நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கும் மந்திரம் வந்தேமாதரம்!

-சேக்கிழான்

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மந்திரச் சொல் இடம்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இன்றுடன் (2025 நவ. 7) 150 வயதாகிறது. இதனை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!

பாரதத்தின் தேசியப்பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. இதன் முதல் இரண்டு வரிகள் சமஸ்கிருதத்திலும், அடுத்த வரிகள் வங்க மொழியிலும் எழுதப்பட்டன.  ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லுக்கு  ‘தாயை வணங்குகிறேன்’ என்று பொருள் அதாவது  ‘பாரதத் தாயை வணங்குகிறேன்’ என்பது பொருள்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு முறை துர்க்கா பூஜை விடுமுறையில் கொல்கத்தாவில் இருந்து சொந்த ஊரான கந்தலபதாவுக்கு ரயிலில் சென்றார். தேசிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவரது மனதை பசுமையான வயல்வெளிகளும், நதிகளும் கொள்ளை கொண்டன. அத்தருணத்தில் அவரிடமிருந்து ஊற்றெடுத்ததே ‘வந்தே மாதரம்… ஸுஜலாம், ஸுபலாம்’ என தொடங்கும் பாடல்.  இதனை அவர் எழுதிய நாள் 1875 நவம்பர் 7 (அட்சய நவமி) நாள்.

இப்பாடலை  முதன்முதலில் 1875இல் தனது ‘பங்க தர்ஷன்’ நாளிதழில் வெளியிட்டார். பின்னர் தான் 1882இல் எழுதிய ‘ஆனந்தமடம்’ நாவலில் இப்பாடலை இடம்பெறச் செய்தார். அராஜக ஆட்சியை எதிர்த்து கலகம் செய்யும் சந்நியாசிகள் இப்பாடலைப் பாடுவதாக நாவலை எழுதினார்.

இப்பாடலை முதன்முதலாக 1896இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துப் பாடினார். இப்பாடல் சுதந்திரப் போராட்டக் களத்தில் மிகுந்த உத்வேகம் அளித்தது.  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, லாகூர் முதல் அசாம் வரை வந்தே மாதரம் பாடல் முழங்கியது. சுதேசி இயக்கத்தின் மந்திரப் பாடலாக  ‘வந்தே மாதரம்’ உருவெடுத்தது.

***

சட்டர்ஜியின் சரிதம்:

'வந்தே மாதரம்' பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838 ஜூன் 26இல் வங்காள மாகாணத்தின் தலைநகர் கொல்கத்தா அருகே நைஹாட்டியில் பிறந்தார். இவரது தந்தை சப் கலெக்டராகப் பணியாற்றியவர்.இவருக்கு மூன்று சகோதரர்கள். படிக்கும் போதே கவிதைகள் எழுதினார். 1859இல் பி.ஏ., 1869இல் சட்டப் படிப்பு முடித்தார். அரசுப்பணியில் சேர்ந்தார். இவர் எழுதிய முதல் நாவல் 'துர்க்கேச நந்தினி' 1865இல் வெளியானது.

பின்னர்  ‘ஆனந்த மடம், கபால குண்டலா, பிஷ்பிரிக்சா’ உள்ளிட்ட பல்வேறு கதை, கட்டுரை, கவிதைகளை இயற்றினார். இலக்கியத்தின் வாயிலாக பாரதக் கலாசாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தினார். 1872இல் 'பங்க தர்ஷன்' இதழைத் தொடங்கினார். இவரது படைப்புகள் பல்வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894இல் இவர் காலமானார்.  

மத ரீதியாக மக்களைத் துண்டாடும் நோக்கில் ஆங்கிலேயர் 1905இல் வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரிக்கும் ‘வங்கப்பிரிவினை’யை அறிவித்தனர். இதை எதிர்த்து கொல்கத்தா, டவுன்ஹாலில் ஒன்றிணைந்த 40 ஆயிரம் பேர் ‘வந்தே மாதரம்’ பாடி போராட்டம் நடத்தினர். இதைக்கண்டு அஞ்சிய வைஸ்ராய் கர்சன், பாடலைப் பாடிய அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ‘வந்தே மாதரம்’ பாடவும் தடை விதித்தார். அதையடுத்து, ஆங்கிலேயரின் தடையை மீறி நாடு முழுதும்  ‘வந்தே மாதரம்’ முழக்கம் இடிபோல ஒலித்தது.

மகாத்மா காந்தி எழுதும் கடிதங்களின் தலைப்பில் ‘வந்தே மாதரம்’ என குறிப்பிடத் தொடங்கினார்.  ‘வந்தே மாதரம் என்பது தேசபக்தியை ஊக்குவிக்கும் மந்திரச் சொல்’ என்று கூறிய ஸ்ரீ அரவிந்தர், 1909 இல் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

மகாகவி பாரதி இதனை இரு வடிவங்களில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாது வந்தேமாதரம் என்ற சொல்லைக் கொண்டே பல பாடல்களையும் அவர் எழுதி இருக்கிறார்.

1908இல் 18 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் குதிராம் போஸ், தூக்கிலிடும் போது ‘வந்தே மாதரம்’ என முழங்கியபடியே நாட்டுக்காக உயிர் நீத்தார்.  1937இல் காங்., செயற்குழுவில், ‘வந்தே மாதரம்’ பாடல் தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  1947 ஆக. 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, சுதேச கிருபாளனி ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடினார்.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன் தேசியகீதமாக வந்தே மாதரம் பாடல் இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், இதில் பாரத அன்னையாக நாடு வர்ணிக்கப்படுவதால் இதனை ஏற்க இஸ்லாமியர்கள் மறுத்தனர். எனவே, 1950 ஜன. 24இல் அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில், ‘ஜன கண மன’ தேசிய கீதமாகவும், அதற்கு நிகராக விடுதலை போராட்டத்தின் சிறப்பு மிக்க ‘வந்தே மாதரம்’ (முதலிரண்டு பத்தி), தேசியப் பாடலாகவும் இருக்கும் என ஜனாதிபதியக பொறுப்பேற்க இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் அறிவித்தார். தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு நிகராக இப்பாடல் மதிக்கப்படுகிறது. சுதந்திரம், குடியரசு தினம், விளையாட்டு, ராணுவ நிகழ்ச்சிகளில் இப்பாடல்  பாடப்படுகிறது.

1905இல் ஹீராலால் சென் இயக்கிய ‘வங்கப்பிரிவினை எதிர்ப்பு, சுதேசி இயக்கம்’ தொடர்பான ஆவணப்படம், ‘வந்தே மாதரம்’ பாடலுடன் முடிவடையும்.  ‘வந்தே மாதரம்’ பெயரில் 1939, 1985இல் தெலுங்கு 1948இல் மராத்தியில் படங்கள் வெளியாகின. 50வது சுதந்திர தினத்தில் (1997) ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘மா துஜே சலாம்’ பாடலில் ‘வந்தே மாதரம்’ வார்த்தை இடம் பெற்றது. இது தமிழில் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற மொழிபெயர்ப்புடன் வெளியாகி, இன்றும் உலகம் முழுவதும் பாடப்படுகிறது.


காண்க:

$$$

மத்திய அரசு உத்தரவு

வந்தே மாதரம்’ பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய கலாச்சார துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசபக்தியின் சின்னமாக விளங்கும், ‘வந்தே மாதரம்’ பாடல் நாட்டின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதையை கவிதையாக வெளிப்படுத்துகிறது. இது சமூக, அரசியல் மற்றும் கலாசார ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதை நான்கு கட்டமாக நினைவுகூரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று தொடங்கி நவ. 14 வரை  முதல் கட்டமாகவும், குடியரசு தினத்தையொட்டி 2026 ஜனவரி 19 – 26 வரை இரண்டாம் கட்டமாகவும், 2026 ஆக. 7 – 15 வரை மூன்றாம் கட்டமாகவும் கொண்டாட வேண்டும். பின்னர் 2026 நவ. 1-7 வரை கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டாட வேண்டும்.

இதற்காக, ‘வந்தே மாதரம்’ பாடலை இன்று நாடு முழுதும் ஒரே நேரத்தில் பாடி அதை பதிவு செய்து பிரசார இணையதளத்தில் பதிவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் மாநில போலீசாரின் இசைக்குழுவினர் ஆண்டு முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தவும் கண்காட்சிகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

$$$

Leave a comment