-தேவராஜ்
தஞ்சமடைந்த புறாவைக் காக்க தனது உடலின் தசையை அரிந்து தரத் துணிந்தவர் சிபி சக்கரவர்த்தி. புராணங்கள் பாராட்டும் இவரை ‘சிபி சோழன்’ என்று போற்றும் மரபு தமிழகத்தில் உண்டு. இவரைப் பற்றிய இலக்கிய குறிப்பு இங்கே…

செந்தமிழ் இலக்கியம், இதிகாச நாயகனான சீரைபுக்க செம்பியனின் புகழ் பாடவும் தயங்கவில்லை! தன்னுயிருக்கும் மேலாய் மன்னுயிர் காக்கத் தன்னையே தரத் துணிந்த மன்னன் சிபி. அவனது கதை சங்க இலக்கியத்தில் பதிவாகி உள்ளது.
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
-புறநானூறு:37
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே ......
-புறநானூறு: 39
'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,
தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
தபுதி அஞ்சிச் சீரை புக்க,
வரையா ஈகை உரவோன்.....'
-புலவர் தாமப்பல் கண்ணனார்; புறநானூறு: 43
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை....
-புறநானூறு: 46
விஷ்ணு புராணமும், பாகவத புராணமும் சிபி சக்கரவர்த்தியின் சிறப்புகளைக் கூறுகின்றன. மகாபாரத பர்வங்களும் சிபியின் புகழ் பாடுகின்றன. சிபியின் புதல்வர்களே மத்ர, கேகயே தேசங்கள் உருவாகக் காரணமாக இருந்தவராவர்.
‘சிபி’ சைப்ய எனத் தத்திதம் பெறும்; சிபி வழிவந்த சைப்ய மன்னன் பாரதப் போரில் கலந்துகொண்டதாக கீதை முதல் அத்யாயம் வாயிலாக அறிகிறோம் –
புருஜித்குந்திபோ₄ஜஶ்ச *ஶைப்₃யஶ்ச நரபுங்க₃வ:
பாண்டவர் அணி சார்ந்த சைப்யன் ஒரு மஹாரதன்.
சைப்யனின் தமிழ் வடிவம் ‘செம்பியன்’.
$$$