கடன் பெற்றார் நெஞ்சம் வேண்டாம்!

-கருவாபுரிச் சிறுவன் 

‘கடன்பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனின் வீழ்ச்சியைப் பற்றுப் பாடுவார் கம்பர். எனவே, கடன் ஒரு பெரும் சுமை. அதுகுறித்த இலக்கியச் சிந்தனை இது…

  • கடன் அன்பை முறிக்கும்
  • இங்கு கடன் கிடையாது
  • தயவு செய்து கடன் கேட்காதீர்
  • வாடிக்கையாளர்கள் என் தெய்வம். அதனால் தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கு இல்லை. 

-என்ற வாசகம் அமைந்த பதாகைகளை பெரும்பாலான  டீக்கடை, பலசரக்குக் கடை, பெட்டிக்கடைகளில் பார்த்திருக்கலாம். 

கடன்பட்டோர் கடனில்லாமல் நிறைவான வாழ்க்கை வாழ அன்றே வழிகாட்டி இருக்கிறார்கள்  நம் அருளாளர்கள். அவர்களுடைய உபதேசம்  இன்றைய தலைமுறைக்கும் மிகவும் முக்கியம். 

வாருங்கள்,  என்ன தான் சொல்லுகிறார்கள் என கேட்போம். 

கடன் வாங்கியவர்கள் மீது கரிசனம்: 

பொதுவாகவே, அருளாளர்கள் தன் பாடல்களில் ஆன்மாக்களாகிய உயிர்கள் படும் துன்பத்தை தன் மீது ஏற்றிச் சொல்வது அவர்களுடைய இயல்பு. அது எதற்காக எனில்,  உயிர்கள் அந்த அவஸ்தையால் துன்பப்படக் கூடாது. மீண்டும் அதில் மயக்கமுறக் கூடாது என்பதில் விழிப்புணர்வு செய்யும் பெருநோக்கோடு பாடி இருப்பார்கள்.

திருஞானசம்பந்த நாயனாரில் தொடங்கி திருவருட் பிரகாச வள்ளலார் வரையுள்ள திருநூல்களில் இக்கோட்பாட்டைக் காணலாம். 

திருக்கருவையந்தாதியும், அபிராமியந்தாதியும் அந்தாதி இலக்கியத்திற்கு திலகம் போன்றவை. இதன் ஆசிரியர்களாகிய ஞானகுரு வரதுங்க ராமபாண்டியரும், அபிராமி பட்டர் பிரானும் நமக்கு கிடைத்த மாபெரும் சற்குரு நாதர்கள். 

இவர்கள் இருவரும் உயிர்களாகிய நாம் வாழ்வாங்கு வாழ்வதற்குச் சொல்லும் அறிவுரைகளும் அறவுரைகளும் ஏராளம். 

அவற்றில் ஒன்று, உயிர்கள் எதற்கும் கடன்படக் கூடாது  என்பதில் கவனமாக இருப்பார்கள்.  சற்குரு நாதர்களாகிய இவர்களுக்கு நம் மீது காட்டும்  கரிசனத்திற்கு அளவே  கிடையாது. 

கடன் பட்டவர்களின் அவல நிலையை நம் கண்முன் கொண்டு வந்து காட்டி, அடுத்தவரிடம் கை நீட்டி  கடன் வாங்கக்கூடாது என்கிற  எண்ணத்தை அபிராமியந்தாதி 62 வது பாடலைப் படிப்பவர்களுக்கு உண்டு பண்ணும். அதன்பிறகு அம்பிகையின் திருவடியைத் தேடி கடன்பட்டவர்களின் கால்கள் செல்லும் என அறுதியிட்டுக் கூறுகிறார் பட்டர் பிரான்.  பாடலை ஒரு தரம் முழுமையாகப் படித்து விடுவோமா… 

இல்லாமை சொல்லி ஒருவர்  தம்பால் சென்று இழிவுபட்டு 
நில்லாமை நெஞ்சின்  நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை  பாதங்கள் சேர்மின்களே!

 கடன் கொடுப்பவர்கள் எப்படியெல்லாம் கடன் கேட்போரை அலைக்கழிப்பார்கள் என்பதை கண் முன்னே தனது திருக்கருவை வெண்பா அந்தாதி 21 இல் படம் பிடித்துக்  காட்டுகிறார் வரதுங்கராம பாண்டியர்.

பதம் அறிந்து வாய்பார்த்து பற்றாத புல்லர் 
இதம் அறிந்து அங்கு இன்சொல் இயம்பி - மதிகலங்கி  
நன்னாள் கழித்து விட்டேன் நாதா முகலிங்காவுனை
என்னாள் நினைபேன் இனி. 

வளம் பொருந்திய கருவைப்பதியில் எழுந்தருளி இருக்கும் வானவர்களின் தலைவனே! அடியேனை அந்த புல்லர்களுக்கு அடிமையாகாமல் காத்தருள் என பால்வண்ணநாதரின் திருவடியில் வேண்டுங்கள் என்றும்,  படித்தவர்களாக இருப்பார்கள். ஆனால் நாகரிகமற்று நடந்து கொள்வர்கள் அவர்களுடைய முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் திரிபுரையின் பாதங்களில் வையுங்கள் என கடன்வாங்கி சிரமப்பட்டவர்கள், துன்பப்பட்டவர்கள், அதனால் மானம் மரியாதையை இழந்தவர்களின் மனநிலையை ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு அவர்களுக்கு நல்லதொரு உபாயத்தை சொல்லுகிறார்கள் நம் சற்குரு நாதர்கள். 

செல்வர் செருக்கர் தலைவாயில் 
    தோறும் திரிந்து திரிந்(து)
அல்லல் துயர்கொண்டு இளைத்து 
    விட்டேன் அடியேன் இனிஅப் 
புல்லர்க்கு எளிமை புகலாமல் 
   காத்தருள் பூந்தடமும் 
மல்லற் பழனமும் சூழ் 
   கருவாபுரி வானவனே 

      (திருக்கருவைக்கலித்துறை அந்தாதி: 39) 

நிறைவாக, 

எந்த ஒரு சிக்கலான விஷயத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டுமானால் திருவள்ளுவ தேவ நாயனார், ஒளவை பிராட்டியார் ஆகிய இருவரிடமும் சென்றால், மிக நேர்த்தியான முறையில் தெளிவான பதிலை வழங்குவார்கள்.

பணத்தினால் செருக்கு மிக்கவர்களாகவும், கல் நெஞ்சம் படைத்தவர்களாகவும், இழிந்த செயலை செய்யக் கூடியவர்களாகவும், சிறுமதி படைத்தவர்களாகவும் இருப்பவர்களை  ‘பாவிகாள்’ என வயிறெறிந்து சாபமிட்டு திட்டித் தீர்க்கிறாள்  ஒளவை பிராட்டியார். 

அப்படியாவது இவர்களுக்கு நல்லறிவு வந்து, தமிழக அரசின் கடன்தொகையைக் குறைக்க முன்வரும் எண்ணத்தை அன்னை ஒளவை பிராட்டியார் வழங்க வேண்டும்.  

பாடுபட்டுத்தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் 

கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டிங்கு

ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார் 

பாவிகாள் அந்தப்பணம்.

2025 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையின் படி தமிழக அரசின் மொத்தக் கடன் தொகை  9.30 லட்சம் கோடியாகி உள்ளது. தோராயிரமாக ஒவ்வொரு குடிமக்கள் மீது 1,20,000 ரூபாய் கடன் தொகை ஏற்றப்பட்டுள்ளது. 

இதனை சரி செய்வதற்கும் சீர் செய்வதற்கும் நிலைமையை ஆராய்ந்து பார்ப்பதற்கும் நேரம் இல்லாத அரசியல்வாதிகளைத்  தேர்ந்தெடுத்து  ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் தமிழக மக்கள்.

தமிழகத்தின்  பொருளாதாரச் சீர்கேட்டிற்கு  ஒரு முக்கிய காரணம் வாக்களித்தவர்களும் என்பதை மறந்து விடாதீர்கள். 

வருகின்ற தேர்தலிலாவது  நீதி, நேர்மையுடன் வாழ்ந்து காட்டும்  மக்கள் தலைவருக்கு  வாக்களியுங்கள்.

 வரும் காலங்களில் அற்பத்தனமான இலவசங்களுக்கு ஆசைப்பட்டு விட்டில் பூச்சியாய் மடிந்து கொள்ளாதீர்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.

ஒவ்வொரு தனிமனிதரும் தேவைக்கு மீறி கடன் வாங்குவதைத் தவிருங்கள். தமிழகக் கடனை இன்னும் அதிகரிக்காமல் இருப்பதற்கு உண்டான முயற்சியை  மேற்கொள்ளுங்கள் என்று கூறி கடனில்லாத நிறைவான வாழ்க்கை வாழ… அன்னை அபிராமியம்பிகையும், எந்தை பால்வண்ண நாத சுவாமியும் யாவருக்கும் நல்லறிவினை தக்க நேரத்தில்  வழங்க வேண்டும் என திருவடியில் விண்ணப்பித்து இச்சிந்தனையை நிறைவு செய்து  தமிழக மக்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோமாக. 

கடன் வாங்கி அல்லல் படுவோர்கள்  நாள் தோறும்  விளக்கேற்றி ஆளுடைய பிள்ளையாரின்  திருவீழிமிழலை தேவாரத்தைப் பாடி வர, கடன்கள் யாவும் தீர்ந்து நிலையான செல்வம் பெருகும் என்கிறார்கள் அனுபவித்த பாக்கியசாலிகள்.  ‘கடன் இல்லாத தமிழகம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது உள்ளத்தில் இனம் புரியாத ஆனந்தம் உண்டாகிறது. நம்பிக்கையோடு படியுங்கள். நல்லது நடக்கட்டும். மகாலட்சுமியின் அருள் தமிழக மக்களுக்கு நிரம்பக் கிடைக்கட்டும். 

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே!

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

திருச்சிற்றம்பலம். 

வாழ்க பாரதம் … வாழ்க மணித்திருநாடு!

$$$

Leave a comment