-கருவாபுரிச் சிறுவன்

பெரியவர்கள், சான்றோர்கள், ஆன்றோர்களைப் பார்க்க, பேசச் சென்றால், நிறைவில் அவர்கள் “மனம் போல் வாழ்க, எண்ணம் போல் வாழ்க, வாழ்க வளத்துடன், வாழ்க வளமோடு… வாழ்க! வாழ்க!, பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தி, வழியனுப்பி வைப்பார்கள். அப்போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
ஆனால் இன்று இப்படி வாழ்த்து பெறுவோரின் எண்ணிக்கையும் வாழ்த்துவோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அதனால் இன்றைய தலைமுறைக்கு அதன் மகத்துவம் தெரிவதில்லை, புரிவதில்லை.
நுட்பமாகப் பார்த்தால் வளரும் தலைமுறையினரையும், மற்றவரையும் வாழ்த்துவதற்கும் பலருக்கும் மனமில்லாமல், வயதில் பெரியவராகவும், உள்ளத்தில் சிறியவராகவும் வாழ்ந்து வாழ்கிறார்கள். இதுவே யதார்த்தம்.
எனவே, ‘பல்லாண்டு வாழ்க’ என்ற வார்த்தைகளில் இருக்கும் ஆதியந்த ரகசியங்களை ஓரளவு தெரிந்து கொள்வதே இச்சிந்தனையின் நோக்கமாகும்.
பல்லாண்டின் பிறப்பு:
நட்சத்திரங்கள் 27. இவை யாவும் சிறப்புடையவை. இருப்பினும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை உண்டு. வைணவத்தில் நரசிம்மர், கருடாழ்வார், விஷ்ணு சித்தருக்குரியதாக ‘சுவாதி’ நட்சத்திரத்தைக் கருதுவர் கற்றறிந்த சான்றோர்கள்.
இந்த நட்சத்திர நாளில் மழை பெய்யும்போது கடல் பரப்பில் சிப்பியானது தன் வாயினை திறந்து மேல் நோக்கி இருக்கும். அப்போது அதன் மீது விழும் மழைத்துளியே முத்தாகிறது என்ற கருத்தும் தொன்றுதொட்டு நிலவி வருகிறது.
ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர் விஷ்ணு சித்தர். மகாவிஷ்ணுவின் திருமேனிகளில் இவரை திருமுகமாக வர்ணிப்பார்கள் ஆச்சாரிய சுவாமிகள். மேலும் இவரை கருடாழ்வாரின் அம்சம் என்றும் போற்றுவர்.
மகாவிஷ்ணுவை எப்போதும் தன் சித்தத்தில் (சிந்தை) கொண்டாதாலும், இவரை மகாவிஷ்ணு அவருடைய சிந்தையில் கொண்டதாலும் ‘விஷ்ணு சித்தர்’ என்னும் திருநாமம் தாங்கப் பெற்றார்.
இவரே ஆண்டாளின் தகப்பனார் ஆவார். எனவே, பெருமாளுக்கு பெண் கொடுத்த வகையில் மாமனார் என்னும் உறவினையும் கொண்டவர் ஆவார்.
தனது கட்டளைப்படி ஸ்ரீவல்லபதேவ மன்னனின் மாபெரும் ஐயத்தைத் தீர்த்து பொற்கிழியை பெற்றுவிட்டான் தனது அத்யந்த பக்தன் விஷ்ணு சித்தன்.
“கருடா… எம்மையும் தாயாரையும் உன்மீது ஏற்றிக் கொண்டு பூலோகத்தில் இருக்கும் கூடல்மாநகர் நோக்கிச் செல்.…ம்… சீக்கிரம்…” என்று ஆணையிட்டாராம் வைகுண்டவாசியான மகாவிஷ்ணு.
யானை மீதேறி ஊர்வலமாக வரும் விஷ்ணு சித்தருக்கு இக்காட்சி தரிசனப்படுகிறது.
“பெருமானே! இந்த எளியவன் என்ன புண்ணியம் செய்தனோ?” என்று மனமுருகி, உமக்கு இந்த மானிடர்களால் கண்ணேறு பட்டுவிடக் கூடாது என்பதற்காக தயவுடன் தாயுள்ளம் கொண்டு பாடிய பாசுரமே, ‘பல்லாண்டு… பல்லாண்டு…’ எனத் தொடங்கும் பாசுரமாகும்.
எந்த ஒரு செயலையும் சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும், தன்முனைப்புடனும் செய்பவர்களுக்கு கண்ணேறு படும். அதனால் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் பின்னர் சிரம பரிகாரம் செய்ய அது தானாக சரியாகும். ‘கல்லேறு படலாம் ஆனால் கண்ணேறு படக் கூடாது’ என்ற பழமொழி இங்கு நினைவு கூரத் தக்கது.
முதலில் பாசுரத்தினை முழுமையாக சேவித்து விடுவோம். அதன் பிறகு சிறப்புகளை அறிவோம்…
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு. 1 அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. 2 வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 3 ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடும் மனமுடையீர்கள் வரம்(பு) ஒழிவந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்(கு)அறிய நமோநாராயணாய என்று பாடும் மனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே. 4 அண்டக் குலத்துக்(கு) அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர், வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே. 5 எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரி உருவாகி அரியை யழித்தவனை பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே. 6 தீயின் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 7 நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. 8 உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்தது உண்டு தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 9 எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்ததுகாண் செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 10 அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்கோன் அபிமான துங்கன் செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன் நல்வகையால் நமோநாராயணா என்று நாமம் பல பரவி பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 11 பல்லாண்டு என்று பவித்திரனைப்ப ரமேட்டியைச் சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல் நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோநாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே. 12
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
***
திருப்பல்லாண்டின் சிறப்புகள்:
திருப்பல்லாண்டு பாசுரத்திற்கு தத்துவ ரீதியாகவும், உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்காமல் அந்த நிலைக்கு முதல்முதலாக அடியெடுத்து வைக்கும் அன்பர்களுக்கு புரியும்பவகையிலும், நடப்பு வாழ்விற்குரிய சிறப்புகளை சிந்திப்போமாக.
இந்தப் பாசுரமே நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதற்பாசுரமாக தொகுப்பில் அமைத்துள்ளது.
குருநாதர்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரத்தினைச் சொல்வதற்கு முன் பிரணவத்தை ஞானிகள் மனதிற்குள் உச்சரிப்பார்கள். அதுபோல திவ்ய பிரபந்தமான ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முன் விஷ்ணு சித்தர் பாடிய பல்லாண்டு பாசுரம் பிரணவப் பாசுரமாக திகழ்கிறது என்கிறார் ஆச்சாரியர் நாதமுனிகள்.
இப்பாசுரம், எல்லா பெருமாள் கோயில்களிலும் அதிகாலை வேளையில் அரையர்கள், பக்தர்களால் மகாவிஷ்ணு முன் சேவிக்கப்படுகிறது.
பெருமாளுக்குரிய அபிஷே காலங்களில் இப்பாசுரம் பாடப்படுவதால், இதனை ‘நீராட்டுப் பாசுரம்’ என்றும் அழைப்பர்.
வைணவத்தில் பன்னிரு திருநாமங்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுமோ, அது போல இப்பாசுரத்தின் எண்ணிக்கையும் பன்னிரெண்டினைக் கொண்டது.
இப்பாசுரத்தில் பெருமாள், தாயார், பஞ்சாயுதங்கள், அவருக்குரிய திருவோண நட்சத்திரம் ஆகியவற்றின் சிறப்புகளை சொல்லிச் சொல்லி மகிழ்கிறார். மேலும், இப்பாசுரத்தினை சற்குரு நாதரே விரும்பிச் சொல்லுகிறார் என்றால், இதன் மகிமைக்கு அளவீடு உண்டோ!
இவ்வுலக மக்கள் யாவரும் உய்வு பெறும் பொருட்டு மகாமந்திரத்தை பாசுரத்தினுள்ளே பொதித்து வைத்து மும்முறை உபதேசம் செய்யும் ஞானகுருவான விஷ்ணு சித்தரின் திருவடியை தினமும் போற்றி வணங்குவோமாக.
இப்பாசுரத்தை நாள்தோறும் படிக்கும் அன்பர்களுக்கு தினந்தோறும் மகாமந்திரம் உபதேசம் கேட்ட புண்ணியத்தைப் பெறுவீர்களாக.
விஷ்ணு சித்தர் பொற்கிழி பெற்ற இடத்தை ‘மெய்காட்டும் பொட்டல்’ என்று இலக்கியங்கள் அழைக்கின்றன. மதுரை மீனாட்சியம்பிகை கோயில் பகுதியில் உள்ள இவ்விடம், ‘மேங்காட்டுப் பொட்டல்’ என்று மருவி விட்டது. இதற்கு காலப்போக்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரணக்கோனார் முயற்சியால் இவ்விடம் ‘ஜான்சிராணி பூங்கா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
விஷ்ணு சித்தருக்கு கருட வாகனத்தில் இங்கு தான் பெருமாள் காட்சி தந்தார். அதனை நினைவூட்டும் வகையில் இந்த ஐதீக விழா ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை இராப்பத்து முதல் நாள் நிகழ்வாக தற்போதும் பெரியோர்களால் நடத்தப்படுகிறது.
வில்லாண்ட வட வரையான் மணம் புணர
அட்டாங்க விமானம் என்னும்,
இல்லாண்ட புயன் கனகன் காசிபனார்
பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருரவசு மலயகேதனன்
முதலோர் தொழப்புத்தூரான்
பல்லாண்டு பாட வந்த மல்லாண்ட
தோளன் அடி பணிதல் செய்வாம்.
-கூடற் புராணம்
நான்கு யுகங்களாகவே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கூடற் பெருமாள் மீது பாடப்பட்ட அற்புதப் பாசுரமே திருப்பல்லாண்டு.
இப்பெருமான் முன் வாயார இப்பாசுரத்தை பாடி, அவரை கண்ணார சேவித்து, காலால் அஷ்டாங்க விமானத்தை 48 நாள்கள் தொடர்ந்து இடைவிடாது வலம் வருபவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது, தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
வெற்றியை வருவிக்கும் விஜயமாகிய இப்பாசுரத்தை நாள்தோறும் கேட்பவருக்கும், பாராயணம் செய்பவர்களுக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
நிறைவாக, ஒரு குறிப்பு…
ஆளுடைய பிள்ளையும், ஆளுடைய அரசும் தல யாத்திரையாக திருமறைக்காட்டிற்கு வருகிறார்கள். அப்போது வேதங்களால் கதவு அடைக்கப்பட்டு விட்ட மறைக்காடர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயிலின் நிலையைக் கண்டு, மக்கள் நேர்வழியில் சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்ற பெருநோக்கோடு கதவு திறக்க திருநாவுக்கரசரைப் பணிக்கிறார் திருஞானசம்பந்தர்.
பண்ணின் நேர் மொழியால் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியருளுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
பல நாள் மூடிய கதவு திறக்கப் பாடிய பதிகம் இது. அதுபோல வாழ்வில் பல்வேறு சூழல்களில் மூடிய கதவு திறக்க அன்பர்கள் படிக்க வேண்டிய பதிகமும் இதுவே.
இதனை நாள்தோறும் பாராயணம் செய்பவர் மீது பெருமான் இரக்கம் கொள்வார் என்பது பதிகப்பயன்.
இப்பதிகத்தின் முதல் பாடலில் முதல் எழுத்தை உச்சரிக்கும் போது மூடிய உதடு திறந்து – ப – என்று ஒலிக்கும்.
அதுபோல வினைவாசத்தால் இப்பிறவியில் கிடைக்கப் பெறாத நல்வினைகள் யாவற்றையும் அனுபவிக்கவும், மானிடர்களின் வாழ்வில் மூடிய கதவு திறக்கவும், மென்மேலும் அவர்களது வாழ்வில் வளம் சேரவும் தினமும் பாட வேண்டிய பாசுரம் ‘ப’ என்ற எழுத்தில் தொடங்கும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்பதாகும்.
இதில் இருபத்தைந்து முதல் முப்பத்தாறு இடங்களுக்குள் ‘ப’ எழுத்தினை முதல் எழுத்தாக வைத்து பெருமாளை நமக்காக சேவித்துள்ளார் விஷ்ணு சித்தர்.
உண்மையிலேயே விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் என்பதற்கு இச்சான்று ஒன்று போதாதா? அதனால்தான் ஆழ்வார்களுக்கு எல்லாம் இவரே பெரியாழ்வாராக திகழ்கிறார்.
குழந்தைகளின் துன்பம் கண்டு அது நீங்குவதற்கு பெரிதுவப்பு கொள்பவள் தாய். இவ்வுலகத்திலுள்ள உயிர்களுடைய துன்பங்களை எல்லாம் தன் ஞானதிருஷ்டியால் கண்ட விஷ்ணு சித்தர் நமக்கு மட்டுமல்ல. பெருமாளுக்கே தாயாகும் தனித்தன்மையைப் பெறுகிறார். அதனால்தான் பல்லாண்டு பாசுரத்தில் பல இடங்களில் ‘ப’ என்னும் எழுத்தினை அமைத்துப் பாடிய தாயின் அன்பு எத்தகையது என நமக்கு புலப்படுத்துகிறார் இது எவ்வளவு உயர்வானது, எவ்வளவு மேன்மை பொருந்தியது என்று சிந்திப்போம்!
நாயன்மார்கள், ஆழ்வார்கள் திருவடி வாழ்க! வாழ்க!
வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு!
$$$