-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப் பட்டுள்ளன. (பகுதி -2)

நீதிமன்ற உத்தரவுக்கு மீண்டும் அவமதிப்பு; தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை!
திருப்பரங்குன்றம், டிச. 4: திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று (டிச. 04) இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் தீபம் ஏற்றப்படவில்லை. காவல்துறையினர் விடவில்லை. எனவே, டிச. 5 காலை 10:30 மணிக்கு வழக்கு விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. மனுதாரர் ராம. ரவிகுமார் தரப்பிலும் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை அறநிலையத்துறை செய்யத்தவறிய சூழலில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச. 4இல் தாக்கல் செய்யப்பட்டது.
இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு:
அதேசமயம், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிச. 4இல் தொடங்கியது. நிர்வாக நீதிபதி ஜெயசந்திரன் மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரனிடம், ‘144 தடை உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தடை உத்தரவுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ‘சட்டம் ஒழுங்கை நீதித்துறை கையில் எடுக்கக் கூடாது’ என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு நீதிமன்றத்துக்குத்தான்; சட்டம் ஒழுங்குக்கு அவர்களைப் பயன்படுத்த முடியாது என்றும் அரசுப் தரப்பு வாதம். தொடர்ந்து பரபரப்பான வழக்கு விசாரணை நடந்தது.
‘தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என்று, டிச.1ஆம் தேதியே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து விட்டார். ஆனால், தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வழக்கு விசாரணையில் மனுதாரர் ராம ரவிகுமார் தரப்பு வக்கீல் வாதம் செய்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் டிச. 4 மாலை 4:30 மணியளவில் அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள வழிபாட்டு உரிமை மற்றும் நீதிமன்ற உத்தரவை அரசு நிர்வாகம் அமல்படுத்த வேண்டிய சட்டபூர்வமான கடமை தொடர்பானதாகும். இந்த வழக்கில், தனி நீதிபதி டிச. 1இல் அளித்த தீர்ப்பை, எதிர் மனுதாரர் (கோயில் செயல் அலுவலர்) அமல் செய்யவில்லை. அதுதனி நீதிபதியின் கவனத்துக்கு வந்தபோது, அவர், அர்த்தமுள்ள மாற்றுத்தீர்வு ஒன்றைக் கூறினார். ஆனால், அதையும் கூட, எதிர் மனுதாரர் அமல் செய்யவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவைத் தோற்கடிப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிரிவு 163ன் கீழ் (பழைய சட்டப்பிரிவு 144) தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்; காவல் ஆணையர், மனுதாரர்களை மலை உச்சிக்குச் செல்ல விடாமல் தடுத்துள்ளார்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவைக் காட்டிலும், மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு மேலானது என்று அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறுகிறார். எந்த அடிப்படையில் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது? எந்த நேரத்தில் பிறப்பிக்கப்பட்டது என்றும், அதற்குரிய கோப்பைக் காட்டும்படியும் நாங்கள் கேட்டபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அதைக் காண்பித்தார்.
அந்தக் கோப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் பழைய வரலாறு குறித்த தாள்கள் இருந்தன. டிச. 3ஆம் தேதி மாலை 6 மணி முதல், மறு உத்தரவு வரும் வரை யாரும் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்லக் கூடாது என்று ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தடை உத்தரவானது, நீதிமன்ற உத்தரவுக்கு முன் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் உண்மைக் கோப்புகளைக் கேட்டவுடன் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆட்சியரின் உத்தரவானது, மலை உச்சியில் கூடியிருந்த 100க்கும் மேற்பட்டோர் பற்றி காவல் ஆணையர் அளித்த தகவலின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரையும், 10 பேரையும் தீபம் ஏற்றுவதற்காக தீபத்தூணுக்குச் செல்ல அனுமதிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், தடை உத்தரவைக் காரணம் காட்டி எப்படி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆட்சியர் பிறப்பித்த இந்த உத்தரவானது, ‘மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு அல்லது கூடுதல்களுக்குப் பொருந்தாது’ என்றும் அந்த உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய மனுதாரர்கள், தங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, நன்கு திட்டமிட்டு மேல் முறையீடு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. வேண்டுமென்றே உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தனரா, இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட தனி நீதிபதியே முடிவு செய்வார்.
அரசு நிர்வாகம் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்கும் நிலையில் தான், சி.ஐ.எஸ்.எஃப். படையினரை தனி நீதிபதி உதவிக்கு அழைத்துள்ளார். அதாவது, சட்டப்படியான கடமையை மாநில போலீசார் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய படையின் உதவியை பெறுவதில் எந்த தவறும் இல்லை. நான்காம் மனுதாரரான கோயில் செயல் அதிகாரியிடம் தீபம் ஏற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் நிறைவேற்றத் தவறிய நிலையில், மனுதாரரிடமே ஒப்படைக்கப்பட்டது.
இது மாற்றி அமைக்கப்பட்ட உத்தரவு அல்ல. விளக்கு ஏற்றும் நபர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளார். எனவே, அரசு நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவானது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
-இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.
அவமதிப்பு வழக்கு விசாரணை:
அதனைத் தொடர்ந்து, மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. (அந்தச் செய்தி கிழே உள்ளது).
$$$
நீதிமன்றத்தை விட காவல் ஆணையர் பெரியவரா?
அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி
மதுரை, டிச. 4: திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான அவமதிப்பு வழக்கில், ‘நீதிமன்றத்தை விட போலீஸ் கமிஷனர் பெரியவரா?’ என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அரசுத் தரப்பை கடுமையாகச் சாடியது.
மதுரை மாவட்டம், ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம. ரவிகுமார் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச. 1இல் பிறப்பித்த உத்தரவு:
வழக்கமான இடங்களையும் சேர்த்து தீபத் தூணிலும் கார்த்திகை தீபத்தை கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். அதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட போலீசாரின் கடமை. இந்த உத்தரவில் யாரும் தலையிடாமல் இருப்பதை காவல் ஆனையர் உறுதி செய்ய வேண்டும்.
-இவ்வாறு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம. ரவிகுமார் நேற்று முன்தினம் (டிச. 3) மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “தீபத் தூணில் தீபம் ஏற்ற கோயில் செயல் அலுவலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதை நிறைவேற்ற மாட்டோம் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ‘எனவே, தீபத்தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர், 10 பேரை அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களை அனுப்ப உயர் நீதிமன்ற சி.ஐ.எஸ்.எஃப். கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்” என, உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
டிச. 4-இல் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு, ‘தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது’ என்றது.
நீதிபதி, ‘நீங்கள் இந்த உத்தரவால் பாதிக்கப்படவில்லை; ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்’ என்றார். அரசுத் தரப்பு, ‘கோயில், தர்கா தரப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். உணர்வுப்பூர்வமான வழக்கு என்பதால் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும். மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்’ என்றது.
நீதிபதி, ‘கோயில் தரப்பு வழக்கறிஞரும் கண்ணியமாக நடந்திருக்கலாம். உடல்மொழியிலேயே எங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிறார். செயல் அலுவலரை ஆஜராக கூறியதற்கு, ‘எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை’ என அலட்சியமாக பதிலளித்தார்’ என்றார்.
அரசுத் தரப்பு, ‘அதுபற்றி எனக்கு தெரியாது. அவருக்காக வருந்துகிறேன். உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் தயவுசெய்து கருத்தில் கொண்டு வழக்கை ஒத்திவைக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றது.
நீதிபதி, ‘நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். அரசுத் தரப்பு, ‘உங்கள் உத்தரவைப் பார்த்த பின், அடுத்த கட்டம் செல்வோம்’ என்றது.
நீதிபதி, ‘கோயில் செயல் அலுவலர் உடனடியாக காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும். நீதிமன்றத்தின் மதிப்பு அவருக்குப் புரிய வேண்டும். செயல் அலுவலர் வருவாரா, இல்லையா? காவல் ஆணையரும் ஆட்சியரும் காணொளி வாயிலாக உடனடியாக ஆஜராக வேண்டும். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை’ என்றார்.
அரசுத் தரப்பு, ‘அதிகாரிகளை 5 நிமிடங்களில் ஆஜராக வேண்டுமென கூறினால் எப்படி?’ என கேள்வி எழுப்பியது.
நீதிபதி, ‘செயல் அலுவலரின் நடவடிக்கையே, அவரை ஆஜராக உத்தரவிடக் காரணம். மாலை 5:30 மணிக்கு ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராகவில்லை என்றால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க தயங்க மாட்டேன்’ என குறிப்பிட்டு, மாலை 5:20 மணிக்கு இருக்கையில் இருந்து கீழிறங்கினார்.
இதையடுத்து, மாலை, 5:30 மணிக்கு காவல் ஆணையர் லோகநாதன் காணொளி வாயிலாக ஆஜரானார்.
நீதிபதி, ‘நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு அளிக்கப்பட்டதா? அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா?’ என, ஆணையரிடம் கேள்வி எழுப்பினார். அவர், ‘மதியம் 3:30 மணி முதலே மக்கள் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அதிகம் பேர் கூடினர். மாலை, 5:30 மணிக்கு கூட்டம் அதிகமானது. இதனால் தடுப்புகளை அமைத்து கட்டுப்படுத்த முயன்றோம்.
தடுப்புகள் தகர்க்கப்பட்டு, போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டன. சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சூழல் குறித்து கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்’ என்றார்.
நீதிபதி, ‘ எந்த நேரத்தில் கலெக்டருக்கு பரிந்துரை அனுப்பினீர்கள்?’ என கேள்வி எழுப்ப, கமிஷனர், ‘மாலை 5:45 மணியளவில் அனுப்பியிருப்போம்’ என, பதிலளித்தார். நீதிபதி, ‘எப்போது உங்களுக்கு உத்தரவு கிடைத்தது?’ என, கேள்வி எழுப்ப, ஆணையர், ‘மாலை, 6:15 மணிக்கு உத்தரவு விபரங்கள் கிடைத்தன’ என பதிலளித்தார்.
அரசுத் தரப்பு, ‘அந்த பரிந்துரை அடிப்படையில் மாலை, 6:10 மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படும் என்பதாலேயே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. எங்கள் நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது; மதிக்கக் கூடாது என்பதல்ல.
‘மறுநாள் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், சூழலை நிர்வகிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எது எப்படியாயினும், காவல் ஆணையரைப் பாராட்ட வேண்டும். பெரிய காயங்கள், இழப்புகளின்றி சூழலை நிர்வகித்தார்’ என்றது.
நீதிபதி, ‘பெரிய அளவில் பிரச்சினை எழாதது மக்களின் நன்னடத்தையால் தான். அந்த நன்மதிப்பை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்’ எனத் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக டிச. 1இல் உத்தரவிடப்பட்டது. அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதிலும் மனுதாரர் தீபமேற்ற உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்புடன் மேலே செல்ல முயன்ற போது, காவல் ஆணையரே தடுத்துள்ளார். ‘144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மேலே செல்ல அனுமதிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இயலாது’ எனக் கூறியுள்ளார். இதனால், சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் திரும்பி விட்டனர். மனுதாரரால் தீபத்தை ஏற்ற முடியவில்லை. இன்று அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்து, விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தது குறித்து குறிப்பிட்டுள்ளது. காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பு வழங்கியிருந்தால், பிரச்சினை பெரிதாகியிருக்காது. அவரோ ஆட்சியர், நீதிமன்றத்தை விட தானே பெரியவர் என எண்ணியுள்ளார். அதனால் தான், ‘ஆட்சியர் பிறப்பித்த உத்தரவால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.
எனவே, ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இன்றும் (டிச. 4) கார்த்திகை தீபம் ஏற்றலாம். ஆகையால், மனுதாரர் தீபத் தூணில் தீபம் ஏற்ற ஆணையர் லோகநாதன் தலைமையிலான போலீசார் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து நாளை (டிச. 5), காலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
மூன்றாம் முறையாக நீதிமன்றம் அவமதிப்பு:
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டபடி (மூன்றாம் முறையாக) தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றச் சென்றவர்களிடம், “உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதால் அனுமதிக்க முடியாது” என்று காவல் துறையினர் கூறினர். இதையடுத்து டிச. 5 காலை 10:30 மணிக்கு வழக்கு விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. மனுதாரர் ராம. ரவிகுமார் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- ஆதாரம்: தினமலர் செய்திகள்
$$$
One thought on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 2”