-துக்ளக் சத்யா
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தமிழ்நாட்டில் நடத்தத் தொடங்கி இருக்கிறது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆயினும் இது காலத்தின் தேவையாக உள்ளது. இது தொடர்பான கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகும். இது கட்டுரை- 1; பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யாவின் முகநூல் பதிவு நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது...

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (S.I.R.) எதிர்க்கப்படுவதற்கு இரு வித காரணங்கள் இருக்கலாம்.
மத்திய பாஜக அரசு தேர்தல் கமிஷனின் உதவியோடு தனக்கு சாதகமாக திருத்தங்களைச் செய்து விடும் என்ற அச்சம் ஒரு காரணம்.
நாம் ஏற்கெனவே செய்துள்ள முறைகேடுகளைக் கண்டுபிடித்து, நமக்கு ஆதரவான வாக்காளர்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் மற்றொரு காரணம்.
இப்பணியில் ஈடுபடுபவர்கள் பாஜகவினரோ, மத்திய அரசு ஊழியர்களோ கூட அல்ல. பெரும்பாலும் அந்தந்த மாநில அரசு ஊழியர்கள்தான்.
அரசு ஊழியர்களின் பணி முறைகேடுகளைக் களைவதே தவிர, முறைகேடுகளைச் செய்வது அல்ல. செய்கிற வேலையில் திறமைக்குறைவு, அலட்சியம் இருந்தாலும், திட்டமிட்டு அரசியல் ரீதியான முறைகேடுகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.
அரசு ஊழியர்களுக்கு கட்சி அபிமானம் இருக்கலாம். கட்சிக்காரர்களாக இருக்க மாட்டார்கள். இது பொதுவான கருத்து.
எனவே, தேர்தல் கமிஷனை நம்ப மாட்டோம் என்பது ஏற்கத்தக்க வாதம் ஆகாது. அதனால், இரண்டாவதாக குறிப்பிட்ட காரணமே முக்கியமானது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தும் இப்பணி முதல் முறையாக செய்யப்படுவதல்ல. பல முறை செய்யப்பட்டுள்ளது என்பதால் எந்த தவறான நோக்கமும் இருக்க முடியாது.
தவிர, நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை, அந்நிய நாட்டினரின் ஊடுருவல். அவர்கள் பலவிதமான ஆதாரங்களையும் பெற்று உரிமையோடு இங்கு வசிக்கவும் தொடங்கி விடுகின்றனர். இத்தகையவர்கள் தங்கள் நாட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை எந்த நாடும் விரும்பாது.
நம் நாட்டு மக்கள் பிரதிநிதிகளை இன்னொரு நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள் தேர்ந்தெடுப்பதை விட அவலமான நடைமுறை வேறு ஒன்று இருக்க முடியாது.
எனவேதான் மத்திய அரசு இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. முறைகேடாக பட்டியலில் இடம் பெற்றவர்களை நீக்குகிறது.
இதனால் தவறுதலாக பாதிக்கப்படும் நியாயமான வாக்காளர்கள், கலெக்டர் அல்லது தேர்தல் கமிஷனிடம் முறையிட உரிமை உண்டு. கோர்ட் மூலமும் நீதி பெறலாம்.
தேர்தல் கமிஷன் குறிப்பிட்ட 11 ஆவணங்களில் ஒன்றைக் காட்டினாலும் போதும். எதுவுமே இல்லையென்றால்தான் பெயர் நீக்கப்படும்.
ஆதார் கார்டுகளில் போலிகளும் கலந்திருந்ததால் பீஹாரில் முதலில் அது ஏற்கப்படவில்லை. பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அதுவும் ஏற்கப்பட்டது.
அதனால் அநீதி நடக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் அவசியமானது. ஒத்துழைப்போம்.
$$$