-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -1)

நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை
(தினமலர் செய்தி)
மதுரை, டிச. 3: நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றாத நிலையில், ஹிந்து அமைப்பினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது; பதட்டமான சூழல் நிலவுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிச. 3 அன்று நடைபெற்றது. இங்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் விரும்பினர். ஆனால், மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் 1920 ஆம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்தது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்’ என உத்தரவிட்டு இருந்தார் (டிச. 1).
இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் டிச. 2-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வந்தனர்.
ஆனால், வழக்கம் போல உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை 6.00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இது பக்தர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என மதுரை ஆட்சியர், காவல் ஆனையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற உத்தரவுபடி ‘டிச. 3ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் மாலை 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்து இருந்தார். ஆனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், “மனுதாரர் மற்றும் 10 பேர் உடன் சென்று தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். உடன் சி.ஐ.எஸ்.எஃப். போலீசார் பாதுகாப்புக்காகச் செல்ல வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை என்பதால், கோயில் முன் பதட்டம் ஏற்பட்டிருந்தது. அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். தடுத்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
144 தடை உத்தரவு:
இந்து அமைப்புகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தீரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் பிரவின் குமார் அறிவித்தார்.
அதேசமயம், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஒரு குழுவினர் திருப்பரங்குன்றம் சென்றனர். பாதுகாப்புக்காக சிஐஎஸ்எஃப் போலீசார் வருவதற்காக அவர்கள் அங்கு காத்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என காவல் ஆணையர் கூறினார்.
ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னரே, நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். ஆனால், அதனை போலீசார் ஏற்கவில்லை. இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு தொடுத்தவரான ராம.ரவிகுமார் கூறுகையில், நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை. மத்திய பாதுகாப்புப் படையையும் கைது செய்வோம் என போலீசார் கூறுகின்றனர். மக்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி ஜெயசந்திரன் முன்பு அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மறுநாள் ( டிச. 4) தமிழக அரசின் முறையீட்டை முதல் வழக்காக விசாரிப்பதாக தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மலைப்பாதையில் சூடம் ஏற்றி வழிபட்ட மனுதாரர் ராம. ரவிகுமார், ‘ நாளை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி புறப்பட்டு சென்றார்.
ஹிந்துக்களின் உணர்வை மதிக்காத தி.மு.க. அரசு சிறுபான்மையினர் ஓட்டுக்கு ஆசைப்பட்டு நீதிபதியின் 2 தீர்ப்புகளையும் அவமதித்து ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது தி.மு.க. அரசு. தீபத்தூணில் தீபம் ஏற்ற அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதும் முதலில் 'கலவரம் ஏற்படும்' என்று பொய்க் கதை விட்டார் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. வெங்கடேசன். கூடவே காங்கிரசும் தங்களது சிறுபான்மையின ஓட்டு வங்கிக்கு பாதிப்பு வராதவாறு, ஹிந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றது. இதனால் கூட்டணி நிர்ப்பந்தம், தங்களுக்கான சிறுபான்மையினர் ஓட்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீபம் ஏற்றாமல் பின்வாங்கியது தி.மு.க. அரசு. 'தேர்தல் அரசியலுக்கு' முன்பு நீதிமன்றம் அவமதிப்பு தி.மு.க.வுக்கு பெரிதாக தோன்றவில்லை. அடுத்து மனுதாரரே தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட உடனே, அதனையும் ஏற்காமல், கலெக்டர் வழியாக 144 தடை உத்தரவு பிறப்பித்து, 2வது நீதிமன்ற அவமதிப்பையும் ஏற்றுக் கொண்டது. பொதுவாக தி.மு.க. அரசு ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்காது என்ற கருத்து உண்டு. அதனை உறுதிப்படுத்துவது போல, தர்ஹா நிர்வாகமே இந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவிக்காத போது, வரும் தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க. அரசு பிடிவாதமாக ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகிறது. மதுரை போன்ற ஆன்மிக மண்ணில், இது தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மதநல்லிணக்கம் நிலவும் மதுரையில் தி.மு.க., அரசு தான் தேவையில்லாமல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் ஹிந்து அமைப்பினர்.
$$$
ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு
ராம.ரவிக்குமார் பேட்டி
(தினமலர் செய்தி)
மதுரை, டிச. 3: ”திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவை அரசு அவமதித்துள்ளது” என ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம. ரவிகுமார் குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது:
ஏற்கனவே மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என நேற்று முன்தினமே நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாலை 6:00 மணிக்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவர் என எதிர்பார்த்தோம். அதையும் செய்யவில்லை. தீபம் ஏற்கனவே ஏற்றிய மண்டபத்தில்தான் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும், அதிகாரிகள், மனுதாரருடன் 10 பேருக்கு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்புடன் மலைக்கு செல்ல வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவில் உள்ளது. அந்த உத்தரவு நகலைக் கொடுத்தோம்.
ஆனால் தமிழக போலீசார், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அதைமீறி சென்றால் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களையும் கைது செய்வோம் என்றனர். இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா? நீதிமன்ற உத்தரவை இந்த அரசு ஏன் மறுக்கிறது? இந்த விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசுக்குத்தான் பிரச்சினை. ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவை அரசு அவமதித்துள்ளது.
144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பக்தர்களை அனுமதிக்காத அரசு போலீசாரை இத்தனை எண்ணிக்கையில் ஏன் அனுமதித்துள்ளது? இது சட்டத்திற்குள் வருமா, வராதா? எங்களையும், சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களையும் கைது செய்யச் சொல்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க தமிழக அரசின் திட்டமிட்ட செயல்தான். அரசு மேல்முறையீடுக்குச் சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள். நாங்கள் சட்டத்தின்படி நடப்போம். வெற்றி பெறுவோம் என்றார்.
அடிப்படை உரிமை பறிப்பு:
அவரது வழக்கறிஞர் சாமிநாதன் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது அரசு, கோயில் நிர்வாகத்தின் கடமை. உத்தரவை இந்த இருதரப்புக்கும்தான் கொடுத்துள்ளனர். அவர்கள் உத்தரவைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தான் தொடரமுடியும். இந்த தீபத்தை கார்த்திகை நாளில் மாலை 6:00 மணிக்குத்தான் ஏற்ற முடியும். இதற்கான உத்தரவை நேற்று முன்தினமே வழங்கி விட்டோம். அதற்கான எந்த வேலையையும் கோயில் நிர்வாகம் செய்யவில்லை. இதற்காக கோயில் நிர்வாகத்தை மட்டுமே நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.
அவர்கள் நேற்று முன்தினமே (டிச. 2) மேல்முறையீடு செய்துள்ளனர். அது ஏற்கப்படவில்லை. இன்று ( டிச. 4) நீதிமன்ற அவமதிப்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வீடியோகான்பரன்சிங்கில் போலீஸ், கோயில் செயல் அலுவலரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது? தர்ஹாவில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் எந்த இடத்திலும் தீபம் ஏற்றலாம் என 1996இல் உயர்நீதிமன்றம் தெளிவான உத்தரவு வழங்கியும், சில லெட்டர் பேடு அமைப்புகளுக்காக, ஓட்டுக்காக, ஹிந்துக்களின் அடிப்படை உரிமையைக்கூட தமிழக அரசு பறிக்கும் வகையில் அரசு செயல்பட்டுள்ளது. -இவ்வாறு கூறினார்.
144 தடை உத்தரவு பைத்தியக்காரத்தனம்:
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம் கூறியதாவது:
கடந்த வாரமே நீதிபதி மலைமீது சென்று ஆய்வு செய்த பிறகே தீர்ப்பு வழங்கினார். சிறுபான்மை ஓட்டுக்காக ஹிந்துக்களுக்கு எதிராக இந்த ஆட்சி நடக்கிறது. நீதிமன்றத்திற்கு இந்த அரசு மதிப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவமதித்துள்ளது.
இன்று மறுபடியும் தீர்ப்பு வழங்கியும் 6:00 மணிக்கும் தீபம் ஏற்றவில்லை. எனவே உயர் நீதிமன்றம் 6:05 மணிக்கு வழங்கிய மறு தீர்ப்பின்படி, சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுடன் சென்று ஏற்றும்படி சொல்லியும் அனுமதிக்கவில்லை. இந்தளவு ஏன் ஹிந்துக்கள் மீது விரோதம் எனத்தெரியவில்லை. எனவே வரும் 2026 இல் இந்த அரசு படுதோல்வியைச் சந்திக்கும். திமுகவினருக்கு ஹிந்துக்கள் ஓட்டளித்துள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஹிந்துக்களின் கோயில்களை இடிப்பது, ஹிந்துக்களின் இடத்தை சூறையாடுவது, அறநிலையத்துறையில் ஊழல் செய்வது என செயல்படுகின்றனர். இன்று ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஹிந்துக்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.
இந்த மலைமீது கோழி, ஆடு வெட்டுவேன் என சென்றவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அன்று எம்.பி. வெங்கடேசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்கிறார். அவர் முழுக்க நக்சல் எண்ணத்தோடு பேசுகிறார். அவர் மதச்சார்பற்ற கூட்டணி என்கிறார். நாங்களும், அப்படியே இருங்கள் என்றுதான் சொல்கிறோம். இப்படி ஒருசார்பாக நடக்கின்றனர்.
இவ்விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது பைத்தியக்காரத்தனமானது. இன்று திருக்கார்த்திகை நாளில் பல ஆயிரம் பக்தர்கள்கோயிலுக்கு வந்து போவர். எனவே இந்த உத்தரவைப் போட்டவர்கள் யாராக இருந்தாலும் பைத்தியக்கார மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்களே. இது ஹிந்துக்களுக்கு எதிரானது, இது பக்தர்களை அச்சுறுத்தும் செயல்.
-இவ்வாறு கூறினார்.
- நன்றி: தினமலர் (04.12.2025)
$$$
2 thoughts on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 1”