திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி-அ)

-கா.குற்றாலநாதன்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-1…

முன்னுரை

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலை, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது.

இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சத்யம். ஆனால், இப்பொழுதெல்லாம் பல உண்மைகளை, நம்பிக்கைகளை நீதிமன்றத்தில் தான் நிருபிக்க வேண்டிய அவலமான நிலைமை தமிழகத்தில் உள்ளது.

இந்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தான், பல ஆயிரம் கோயில்கள், நிலங்களை நாம் இழந்துள்ளோம். மட்டுமல்ல. இழந்து வருகிறோம்

தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இந்துக்களின் புனிதமான வழிபாட்டுத் தலங்கள் மலைகள் வேற்று மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்டு, இந்து தெய்வ நம்பிக்கை உள்ள மலைகள்கூட இங்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிருங்கி மலை, பிருங்கி முனிவர் ஈஸ்வரனை ஸ்தாபிதம் செய்து, தவம் செய்து ஈஸ்வரன் அருள் பெற்ற கோவில். அந்த குன்றின் மீது பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது.  பிரிட்டிஷ்காரன் காலத்தில் பரங்கி மலை என ஆனது. அங்கு சர்ச் கட்டப்பட்டு, அங்கு செயின்ட் தாமஸ் என்ற மிலேச்சன் அங்கு சமாதி ஆனதாக ஒரு கட்டுக்கதையைக் காரணம் காட்டி கருணாநிதி தலைமையிலான திமுகவின் ஆட்சியில் `புனித தோமையர் மலை’ என்று மாற்றம் செய்யப்பட்டது. இது எத்தகைய ஆபத்து!

இத்தகை பெயர் மாற்றத்தால் வரலாறு திரிக்கப்படுகிறது. புனிதம் கெடுகிறது. தமிழனின் அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. இதுபோல நூற்றுக் கணக்கான உதாரணங்கள் உள்ளன. அந்த வகையில் திருப்பரங்குன்றம் மலையும் அந்த அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது என்பது உண்மை!

எப்படியெல்லாம் இதை அபகரிக்க முயன்றார்கள், பலநூறாண்டுகளாக இந்துக்கள் எப்படியெல்லாம் அதை எழுச்சியோடு தகர்த்து எறிந்து வருகிறார்கள் என்ற வரலாறு ஒவ்வொரு இந்துவும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

அந்த வகையில் திருப்பரங்குன்றம் விஷயமாக உள்ள பல வரலாற்று ஆதாரங்கள் மற்றும் நீண்ட நெடிய போராட்ட விவரங்களின் சுருக்கம் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

$$$

1. திருப்பரங்குன்றம்: பெயர்க் காரணம்

இக்குன்றமானது, சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால், சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதால்,  ‘திரு + பரம் + குன்றம்’ எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம்பொருளான சிவபெருமான், குன்றம் என்றால் குன்று (சிறுமலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்துத் `திருப்பரங்குன்றம்’என ஆயிற்று.

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு `ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார்.  முருகப் பெருமானும் அவ்வுபதேசத்தை தந்தை ஈசனிடம் கேட்டறிந்தார்.

பிரணவ மந்திரத்தின் பொருளை பிரம்மனுக்கு முருகன் உரைத்த பின் சிவபெருமான் முருகனிடம் பிரவணத்தை எப்படி கற்றுக்கொண்டாய் எனக் கேட்டபோது, தாயாருக்கு உபதேசித்த போது கேட்டதாக முருகப் பெருமான் கூறினார்.

புனிதமான மந்திரப் பொருளைக் குருவின் மூலமாகவே அறிந்துகொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அந்த பாவத்தை நிவர்த்தி செய்ய முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்கு காட்சி தந்து அருளினார்கள். திருப்பரங்குன்றத்தில் பார்வதி பரமேஸ்வரன், முருகனுக்கு காட்சியளித்து அருளியதற்கு சாட்சியாக  மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும்  மலை மீது இருக்கிறது.

$$$

2. தமிழ் இலக்கியங்களில் பதிவுகள்

நூலாசிரியர் கா.குற்றாலநாதன்

சங்க இலக்கியத்திலேயே திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனித வழிபாட்டுத் தலம் என்பதற்கான பல்வேறு பாடல்கள் உள்ளன.

சங்க இலக்கிய காலம் என்பது கிமு 500 முதல் கிபி 100 வரையிலான காலமாகும். சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும் மிகவும் தொன்மையான தமிழக வரலாற்று சான்றாக இவ்விலக்கியங்கள் கருதப்படுகின்றன.

திருமுருகாற்றுப்படை:

`பத்துப்பாட்டு’ என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைக்கப்படுவது திருமுருகாற்றுப்படை நூலாகும்.  இந்நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார்.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆறு தலங்களை பற்றிச் சிறப்பாகச் சொன்னாலும், முதலில் அவர் திருப்பரங்குன்றத்தையே பாடினார்.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவதாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதி திருப்பரங்குன்றம் ஆகும். அத்தனை சிறப்பு வாய்ந்தது இத்திருத்தலம்.

பரிபாடல்:

பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது மிகவும் பழமையான நூல். திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வைகை நதிக்கு 8 பாடல்கள் என 22 பாடல்கள் இதில் உள்ளன.

இதில் முருகனுக்குரிய  8 பாடல்களில், 7 பாடல்கள் குன்றத்துக் குமரனையே கொண்டாடுகின்றன. ஒரு பாடலின் வரிகள்…

ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.

இதன் பொருள் :

 “பன்னிரு ஆதித்யர்களும், மருத்துவர் இருவரும், அஷ்ட வசுக்களும், பதினோரு ருத்ரர்களும், அஷ்டதிக்குப் பாலர்களும், பிற தேவர்களும், அஸுரர்களும், வேதத்தில் சிறந்த முனிவர்களும், உன்னைத் தரிசிக்கும் பொருட்டு, இம்மண்ணுலகில் உனக்கேற்ற இடமாக இருக்கிறது உன் திருப்பரங்குன்றம்.  அதனால் அது இமயமலைக்கு ஈடாயிற்று” என இமயமலைக்கு ஈடாக திருப்பரங்குன்றத்தை போற்றுகிறது பரிபாடல் இலக்கியம்.

பன்னிரு திருமுறைகள்:

சங்க கால இலக்கியத்தைத் தொடர்ந்து ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில் இயற்றப்பட்ட தேவாரப் பதிகங்களிலும் திருப்பரங்குன்றத்தின்  சிறப்புகள் விளக்கப்பட்டு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.

திருஞானசம்பந்தர்:

திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரப் பாடலில், முதலாவது திருமுறையில் 100வது பதிகம் திருப்பரங்குன்றம் திருத்தலம் பற்றியதாகும். திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் பொது ஆண்டு (கிபி) 660 ஆகும்.  அதாவது சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும்.

ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்   
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே

-என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

சுந்தரர்:

எழாம் திருமுறையில் திருப்பரங்குன்றத்தை சுந்தரர் பாடியுள்ளார்:

படியா இவைகற் றுவல்ல அடியார்
பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஓர்கோவும் ஆகிக்
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.

-எனப் போற்றுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

பெரிய புராணத்தில் சேக்கிழார்:

பெரியபுராண இலக்கியத்தில் “பரமர்திருப் பரங்குன்றில் சென்று பார்த் திபரோடு புரமெரித்தார் கோவில்வலம் கொண்டுபுகுந் துள்ளி’‘ என திருப்பரங்குன்ற இறைவர் சிறப்பை  சேக்கிழார் பாடுகிறார்.

திருப்புகழ் பாடல்:

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் நூலில் திருப்பரங்குன்றம் போற்றப்படுகிறது.

திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளிந்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவணபெருமாளே

-என பரங்குன்றைப் பாடுகிறார்.

$$$

3. திருப்பரங்குன்றத்தைக் குறிக்கும் தமிழ் இலக்கிய நூல்கள்

1.  திருமுருகாற்றுப்படை  –  நக்கீரர் – 1800 ஆண்டுகளுக்கு  முந்தையது

2.  பரிபாடல் – சங்கப் புலவர்கள்  – 1700 ஆண்டுகளுக்கு  முந்தையது

3.  அகநானூறு –  சங்கப்புலவர் – 2100 ஆண்டுகளுக்கு   முந்தையது

4.  மதுரைக்காஞ்சி –   மாங்குடி மருதனார் – பொ.ஆ 170ம் ஆண்டு

5.  கலித்தொகை – சங்கப் புலவர் கள் –   பொ.ஆ 300ம் ஆண்டு

6.  தேவாரம்  – திருஞானசம்பந்தர் , சுந்தரர்,  திருநாவுக்கரசர் –   பொ.ஆ 700ம் ஆண்டு

7.  திருக்கோவையார்  –   மாணிக்கவாசகர் –   பொ.ஆ 700ம் ஆண்டு

8. பெரிய புராணம்  –  சேக்கிழார்   –  பொ.ஆ 1200ம்   ஆண்டு

9.  கல்லாடம்   – கல்லாடர் –   பொ.ஆ 100ம் ஆண்டு

10.  திருப்புகழ் –    அருணகிரிநாதர் –   பொ.ஆ 1420ம்    ஆண்டு

11. திருவகுப்பு –  அருணகிரிநாதர் –  பொ.ஆ 1420ம்  ஆண்டு

12. கந்த புராணம்  –  கச்சியப்ப சிவாச்சாரியார் – பொ.ஆ 1350ம்  ஆண்டு

13. கந்தபுராண சுருக்கம் –   சம்பந்த சரஒலயர் –   பொ.ஆ 1650ம்  ஆண்டு

14. திருவிளையாடல் புராணம்   – பரஞ்சோதி  முனிவர் –  பொ.ஆ 1575ம்  ஆண்டு

15. திருப்பரங்கிரி புராணம் –  நிரம்பஅழகியதேசிகர் – பொ.ஆ 1830ம்   ஆண்டு

16. சத்தியகிரி  மகாத்மியம் – கிரந்த மூலம்  – பொ.ஆ 750ம் ஆண்டு

17. பரங்கிரி பிள்ளைத்தமிழ்-  மு.ரா.அருணாசலகவிராயர்  – பொ.ஆ 1875ம் ஆண்டு 

18. பரங்கிரி பாமாலை – குமரகுருபர சுவாமிகள்  – பொ.ஆ 1672ம்                                 ஆண்டு.

19. பரங்கிரி கலித்துறை அந்தாதி-  குமரகுருபர சுவாமிகள்  – பொ.ஆ 1672ம் ஆண்டு

20. பரங்கிரி  பதிற்றுப் பத்தந்தாதி  – குமரகுருபர சுவாமிகள்  – பொ.ஆ 1672ம் ஆண்டு                      

21. பரங்கிரி வெண்பா அந்தாதி  –   மு.ரா.அருணாசலகவிராயர் –   பொ.ஆ 1800 ம் ஆண்டு                        

22. பரங்கிரி அலங்காரம் – அருணகிரிநாதர்  – பொ.ஆ 1420ம்   ஆண்டு

23. பரங்கிரி  மும்மணிக்கோவை  – மு.ரா.அருணாசல கவிராயர்- பொ.ஆ 1800 ம்  ஆண்டு 

24. பரங்கிரி அனுபூதி – அருணகிரிநாதர் –  பொ.ஆ 1420ம்  ஆண்டு

25. பரங்கிரி கோவை – மு.ரா.அருணாசல கவிராயர்  -பொ.ஆ 1800 ம் ஆண்டு

26.  குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் – பாம்பன் சுவாமிகள்  –  பொ.ஆ   1830 ம்  ஆண்டு.                      

27. முருகன் அருள்வேட்டல் – திரு.வி.க. –    பொ.ஆ   1932 ம் ஆண்டு

28. முருகன் வரப்பிரசாத மாலை – வீரவேல்

29.  சிவாசட்சார தீபம்

30.  திருவருள் விலாசம்

31.  தேவார சந்த பாமாலை

32. திருப்பரங்கிரி மும்மணிகோவை – பாலகவி வே. ராமநாதன் செட்டியார்

– என திருப்பரங்குன்றம் திருத்தலத்தைப் பற்றி பிரபலமான தமிழறிஞர்கள் இயற்றிய சுமார் 32 இலக்கிய நூல்களில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரையிலான நூலாகும்.

(தொடர்கிறது)

$$$