மதத்தில் நல்லிணக்கத்துக்கு எதிரான எதுவுமே கிடையாது.

காகத்துக்கு சோறு வைக்கிறார்களே எதற்கு? பறவைகளுக்கு நீர் வைக்கிறார்களே எதற்கு? காகத்துக்கு சோறும் பறவைகளுக்கு நீரும் வைப்பவர்களைக் கண்டு பறவை இனங்கள் அஞ்சவதில்லை. ஒவ்வொரு பூச்சியும் உன்னைப் பார்த்து பயம் கொள்ளாமல் இருந்தால் மாத்திரமே நீ வாழும் சூழலில் பாதுகாப்பாக இருக்க முடியும். பூச்சித் தொந்தரவுகள் கூட எளிமையானவை அல்ல. நல்லிணக்கத்திற்கு மாத்திரமே அவை இசையும். பயம் எதிரிலும் பயத்தை உருவாக்குகிறது. பயந்து போனால் பாம்பு மட்டுமல்ல, சிறு கொட்டுப் பூச்சியும் ஆபத்து நிறைந்ததே.

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிவந்த தி.க, திமுக.வினரின் நிலை என்பது இணக்கம் அல்ல. பல தரப்பினருக்கும் இடையில் ஒருபோதும் இணக்கம் ஏற்படக் கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு தரப்பினரிடமும் பிறர் பகை கொள்ளும் சூழலை அவர்கள் உண்டாக்குக்கிறார்கள். ஒவ்வொருவரும் பிறரிடம் பகை கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்கள் இலக்கு. அப்படித்தானே அவர்கள் கொள்ளை அடிக்க படித்து வைத்திருக்கிறார்கள்?

ஒவ்வொருவரிடமும் அவன் உன் எதிராளி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் பாட திட்டம் முழுக்க இவ்வாறே இருக்கிறது. உனக்கு அவன் எதிராளி, எதிராளிக்கு மற்றொருவன் எதிராளி, மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து இந்து மதம் எதிராளி.

இந்து வெறுப்பும் எதிர்ப்பும் இன்னும் இந்தியாவில் பணம் காய்க்கும் மரமாக, அந்நிய சக்திகளின் அபய கூடாரமாக இருக்கின்றன. மதமாற்ற சக்திகள் இவற்றை மேற்கொள்ளுவோருக்கு துணையாக தங்களிடம் இருக்கும் அனைத்தையும் தருகின்றன. பணம் அதிகாரம் பவிசு அனைத்தையும் தருகின்றன. தங்களின் அனைத்துவிதமான நிறுவனங்களையும் அப்படி வருவோருக்காகத் திறந்து வைத்திருக்கின்றன.

எந்த மதத்துக்கு மாறுகிறவனைப் பற்றியும் எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால் அவன் மாறியவுடன் தொடர்ந்து என்னை தவறாக சித்தரிப்பது தொடங்கி, முழு வேலையாக என்னோடு தொடர் மோதலில் இருக்கிறான். இத்தனைக்கும் அவன் பெரும்பாலும் பிற மதங்களின் அறிவு மற்றும் தத்துவ விசாரத்தால் மாறிப் போனவன் கிடையாது. அவன் இந்து மதத்தை அறிந்து கொண்டு ஓர் உரையாடல் மேற்கொண்டு எங்கும் செல்லவில்லை. சில சுய லாபங்கள் அவனை ஒரு புதிய சிறைக்குள் திருடி வைத்திருக்கின்றன என்று வேண்டுமாயின் சொல்லலாம். அதிகாரத்துக்கு பயந்தோ, சாதகமாகவோ வாள் முனையிலோ அவன் மாறிப் போனவனாக இருக்கிறான். அவன் எதனால் மாறினான் என்பதை அறியாத அவனது வம்சங்கள், அதனால் சிலசமயம் துயர்ப்படவேண்டியிருக்கிறது.

ஒருவன் எப்படி மாறிப் போயிருந்தாலும் அதனால் எனக்கு எந்த பராதியும் ஒரு இந்துவாக நிச்சயம் கிடையாது. ஏனெனில் எவனுடைய கர்மாவுக்கும் என்னை பொறுப்பெடுக்குமாறு இந்து மதம் வற்புறுத்துவது கிடையாது. எனினும் அவனுடனும் இணக்கமாக இருக்கவே விரும்புவேன்.

அப்படியானால் எனக்கு என்ன பிரச்சினை? அவன் மாறியது தொடங்கி அந்நிய சக்திகள் அவனுக்கு அளித்திருக்கும் அத்தனை கருவிகளையும் கொண்டு என்னைத் தாக்கத் தொடங்கி விடுகிறான். இந்தத் தாக்குதல் முழு நேரமும் நடைபெறுகிறது. என்னைச் சீண்டி இணக்கத்திற்கு எதிரான அவன் நம்பும் கருத்துக்களுக்கு பதில் கேட்கிறான். அவன் திரித்துச் சொல்லும் அத்தனை விஷயங்களுக்கும் நான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. இது பெரிய அரியண்டம்.

நான் அவன் நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில்லை. எந்த நம்பிக்கையையும் கேள்விக்கு உட்படுத்த இயலாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எதிரில் இருப்பவன் என்னுடைய நம்பிக்கைகளை குறை சொல்வதோடு மட்டுமல்ல, அவதூறுகள் செய்கிறான். அவன் என்னுடைய நம்பிக்கைகளை எப்படி மாற்றி புரிந்துகொள்ள பழக்கப் பட்டிருக்கிறானோ, அதேபோலத் தான் நானும் புரிந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறான்.

நான் அவனுடைய புராணங்களை சிறுமை செய்வதில்லை. ஆனால் அவர்கள் பெற்றுள்ள மகா எந்திரமே எங்களை சிறுமை செய்கிறது.

‘தீபத் தூண்’ என்று நான் சடங்குகளின் உள்ளவன் என்கிற வகையில் சொன்னால் அந்தத் தரப்பிலிருந்து ஒருத்தி அதனை ‘எல்லைக்கல்’ என்கிறாள்.

என்னதான் ஒரு இந்து செய்ய முடியும், சொல்லுங்கள்?

சகியாமை கொண்டோர் சகிப்புப் பாடம் நடத்துகிறார்கள். பிளவை இலக்காகக் கொண்டோர் நான் பிரிவினை செய்வதாகச் சொல்கிறார்கள். சட்டம், நீதி இவற்றைத் தவறுவோர் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள். தவறானவர்கள் என்னை ஓர் ஆவணம் கூட இல்லாமல் சதா தவறாக சித்தரிக்கிறார்கள். இதனைப் புரிந்து கொள்வது எப்படி?
இந்த இறுகிய நிலையிலும் ஒரு இந்துவாக நிதானமாகவே நடந்து கொள்கிறேன். பிறரை சகித்துக் கொள்கிறேன். வசை பாடுவோருக்கும் ஒரு தரப்பு இருக்கக் கூடும் என பல இந்துக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குற்றபோதத்துக்கு வெளியில் இருந்து ஒரு சக்தி என்னை சதா தூண்டிக் கொண்டிருக்கிறது. சில நூறு ஆண்டுகளாக.

ஆக, ஒரு இந்துவாக என்னுடைய இருப்பே உங்களுக்கு வெறுப்புக்குரியதாக இருக்கிறது எனில் என்னிடம் நீங்கள் எதைத்தான் எதிர்பார்க்கிறீர்கள்?

$$$

2. அழித்துப் பொசுக்கும் ருத்ரப் பிழம்பு

-பி.ஆர்.மகாதேவன்

குறிஞ்சியில் இல்லை
நெய்தலில் இல்லை
மருதத்தில் இல்லை
திரிந்த நிலத்திலும் இல்லை.

சேர நாட்டில் இருந்ததில்லை
சோழ நாட்டிலும் இருந்ததில்லை
கொங்கு நாட்டில் இருந்ததில்லை
தொண்டை நாட்டில் இருந்ததில்லை
நாஞ்சில் நாட்டிலும் இருந்ததில்லை.

பாண்டிய நாட்டில் இருந்தது.

நகரத்தார் கொண்டாடியதில்லை
நெசவாளர் கொண்டாடியதில்லை
நெய்தல்காரர்கள் கொண்டாடியதில்லை
பிராமணர் கொண்டாடியதில்லை
பிள்ளைமார் கொண்டாடியதில்லை
முதலியார் கொண்டாடியதில்லை
கவுண்டர்கள் கொண்டாடியதில்லை
கடைநிலை ஜாதியினர் யாரும் கொண்டாடியதில்லை.

எக்குலத்துப் பெண்களுக்கும் அங்கு இடமிருந்ததில்லை.

உருவ வழிபாட்டு ஆலயத்தின்
உள்ளூர் மரபென்பதால்
ஓடு காலி மதத்தினர்
ஒருநாளும் கொண்டாடியதில்லை.

மணல் கடத்தும் லாரியை பிடித்தால் வீரம்
மாட்டைப் பிடிப்பதா வீரம் என்றனர்
மார்க்ஸியவாதிகள்.
சங்க காலத்தில் பரத்தமையும்தான் இருந்தது என்றார்கள்
சநாதன விரோதிகள்.

பலரும் கொண்டாடாத சல்லிக்கட்டைத்தான்
பச்சைத் தமிழரின் மரபென்று
மெழுகுவர்த்தி ஏந்தி
மெரினாவில் கூடிக் கும்மாளமிட்டு
அரபிக் குலவையுமிட்டு ஆக்கிக் காட்டினார்கள்.

*
இறைமகன் இயேசுவின் வழியில் செல்லும்
இந்தியச் சட்ட மகள்
காளை விளையாட்டுக்குத் தடை விதித்தாள்.
பக்ரீத் பலியாடுகளுக்குப் பொங்காத பீட்டா
பாரம்பரியக் காளைக்குப் பொங்கியது.
‘தமிழர்’ மந்தை ‘தன்னெழுச்சியாகப் போராடியது’.
அத்தனை அமைச்சகங்களுக்கும் அலைந்து திரிந்து
அரை நாளில்
கலாசார விளையாட்டென்று
கையெழுத்து வாங்கிக்காட்டிய
இந்துத்துவ அரசையும் இந்திய தேசியத்தையும்
இன்றுவரையும் கால் ஊன்ற விடமாட்டேன் என்று
எகத்தாளம் பேசுகிறார்கள்.

ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கத் துணை நின்ற
இத்தாலி காங்கிரஸையும்
எடுபிடி திமுகவையும்
இன்றுவரை ஆளவைத்து அழகு பார்க்கிறார்கள்.

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்!

*
இமயப் பொய்கையில் அவதரித்த
இந்துக் கடவுள் குமரனின்
முதல் படைவீட்டில் ஏறிச் செல்கையில்
முதலில் தென்பட்ட அடியார் மண்டபத்தை
அவ்லியா சமாதி ஆக்கினார்கள்.

அருகிலிருந்த தீபஸ்தம்பத்தை
இன்று அளவைக் கல் என்கிறார்கள்.
அந்த தீபஸ்தம்பம்
ஒரு சொட்டு எண்ணெய்க்காக…
ஒற்றைத் திரிக்காக…
ஒரு நூறு ஆண்டுக்கு மேல்
ஒற்றைக் காலில் தவம் செய்து கொண்டிருந்தது…
செய்து கொண்டிருக்கிறது….
செய்து கொண்டே இருக்கும்!

*
பாதுகாப்புப் படை சூழ பத்து பேருடன் சென்று
பத்திரமாக ஏற்றிவிட்டு வரவேண்டும் என்றவர்
ஆயிரம் பக்தர்களுடன் சென்று
அறநிலையத் துறை ஏற்ற வேண்டும்
என்றுதானே ஆணையிட்டிருக்க வேண்டும்?
பதினோராவது ஆள் வந்தார்…
எனவே அனுமதிக்கவில்லை மை லார்ட்…

அடுத்த நாள் ஏற்றினால் ஆகம விரோதமென்று
அர்ச்சகர் லெட்டர் பேடில் அச்சடித்து
அரசு முத்திரையும் போட்டுக் காட்டுகிறார்கள்.

நபிகளுக்கு விரோதமாக
நடுகல் தர்கா வழிபாடுகூடாதென்று சொல்ல
மார்க்கப் பற்று கொண்ட ஒற்றை முஸ்லிமைக்கூட
நாடாள்பவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

களத்தை உங்களுக்கு சாதகமாக்கித் தருகிறேன் ஜி
சல்லிக்கட்டுக்கு அமைத்துக் கொடுத்ததுபோல என்று
உதடு மூடிச் சிரிக்கிறான் உடன்பிறப்பு.

நாலு எம்மேல்யே
இல்லேன்னா 25 % வாக்கு…
வீழ்த்தப்படாத எதிரி நேரில் குத்துவான்.
தண்டிக்கப்படாத துரோகி முதுகில் குத்துவான்.
மலர்ந்துதான் தீரணுமா?

பிரச்னைகள்
மலர் மலரும் வரை காக்கணுமா?

*
100 ஆண்டுகள் கழித்து தீபம் ஏற்றத் தீர்ப்பு…
200 ஆண்டுகள் கழித்து கற்பூரம் கொண்டு செல்வோம்…
எத்தனை நூறு ஆண்டுகள் கழித்து
ஆக்கிரமிப்பை அகற்றுவோம்?

*
500 ஆண்டுகள் கழித்து
ஆயிரம் பலிதானம் தந்து
ஒற்றைக் கோயில் கட்டினோம்.
கோயில் தொகுதியில்
குப்புற விழுந்து கிடக்கிறோம்.

ஓநாய்க்கூட்டத்தின் நடுவில்
கன்றுக்குட்டியைக் கட்டிவைத்திருக்கிறோம்
கொழுக்கட்டும் என்று
ஹூக்கா கறைபடிந்த பற்களைக் காட்டிச் சிரிக்கிறான்.

*
உங்கள் கலாசாரம் என்று
எதை நாங்கள் அனுமதிக்கிறோமோ
அதை மட்டுமே நீங்கள் கொண்டாட முடியும்.
இந்துத்தன்மையை நீக்கம் செய்து
இது இனிமேல் வெறும் ஒரு விளையாட்டு என்று சொன்னால்
அது இனிமேல் அவ்விதமே ஆடப்படும்.

(பிரிட்டிஷ் ஏமான் பிச்சைக்காசுகளை எறிந்ததுபோல
மேலே நின்று கொண்டு பரிசுகளைத் தூக்கியெறிகிறான்
ஜெனரல் டயர் புத்திரன்கள்
பாய்ந்து விழுந்து பொறுக்கிச் செல்கிறது
பாழ் நெற்றி மறவர் கூட்டம்).

கோயில் தூணுக்கு மேலே கும்மட்டம் கட்டினால்
அது இனிமேல் மசூதியே.
தீபஸ்தம்பதை நாங்கள் அளவைக் கல் என்றால்
இனி அது அளவைக் கல் மட்டுமே.
கால் கழுவும் இடத்தில் போடப்படும் கல் என்று சொன்னால்
அது வெறும் கல்லே.
பிரகாரத் தூண்களை இடித்து
படிக்கட்டுகள் என்று சொன்னால்
இனிமேல் அவை படிக்கட்டுகளே.
கருவறையை மூடிச் சுவர் எழுப்பினால்
இனி அது கல்லறையே.

உண்மைதான்.
அரக்கர் கூட்டம் இதைத்தான்
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து காட்டிவருகிறது
ஆனால்,
அவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்…
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆணாக ஒருவனை ஈன்று அனுப்புவாள்
அன்னை பராசக்தி.

அவன் தலைமையில்
அந்தக் கல்லறைச் சுவர்உடைக்கப்படும்.
அப்போதும் அதனுள் எரிந்துகொண்டிருக்கும்
அணையாமல் ஒற்றை அகல் சுடர்.

அது இவர்களால் அல்ல,
இவர்களின்
ஆப்ரஹாமிய ஆண்டவன்களாலும்
ஆப்ரஹாமியச் சாத்தான்களாலும்
அழிக்க முடியாத சுடர்
அது எரியும்.

ஏற்றுவார் யாருமின்றி,
எல்லையற்ற இருளையும் கிழித்தபடி எரியும்
ஆதி பரஞ்சோதி அது.

அகிலத்தையும்
அண்டசராசரங்களையும்
அரவணைத்துக் காக்கும்
அருட் பெரும் ஜோதி மட்டுமல்ல.
அத்தனை மலங்களையும்
அழித்துப் பொசுக்கும் ருத்ரப் பிழம்பு அது.

$$$


3. இதுவே பாசிசக்குரல்!

-சுந்தர்ராஜசோழன்

தீபத்தூணில் விளக்கேற்றுவதுதான் பெரிய பிரச்சினையா? எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டதா, சாலை வந்துவிட்டதா, வேலை கிடைத்துவிட்டதா என்றெல்லாம் திமுகவும் அதன் கிளையமைப்பை வழி நடத்தும் சீமானும் முழங்குகிறார்கள்..
ஆனால் தமிழ் மொழி உரிமை, ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார உரிமைக்காக போராட்டங்களைச் செய்த போது எல்லா வேளைக்கும் உணவு இருந்ததா? எல்லோரும் எல்லாமும் பெற்ற சமத்துவ உலகத்தை படைத்துவிட்டு போராடலாம் என்று முழங்கினார்களா என்றால் இல்லை.
எந்தச் சமூகமும் அதன் பண்பாட்டு உரிமையை இழக்க முடியாது.நமது வழிபாட்டு உரிமை பறிக்கப்படும் போது சகித்துக் கொள்ள வேண்டும் என்று போதிப்பதே உண்மையான பாசிசக்குரல்.


$$$

One thought on “திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்- 2

Leave a comment