-கருவாபுரிச் சிறுவன்
இரு சான்றோர் பெருமக்களின் குருபூஜை நன்னாள் விழா குறித்த பதிவு இது...

தூமதி யாதவ மண்டலத் தூடுர சுந்துவச மாமதி(ல்)ஆலயஞ் சூழந்தேத்தி வாழ்த்தி வணங்குனார்க்கு தாமதி யாது மனோபீட்டமாம் வரம் தந்தருளும் கோமதி சங்கர நாராயணன் பதம் கோருதுமே.
மருத்துவத்தில் மகத்தான சாதனை புரிந்து வரும் தயாபரியானவள் சங்கர கோமதி. இவள் பேராற்றலுக்கும், பெருங்கருணைக்கும் சொந்தக்காரி. தன் சன்னிதியை நாடி வரும் பக்தர்களுக்கு தாமதியாமல் அருள் செய்யும் சீலம் நிறைந்தவள் இந்த சீராசைக்காரி என போற்றிப் பணிக்கிறார் மதுரையைச் சேர்ந்த எம். எஸ். பிச்சுவையர் அவர்கள்.
எந்தை தந்தை, தந்தை தந்தை, தம் மூத்தப்பன் என்று பரம்பரை பரம்பரையாக நற்குணங்கள் மிக்கவாக விளங்கி தெய்வீகத்திருப்பணிகள், தரும காரியங்கள் யாவற்றிலும் அச்சு அசலாக அப்படியே செயல்பட்டால் அவர்களைக் கண்டவர்கள், அவர்களால் பயனடைந்தவர்கள் ‘நூலைப்போல சேலை, தாயைப்போல பிள்ளை’ என சொல்வதுண்டு. அதைப்போல நாள்தோறும் கோமதியம்பிகை கடைக்கண் பார்வையால் பக்தர்களுக்கு வழங்கும் திருவருள் திறத்தைப் போலவே , சங்கரன் கோவில் மேலரத வீதியில் எழுந்தருளி இருக்கும் திருவாவடுதுறை 10 வது பட்டம் வேலப்ப தேசிகர், கரிவலம் வந்த நல்லூருக்கு மேற்கே பனையூர் தலத்தில் கோயில் கொண்டுள்ள சற்குரு சங்கர நாராயண சுவாமிகள், தெட்சணாமூர்த்தி சுவாமிகளுக்கு தன்னைப்போலவே பக்தர்களுக்கு அருள் வழங்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறாள்.
தன்திருவுள்ளத்தால் இவ்விருவரையும் நல்லதொரு நாளில் ஜீவ சமாதி கொள்ளச் செய்தாள். இன்றும் பக்தர்களுக்கு நல்வழி காட்டுவதில் கோமதியம்பிகையின் அடிச்சுவட்டில் இச்சன்னிதி சாந்நித்தியம் நிறைந்ததாக திகழ்கிறது.
இவர்களில் பனையூர் ஆண்டவர்களின் குருபூஜை தினத்தைப் பற்றி கோடிட்டுக் காட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
பார் போற்றும் பனையூர்:
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கரிவலம் வந்த நல்லூர் அருகே உள்ளது பனையூர் என்னும் திருத்தலம். இது ஒரு ஞானபூமி. நிட்சேப நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலம், பனையூர், தென்பனையூர், தாழைநகர், செல்லி நகர் என பல பெயர்களை தன்னகத்தே கொண்டது.
இத்தலத்தில் அதிவீரராம பாண்டியர் உருவாக்கிய மீனாட்சி சொக்கநாதர் சிவாலயம், பெருமாள் கோயில்கள், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், செல்லியம்மன் என்னும் வனதேவதை கோயில், பனையூர் ஆண்டவர்கள் என்று பக்தர்களால் அழைக்கப்பெறும் சற்குருநாதர்களாகிய சங்கரநாராயணர், தெட்சணாமூர்த்தி ஆகியோர் ஜீவசமாதி கொண்ட உயிரோட்டமுடைய தெய்வீக ஆலயம் ஆகியவை உள்ளன. மேலும் கிராமத்திற்கே உரிய ஏனைய சிறு தெய்வங்களுக்கும் உண்டு.
சொக்கன் என்றொருக்கால் ஓதின் துயர் கெடும் பகை மாளும். சொக்கன் என்றொருக்கால் ஓதின் தொலைவிலாச் செல்வம் உண்டாகும். சொக்கன் என்றொருக்கால் ஓதின் சுருதி சொல் யாண்டும் செல்லும். சொக்கன் என்றொருக்கால் ஓதின் சொர்க்கமும் எளிதாம் அன்றே!
திருவாலவாய் எழுந்தருளி இருக்கும் பரம்பொருளை சொக்கர், சொக்கேசன், சொக்கநாதர் என்றும் அழைப்பர். இன்னும் பல்வேறு திருநாமங்கள் உண்டு.
பாண்டிய மன்னர்களின் இஷ்ட குலதெய்வமாக விளங்கிய சொக்கநாதருக்கு தன் பகுதியில் அரசாண்ட மன்னர்கள் அதே திருநாமத்தில் கோயில் எழுப்பினார்கள். அதைப்போலவே தென்பனையூரிலும் மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கோயில் எழுப்பப்பட்டன.
இங்கு மிகப்பெரிய அக்ரஹாரம் ஒன்றும் இருந்துள்ளது. திராவிடக் கட்சிகளின் நாத்திக கொள்கை அழிச்சாட்டியத்தினால் பல அக்ரஹாரங்கள் காணாமல் போயின.
திருமறைக்காடு பரஞ்ஜோதி முனிவருக்கு முன்பே திருவிளையாடல் புராணத்தை இயற்றியவர் செல்லி நகர் பெரும்பற்றப்புலியூர் நம்பிகள்.
இவரும் இவருடைய முன்னோர்களும் தென்பனையூராகிய இத்தலத்தின் பூர்விகக் குடிகள் என்றும், பின்னாளில் வேம்பற்றூர் நகரம் சென்று இருக்கலாம் என கருதுகோள் நிறுவுகிறார் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்.
தெய்வீகத்திலும், இலக்கியத்திலும் சிறப்புப் பெற்ற இத்தலத்தில், ஒரு சுபயோக சுப தினத்தில் 1835 இல் கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி, புனர்பூச நட்சத்திர தினத்தில் சற்குரு சங்கரநாராயண சுவாமிகளும், அவரது திருமகனாராகிய தெட்சணாமூர்த்தி சுவாமிகள் 1890இல் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி (நள்ளிரவு)அனுஷம் நட்சத்திர தினத்திலும், ஆன்மாக்கள் யாவரும் உய்வு பெரும் பொருட்டு , உலக மக்கள் யாவரும் நலம் பெறும் பொருட்டு ஜீவ சமாதி கொண்டு அருளினார்கள். அன்றிலிருந்து ஒவ்வொரு கார்த்திகை மாதம் 24, 28 ஆம் நாளில் குருபூஜை வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சுவாமிகள் செய்த அற்புதங்களில் சில…
1. ஒவ்வொரு பௌர்ணமி தோறும் செல்லியம்மனுடன் ஆனந்தமாக அளவளாவி மகிழுதல்.
2. தன்பக்தன் ஒருவனுக்கு காசி மாநகரம் செல்ல வழிகாட்டுதல். தன் நண்பர் இருக்கும் இடத்தைச் சொல்லி அவரின் நலம் விசாரித்து வரச் சொல்லுதல்.
3. தன் சீடரை உயிர் பெறச் செய்தல்.
4. செண்பகாபுரத்தில் வாழ்ந்த ஆண்டித் தேவராகிய தன் பக்தனுக்காக தனக்கு வந்த காய்ச்சலை பலகையில் இருத்தி அளவளாவி மகிழுதல்.
5. சாதி பேதம் பாராமல் அன்பினை அனைவருக்கும் போதித்தல்; எடுத்துக்காட்டாகவும் திகழுதல்.
6. இப்பகுதி ஜமீன்தார் மனைவியின் வயிற்றுவலியை நீக்கி நலம் பெறச் செய்தல்.
7. தன்சீடர்களை சிவகங்கை, ராமநாதபுரம் சீமைக்கு அனுப்பி சத்திய தர்மங்களை நிலைக்கச் செய்தல்.
8. தன்னுடைய ஜீவசமாதிக்கு திருப்பணி செய்ய வந்த கொடிவழி சீடர்களில் ஒருவரான குன்றக்குடி மேலமடம் கணபதி சுவாமிகளிடம் அசரீரியாக கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோயில் திருப்பணியை முற்றுப்பெறச் செய்ய ஆசி வழங்குதல்.
9. ஆண்டுதோறும் சித்திரை 20 ஆம் நாள் நடைபெறும் மகா குருபூஜை தினத்தை சிரத்தையுடன் கொண்டாடி அனைவருக்கும் குருவருளை பெற வழி வகுத்தல்.
10. சிதம்பர சக்கரம் பொருந்திய தகடினை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு காப்பாக வழங்குதல்.
11. பக்தர்களின் மனம், உடற்பிணி யாவற்றையும் போக்கி, அவர்களுக்கு வேண்டிய திருமணம், குழந்தை, தொழில், வசதி வாய்ப்புகளை அருளிச் செய்தல்.
12. மதுரை வரகவியான மு.கணபதியாபிள்ளை மூலம் இத்தலத்திற்குரிய தெய்வீக இலக்கியங்களை இயற்ற திருவருள் கொள்ளச் செய்தல்.
நிறைவாக, ராமகிரிநாதர் என்னும் அகத்தியர், பனையூர் ஆண்டவர்களாகிய சங்கரநாராயண சுவாமிகள், தெட்சணாமூர்த்தி சுவாமிகளின் துதியை மனதார படி அவர்கள் கோயில் கொண்ட திசை நோக்கி வந்தனங்களை உரித்தாக்குவோமாக.
ஸ்ரீ ராமகிரி நாதர்
சகத்தினையோர் திரணமெனத் தான்மதித்துத்
தவங்காக்கும் தலையாயாரு
மகத்துவத்தை வியந்தேற்று மலர் வனஞ்சூழ்
பனையூரில் வளரும் எங்கோன்
சுகத்திரையாஞ் சங்கர நாராயணர்க்கன்
றருள் சுறந்த துரியாதீத
வகத்தியராம் ராமகிரி யப்பனடி
வீனைதீர வகத்துள் வைப்பம்!
-வரகவி மு.கணபதியா பிள்ளை
சீர்பூத்த ராமகிரி தேவே! எங்கள்
தேசிகனாம் சங்கரநாராயணர்க்கு
பேர்பூத்த குருமணியாய் வந்த ஞானப்
பெருங்கடலே! கற்பகமே! பெருமைசேரும்
கார்பூத்த கடல் குடித்த முனியே! வெற்றிக்
கண்ணுதலோன் போற்றும் தவக் கனலே! என்றும்
பார்பூத்த தென்பொதிகைக்கரசே! உன்தன்
பதமலரை நிதம் பணிந்து பதம் பெற்றோமே!
**
ஸ்ரீ சங்கர நாராயணர்
ஞானக்கடலே! அருட் சுடரே! நல்லோர்க் கினிக்கும் தெள்ளமுதே!
வனத்தவரும் மனத்திருந்தி வணங்கும் பெருமான் இராமகிரி
மோன குருவின் உளங்கவர்ந்த முத்தே! எங்கள் வித்தகனே!
தீனர்க்கருளும் தென்பனைசைத் திகழ் சங்கர நாராயணனே!
செந்தமிழும் சந்தனமும் சேர்ந்து தினம் தென்றலுடன்
வந்துலவும் நற்பனையூர் வாழ்ந்திலகு நந்தவமாம்
சங்கர நாராயண தெட்சணா மூர்த்தியாம்
செங்கதிரை வாழ்த்துவாம் சேர்ந்து.
-பண்டித. தெட்சணாமூர்த்தி
வாழி தென் பனையூர் மகான் யென்குரு
வாழி முத்தம்மையாம் எம்பிராட்டியே
வாழி குன்றை நல் மேல மடாலயம்
வாழி நங்கள் கணபதிச் சாமியே!
-வரகவி மு. கணபதியா பிள்ளை.
$$$