-கருவாபுரிச் சிறுவன்
கோமதி என்னும் இத் திருச்சொல், லட்சோப லட்ச மக்களின் உயிர்த்துடிப்பாய் விளங்கும் உன்னத மந்திரம். இம்மந்திரத்தின் சொரூபிணி, பரமநாயகியாகத் திகழும், மருத்துவர்களுக்கெல்லாம் தலைமை மருத்துவச்சியாம், தரணி போற்றும் ஆவுடை நாயகியம்மையை நினைப்பவர் வாழ்வில் நினைத்தது நடக்கும். கோமதியை மொழிந்தவர் வாழ்வில் மொழிந்தது பலிக்கும். கோமதியை வழிபட்டோர் வாழ்வில் நிகழ்த்தியது சிறக்கும்.

இன்பமாக வாழ முடியவில்லையா? துன்பத்தில் உழன்று தவிக்கிறீர்களா? எங்கும் எதிலும் நிம்மதி வேண்டுமா…? நமக்கெல்லாம் அன்னையான கோமதியம்பிகையின் பாதத்தில் சரணடையுங்கள். எல்லாம் சரியாகும். எப்போது வேண்டுமானாலும் திருவாக்குவாள்.
திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதை சும்மாவா முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்?
அதுவும் இந்த பெரிய மருத்துவச்சியை, கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் தன் பக்தர்களின் துயரை முன்னுவந்து தீர்ப்பாள். முழு வாழ்க்கையையும் வாழ வைப்பாள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழ்க்கண்ட பாடலைப் படியுங்கள். வழிபாட்டிலும் அவளது சன்னிதியிலும் பாடுவது உத்தமம். நிச்சயம் பலன் உண்டு.
சங்கர கோமதியை வழிபட்டால் சகல வரங்களையும் பெறலாமே…
தியானம்
கரத்ருத வனமால்யா ரக்த ஸர்வாங்க பூஷா நிகில நயன சேதோ ஹாரி ரூபாக்ர்ய வேஷா/ பவது பவத பீஷட ப்ராப்தயே சைல கன்யா புருஷயுவதி வச்யா க்ருஷ்டி நித்ய ப்ரகல்பா/
-வனபுஷ்ப மாலையை கையில் ஏந்தியவளும், சிகப்பு நிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் கடைக்கண் பார்வையால் சகல ஜனங்களுடைய மனதை ஈர்க்கும் படியாக மிக அழகான தோற்றத்தை உடையவளும், பக்தர்களின் கோரிக்கைகளை தானாகவே ஈடேற்றும் குணமுடையவளும், ஹிமவானது புத்திரியுமாகிய புன்னைவன யுவதியாம் ஸ்ரீ கோமதியம்பிகை அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் தந்தருளுவாளாக.
வைகறை எழுந்து திருநாகச்சுனை தோய்ந்தருள்
வழங்கும் வெண்காப்பும் இட்டு
வார்ந்த கண்டிகை தரித்து அஞ்செழுத்து உன்னிநன்
மணிச் சினகரம் புகுந்துன்
பெய்கழல் பணிந்து நாவாரப் புகழ்ந்து சிறு
பேதையேன் கன்னெஞ்சமும்பேரன்பு
தானே பழுத்துருகி நினதருள்
பேறுபெறும் நாளும் உளதோ?
மொய்கதிர் பரப்பிச் செறிந்த திமிரத்தொகை
முகங்கிழித்தேறும் ரவியை
மூரீயொளி வட்டத்தினன் னாண் மறைத்த கரு
முகிலுக்கோர் தங்கையே பொன்
செய் கடகமிட்ட செங்கைப் பசுங்கிள்ளையே
செகமுழுதும் ஈன்றவம்மே
தெய்வ வரராசை யம்பதிவளரு(ம்) மாதவச்
செல்வி கோமதிவல்லியே!
-கமலப் புலவர்
பாரத தேசத்தில் உள்ள ஸப்த கோமதியம்பிகை உறையும் திருத்தலங்களில் சங்கர நயினார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் கோமதி ஸ்தலம் தென் தமிழகத்தின் பிருதுவியம்பலமாகத் திகழும் சிவஸ்தலமாகும்.
இத்தலம் பாண்டிய மண்டலத்திற்கு திலகம் போன்றது என சைவத்தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் உ.வே.சாமிநாதையர் புகழாரம் சூட்டுகின்றார்.
திலகமாய்த் திகழும் திருவையுடைவளை திரிகரணத் துாய்மையுடன் அழைத்தால் தானாகவே முன்வுவந்து பேருபகாரம் செய்வாள்.
ஒப்பற்ற பெருந்ததெய்வமாகத் திகழும் திருவை வாமாபாகமாகயுடையவளை வருத்தத்துடன் சென்று வணங்குபவரின் வாட்டத்தினைப் போக்கி பொருத்தமுடன் உணர வைத்து வளம் பல நல்குபவள் கோமதி.
அந்தணரில் தொடங்கி நந்தனார் குலம் வரை, பீபிலிகள் முதல் பிரமன் வரையுள்ள சராசரி உயிர் வர்க்கங்கள் வரை, ஏழை – பணக்காரன், உயர்ந்தவர் -தாழ்ந்தவர், பாமரர் – பண்டிதர், என்ற வேற்றுமையில்லாமலும் மண்ணுலக மன்னவரும், விண்ணுலக தேவர்கள் முதலான யாவரும் சரணாகதி அடைந்து தொழுது வணங்கும் சீலம் நிறைந்த சீராசைக்காரியமாம் கோமதி.
கோமதி என்னும் இத் திருச்சொல், லட்சோப லட்ச மக்களின் உயிர்த்துடிப்பாய் விளங்கும் உன்னத மந்திரம். இம்மந்திரத்தின் சொரூபிணி, பரமநாயகியாகத் திகழும், மருத்துவர்களுக்கெல்லாம் தலைமை மருத்துவச்சியாம், தரணி போற்றும் ஆவுடை நாயகியம்மையை நினைப்பவர் வாழ்வில் நினைத்தது நடக்கும். கோமதியை மொழிந்தவர் வாழ்வில் மொழிந்தது பலிக்கும். கோமதியை வழிபட்டோர் வாழ்வில் நிகழ்த்தியது சிறக்கும்.
இதுவே உண்மை. இதுவே சத்தியமாகும்.
மந்திரச்சொல்: மந்திரத்தைச்சொல்
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி!
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி!
அங்கமலத்து அயனும் மாலும் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி!
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானே போற்றி போற்றி!
-திருநாவுக்கரசு நாயனார்
எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர் சங்கரன் தாள்
மறவாமை பொருளென்றே
துன்னிய வேடம் தன்னைத்
துறவாதே துாயசிவம்
தன்மை மிகும் அன்பினால்
மறவாமை தலை நிற்பார்.
-தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்
நீர்கொண்ட செழுஞ்சடைமேல் நிலவுமிழ் வெண்
பிறைவயங்க நெடுவான் பூத்த
வேர் கொண்ட தாரகையின் இடையிடையே
தவளமுகை யீன்று தோன்றும்
கார்கொண்ட புன்னைவனம் காமுற்று
வாழ்கருணைக் கடலை மல்லல்
சீர்கொண்ட சீராசை திருநகர் வாழ்
சிவக் கொழுந்தை சிந்தை செய்வாம்.
நாவினால் பரவிப் பல்கால்
நனை கமழ் நறுந்தண் போது
துாவி வீழ்ந் திறைஞ்சும் நாகச்
சூட்டொளிர் மணியின் சோதி
மேவலால் பஞ்சி யூட்டி
விளங்கிய வண்ணம் காட்டும்
ஆவுடை மாது செம்பொன்
அடித்துணை சென்னி வைப்பாம்!
தேனே வருக! சீராசைத்
திருவே வருக! திருநேத்திர
சிவசங்கரருக்கு உவகைநல்கும்
செல்வக்கனியே வருக! விண்ணின்
ஆனே பரவத்தவம் புரியும்
அமுதே வருக! குமுதவாய்
அன்னமே வருக! வினையிருளை
அவிக்கும் கிரணக்கதிர் வருக!
பானேர் மொழிப்பார்வதி வருக!
பனி மாமலையின் சேய் வருக!
பன்நாகங்கள் இரண்டும் வழி
பாடு புரியும் புன்னைவன
மானே வருக! வுயிரனைத்தும்
வளர்க்கும் அன்னையே வருக!
மன்றல் கமழும் அலர்க்குழற்
கோமதியே வருக! வருகவே.
-முத்துவீரப்பக் கவிராயர்
அணியாரும் விழாநாளில் அலங்காரம் பல கொண்டு
மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்கால்
பணியாத தலை பணியும் பாடாத வாய்பாடும்
தணியாத சிந்தையும் தான் தணிந்தொடுங்கும் கோமதியே!
சிவபூசை என்முன்னோர் செய்பயனால் நாயேனும்
அவமே நாள் போக்காமே ஆன மட்டின் நின்புகழைத்
தவறாமே படித்திடுவேன் சாற்றிடுவேன் எழுதிடுவேன்
உவமானம் கடந்தாளே, உய்யக் கொள்வாய் கோமதியே!
பகவதியே, மாதேவி பவானி பராசக்திசிவை
நகமகளே ஐமவதி நாரணியே ஈசையே!
ககனமுயர் பிராமியுமை கெளரிதிரு வீசுரியே,
தகவுறுமிப் பெயர்களெற்குத் தாரகமாம் கோமதியே!
சொன்னாலும் வாயினிக்கும் சொல்லக் கேட்டால் காதினிக்கும்
பன்னாளும் சிந்தித்தால் பரந்தினிக்கும் சிந்தையெல்லாம்
பொன்னாளும் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்தும்
அன்னாயுன் சரிதங்கள் அற்புதமாம் கோமதியே!
தொழ வேண்டும் உனையென்றும் துாமலர் துாஉய்ப்பாடியுன் முன்
அழ வேண்டும் உன்னடியில் அடியற்ற மரம் போல்
விழ வேண்டும் இவை செய்துன் விளங்கருளில் திளைத்தாடி
எழ வேண்டும் என்பதுவே எனக்காசை கோமதியே!
-ஆ.ஈஸ்வர மூர்த்திப்பிள்ளையவர்கள்
கேடா வருநமனைக் கிட்ட வராதே துாரப் போடா என்று ஓட்டிவிட்டு வுன் பொற்கமலத்தாள் நிழற்கீழ் வாடா என்று என்னை வர அழைத்தால் அம்ம வுன்னைக் கூடாது என்று யார் தடுப்பார் கோமதித்தாய் ஈசுவரியே! -அழகிய சொக்கநாதப்பிள்ளையவர்கள்
கொஞ்சுமொழிப் பைங்கிளிநேர்
கோலமொடென் நேரில் வந்து
அஞ்சலளித் தருளிலுன்னை
யார் தடுக்க வல்லவரே?
தஞ்சமுனை அன்றிலை
தாரணிக்கோர் தாயாம்நீ
கொஞ்சம் உளத் தயவு செய்வாய்
கோமதிப்பே ரம்பிகையே!
-ச.இரத்தினவேலன்
$$$