-முரளி சீதாராமன்
“…இந்த நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் புரட்சிக்காரன் - கதர்ச் சட்டைக்காரனுமல்ல, சிவப்புச் சட்டைக்காரனுமல்ல - காவிச் சட்டைக்காரன்தான் என்பதை கருப்புச் சட்டைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!” - இது ஜெயகாந்தன் பேசியது...

‘வந்தே மாதரம்’ – கீதம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
‘ஆனந்தமடம்’ என்பது, துறவி வேடம் தரித்தவர்கள் – கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக – அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடத்திய புரட்சிகர இயக்கம் பற்றிய புனைவு நாவல்.
இதன் ஆசிரியர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா. இந்த நாவலின் ஒரு பகுதியாக எழுதி அமைத்த பாடலே ‘வந்தே மாதரம்’.
‘ஸுஜலாம், ஸுபலாம் மலயஜ சீதலாம்..’ என்ற இதன் வரிகளை மகாகவி பாரதியார் – ‘நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்’ என்று தமிழாக்கம் செய்துள்ளார்.
இது துறவிகளைப் பற்றிய நாவல் – துறவு வேடம் பூண்டு அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களைப் பற்றிய – காவியுடை தரித்த புரட்சிக்காரர்களைப் பற்றிய நாவல்.
1977 என்று நினைக்கிறேன் – அல்லது ஓரிரு ஆண்டுகள் முன்பின்னாகவும் இருக்கலாம்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் மிக அற்புதமான பேச்சு ஒன்றை (அவரது பேச்சு எழுத்து எல்லாமே அற்புதம்தானே!) சேலத்தில் கேட்ட நினைவு உள்ளது.
மனதில் அப்படியே ஆழப் பதிந்த பேச்சு அது!
“இந்தியாவில் புரட்சி என்பது ஆன்மிகத்தின் மூலம்தான் வரும்! அப்படி ஒரு சமூகப் புரட்சியை ராமானுஜர் தந்தார்! திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது நின்று, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஊருக்கே உபதேசித்து – எந்த மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்த சமூகம் ஒதுக்கியதோ – அவர்களையும் உள்ளடக்கி வைஷ்ணவ தத்துவத்தை விளக்கிய ராமானுஜர் ஆன்மிகப் புரட்சியாளர்!”
பிறகு பேச்சு பாரதத்தின் மற்றொரு மகத்தான ஆன்மிகப் புரட்சியாளரான சுவாமி விவேகானந்தரைப் பற்றித் திரும்பியது.
பிறகு ஜெயகாந்தனுக்கு மிகப் பிடித்தமான மகாகவி பாரதி!
“ரஷ்யப் புரட்சியைக் கொண்டாடிய பாரதி கூட – ‘மாகாளி கடைக்கண் வைத்தாள், ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி!’ என்றுதான் மாகாளியை மனதில் வைத்து ஆன்மிகத்தை இணைத்தே புரட்சியை நமக்கு தரிசனம் செய்வித்தான்!”
“பாரதியின் மனம் ஆன்மிக மனம் – அவன் ஆன்மிகத்தை உள்வாங்கியதால்தான், அவனால் கனகலிங்கம் என்ற அரிசன இளைஞனுக்கு பூணூல் அணிவித்து – இன்று முதல் நீ பிராமணன் என்று சொல்ல முடிந்தது!”

“வறட்டு நாத்திகம் எந்தப் புரட்சியையும் கொண்டு வராத மலட்டுத் தன்மை கொண்டது – அது இந்த மண்ணில் முளைவிடாது – வளரவும் செய்யாது – அது யாரையும் வாழவும் வைக்காது!”
“நண்பர்களே! இந்த தேசத்தின் விடுதலைக்கான கீதத்தை – வந்தே மாதரம் – என்று பங்கிம் சந்திர சட்டர்ஜிதான் உருவாக்கினார்! அதை காவியுடைத் துறவிகளின் கீதமாக ஆனந்த மடம் என்ற நாவலிலும் வைத்தார்”
இப்படியே பாரதத்தின் ஆன்மிகப் புரட்சிக்காரர்களை வரிசைப்படுத்திய ஜெயகாந்தன் கடைசியாக முடித்ததுதான் அவருடைய அசலான முத்திரை!
“எனவே இந்த நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் புரட்சிக்காரன் கதர்ச்சட்டைக்காரனுமல்ல – சிவப்புச் சட்டைக் காரனுமல்ல – காவிச்சட்டைக் காரன்தான் என்பதை கருப்புச் சட்டைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!”
இந்த ஜெயகாந்தன் உரையை எனது நினைவின் அடுக்குகளில் இருந்தே தருகிறேன் – அவ்வளவு ஆழப் பதிந்து – நான் லயித்துப் போன உரை அது!
இதை ஜெயகாந்தனின் கம்பீரமான குரலில் ஏற்ற இறக்கங்களோடு மனதில் கற்பனை செய்து பாருங்கள்.
“…இந்த நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் புரட்சிக்காரன் – கதர்ச் சட்டைக்காரனுமல்ல, சிவப்புச் சட்டைக்காரனுமல்ல – காவிச் சட்டைக்காரன்தான் என்பதை கருப்புச் சட்டைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!”
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் – இதே நவம்பர் 7 தான் ரஷ்யாவில் லெனின் தலைமையில் ஜார் மன்னனுக்கு எதிராகப் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய நாளும்.
அதைத்தான் பாரதி – “பேயரசன் ஜார் வீழ்ந்தான்! மாகாளி கடைக்கண் வைத்தாள்! ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி” – என்று வாழ்த்தினார். ஜெயகாந்தன் ஆன்மிகத்துடன் பாரதி அதைப் பிணைத்துப் பாடியதைக் கொண்டாடியதும் – அற்புதம்!
ஆன்மிகமே பாரதத்தின் ஜீவநாடி – எந்த சமூக மாற்றமும் ஆன்மிகத்தை முழுமையாக உள்வாங்கியே இங்கு நடைபெறும் – என்று ‘வந்தே மாதரம்’ பாடலை சிலாகித்து ஜெயகாந்தன் பேசியது பசுமையாக நினைவுள்ளது!
வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயினை வணங்குதும் என்போம்!
ஜெய்ஹிந்த்!
$$$