-சு.சத்தியநாராயணன்
திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் பொருளாளர் திரு. சு.சத்தியநாராயணன். தில்லி கார் குண்டுவெடிப்பையும் அதன் பின்புலத்தில் உள்ள ஜிகாதி மனோபாவத்தையும் கண்டிப்பதுடன், இதற்கான தீர்வையும் குறிப்பிட்டுள்ள இவரது அற்புதமான கட்டுரை இது…

‘துருக்கன் உறவு தொண்டைக்குழி வரைக்கும்தான்’ என்றொரு சொலவடை உண்டு. கொரோனா பேரிடர்க் காலத்தில் இந்திய அரசு செய்த மிகப் பெரும் உதவிகளைப் புறந்தள்ளி துருக்கிய அரசு நமது தேசத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.
துருக்கர்களுடைய படையெடுப்பாகட்டும், இன்னபிற மொகலாயப் படையெடுப்புகளாகட்டும், அனைத்தும் வெறும் செல்வத்தைக் கொள்ளை கொள்வதற்கு மட்டுமல்ல, இங்கு இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்தத் தான் என்பது பல ஆதாரங்களை உடைய வரலாறு.
இஸ்லாமிய ஆட்சியில் இந்தத் தேசத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஏராளம். இந்த மண்ணின் மக்கள் தங்களது வழிபாடு, கலாசாரம் இவற்றைப் பின்பற்றுவதில் மிகச் சிரமங்களை அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்பதை விட, கொடுமைகளைச் செய்தார்கள் என்பதுதான் வரலாறு.
ஒருவரது வாழ்க்கையின் வெற்றிக்கும் சிறப்பான வாழ்வியலை முன்னெடுப்பதற்கும் அவரது அனுபவம் கைகொடுக்கும். அவரது அனுபவம் மட்டுமல்ல, குடுபத்தினர், உறவுகள், நட்புகள் எனப் பலரது அனுபவம் அதற்கு உதவும்.
வரலாறும் அதன் பதிவுகளும் மிகச் சரியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டால்தான், அந்த அனுபவம் சமூகத்தின் வெற்றிகரமான, அமைதியான வாழ்வியலுக்கு வழி வகுக்கும். கடந்த கால வரலாறுகளைப் புறக்கணிப்பது என்பது நம்மை நாமே படுகுழியில் தள்ளிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
‘பயங்கரவாதத்திற்கும் படுகொலைகளுக்கும் மதமில்லை’ என்கிற வாதம் வைக்கப்படுவது தொடர்ச்சியாக நிகழ்கிற ஒரு பரப்புரை. ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு நிகழ்வில் மேற்சொன்ன பரப்புரையைச் செய்தவர் அனைவரும் அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டினை எடுத்து ‘ஹிந்து தீவிரவாதம்’ என்ற புதிய சொல்லாடலை உருவாக்கிப் பரப்பினார்கள். இதில் அப்போது ஆட்சியில் இருந்தவர்களும் உடந்தையாகச் செயல்பட்டது அவலத்தின் உச்சம் என்றே கொள்ளலாம்.
இந்தத் தேசம் முழுக்க பன்முகத் தன்மை கொண்ட கலாசாரம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இது பல வாசமுள்ள மலர்களை இணைத்துக் கோர்த்த கதம்ப மாலை போல பாரத அன்னையை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது. மலர்கள் அந்த நூலில் இணைந்து இருக்கையில், அதன் மணமும் அழகும் கூடித் தெரியும், தனித்த ஒன்றை விட.
நமது கலாசாரம் உடலில் உயிர் போன்ற ஒரு இழையால் இணைக்கப்பட்டு இருப்பதை மிகச்சரியான பார்வை உடையவர்கள் அனைவரும் மிக இலகுவாகக் கண்டடைவார்கள். மேற்கத்திய அடிமைகளாய் இருந்து வாழ்பவர்களால் எந்நாளும் இதனைப் புரிந்து கொள்ள இயலாது; உணரவும் இயலாது.
ஆனால் இங்கு இந்த தேசத்தை ஆண்டவர்கள் வாக்கு அரசியலுக்காக இஸ்லாமிய சமூகத்தை கதம்ப மாலையிலிருந்து விலக்கி தனி மலராக மட்டுமே அடையாளப்படுத்தியது இந்தத் தேசத்தின் துர்பாக்கியம். இது கிலாபத் இயக்கத்தில் (1919) துளிர் விட்டதா அல்லது மறைந்து மங்கி கனலாய் இருந்த ஒன்று ஒளிர்ந்து எரியத் தொடங்கியதா என்பதை, வரலாற்றை இன்னும் கூர்ந்து அறிந்தவர்கள் கூறினால் சிறப்பாக இருக்கும்.
ஒரு தேசத்தில் வாழ்பவர்களுக்கு அந்தத் தேசத்தின் அரசுதான் தலைமையாக இருக்க இயலும். ஆனால் உலகில் உள்ள அத்துணை இஸ்லாமியர்களுக்கும் ஒரே ‘காலிபா’ தான் தலைமை; அவரது ஆட்சியின் கீழ் அனைத்துலக இஸ்லாமியர்களும் இருக்க வேண்டும் என்பதுதான் கிலாபத் இயக்கத்தின் நோக்கம். இதற்கு ஆதரவு என்பது ஒவ்வொரு தேசமும் தங்களது நாட்டின் குடிமகன்களை இன்னொரு ஆட்சியின் கீழ் வாழ ஏற்றுக் கொள்வதுதானே? இப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் அன்றைய காங்கிரஸ் தலைமையால் முன்னெடுக்கப்பட்டது.
மேற்கண்ட பத்தியைப் படித்த பின் மீண்டும் ஒருமுறை முதல் பத்தியினை வாசித்துக் கொள்ளலாம். அந்த காலிபாவாக இருக்க துருக்கிதான் எப்பொழுதும் முனைப்புடன் இருப்பது. இன்று அந்தப் பதவி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்ற உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி என்ற கொள்கை இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதன் நீட்சியாக, இந்தியா இஸ்லாமிய நாடாக, இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பதும் லட்சியமாக இருந்து கொண்டு இருக்கிறது சிலரிடம்.
‘இஸ்லாமியர்களுக்காக இஸ்லாமிய ஆட்சி’ என்ற சிந்தனை இன்று உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் அமைதியாக இருந்த இஸ்லாமியர்களைக் கொன்று அங்கு தீவிரமாக இஸ்லாமிய சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அங்கிருந்து வெளிப்போந்த அகதிகள் எவரும் இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்லவில்லை. மாறாக கிறிஸ்தவ நாடுகளான ஐரோப்பிய நாடுகளுக்கே குடிபெயர்ந்தனர்.
இப்படி அகதிகள் போர்வையில் குடிபெயர்ந்தவர்களால்தான் பல பயங்கரவாத சம்பவங்களை அந்நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன என்பது வரலாற்று முரண். ஆனாலும் மேற்கத்தியநாடுகள் திருந்தாமல் இந்தியாவிற்கு போதனைகளைச் செய்து கொண்டு வருகின்றன; மறைமுகமாக பாகிஸ்தானுக்கும் உதவி வருகின்றன.
இதோ,பிரிட்டனில் ஷரியா சட்டம் கேட்டுப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையிலேயே, பிரிட்டிஷ் பிரதமர் இந்தியாவிற்கு எதிராகவும் காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கிறார்.
மேலைநாடுகளின் நோக்கம், நாங்கள் அழிந்தாலும் இந்தியா மட்டும் வளர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்களது ரத்தத்தில் ஊறி இருப்பதுதான். பாகிஸ்தான் பிரிவினையும் அதற்கான ஆதரவும் இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதானே?
நமது நாட்டிற்குள் அகதிகளாக இஸ்லாமியர்கள் எவரும் வரவில்லை. ஆனால் சட்டவிரோதமாக பங்களாதேஷ், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும், பர்மிய ரோஹிங்யாக்களும் குடியேறி இருக்கின்றனர். சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு சட்ட விரோதமாக ஆவணங்களைப் பெற்று வாழ்ந்து வருவது ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகுதான் தெரிய வந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் இப்படியான சட்ட விரோதிகள் பரந்து பதுங்கி இருக்கிறார்கள். இவர்களை வாக்கு வங்கியாகப் பார்க்கும் அரசியல்வாதிகள் இவர்களைப் பாதுகாக்கிறார்கள். லஞ்சம் ஒன்றே தங்கள் வாழ்க்கை லட்சியம் என்று நினைக்கிற அரசு ஊழியர்கள் இதற்கு உதவுகிறார்கள். தமிழகத்தில் அதன் கடைநிலை ஊழியர் பணிகளை நிரப்ப வரும் வடமாநிலத்தவரோடு இந்த சட்ட விரோதக் குடியேறிகளும் கலந்து வருகிறார்கள். தேசத்தின் பாதுகாப்பினை விட தங்கள் தொழிலும் சம்பாத்தியமும் மட்டுமே முதன்மையானதாக தொழில் நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளால் பார்க்கப்படுகிறது என்பது வேதனையான ஒன்று.
பொதுமக்களுக்கும் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. வாடகை கிடைத்தால் போதும் என்று யாருக்கு வேண்டுமானாலும் வீடு, கடைகளை வாடகைக்கு விட்டு விடுகின்றனர். காவல் துறையால் ‘கோம்பிங் ஆபரேஷன்’ அடிக்கடி நடத்தப்படுவதில்லை. அரசுக்கு இந்த ஒரு தகவல் கிடைக்கப் பெறாமல் இருக்காது. மத்திய, மாநில அரசுகள் இதற்காக ஒரு சிறப்புப் படையினை உருவாக்கி அவர்களை வெளியேற்றி நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யலாம்.
இவர்கள் போக இஸ்லாமிய ஆட்சி என்ற கனவினைத் தாங்கி நிற்கும் ஜிகாதிகள் பொதுமக்களிடையே மறைந்து வாழ்கிறார்கள். இதில் சாமானிய மக்கள் மட்டும் மூளைச் சலவை செய்யப்படுவதில்லை, மருத்துவர்கள் போன்ற மெத்தப் படித்தவர்களும் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பது தில்லி கார் குண்டு வெடிப்பு வாயிலாக வெளிவந்திருக்கிறது. இந்த மூளைச் சலவை மதத்தின் வழியாகத்தான் கொண்டு போகப்படுகிறது என்பதுதான் கசப்பான உண்மை.
இதனைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு, இந்தத் தேசத்தில் பிறந்து இதனை நேசிக்கும் இஸ்லாமியர்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது. குண்டு வெடிப்பு நிகழ்த்தி அப்பாவிகளைக் கொல்பவரைப் புகழ்வதும், அவரது இறுதி ஊர்வலத்தில் மதத்தின் அடிப்படையில் கலந்து கொள்வதும், முஸ்லிம்கள் தேசத்திற்கு எதிரானவர்களுக்குப் பின்னால் நிற்கிறார்கள் என்கிற சேதியையே உலகிற்குச் சொல்கிறது என்பது அவர்களுக்குப் புரிகிறதா? அல்லது புரிந்து தெரிந்தேதான் செய்கிறார்களா?
குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாதச் சதிச் செயல்களில் தேசத்திற்கு எதிராகச் செயல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை ‘அப்பாவி இஸ்லாமியர்கள்’ என்பதும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பொதுவெளியிலேயே துணிச்சலாக வைப்பதும்தான் ஜனநாயகமா? அவர்கள் குற்றவாளிகள் என்பதை மறந்து அரசியல் கட்சிகளும் அதனை வழிமொழிந்து மேடை போட்டுப் பேசுவதுதான் ஜனநாயகம் என்றால், அது கேலிக்குறியதாக ஆகிவிடாதா?
ஒரு தேசத்தின் நீரோட்டத்திலிருந்து ஒரு சமூகத்தைப் பிரிப்பது என்பது தேசத்திற்கு ஆபத்தானது. ஆனால் அதனை அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காகச் செய்கின்றன. இந்தப் புரிதல் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வேண்டும். பல இஸ்லாமிய நாடுகள் இந்த ‘ஜிகாதி’ என்ற மனநிலையால் அமைதி இழந்து தவித்து வருகின்றன. சக இஸ்லாமியர்களையே சிரியா போன்ற நாடுகளில் கொடூரமாகக் கொலை செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளிவந்து மனதை உருக்குகின்றன.
இந்த தேசம் தனது மக்களுக்குப் பாதுகாப்பான, அமைதியான ஆரோக்கியமான சூழலை வழங்கப் போராடிக் கொண்டு இருக்கிறது. அதனை தங்களது அடுத்த சந்ததியினரும் பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இஸ்லாமிய சகோதரர்கள் இந்த ஜிகாதிகளைப் புறக்கணிக்க வேண்டும். தேசத்திற்கு அரணாக நிற்க வேண்டும்.
மதமாற்றமும் ஹிந்துக்களின் எண்ணிக்கை சதவிகித வீழ்ச்சியும் ஜனநாயக தேசத்தில் தங்களுக்கு ஆபத்து என்பதனை ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கிறிஸ்தவரிடமும், ஒரு இஸ்லாமியருடனும் நட்பாகப் பழகும் ஹிந்து தனது சக ஹிந்துவிடம் ஜாதியால் பிரிந்து கிடந்தால் மொத்தமாக வீழ்ந்து போக வேண்டியதுதான். வரலாற்றின் அனுபவத்தை, அது சொல்லும் பாடத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் அமைதி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டும்தான். அதற்கு உதாரணமாக நம் பாரத அன்னையின் இரு சிறகுகளையும் வெட்டி உருவாக்கப்பட்ட பாகிஸ்தானும் பங்களாதேஷுமே சாட்சியாக நிற்கின்றன. அந்த நாடுகளில் வளர்ச்சி இல்லை, அமைதி இல்லை, நல்லிணக்கம் இல்லை. அவை பயங்கரவாதத் தொழிற்சாலையாக மாறி நிற்கின்றன.
கிலாபத் இயக்கத்துக்கு இந்தியாவில் (காங்கிரஸ் கட்சி) கொடுத்த மகத்தான ஆதரவு நமது கைகளைக் கொண்டே நமது கண்களை நித்தமும் குத்த வைத்துக் கொண்டு இருக்கிறது; வெளிதெர்யாமல் மறைந்திருக்கும் ஜிகாதிகளிடம் நீறு பூத்த நெருப்பாக அது புகைந்து கொண்டிருக்கிறது.
நமது அரசியல் சட்டமே வழிபாடு மற்றும் தனி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொழுது, தனியாக சிறுபானமை ஆணையம் எதற்கு? அதன் வாயிலாகவும் இந்த நாட்டின் குடிமகன்களை பிரித்தாளும் ஒன்றை பிரிட்டிஷாரின் அடிவருடிகளான காங்கிரஸ் செய்தது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ கொண்டு வந்த பிறகும் இந்த ஆணையத்திற்கு என்ன வேலை? அனைத்து குடிமகன்களையும் ஒன்றெனப் பாவித்துச் செயல்படுவதுதானே சிறப்பு? மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சலுகைகள் எதற்கு? பெரும்பான்மை மதத்தை சீர்குலைப்பதற்கா?
எனது மகள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஹிந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் எங்களிடம் பேச்சுவாக்கில் கூறியது: சலுகைகளுக்காக எனது அண்ணனும் குழந்தைகளும் கூட இப்பொழுது மதம் மாறிவிட்டார்கள். நீங்களும் அப்படிச் செய்யலாமே? என்றார். எங்களுக்கு அது அவசியமில்லை என்று சொல்லிவிட்டு வந்து விட்டோம். சலுகைகள் தான் மதமாற்றத்தை ஊக்குவிக்கின்றன.
ஒரு சமூகத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை மிகப் பெரும் மாற்றத்தினை ஜனநாயகத்தில் உருவாக்கும். இன்றுவரை பெரும் எண்ணிக்கை ஹிந்துக்களாக இருக்கிறது. இன்று வரை அந்த சமூகத்தால் மற்ற மதங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் எழவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை எங்கு மாறி இருக்கிறதோ அங்கெல்லாம் பிரச்சினைகள் இருக்கின்றன.
இப்பொழுது கூட ஒரு கோயில் அன்னதானம் நிகழ்த்த கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு (திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி), கிறிஸ்தவர்கள் பயணித்த பேருந்து என்பதால் ஊருக்குள் செல்லாது என்று கூறி ஹிந்து பூசாரி ஒருவருக்கு வள்ளியூருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த நிலை (திருநெல்வேலி), கோயில் ஊர்வலங்கள் பாரம்பரிய வழிகளில் செல்ல பல இடங்களில் எதிர்ப்பு – இது போன்ற நிகழ்வுகள், மக்கள்தொகை எண்ணிக்கை எங்கு மத அடிப்படையில் ஹிந்துக்களிடம் இருந்து மற்ற மதத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறதோ அங்குதான் நிகழ்கின்றன.
இந்த அனுபவம் அரசாள்பவருக்கும், மக்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசு என்று மார்தட்டுகிறவர்கள், இந்த முரண்கள் தங்களது போலி மதச்சார்பற்ற கொள்கையினால்தான் வருகிறது என்பது தெரியாமல் இருப்பார்களா? அவர்களது சந்ததிகளும், உறவுகளும் இன்னமும் ஹிந்துக்களாகத்தானே இருக்கிறார்கள்? அவர்களுக்கும் நாளை இந்த நிலைமை வரும் என்ற எண்ணம் உறுத்த வேண்டும். இது ஹிந்து ஒற்றுமை வாக்களிக்கும்போது நிகழ்ந்தால்தான் சாத்தியமாகும்.
இந்தத் தேசத்தின் நன்மைக்காக, பாதுகாப்பிற்காக, மதம் மாறி நிற்கின்ற நமது சகோதரர்களும் இந்தத் தேசத்தில் தங்கள் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ, ஹிந்துக்கள் வாக்களிபதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் எழுகிறது. எனவே, ஹிந்து ஒற்றுமையே, அமைதியாக வாழ விரும்பும் இஸ்லாமியர்களையும் காக்கும்.
போலி மதச்சார்பு பேசி மக்களைப் பிரித்தாளும் வேலை செய்யும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். மதச்சார்பற்ற கூட்டணி என்று பேசுகிறவர்கள் உண்மையில் ஹிந்துக்களிடமிருந்து மற்ற மதத்தினரைப் பிரிக்கிறார்கள் என்ற உண்மையை அனைத்து மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் புரிதல் ஏற்பட்டால், இங்கு ஜிகாதிய பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல, எந்த ஒரு பயங்கரவாதத்திற்கும் இடம் இருக்காது. என்னைப் போன்ற பெரும்பான்மையானோர் மதச்சார்பற்ற கூட்டணியால் எதிர்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களை முன்னுதாரணமாகக் கொள்கிறோம், போற்றிக் கொண்டாடுகிறோம், அவரது கொள்கை மற்றும் செயல்பாடுகளுக்காக.
அப்துல் கலாம் போன்று தேசபக்தி கொண்ட அனைத்து இஸ்லாமியர்களும் எங்களுக்கு சகோதரர்களே. மதச்சார்பற்றவன் என்று சொல்லிக்கொண்டு போலி மதச்சார்பின்மை பேசி மக்களைப் பிரிக்கிற எந்த ஹிந்துவும் எங்கள் சகோதரனல்ல, அவன் ஒரு தேச விரோதியே.
$$$