-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதத் தொடங்கினால், வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கின்றன. வித்தியாசமாக சிந்திக்கும் இவரது கருத்துகள் அனைவராலும் ஏற்கப்படுவதில்லை. ஆனால், இவரது குரல் சமுதாயத்தின் ஒரு குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தூய இலக்கியம் என்பது எந்த அதிகார சித்தாந்தத்துக்கும் ஆதரவானது அல்ல என்பதால், இலக்கியவாதியால் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சித்தாந்தத்துக்கும் அமைப்புக்கும் இசைவாக நடந்துகொள்ள முடியாது. அப்படி நடந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அந்த வகையில் இலக்கியவாதி அரசியல் தாண்டிய தளத்தில் செயல்படுவதுதான் சரி.
ஆனால், அப்படி தூய இலக்கிய கிரஹம் – தனித் தீவு என்பது சாத்தியமில்லை. படைப்புக்கு வெளியே அவர் ஒரு சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் வாழ்கிறவர் என்பதால், அவை தொடர்பாக அவர் சிலவற்றைச் செய்தாகத்தான் வேண்டும். அரசியலற்று இருப்பேன் என்பதுமேகூட தந்திரமான அரசியல்தான். தமிழகத்தில் அது அப்படித்தான் இருக்கிறது. இந்திய அறிவுப்புலத்திலும் அது அப்படித்தான் இருக்கிறது.
நடுநிலை என்று ஒரு போலியான நிலைப்பாட்டை இலக்கியவாதிகள் எடுக்கிறார்கள்.
அதாவது எல்லார் பக்கமும் தப்பு இருக்கும் என்பதால் எல்லா தப்பையும் பேசுவேன். அல்லது எந்தத் தரப்பு தப்பையும் பேச மாட்டேன் என்பதாக, நடுநிலை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த சமத்துவ கரிபூசுதல் – பேலன்ஸிங் ஆக்ட் என்பது பச்சை அயோக்கியத்தனம்.
தமது ஆகச் சிறந்த கலைப்படைப்புகளிலும் இந்த பேலன்சிங் ஆக்டையே தந்திரமாகக் கடைப்பிடித்தும் வந்திருக்கிறார்கள். படைப்புகள் பற்றிய விமர்சனம் தனியாகப் பார்க்கப்பட வேண்டியது. படைப்புகள் தாண்டிய செயல்பாடுகள் பற்றியே இப்போது பேசலாம்.
உண்மையில் நடுநிலை என்ற ஒன்று இல்லவே இல்லை. இருக்கவும் முடியாது.
‘கரூர் வெல்ப்ளாண்ட் ஆக்ஸிடென்ட்’டில் ஆதிக்க சக்தியின் அல்லக்கைகள், உடன்பிறப்புகள் எல்லாம், எழுத்தாளர், செயல்பாட்டாளர் என்ற போர்வையில் எழுதிய அறிக்கை, எந்தவித நடுநிலை வேடமும் இல்லாமல் முழுக்க முழுக்க அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு முரசொலியைப் படித்துவிட்டு அல்லது முரசொலி எடிட்டர் எழுதிக் கொடுத்ததை தமது அறிக்கையாக வெளியிட்ட மலினமே.
அன்பில் மகேஷின் ஆஸ்கர் நடிப்பு அனைவருக்கும் தெரிந்திருந்தது. இந்தக் கும்பலின் இலக்கிய நபும்சகம் ஊருக்குத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும்போது இப்படியான மிதப்பு இருக்கத்தான் செய்யும்.
படைப்பாளர் மற்றும் தர்மப் போராளிகள் சங்கமம் வெளியிட்ட அறிக்கையில் அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. அதி முக்கியமாக கருத்தியல் பயங்கரவாதிகளின் கூழைக் கும்பிடை அம்பலப்படுத்தியிருக்கிறது.
இலக்கியத் தரப்பில் இருந்து ஜெயமோகன், ‘அவாளும் தப்பு; இவாளும் தப்பு’ என்று இரண்டு ஸ்கூட்டர் லைட்டுக்கு நடுவே வண்டியை ஓட்டிச் செல்லும் மாலைக் கண் நோயுடன் புறப்பட்டு லாரியில் மோதி நிற்கிறார்.
பிரச்சினை இதில் மட்டும் அல்ல; இதிலும் அடிப்படைப் பிரச்சினை வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.
எல்லா மதமும் அன்பையே போதிக்கிறது என்பது இஸ்லாமிய, கிறிஸ்தவ அராஜக சக்திகளுக்கு உகந்த நடுநிலை வாக்கியம்.
எல்லா அடிப்படைவாத இயக்கங்களும் பயங்கரமானதுதான் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ்., சர்ச் மாஃபியாவின் மிரட்டலுக்கு பயந்து சொல்லப்படும் வாக்கியம் தான்.
எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியானதுதான் என்பதும் ஒருவகையான மட்டையடி வாக்கியமே.
ரமேஷ் பிரேம் ‘குழந்தைகளிடம் இருப்பதும் பாசிஸம்தான். ஹிட்லரிடம் இருந்ததும் பாசிஸம் தான்’ என்பதுபோல் அடித்த மட்டையடி என்பது இதன் உச்சம். இந்த தூய இலக்கிய கும்பலின் இந்த வெள்ளையடிப்புக்குப் பின்னால் இருப்பது பச்சை சந்தர்ப்பவாதம். உண்மையான மற்றும் பயங்கரமான அடிப்படைவாதத்தை எதிர்க்கத் துணிச்சல் இல்லாமல் ‘எல்லாருமே கெட்டவங்கதான்’ என்று நெளிந்து குழைந்து போலி அறச்சீற்றம் காட்டும் அவலம்.
அளவு என்பது மிகவும் முக்கியம். விளைவு என்பது முக்கியம்.
ஜிஹாத் போர் உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்களைக் கொன்று குவித்திருக்கிறது. சிலுவை அராஜகம் அதைவிடத் தந்திரமாக அழித்திருக்கிறது. கம்யூனிஸம், நாஜிஸம் எல்லாம் சற்றும் குறையாத அளவுக்கு வன்முறைத் தாண்டவமாடியிருக்கின்றன.
இந்துத்துவம் அவற்றோடு ஒப்பிடும்போது நூறில் ஒரு பங்கு வன்முறையை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறது. அதுவுமே தனது ராஷ்டிரத்தில் தனது தர்மத்துக்கு தீங்கு ஏற்படும்போது அதீதமாக எதிர்வினையை சில நேரங்களில் ஆற்றி வந்திருக்கிறது; எந்த நாட்டுக்கும் சென்று யார் குடியையும் குலத்தையும் அழிக்கவில்லை. ஆனால் இந்த மட்டையடி இலக்கியவாதம் என்ன சொல்லுமென்றால், இந்துத்துவமும் பாசிஸமே; இந்து மதமும் அடக்குமுறையே.
குண்டுசியால் குத்தினாலும் தப்புதான். கத்தியால் குத்தினாலும் தப்புதான். ஆடுமாடை வெட்டிக் கொல்வதும் வெண்டைக்காயை வெட்டிச் சாப்பிடுவதும் தப்புதான். தாவரத்துக்கும் உயிர் உண்டே என்று அதீத அறம் பேசுவார்கள்.
இவை முழுக்கவும் அராஜக சக்திகளின் மிரட்டலுக்குப் பயந்து போடும் போலி வேடமே.
எல்லா மதங்களையும் சம்மதமாகப் பார்க்காத எந்த மதமும் யாருக்கும் சம்மதமில்லை.
இந்து மதம் அன்பை போதிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. கிறிஸ்தவம் அடுத்த இடத்தில் இருக்கிறது. இஸ்லாம் அடுத்த இடத்தில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகவும் அபாயகரமானது. கிறிஸ்தவ அராஜகம் அதைவிட மோசமானது. இந்து அடிப்படைவாதம் மோசமானது என்றாலும் மிக மிக மிதமானது என்று சொல்ல வேண்டும்.
தீண்டாமை குற்றம்; மத மாற்றம் பெருங்குற்றம். மத அழிப்பு அதைவிடக் குற்றம்.
ஆனால், நம் தேசமே நடுநிலைப்பித்து பிடித்து அலைகிறது. தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்வதில் முதலிடத்தில் நாமே இருக்கிறோம். உண்மையில் இது நடுநிலைமை அல்ல. பாசிஸத்துக்கான மறைமுக ஆதரவு நிலைப்பாடே.
இந்து இயக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஜாதிக் கொடுமைக்கு எதிராகப் பேசியதில் பத்தில் ஒரு பங்கு கூட ஆப்ரஹாமிய மதவெறிக்கு எதிராகப் பேசியதில்லை. சமபந்தி, ஆலய நுழைவு, கலப்புத் திருமணம் தொடங்கி இந்து சீர்திருத்ததில் ஈடுபட்ட இந்துத்துவர்களில் ஆயிரத்தில் ஒருவர் கூட தாய்மதம் திரும்ப வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை.
2000 ஆண்டுகளாக பிராமணரல்லாதாரை பிராமணர் படிக்கவிடவில்லை என்பதுதான் நீதிக்கட்சி, தி.க, திராவிட அரசியலின் அடிப்படை வன்மக் கூற்று. ஈ.வெ.ரா. இயக்கத்துக்கு அன்று ஒரு தேவை இருந்தது என்பதுதான் இந்து அரசியல் கட்சிகளின் வெள்ளையடிப்பு.
எதிரிகளைத் தாக்குவதில் மிதவாதம்; சொந்த தவறுகளை பூதாகரப்படுத்தி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வதில் அதி தீவிரம் என்பதாகவே இந்து சக்திகள் இருக்கின்றன.
காந்தியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் இந்த இந்து சீர்திருத்தச் செயல்பாடுகளில் ஒரு வித்தியாசமும் கிடையாது. காந்தி தன்னுடைய போலி அஹிம்சையை இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாத அப்பீஸ்மென்டாக வெளிப்படுத்தினார். இந்து இயக்கங்கள் அந்தத் தவறைச் செய்யவில்லை. மற்றபடி காந்தியவாதியே அதி சிறந்த இந்துத்துவர். இந்துத்துவரே அதி சிறந்த காந்தியவாதி. இருவரும் இந்துக்களுக்கு கருத்தியல் தளத்தில் குற்ற உணர்ச்சிகொண்டு திரியும் நிலையையே உருவாக்கியிருக்கிறார்கள்.
நாம் செய்த சிலவற்றில் தவறு உண்டு என்பதற்கும், நாம் செய்ததெல்லாம் தவறுதான் என்பதற்கும் இடையிலான வித்தியாசம், இவர்கள் இரு தரப்பிலும் மிக மிகக் குறைவுதான். நம்மிடம் இருக்கும் தவறையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்ற அதீத அற வேடம்.
ஓர் இலக்கியவாதி இந்த நடுநிலை வேடத்தைப் போடவே கூடாது. இந்துத்துவராவது இந்து ஒற்றுமை என்ற அரசியல் சார்ந்து இந்து சீர்திருத்தத்தை முன்னெடுக்க நினைக்கிறார். இலக்கியவாதிக்கு அது அவசியமில்லை. அவர் இந்து ஜாதிய அம்சங்களில் இருக்கும் நன்மைகளையும் மிதமான அணுகுமுறையையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.
இந்து மதத்தில் இருக்கும் ஜாதிக் கொடுமை என்பது உலக மனித சமூகங்களில் இருந்தவற்றில் மிகவும் குறைவான ஒடுக்குமுறையே. அது நிச்சயம் மாற்றப்படவேண்டும். நவீன காலத்தில் அது தானாக மாறியும் வருகிறது. ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ சமூகம் அதன் மாற்று அல்ல.
‘தீண்டாமை பெரும் குற்றம்’ என்பது ஒரு முழு வாக்கியம் அல்ல; மத மாற்றத்தைவிட மோசமான குற்றம் அல்ல என்று சேர்த்துச் சொன்னாலே வாக்கியம் முடிவுறும்.
இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மாறியிருப்பவர்கள் இந்து மதத்துக்குத் திரும்புவதே நியாயம். அவர்களுக்காக இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் இருக்கும் நல்லம்சங்களைத் தேடிச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள் என -வர்ணாஸ்ரமம் இருந்திராத அல்லது பெளத்தத்தால் அழிக்கப்பட்ட பகுதிகளில்தான் கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது.
விவசாயம் பிரதானமாக இருந்த சமவெளிப் பகுதிகளில் வர்ணாஸ்ரமம் ஆதிக்கம் செலுத்தியது. அங்கு மத மாற்றம் ஒப்பீட்டளவில் குறைவு. எனவே வர்ணஸ்ரமக் கொடுமையே மதமாற்றத்துக்குக் காரணம் என்ற அரசியல் புரட்டை ஏற்கத் தேவையில்லை.
தடம் மாறிய வர்ணாஸ்ரமத்துக்கு மாற்று – மத மாற்றம் அல்ல. தூய வர்ணாஸ்ரமே அதன் தீர்வு என்று சொல்ல வேண்டும்.
நடுநிலை என்ற பெயரில் ‘கீதையும் தவறு; வர்ணாஸ்ரமும் தவறு; ஜாதியும் தவறு’ என்று கிறிஸ்தவ, இஸ்லாமிய வசனங்களை மாற்றிப் பேசக் கூடாது.
தேவாசுர யுத்தத்தில் நடுநிலை என்பது அசுரர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவே அர்த்தப்படும்.
இன்று தேவர்கள் தரப்பு என்று எதுவும் இல்லை. தேவர்களிலும் அசுரத்தனம் கலந்துவிட்டிருக்கிறது. அதையும் எதிர்க்க வேண்டும் என்பது உண்மையே. கலியின் நிலைமை இப்படித்தான் ஆகும். ஆனால் அப்போதும் அரக்கர் கூட்டத்தை பத்துமுறை திட்டிவிட்டு தேவர்களின் குறைகளை ஒருமுறை திட்ட வேண்டும்.
மாவு புளித்துவிட்டதென்று தெருமுனைக்கடை வியாபாரியைத் திட்டுவதென்றால், மாவு கெடாமல் இருக்க வேதிப் பொருள் கலக்கும் கார்ப்பரேட்டையும் திட்டவேண்டும். ரெண்டு பேரும் ஒரே தப்புதான் செய்கிறார்கள் என்று உருளவும் கூடாது.
எனக்கு படம் எடுக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் லட்சங்களைக் கொடுத்துவிடும் திரையுலகம் சிறந்தது என்று சொல்லும்போது ‘என்னையும் அந்த அயோக்கியன் பாலியல் வன் கொடுமை செய்தான்’ என்ற இயக்கத்தின் மூலம் சிறையில் போடவேண்டியவன்கள் கையிலிருந்துதான் அதைப் பெறுகிறேன் என்று சொல்லும் துணிச்சலும் இருக்க வேண்டும்.
இந்த உலகில் யார் அவுசாரித்தனம் செய்யவில்லை என்ற நெளிச்சிரிப்புக்கு இலக்கிய முலாம் பூசக் கூடாது.
ஓர் இலக்கியவாதி தனது கலைத் திறமை முலம் கிடைத்த செல்வாக்கை, மலின அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் பேலன்ஸிங் ஆக்டில் ஈடுபடக் கூடாது.
அது இலக்கியவாதிக்கு மட்டுமல்ல; அரசியல் இயக்கங்களுக்கும் பொருந்தும்.
$$$