திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஈ)

-கா.குற்றாலநாதன்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-4…

10. நீதிமன்ற வழக்குகளும் தீர்ப்புகளும

இந்நிலையில் இந்து அமைப்புகளின் சார்பில் சட்டப் போராட்டமும்  நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது; வழக்கு ஒருபுறம் நடைபெற்று வந்தது.

 ‘திருப்பரங்குன்றம் மலை  திருக்கோயிலுக்கே சொந்தம்’ என இந்து அமைப்புகளும்,   அங்கு சமணப் படுக்கைகள் இருப்பதால் சமணர்களுக்கு சொந்தம் என சமணர்களில் ஒரு பிரிவும், இஸ்லாமியர்களுக்கு சொந்தமென தர்கா நிர்வாகமும் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தன.

இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றுசேர்த்து ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இவ்வழக்குகளை, மதுரை உயர் நீதிமன்ற நீதியரசர்கள்  ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு  விசாரித்தது.

மதுரை கலெக்டர் பதில் மனு:

அந்த வழக்கில்  கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்  கூறப்பட்டதாவது:

“இந்து அமைப்பு கந்த மலை  எனவும், முஸ்லிம் அமைப்பு சிக்கந்தர் மலை எனவும்,சமண சமூகம் சமணர் குன்று எனவும், உள்ளூர் மக்கள் இதை திருப்பரங்குன்றம் மலை எனவும் அழைக்கின்றனர்.

மலை உச்சியிலுள்ள சிக்கந்தர் தர்ஹாவில் விலங்குகளை பலியிடுவதும், அதை வழிபாட்டு முறையாக உட்கொள்வதும் பாரம்பரியமாக முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில், பாண்டி முனீஸ்வரர் கோயில், மலையாண்டி கருப்பசாமி கோயில் மற்றும் பிற முனியப்பன் கோயில்களில் விலங்குகளை பலியிடுவது வழக்கம்.

திருப்பரங்குன்றம் மலையில், சமணக் கோயில்களும் உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் அனைத்து மதங்களாலும் நடைமுறையில் உள்ள அதே நடைமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே இந்து அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்”

– என தமிழக அரசு – மாவட்ட கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தர்ஹா நிர்வாகம் தரப்பில், “தர்கா அமைந்துள்ள பகுதி, கொடிமரம் மற்றும் அதற்குச் செல்லும் பாதை, புது மண்டபம், நெல்லித்தோப்பு தர்ஹா நிர்வாகத்திற்குச் சொந்தமானது”  என குறிப்பிட்டது.

கோயில் நிர்வாகம் (இந்து சமய அறநிலையத் துறை) சார்பில்  ‘மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது’ என்று மனு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் விவாதம் தொடர்ந்து நடந்தது.

இரு மாறுபட்ட தீர்ப்புகள்:

நீதிபதி ஜெ.நிஷாபானு ஜூன் 24இல் பிறப்பித்த உத்தரவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்:

“திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, மற்றும் ஜைன கோவில்கள் உள்ளன என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

திருப்பரங்குன்றம் மலை முழுவதும், 33 சென்ட் தவிர, முருகனுக்குச் சொந்தமானது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தர்ஹாவில் விலங்குகளை பலியிடுவது பழங்காலத்திலிருந்தே முஸ்லிம்களால் மட்டுமல்ல, பிற சமூகங்களாலும் ஒரு மத நடைமுறையாக பின்பற்றப்படுகிறது. மத நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்கும் விலங்கு பலியிடுவதை தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், அத்தகைய செயல்பாட்டைத் தடுக்கும் எந்த உத்தரவையும் இந்நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களைப் பொருத்த வரையிலும், முஸ்லிம்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுக்கு உட்பட்டதாக இருப்பதால், எந்தவொரு தனிநபருக்கோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது சங்கத்திற்கோ சொந்தமானது அல்ல. மாறாக சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது.

கோயிலுக்குரிய உரிமைகள் மீறப்பட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எனவே அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன”

-எனக் கூறினார்.

மலையின் பெயரை மாற்றும் முயற்சி:

மற்றொரு நீதிபதியான எஸ். ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

“திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த பதிவில், தர்காவில் அந்தக் காலத்திலிருந்தே பலியிடுவது நடைமுறையில் இல்லை. அது சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்படுகிறது என அறிக்கை தாக்கல் செய்தது. இதிலிருந்து, ரம்ஜான் அல்லது பக்ரீத் பண்டிகையின் போது தொழுகை நடத்தப்படாதது தெளிவாகிறது. மேலும் இது புதிதாகத் ததொடங்கிய நடைமுறையாகும். அதை அனுமதிக்க முடியாது.

சிக்கந்தர் மலை என்ற கூற்றைப் பொறுத்தவரை, 1920இல் நீதிமன்றம் மலையின் பெயரை  ‘திருப்பரங்குன்றம்’ மலை என திட்டவட்டமாகக் கூறியுள்ளது. வருவாய்த் துறை பதிவேடுகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரிலேயே உள்ளன. மலைக்கு திருப்பரங்குன்றம் மலை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இந்நிலையில், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் கட்சி அமைப்பு என தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா மசூதியில் விருந்து நடத்தப் போவதாக ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர். அதில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்காக சமபந்தி விருந்து நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தது. அது, நிச்சயமாக விஷமத்தனமானது, மற்றும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரை மாற்றும் முயற்சியாகும்.

விலங்கு பலியிடுவதைப் பொருத்த வரை, தர்ஹாவின் கூற்று என்னவெனில், கந்தூரி என்பது நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் ஒருவகையான விலங்கு பலியாகும். அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது கோயில் மற்றும் சில மனுதாரர்களின் கருத்து.

தர்ஹா கந்தூரி விலங்கு பலி நடைமுறையைப் பின்பற்றியிருந்தால், அதை நிரூபிக்க சில ஆதாரங்கள் இருக்கும். தர்ஹா நிர்வாகம் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

சன்னிதி தெருவில் இறைச்சிக்கடைகள் இல்லை. கோயிலிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இறைச்சிக்கடை இல்லை. 300 மீட்டருக்கு மேல் பிராய்லர் கோழிக்கடை இல்லை. உண்மையில் திருப்பரங்குன்றத்திலுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் அசைவ உணவு சமைப்பதை அனுமதிப்பதில்லை.

இந்த உண்மைகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புனிதத்தை பக்தர்கள் எவ்வாறு பாதுகாக்கின்றனர் என்பதைக் கூறுகின்றன.

கந்தூரி விலங்கு பலி நடைமுறைக்கு எதிர்ப்பு உள்ளது. சிக்கந்தர் தர்ஹாவில் ஆடு மற்றும் கோழியை பலியிடுவது குறித்து வெளியிட்ட துண்டுப்பிரசுரம் நிச்சயமாக உள்நோக்கம் கொண்டது, தீங்கிழைக்கும் செயல் என இந்நீதிமன்றம் கருதுகிறது. இது சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும்.

தர்ஹாவிற்கு வந்தவர்கள் சமண குகைகளில் பச்சை வண்ணம் பூசியுள்ளனர்.  ‘காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி’ என குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகளிலும் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது; இது கண்டிக்கத்தக்கது.

இதில் ஈடுபட்டோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும். சிக்கந்தர் மலை என்றோ, சமணர் குன்று என்றோ அழைக்கக் கூடாது. மலையில் எந்த விதமான கல்குவாரி பணிக்கும் தடை விதிக்கப்படுகிறது.

காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு மாலை 6:00 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதனால் மலை மேல் மின்சார வசதி செய்யப்பட வேண்டியதில்லை. சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்தால் மலை சேதமடைய வாய்ப்புள்ளது.

எனவே எந்த நிவாரணங்களையும் வழங்க இயலாது. தர்காவின் புனரமைப்புப் பணிகளுக்காக தர்காவின் அறங்காவலர் தொல்லியல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று பணியை மேற்கொள்ளலாம்”

-இவ்வாறு நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி முன்பாக:

மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகிய இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து அடிப்படையில் உத்தரவு பிறப்பித்ததால், வழக்கை  தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.

தலைமை நீதிபதியின் பரிந்துரைப்படி, மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் அவர்களின் விசாரணைக்கு வழக்கு பட்டியலிடப்பட்டது.

இந்து அமைப்புகள்  சார்பில் ஆஜரான இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், கார்த்திகேய வெங்கடாசலபதி ஆகியோர் வாதிட்டனர்.

நீதிமன்றத்தில் விளக்கம்:

திருப்பரங்குன்றம் கோயில் ஒரு குடைவரைக் கோவில். சிலைகளை மலை முழுவதிலிருந்தும் பிரிக்க முடியாது. முழு மலையும் புனித மலையாகக் கருதப்படுகிறது. இது ஒரு லிங்கமாக வணங்கப்படுகிறது. மலையைச் சுற்றி கிரிவலம் செல்வது பழங்காலத்திலிருந்து உள்ள நடைமுறை.

மதுரை மாவட்ட நீதிமன்றம், நெல்லித்தோப்பு மற்றும் தர்ஹா பகுதியைத் தவிர முழு மலையும் கோயிலுக்குச் சொந்தமானது என 1920இல் சிவில் வழக்கில் உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பில் விலங்குகள் பலியிடப்பட்டதற்கான குறிப்பு இல்லை. காசி விஸ்வநாதர் கோயிலும் மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் ஆகியவை ஆகம கோயில்கள். எப்போதும் அங்கு விலங்கு பலியிடப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. விலங்குகளை பலியிடும் நடைமுறை, 2024இல் மட்டுமே தொடங்கியது. அதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் ஹிந்து பக்தர்களால் எதிர்ப்பு எழுந்தது.

இவற்றை இந்து முன்னணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

கோயில் தரப்பில் வழக்கறிஞர் மனோகர் கூறியது:

மலைக்கு பாதிப்பு ஏற்படுத்த தர்ஹா நிர்வாகம் அல்லது முஸ்லிம்கள் முயற்சி மேற்கொண்ட போதெல்லாம் பொதுமக்களால் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன. கலெக்டர் மற்றும் போலீசாரிடம் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. ஜன. 30இல் நடந்த அமைதிக் குழு கூட்டத்திற்கு, கோயிலின் அறங்காவலர்கள் அல்லது செயல் அலுவலர் அழைக்கப்படவில்லை.

சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி முழு மலையும் கோயிலுக்குச் சொந்தமானது. அது ஒரு புனித மலையாகக் கருதப்பட்டு, இந்துக்களால் வழிபடப்படுகிறது. அதை ஒரு போதும் சிக்கந்தர் மலை என்று அழைக்கவோ அல்லது பெயரிடவோ முடியாது. இதற்கு ஆதாரமாக சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உள்ளன.

நெல்லித்தோப்பு பகுதியைப் பொருத்த வரை, அங்கு மசூதி அல்லது தர்ஹா இல்லை. சில கல்லறைகளைப் பாதுகாக்க ஒரு தற்காலிக தகரக்கொட்டகை மட்டுமே உள்ளது. அங்கு வழிபாடு நடந்தது என்பதற்கு எந்தப் பதிவுகளும் இல்லை. அங்கு விலங்கு பலியிட அனுமதித்தால், சிலர் ஆடுகள் அல்லது கோழிகளை பலியிடுவர். மலையின் புனிதம் பாதிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்த நிலையில் விவாதம் தொடர்ந்து நடந்தது.

இனிமையான இறுதித் தீர்ப்பு:

விசாரணை முடிவில் நீதியரசர் ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு:

“மலையில் சிக்கந்தர் தர்ஹா இருப்பதையும், மலையின் பெயர் திருப்பரங்குன்றம் மலை என்பதையும் ஆவணங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. திருப்பரங்குன்றம் மலையைப் பற்றி சிக்கந்தர் மலை என்று எந்தக் குறிப்பும் இல்லை.

ப்ரிவி கவுன்சில் தீர்ப்பின்படி 170 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், 33 சென்ட் நெல்லித்தோப்பு பகுதியும், சிறிது பகுதி தர்ஹாவும் தவிர, மீதமுள்ள முழு மலையும் கோயில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது என்பது தெளிவாகிறது.

பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்,  ‘கோயிலின் விக்ரகம் மலையின் ஒரு பகுதியாகவே கருதப்படுவதால் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவீதியைச் சுற்றி வருகின்றனர். இம்மலைக்குன்று இந்து சமூகத்தினரால் ஒரு லிங்கமாக வணங்கப்படுகிறது. இத்தனித்த வடிவத்திற்கு மதுரை தான் பிறப்பிடம் என்று நம்புவதற்கு சில காரணங்கள் உள்ளன’ என குறிப்பிட்டுள்ளது.

முழு மலைக்குன்றுமே சிவனாகக் கருதப்பட்டு, இந்து பக்தர்களால் கிரிவலம் நடத்தப்படுகிறது. இம்மலையை சிக்கந்தர் மலை என பெயரிட்டால், கிரிவலம் செய்யும் இந்து பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்.

வக்ப் வாரியம், அனைத்து மசூதிகள் /தர்ஹாக்களிலும் விலங்கு பலியிடும் சடங்கு நடைமுறையில் இல்லை என ஒப்புக்கொள்கிறது, சிக்கந்தர் தர்ஹாவில் விலங்கு பலியிடுவதற்கு கோயில் நிர்வாகத்தால் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

ஒரு தரப்பினர் பழங்காலத்திலிருந்தே ஒரு நடைமுறை இருப்பதாகக் கூறி, மறுபுறம் அதை மறுத்தால், அத்தகைய வழக்கமான நடைமுறையை வலியுறுத்தும் தரப்பினர் அதை நிறுவ சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையில் விலங்கு பலியிடும் வழக்கமான நடைமுறை குறித்து, சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நெல்லித்தோப்பு பகுதியில் எந்தவொரு விலங்கையும் பலியிட, சமையல் செய்ய, அசைவ உணவுகளை எடுத்துச் செல்ல அல்லது பரிமாற அனுமதிக்க முடியாது.

ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின்போது நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர். மேலும் அவர்கள் பாரம்பரிய படிக்கட்டுப் பாதையை அசுத்தப்படுத்தவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது. இந்து அமைப்பினரின் மனுக்களை அனுமதிக்கும் நீதிபதி எஸ்.ஸ்ரீமதியின் முடிவிற்கு உடன்படுகிறேன்”

-இவ்வாறு நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.

அக்டோபர் 10ஆம் தேதி திருப்பரங்குன்றம் குறித்த இறுதித் தீர்ப்பு வெளியான நாள், திருப்பரங்குன்றம் காக்கப் போராடிய  இந்துமுன்னணியின் இரண்டாவது மாநிலத் தலைவர் அமரர் அட்வகேட் ராஜகோபால் அவர்கள் இஸ்லாமிய யங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதே அக்டோபர் 10ஆம் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆன்மாவிற்கு கிடைத்த சிரத்தாஞ்சலியாக இந்த தீர்ப்பு அமைந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் இந்தத் தீர்ப்பு இந்துக்களுக்கு மன நிம்மதியை அளித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தைக் காக்க சட்டரீதியாகவும், வீதியில் இறங்கியும், சிறைபட்டும் போராடிய லட்சக் கணக்கான தமிழக இந்துக்கள் அனைவரின் ஒட்டுமொத்த வெற்றியாகவே இந்தத் தீர்ப்பு கொண்டாடப்படுகிறது;  ‘ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்’ என பறைசாற்றுகிறது.

$$$

11. மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவோம்!

திருப்பரங்குன்றம் மலை முருகர் கோயிலுக்குச் சொந்தமானது என  பல நூறு ஆண்டுகளாக  சட்டப்படியும்,  களத்திலும் பல்லாயிரக் கணக்கானோர் போராடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலும் தமிழகத்தில் உள்ள  ‘திராவிட’ ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரிய முறைப்படி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு இன்று வரை தயங்கி வருவது வேதனையான ஒன்று.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றச் செல்லும் நூற்றுக் கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்துக்களும் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் தமிழகத்தில் ஏற்படுத்திய இந்து எழுச்சி அரசியல் சக்தியாக அதிகாரத்தில் அமரும் நாளில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றுதான் தமிழகம் ஆன்மிக ஒளி பெறும். அந்த நாள் வெகு விரைவில் முருகன் அருளால் அமையும்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் நீதிமன்றத் தீர்ப்பின்படி தீபம் ஏற்ற இந்துக்கள் ஆர்த்தெழுவோம்!

தமிழக இந்துக்களின் வெற்றி வரலாற்றில் திருப்பரங்குன்றம் ஒரு மைல் கல் என்பதை உலகம் அறிய செய்து காட்டுவோம்!

வெற்றி வேல்! வீர வேல்!

(நிறைவு)

$$$

2 thoughts on “திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஈ)

Leave a comment