புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்

-வ.மு.முரளி

கீழடி குறித்து அளவுக்கு அதிகமாகவே பேசப்பட்டுவிட்டது. ஆனால், மிகவும் பேசப்பட வேண்டிய, ஆனால் கவனம் பெறாமல் உள்ள ஒரு தொல்லியல் தலம்  ‘கொடுமணல்’. அதுகுறித்த முக்கியமான கட்டுரை இது...

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாய்அறல் கடுக்கும் தாழ்இரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரைஅகம் நண்ணிக் குறும்பொறை நாடி…’’

-சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் ஒன்றான பதிற்றுப்பத்தில் 74வது பாடலில் வரும் வரிகள் இவை. புலவர் அரிசில்கிழார், சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பாடல் இது.

“வேதங்களைச் சொல்லக்கேட்டு அதற்கான விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு வேள்விகளைச் செய்து முடித்த மன்னவனே! நுண்ணிய கருமணலைப் போன்ற, கீழே தாழ்ந்து இறங்கிய கரிய கூந்தலைக் கொண்ட திருமகளான லட்சுமியிலும் சிறந்த மற்றொரு திருமகளாகிய உன் மனைவிக்காக கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாடு மிகுந்த அரிய அணிகலன்களையும், பந்தல் என்ற ஊர் தந்த புகழ்பெற்ற முத்துக்களையும் கொண்டு வந்தவனே…” என்று செல்கிறது இக்கவிதை.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் கொடுமணம்தான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த கொடுமணல். தொல்லியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில், சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே, கொடுமணலில் மிகப் பெரும் அணிகலன் உற்பத்தி மையம் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சேர மன்னர்களின் வரலாறு கூறும் பதிற்றுப்பத்தின் காலம் 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்படும் நிலையில், அதில் குறிப்பிடப்படும் கொடுமணலின் காலம் அதற்கு முன்னதாகவே இருந்திருக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில், சென்னிமலையில் இருந்து 15 கிமீ. தொலைவில் உள்ளது கொடுமணல். காவிரியின் துணை நதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ள இந்தக் கிராமத்தை ஆய்வாளர்கள் இரு பிரிவாகப் பகுக்கிறார்கள். ஆற்றை ஒட்டிய 15 ஹெக்டேர் நிலம், குடியிருப்புப் பகுதியாக இருந்ததாகும். அங்கிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள 50 ஹெக்டேர் பரப்பிலான முற்கால இடுகாடு மறு பகுதி ஆகும்.

முற்காலத்தில் இறந்தோரை பெரும் மண்பானைகளில் இட்டு, சடலங்களுடன் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள், ஆயுதங்கள், அணிகலன்களை வைத்து, கல் பதுக்கைகளுக்குள் புதைத்து, அதன்மேல் உயர்ந்த நெடுகற்களை நாட்டி, கல் வட்டங்களை அமைப்பது வழக்கமாக இருந்துள்ளது. கொடுமணலில் இத்தகைய 180க்கு மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெருங்கற்காலத்தை (மெகா லித்திக்) சார்ந்தவை. முந்தைய நாகரிக மக்களின் நீத்தார் வழிபாட்டின் எச்சமாக அவை இன்று வரலாறு பேசுகின்றன.

பொ.யு.மு. 300 முதல் பொ.யு.பி. 200 வரையிலான காலகட்டத்தில், நொய்யல் ஆற்றங்கரை நாகரிகம் செழித்த முக்கியமான பகுதியாக கொடுமணல் இருந்துள்ளது. சேர அரசின் தலைநகராக அக்காலத்தில் விளங்கிய கரூருக்கு இங்கிருந்து வணிகப்பாதை இருந்துள்ளது. கிழக்குக் கடற்கரையில் இருந்த காவிரிப்பூம்பட்டினத்துடனும் மேற்குக் கடற்கரையிலிருந்த முசிறியுடனும் (தற்போதைய பட்டணம்) சாலைத் தொடர்பு கொடுமணலுக்கு இருந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள ரோம நாட்டு தங்க, வெள்ளி நாணயங்கள், இந்த ஊரின் வெளியுலகத் தொடர்புக்கு சான்றாக உள்ளன.

இந்த பழைமையான கிராமம், 1961இல் புலவர் ராசு, செல்வி முத்தையா ஆகியோரால் அடையாளம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை சார்பில் வி.என்.ஸ்ரீநிவாச தேசிகன் தலைமையில் இங்கு அகழாய்வு நடைபெற்றது. 1980-இல் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வு இங்கு நடைபெற்றது.

விவசாயி ராமசந்திரன், அகழாய்வு ஆதாரங்களுடன்…

அடுத்து சென்னை பல்கலைக்கழகம், தமிழக தொல்லியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பேராசிரியர் ஒய்.சுப்பராயலு தலைமையில் அகழ்வாராய்ச்சியைத் துவக்கியது. 1985, 1986, 1989, 1990 ஆண்டுகளில் கொடுமணலில் 48 இடங்களில் அகழாய்வு நடத்தப்பட்டது. இதில் 13 ஈமக்குழிகள் கண்டறியப்பட்டன. 1998, 1999இல் மீண்டும் இதே குழுவினர் 15 இடங்களில் அகழாய்வு நடத்தியதில் 3 ஈமக்குழிகள் கண்டறியப்பட்டன.

2012இல் பாண்டிசேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சார்பில் பேராசிரியர் க.ராஜன் தலைமையில் மீண்டும் நடந்த அகழாய்வு மேலும் பல ஆச்சரியங்களை வெளிப்படுத்தியது. ஆற்றோரம் குடியிருப்புப் பகுதி இருந்ததாக நம்பப்பட்ட இடத்தில் இரு ஈமக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒரு குழியில் பத்மாசன நிலையில் முழுமையான எலும்புக்கூடு கிடைத்தது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2,250 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வந்தது. மேலும் முந்தைய அகழாய்வுகளில் கிடைத்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக உறுதியான ஆதாரங்கள் கிடைத்தன.

அண்மையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் சுமார் 4 மாதங்கள் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் கிடைத்துள்ள தொல்லியல் பொருள்கள் பாண்டிசேரி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் பெரும்பகுதி இந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலரும் விவசாயியுமான ராமசந்திரனின் நிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வுகள் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கும் இவர், கொடுமணல் குறித்த தகவல் சுரங்கமாக இருக்கிறார். இன்று கொடுமணலுக்கு வரும் ஆய்வாளர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக உதவி வருகிறார் இவர்.

“கொடுமணல் இன்று உலகிற்குத் தெரிய வந்துள்ளதற்கு மூவருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஈரோடு புலவர் செ.ராசு, தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் ஒய்.சுப்பராயலு, பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர் க.ராஜன் ஆகியோரது தீவிர முயற்சியால் தான் கொடுமணலில் புதைந்துள்ள தமிழக வரலாறு வெளிவந்தது” என்கிறார் ராமசந்திரன். அவர் மேலும் கூறியது:

கொடுமணலில் கிடைத்துள்ள பல வண்ண மணிக்கற்கள் இங்கு ஆபரணத் தொழில் மையம் இயங்கியதற்கு சான்றாகும். கருமாணிக்கம், நீலமணி, செவ்வந்திக்கல், மரகதம், கோமேதகம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக்கல் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள் இங்கிருந்து பிற பகுதிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. இன்றும் கொடுமணலில் தோண்டினால் பல இடங்களில் இவை கிடைக்கின்றன. சிப்பி வளையல்கள், மண்ணால் செய்யப்பட்ட அணிகள், பானைகள், பழங்கால நாணயங்கள், இரும்புப் பொருள்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்பைப் புடம்போடும் உலை இங்கு முழுமையாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரும்புத்தாதை உருக்கி எஃகாக (உவூட்சு எஃகு) மாற்றி ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளனர். கொடுமணலிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சென்னிமலையில் கிடைத்த கரி மிகுந்த இரும்புப் படிவங்களைக் கொண்டு இந்த ஆலைகள் இயங்கி உள்ளன.

அதேபோல இங்கிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள அரசம்பாளையத்தில் குவார்ட்ஸ் படிகக் கற்கள் கிடைக்கின்றன. அண்மைப் பகுதியான படியூரில் கோமேதகமும், பெருமாள் மலை, சிவன்மலையில் நீலக்கற்களும் கிடைக்கின்றன. இந்த விலை உயர்ந்த கற்கள் அருகருகே கிடைத்ததால் இங்கு அணிகலன் உற்பத்தி மையம் உருவாகி இருக்க வேண்டும். மேலும் தொலைதூரப் பகுதிகளிலிலிருந்து ரத்தினக் கற்கள் கொண்டுவரப்பட்டு இங்கு மெருகூட்டப்பட்டுள்ளன என்கிறார் ராமசந்திரன்.

இங்கு கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளையும், பானை ஓடுகளையும், அவற்றில் பொறித்துள்ள எழுத்துகளையும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் க.ராஜன், “தொன்மைத் தமிழ் எழுத்தியல்’ என்ற நூலை 2018இல் வெளியிட்டிருக்கிறார். இது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடாகும். இவர் கொடுமணல் ஆய்வில் தன்னைக் கரைத்துக் கொண்டவர். இவரது ஆய்வுப்படி கொடுமணலில் பொ.யு.மு. 300 காலகட்டத்திலேயே சிறந்த நாகரிகம் செழிப்புற வாழ்ந்துள்ளது. இதோ அவரே கூறுகிறார்…

கொடுமணலில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளில் கிடைத்துள்ள குறியீட்டு எழுத்துகளை ஆய்வு செய்ததில் “தமிழ் பிராமி’ எழுத்து வகையைச் சேர்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பானையின் எழுத்துகளைப் படித்ததில் ‘சாம்பன் சுமநன்’ என்று அறியப்பட்டது. மேலும் பல ஓடுகளில் விசாகி, சாத்தன், சிலிகன், உரனன், திசனன் போன்ற பெயர்கள் கிடைத்துள்ளன.

பூமிக்கடியில் கற்பலகைகளைகளால் இரு செவ்வகக் குழிகளை அமைத்து அதற்குள் ஈமப்பொருள்களைப் புதைத்து மேலே பலகைக்கல்லால் மூடி (கல் பதுக்கைகள்) அதன்மீது இரு கல்வட்டங்களை அமைத்துள்ளனர். சில புதைகுழிகளின் அருகில் உயரமான நடுகற்கள் (மேன்ஹிர்) நடப்பட்டுள்ளன. இத்தகைய 180 கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பல இன்னும் திறந்து ஆய்வு செய்யப்படவில்லை.

இதுவரை அகழாய்வு செய்ததில் கிடைத்த பொருள்களே வியக்கச் செய்கின்றன. மணிகள் பொறிக்கப்பட்ட அரையடி நீளமுள்ள செம்பாலான புலி பொம்மை, இரும்பாலான குதிரை சேணம், மண்ணாலான நூற்கதிரிகள், உருமாறிய நிலையில் கிடைத்துள்ள பஞ்சு, துளையிடப்பட்ட வண்ண மணிகள், ஒரே ஈமக்குழியில் கிடைத்த 2,200 மங்கிய சிவப்புக் கற்களாலான மாலை, மனித எலும்புக் கூடுகள் போன்றவை ஆய்வில் புதிய திசையைக் காட்டியுள்ளன. இங்கு கிடைத்துள்ள பல வண்ணக் கற்கள் குஜராத்திலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்திருக்க வேண்டும். அக்காலத்தில் எல்லையற்ற வர்த்தகம் நடந்ததற்கான ஆதாரம் இது.

இங்குள்ள ஈமக்குழிகள், கல்வட்டங்கள் அனைத்தையும் அகழாய்வு செய்ய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகும். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டால் மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கலாம். இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களே தமிழகத்தில் இருந்து மறைந்த முக்கியமான தொழில்மையத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. இங்கு கிடைத்துள்ள பானை ஓடுகளின் மூலம் மொழியியல் ஆய்விலும் புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன. தமிழகத்தில் உள்ள தொல்லியல் ஆய்வு மையங்களில் கொடுமணலில் கிடைத்துள்ளது போல அதிக அளவிலான தொல்பொருள்கள் வேறெங்கும் கிடைக்கவில்லை என்கிறார் பேராசிரியர் க.ராஜன்.

திருப்பூர் அருகே கணியாம்பூண்டி, சின்னக்கரை போன்ற இடங்களிலும் இதேபோன்ற கல்வட்டங்கள் காணப்படுகின்றன என்கிறார் தொல்லியல் ஆர்வலரான திருப்பூரைச் சேர்ந்த கு.சிவகுமார். கணியாம்பூண்டியில் சுமார் 60 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் ஆய்வுகள் ஏதும் செய்யப்படாததால் அங்குள்ள தொல்லியல் சின்னங்கள் சேதமடைந்து வருகின்றன என்கிறார் இவர்.

சொல்லப்போனால், தமிழகம் முழுவதிலுமே ஆங்காங்கே இத்தகைய பெருங்கற்கால, இரும்புக்காலத் தொல்லியல் சின்னங்கள் அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. அவற்றில் புதைந்து கிடக்கும் சரித்திரத்தை அறியாமலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாறு குறித்த நமது அலட்சியப் போக்கை நினைவுபடுத்தி எச்சரிப்பதாகவே கொடுமணல் காட்சி அளிக்கிறது. இங்கு சென்று மீளும்போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கைக்கு கால இயந்திரத்தில் சென்று வந்தது போலிருக்கிறது.

  • நன்றி: தினமணி- தீபாவளி மலர்-2019
  • படங்கள்: கொங்கு ராமகிருஷ்ணன்

$$$

Leave a comment