திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- இ)

-கா.குற்றாலநாதன்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-3…

7. முஸ்லிம் அமைப்புகளின்  சதி மீண்டும் ஆரம்பம்

திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கார்த்திகை தீபமேற்ற தொடர்ந்து மறுத்து வருவதால்   தைரியம் அடைந்த இஸ்லாமிய அமைப்புகள்,  திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடப் போவதாக மீண்டும் பிரச்சினையை தொடங்கினர்.

4.12.2024 அன்று  திருப்பரங்குன்றம் அருள்மிகு பழனியாண்டவர் கோயில் தெருவில்  ‘மலை மேல் உள்ள தர்ஹாவில் கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன’ என்ற வாசகம் பொருந்திய அறிவிப்புப் பலகை, தர்கா நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டது. மீண்டும் பிரச்சினையை உருவாக்கின இஸ்லாமிய அமைப்புகள்.

இது குறித்து சமூகவலைதளங்களில் இந்துக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்; கோயில் நிர்வாகத்தைக் கண்டித்தனர். அதன் காரணமாக திருக்கோயில் நிர்வாகம், திருப்பரங்குன்றம் காவல்துறையில் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் அந்த அறிவிப்புப் பலகை அப்புறப்படுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் 25.12.2024 அன்று காலை 09.00 மணியளவில் கந்தூரி (விலங்கு பலியிடுதல்) கொடுப்பதற்கு 5 நபர்கள் மலை ஏறச் சென்றபோது அங்கு பணியிலிருந்த காவலர்கள் தடுத்ததால், கந்தூரி கொடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்துக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால், காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

31.12.2024 அன்று, திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியரின் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், கடந்த ஆண்டுகளில் நடைமுறையிலுள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும், மலை மீது கந்தூரி கொடுக்கும் நடைமுறை தொடர்பாக, போதிய ஆதார ஆவணங்கள் தர்ஹா தரப்பினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், இது தொடர்பாக உரிய நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு தேடிக்கொள்ளவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்படுவதாக, திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் ஜமாத் நிர்வாகிகள் இணைந்து  5.1.2025இல் போராட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள்  450 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதனை மென்மையாகவே காவல்துறையும், தமிழக அரசும் கையாள்கின்றன. மேலும் இதில் சில அரசியல் கட்சிகளின் பின்புல ஆதரவும் வெளிப்பட்டது. இத்தகைய போக்கு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல் என்று இந்துமுன்னணி மாநிலத்  தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்  கண்டனம் தெரிவித்தார்.

இந்துமுன்னணி தலைவர் மீது வழக்கு:

தமிழக அரசின் மெத்தனப்போக்கால் இந்துக்களிடையே தன்னெழுச்சி ஏற்பட்டது. எனவே திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைப் பாதுகாக்க இந்துக்களின் கருத்தைக் கேட்கும் ஆலோசனைக் கூட்டம் 18.01.2025 அன்று திருப்பரங்குன்றம் எஸ்.பி. மஹாலில் இந்து முன்னணி  மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது; அதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அங்கிருந்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிவன் கோயிலில் சென்று வழிபாடு நடத்தினர்.

கோயிலில் சாமி கும்பிட அனுமதி பெறாமல் சென்றதாக, அவர்களுக்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2025 ஜனவரி 20 ஆம் தேதி ஆளும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளரும் மணப்பாறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் சமது தனது கட்சியினருடன் வந்து, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவைப் பார்வையிடுவதாக தர்காவுக்குச் சென்றார்.

பின்னர், ‘பல காலமாக இந்த தர்ஹா இந்துக்களும் இஸ்லாமியர்களும் வழிபடக்கூடிய இடமாக இருந்து வருகிறது. நேர்த்திக் கடனாக ஆடு, கோழி பலியிட்டு சமைத்து அனைவருக்கும் வழங்கும் நடைமுறை இங்கு இருந்து வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் இதை சர்ச்சையாக்குகிறார்கள்’ என்று பேசி, பிரச்சினையை மேலும் பெரிதாக்கினார்.

மலையின் புனிதத்தைக் கெடுத்த எம்.பி.:

காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும், தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் சார்ந்தவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி தனது அமைப்பினருடன் 22.1.2025 அன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு நடத்தச் சென்றார்.  

‘கந்தூரி கொடுக்கத் தானே தடை, அங்கு அசைவம் சாப்பிட தடை இல்லையே’ என்றுகாவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, மிரட்டல் தொனியில் பேசினார். காவல் துறை, அரசு அதிகாரிகள் வாய் மூடி நின்றனர். அவருடன் சென்றவர்கள் புனிதமான மலையின் உச்சியில், தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவை சாப்பிட்டனர். தவிர, அதனைப் புகைப்படங்கள் எடுத்து நவாஸ் கனி தனது முகநூலில் வெளியிட்டார்.

மேலும், நவாஸ் கனி எம்.பி.  “இந்த சிக்கந்தர் மலையே வக்ஃப் வாரிய சொத்து, அதாவது மலை முழுவதும் முஸ்லிம்களின் சொத்து” என்று கூறியது சமூக ஊடகங்களில் வெளியானது. அது இந்துக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால், திருப்பரங்குன்றம் திருக்கோயிலை நிர்வகித்து வரும் தமிழக அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ, தமிழக முதல்வரோ, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரோ, இதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்காமல் வாய் மூடி, மௌனமாக இருந்தனர்.

இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டது, ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மணப்பாறை எம்.எல்.ஏ. ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி. ஆனால், ஆளும் தி.மு.க. மட்டுமல்ல, எந்தக் கட்சியும் (பா.ஜ.க. தவிர) முணுமுணுக்கவும் கூட இல்லை என்றால், இந்துக்களின் நிலைமை எத்தனை பரிதாபகரமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இத்தகைய சதிச் செயலைக் கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணிம் கண்டன அறப்போராட்டத்தை அறிவித்தார்.

தி.மு.க.வின் தகிடுதத்தம்:

உடனடியாக இந்துக்களின் கொந்தளிப்பை திசைதிருப்ப, மதுரை மாவட்ட ஆட்சியரிடம்  27.01.2025 அன்று திருப்பரங்குன்றம் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் என்ற பெயரில்,  தி.மு.க. ஆதரவுக் கட்சிகள் சார்பில்  ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில்  ‘தங்களது கிராமத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளி நபர்கள் யாரும் தங்களது ஊரில் நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகள் குறித்து தலையீடு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும்’ கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் 30.01.2025 அன்று, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க. சி.பி.ஐ, சி.பி.எம் , திரிணமுல் காங்கிரஸ், மக்கள் நீதி மையம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வி.சி.க. கட்சியின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.), இந்துமுன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இந்தக் கூட்டத்தில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர்.

மேற்படி அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில்,  “திருப்பரங்குன்றம் நகரைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை (தனிப்பட்ட முறையில் கந்தூரி கொடுப்பதை) தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என அனைவருக்கும்  தெரிவித்துக் கொள்கிறோம்” என எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.

இது, கந்தூரி விழா நடத்துவற்கு, மலை உச்சியில் பலியிடுவதற்கு துணை போவது போல இருப்பதாகக் கூறி அ.தி.மு.க பிரதிநிதி மட்டும் கையொப்பமிட மறுப்புத் தெரிவித்தார்.

$$$

8. குன்றம் காப்போம், கோயிலைக் காப்போம்!

திருப்பரங்குன்றம் மலை மீது எம்.பி. நவாஸ்கனி  தலைமையில் சென்ற முஸ்லிம்கள் தரப்பு அசைவ உணவு சாப்பிட்டதைக் கண்டித்து  பிப்ரவரி 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணி  ‘குன்றம் காப்போம், கோயிலைக் காப்போம்’ எனும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.

சரித்திரம் காணாத அடக்குமுறை:

 ‘திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என திருப்பரங்குன்றத்தில் அணி திரள்வோம்’ என இந்து முன்னணி அறைகூவல் விடுத்தது.

இஸ்லாமிய அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்டு புனிதத்தைக் கெடுத்த நிலையில், தமிழக அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்ததால், இந்து முன்னணியின் போராட்ட அழைப்பு இந்துக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

கிராமங்களில்கூட இந்து முன்னணியின் அறப்போராட்டம் குறித்து சாதாரண பாமர மக்களும் கூட ஆதரவாக பேசத் தொடங்கினர்.

பல லட்சம் மக்கள் இந்துக்கள் திருப்பரங்குன்றத்தில் அணி திரள்வார்கள் என்ற சூழ்நிலை உருவான நிலையில், இந்துமுன்னணியின் போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்து தடை விதித்தது. அறப்போராட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி, பா.ஜ.க. அமைப்புகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை பலர் வீட்டுச் சிறையில்  வைக்கப்பட்டனர்.

வாகன அனுமதி ரத்து  –  பக்தர்கள் கைது:

திருப்பரங்குன்றம் செல்வதற்காக புக்கிங் செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதியை அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வருவோர் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியது.

இருந்த போதும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ரயில் மூலமும்,  பேருந்துகளிலும், பாதயாத்திரையாகவும், தங்களது சொந்த வாகனங்களிலும் திருப்பரங்குன்றம் நோக்கி தன்னெழுச்சியாக அணி திரளத் தொடங்கினர்.

திருப்பரங்குன்றம் பகுதிக்குள் பக்தர்கள் நுழைய விடாமல் காவல்துறை ரயில்நிலையம், பேருந்து நிலையம் என மதுரை நகரின் எல்லையில் பல இடங்களில் சோதனை செய்து காவி உடை அணிந்தவர்களை எல்லாம் எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்து போலீஸ் காவலில் வைத்தனர்.

சில மணித்துளிகளில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்கள்:

இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் 4.2.2025 தேதி காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. மதியம் வரை வழக்கு விசாரணை நீடித்தது. இதனிடையே ஆங்காங்கே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கைது செய்யப்பட்டனர்; தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இத்தனை ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரத்தை திமுக ஏவி அடக்குமுறையைக் கையாண்டது. திருப்பரங்குன்றத்தில் சுமார் 3,500 தடுப்பு வேலிகள் (பேரிகாட்) அமைத்திருந்தனர்.

இந்நிலையில்  “மாலை 5 மணி முதல் 6 மணி வரை, மதுரை  – பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி” என மாலை சுமார் 4.00 மணிக்கு தீர்ப்பு வழங்கியது மதுரை உயர்நீதிமன்றம்.

திருப்பரங்குன்றத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை –  பழங்காநத்தம் பகுதியில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

நீதிமன்ற உத்தரவு வெளியான ஒரு மணி நேரத்திற்குள், மதுரை –  பழங்காநத்தம் பகுதியில் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் ஒன்றுகூடி  “திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம்” என ஆர்ப்பாட்டம் நடத்தியது பலரை வியப்பிலும், இந்து விரோதிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. அதிலும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இத்தனை அடக்குமுறைகள் இருந்தும் உயர்நீதிமன்ற உத்தரவு வெளியான சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் எப்படி திரண்டார்கள்?

144 தடை உத்தரவு, பல அடுக்குப் பாதுகாப்பை எல்லாம் மீறி பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் திருப்பரங்குன்றத்திற்குள் எப்போது, எப்படி நுழைந்தார்கள் என்பதெல்லாம், தமிழக காவல்துறைக்கும்  தமிழக அரசுக்கும்  புரியாத புதிராகவே இருந்தது.

திருப்பரங்குன்றம் முருகனின் மலையைக் காக்க தன்னெழுச்சியாக கட்டுக்கோப்பாகக் கூடிய பக்தர்களின் ஆர்த்தெழுந்த போராட்டம், இந்து விரோத சக்திகளுக்கு எச்சரிகை மணியாக ஒலித்தது.

$$$

9. முருக பக்தர்கள் மாநாடு

திருப்பரங்குன்றத்தில்  பிப்ரவரி 4ஆம் தேதி தடைகளைத் தகர்த்து நடைபெற்ற போராட்டம், அகில இந்திய அளவில் மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.

தமிழகத்தில் உள்ள இந்துக்களின் எழுச்சியை விஸ்வரூபமாகக் காட்ட வேண்டிய தருணத்தை அது உணர்த்தியது. அதனை மனதில் கொண்டு, இந்துமுன்னணி ஜூன் 22ஆம் தேதி மதுரையில் ‘முருக பக்தர்கள் மாநாடுநடத்த அழைப்பு விடுத்தது.

திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் எண்ணம் தமிழக இந்துக்கள் மத்தியில் கனலாய்  உழன்று கொண்டிருந்த நிலையில்,  ‘முருக பக்தர்கள் மாநாடு’ அறிவிப்பு தமிழக இந்துக்களை மேலும் உற்சாகப்படுத்தியது. வழக்கம் போல தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

“உண்மையான முருக பக்தர்கள் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்குச் செல்ல மாட்டார்கள்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

 “முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களின் மாநாடு அல்ல; பாஜக அரசியல் மாநாடு” என்றெல்லாம் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக அதிகமாக, மாநாடு பற்றிய செய்தி தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசப்பட ஆரம்பித்தது.

மாநாட்டிற்கு அனுமதி மறுத்து காவல்துறை தடை விதித்தது, இந்துக்களிடையே கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்பட இருந்த அறுபடை வீடு அருங்காட்சிகளுக்கு அரசு அனுமதி மறுத்தது.

ஆனால் இந்துமுன்னணி இயக்கம் மீண்டும் நீதிமன்றம் சென்று, தடைகளை உடைத்து, உயர் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று, அறுபடை வீடு கண்காட்சி தொடங்கியது.

அறுபடை வேல்கள்:

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி ஆகிய அறுபடைவீடுகளிலிருந்தும் இந்துமுன்னணி நிர்வாகிகளால்  வேல் வைத்து பூஜை  செய்யப்பட்ட வேல்கள், மாநாட்டுத் திடலில்  அமைக்கப்பட்டிருந்த  ‘அறுபடைவீடு’ அருங்காட்சியகத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.

அதிர வைத்த அறுபடைவீடு அருட்காட்சி:

மாநாடு தொடங்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னரே அறுபடைவீடு கண்காட்சி தொடங்கியது. மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமன்றி தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் மாநாட்டிற்கு முன்னதாகவே அறுபடை வீடு அருட்காட்சியை தரிசிக்க குவியத் தொடங்கினர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்ற நிலை உருவாகிய நிலையில், தமிழக தி.மு.க. அரசு மாநாட்டிற்கு தடை விதித்தது. அந்தத் தடையும் நீதிமன்றம் மூலமாக, சட்டப்படி தகர்த்தெறியப்பட்டது.

மாநாட்டிற்கான வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து, மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்கள் எங்கிருந்து கிளம்பும்? யார் தலைமையில் கிளம்பும்? மாநாட்டிற்குச் செல்வோர் பெயர் பட்டியல், ஆதார் எண் போன்ற விவரங்களை எல்லாம் சேகரித்து மாநாட்டிற்குச் செல்லும் பக்தர்களை மறைமுகமாக மிரட்டும் வகையில் தடுத்து நிறுத்த தமிழக காவல்துறை முயற்சித்தது.

அந்த மறைமுக சதிகளும் கடைசி நிமிடத்தில், மாநாட்டிற்கு முந்தைய நாள் நீதிமன்றத்தால் சட்டப்படி தகர்த்தெறியப்பட்டது.

பல்வேறு தடைகளைக் கடந்து மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்க, எழுச்சியோடும் கட்டுப்பாடோடும் கண்ணியத்தோடும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார்.

பல லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக அமர்ந்து `கந்த சஷ்டி கவசம்’ பாடியபடி, மாநாடு நிறைவு பெற்றது.

பல லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்த நிலையிலும், மாநாட்டுத் திடலுக்குள் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. ஆனாலும் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் எந்த சிறு சலசலப்பும்  இன்றி நடைபெற்றது. இதனை தொலைக்காட்சியில், சமூக ஊடகங்களில் பார்த்த பல கோடி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

மாநாடு நிறைவு பெற்று கலைந்து செல்லும்போதும்கூட மாநாட்டில் பங்கேற்றோர் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை வரிசையாக அடுக்கி வைத்து, மாநாட்டுத் திடலில் இருந்த குப்பைகளையும் சுத்தம் செய்து, அங்கிருந்து கலைந்து சென்றது, முருக பக்தர்களின் சமூகப் பொறுப்புணர்வுக்கு முன்னுதாரணமாக விளங்கியது.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக இந்துக்களின் எழுச்சி உலகத்திற்கு பறை சாற்றியதோடு, தமிழகத்தில் ஒருங்கிணைந்த இந்து  சக்தி உருவாகி வருவதை  ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக் கூறியது.

அனுமனின் சக்தியை ஜாம்பவான் உணர்த்தியதுபோல, இந்துக்களின் ஒற்றுமை வலிமையை உலகிற்கு மதுரை முருக பக்தர்கள் மாநாடு உணர்த்தி நம்பிக்கை அளித்தது.

(தொடர்கிறது)


$$$

3 thoughts on “திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- இ)

Leave a comment