-ராம் மாதவ் நேர்காணல்
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது... பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...

கேள்வி: ‘ஷாகாவிலிருந்து தேசம் வரை’ என்ற உங்களுடைய சமீபத்திய நூலில் கடந்த பல ஆண்டுகளில் சங்க பிரசாரகர்கள் நிகழ்த்திய உரைகள் சுவாரசியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன . இதற்கான சிந்தனை உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
பதில்: ஆர் எஸ் எஸ் அமைப்பைப் புரிந்து கொள்வது சற்று சிரமம். தவறாகப் புரிந்து கொள்வது மிகவும் எளிது. தவறான புரிதலுக்கு காரணம் ஆர்எஸ்எஸ் எதற்காக இருக்கிறது என்பதைப் பற்றியோ அதன் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியோ போதுமான பதிவுகள் இல்லை என்பதேயாகும்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு இதுபோன்ற இலக்கியங்கள் கிடைக்கின்றன. ஆனால் பொது ஜனங்களுக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு இலக்கியங்களே படிக்கக் கிடைக்கின்றன. இது தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது. எனவேதான் ஆர்எஸ்எஸ்ஸின் முதல் தலைவரும், 1925 இல் அதனை ஆரம்பித்தவருமான ஹெட்கேவார் தொடங்கி, இன்றுள்ள, அதன் ஆறாவது தலைவர் மோகன் பாகவத் வரையிலான தலைவர்களின் குறிப்பிடத்தக்க உரைகளைத் தொகுத்து முன் வைத்துள்ளோம்.
கேள்வி: எந்த ஒரு அமைப்பும் நூறு ஆண்டு காலம் செயல்படுவது சுலபமான விஷயம் அல்ல. ஆர் எஸ் எஸ் எப்படி இதற்கு தன்னை தகவமைத்துக் கொண்டது என்பதைப் பற்றி கூற முடியுமா ?
பதில்: ஆர்எஸ்எஸ்ஸின் சிறப்பே அது நூறு ஆண்டு காலம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்எஸ்எஸ் தோன்றுவதற்கு ஓராண்டு காலம் முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நூறு ஆண்டு காலத்தில் ஆர்எஸ்எஸ்ஸைப் பாருங்கள். அது தேசத்தின் மைய நீரோட்டமாகியுள்ளது மட்டுமன்றி, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு காரணம் ஆர்எஸ்எஸ் ஒரு கருத்தியலுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளவில்லை. கருத்தியல் சிறை என்றால் ஒரு சட்டகத்துக்குள் அல்லது வரம்புக்குள் தன்னை வைத்துக் கொள்வதாகும். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு கருத்தியல் உள்ளது. அந்தக் கருத்தியலுக்குள் அதில் நிரந்தரமாக சிக்கிக் கொண்டுள்ளதால் அந்தக் கட்சி இன்று தேங்கி நிற்கிறது. காரணம் அந்தக் கருத்தியல் இன்றைய காலத்திற்கு தேவையற்றதாகிவிட்டது. அதன் விளைவாக அந்தக் கட்சியும் தேவையற்றதாகிவிட்டது.
ஆர்எஸ்எஸ் புதிய கருத்தியலை பிரசாரம் செய்வதாக எப்போதும் சொல்லியதில்லை. இந்தப் புத்தகத்தில் உள்ள உரைகளில் எங்கள் சிந்தனைப் போக்கு, தொன்மையான ஹிந்து பண்பாடு, வரலாறு, வரலாற்று அனுபவங்கள் மற்றும் நாகரிகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது. பண்டைய ஹிந்து நாகரிகத்தின் வரலாற்றில் இருந்து நல்ல அம்சங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். அது பற்றி ஹிந்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டுகிறோம்.
ஆர்எஸ்எஸ் இன்றைய காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கிறது. இதுதான் இந்த அமைப்பின் நீண்ட ஆயுள் மற்றும் வளர்ச்சியின் ரகசியம். இது பல எதிர்ப்புகளை எதிர் கொண்டுள்ளது. மற்ற எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் இவ்வளவு எதிர்ப்புகளில் சரிந்து போயிருக்கும்.
கேள்வி: ஜாதியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: ஆர்எஸ்எஸ்ஸை ஆரம்பித்த கேசவ பலிராம் ஹெட்கேவாரின் கண்ணோட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. அவர் ஆர்எஸ்எஸ்ஸைத் தொடங்கிய போது ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் காரரின் முதன்மையான நோக்கம் தேச விடுதலை தான் என்றார். குருஜி கோல்வல்கர் அதற்கு ஆன்மிக , சமயப் பரிமாணத்தை அளித்தார். பாளாசாஹேப் தேவரஸ் அதன் மூன்றாவது தலைவராக ஆனபோது சமூகப் பரிமாணத்தைச் சேர்த்தார். முதன்முதலில் அவர் தான் “ஜாதி என்ற சமூக ஏற்பாடு தன் பயன்பாட்டை இழந்துவிட்டது” என்றார்.
கோல்வல்கருக்கோ சற்றே மாறுபட்ட கருத்து இருந்தது. அவர் இப்போதுள்ள ஜாதி முறைமையைப் புகழவில்லை. ஆனால் அது பண்டைய வர்ணாசிரம முறையிலிருந்து மாறுபட்டது என்பதை சுட்டிக்காட்ட முனைந்தார். “பல தீமைகள் புகுந்ததால் தான் ஜாதி முறைமை இன்று சீரழிந்துள்ளது” என்றார். ஆனால் தேவரஸ் கறாராகவும் தெளிவாகவும் தன் நிலையை விளக்கி விட்டார். அது மட்டுமன்றி அதற்கும் ஒரு படி மேலே போய் “ஜாதி முறைமை பயனற்று போய்விட்டது. அது ஒழிக்கப்பட வேண்டும்” என்று சொன்னார்.
அது ஆர்எஸ்எஸ்ஸுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியோரிடையே நலத்திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியது. 1990 களிலும் 2000 துவக்கத்திலும் ஆர் எஸ் எஸ் தனது சேவைத் திட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டது.
இப்போது பாகவத் தலைமையில் ஆர்எஸ்எஸ் மிகவும் வெளிப்படைத் தன்மை கொண்ட இயக்கமாக ஆகி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு தலைவரும் கருத்தியல் சட்டகத்துக்குள் அடைபட்டு விடாமல் புதிய விஷயங்களை சேர்த்துக்கொண்டே வருகிறார்கள். இது அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்றும் அதை பயனுள்ள இயக்கமாக வைத்திருக்கிறது.
கேள்வி: இட ஒதுக்கீடு பற்றி…..?
பதில்: இட ஒதுக்கீடு பற்றி ஆர்எஸ்எஸ்ஸின் பார்வை மிகவும் தெளிவானது. இன்று நம்முடைய சமுதாயத்தில் ஜாதி வேற்றுமைகளை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதில் அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், வேற்றுமைகள் இருக்கும் வரையில் சமுதாயத்தில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு ஆதரவு அதிகமாகத் தேவைப்படுகிறது. அந்த வகையில் இட ஒதுக்கீடு என்று முக்கியமான விஷயம். அது தொடர வேண்டும்.
கேள்வி: மோகன் பாகவத் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். நான் பிகாரில் இருந்தேன். அங்கு 2.1 பற்றி பேசுகிறார்கள்……
பதில்: மக்கள்தொகை இயலை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள வேண்டும். 2.1 என்பது சராசரி மக்கள் தொகை வளர்ச்சி. ஒன்பது குடும்பத்தில் தலா இரண்டு குழந்தைகள் இருந்தால் அதன் சராசரி 2.1 ஆகும். இன்று நம்முடைய மக்கள் தொகை வளர்ச்சி 2.1 விட குறைந்து 1.9 ஆக உள்ளது. 2.1 என்ற சராசரியை நாம் பராமரித்தால் நம்முடைய சமுதாயத்தில் போதுமான இளைஞர் சக்தி இருக்கும். ஆனால் இன்றுள்ள வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் போது அடுத்த இருபது ஆண்டுகளில் நம்மிடம் போதுமான இளைஞர்கள் இருக்க மாட்டார்கள்.
பல நாடுகளில் இந்த பிரச்சினை உள்ளது. கடந்த முப்பதாண்டு காலமாக குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பதை பின்பற்றிய சீனா இன்று மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்துகிறது. இன்று நம் நாட்டில் வளர்ச்சி விகிதம் 1.9 என்று குறைந்துள்ளதால் பாகவத் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறார். எல்லா பெண்களும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நாங்கள் கூறவில்லை. அது மட்டுமன்றி இது ஒரு ஆலோசனைதான்.
கேள்வி: மதத்தையும் அறிவியலையும் ஆர்எஸ்எஸ் எப்படி இணைக்கப் பார்க்கிறது ?
பதில்: நாங்கள் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றுபவர்கள். அறிவியலுக்கு ஒவ்வாத விஷயங்களை மதத்தின் பெயரால் புனிதப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார். ஹிந்து மதத்தில் உள்ள ஆன்மிக உண்மைகள் அறிவியல் பூர்வமானவை. இதில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், ஹிந்து மதம் சொல்லும் சில விஷயங்களை அறிவியல் இன்னும் கண்டடையவில்லை என்பதுதான். இதுவரை அறிவியல் சென்றடையாத சில தளங்களை ஹிந்து ஆன்மிகமும் ஹிந்து சிந்தனையும் சென்றடைந்துள்ளன.
எச். ஜி. வெல்ஸ் விண்கலன்களைப் பற்றி நாவல் எழுதிய போது விண்கலங்களே இல்லை. ஆனால் இன்று நம்மிடம் விண்கலன்கள் உள்ளன. எனவே சில நேரங்களில் ஆன்மிகமும் மதமும் அறிவியலைக் கடந்து செல்லும்.
கேள்வி: ‘முஸ்லிம்களும் ஹிந்துக்களே’ என்று ஆர்எஸ்எஸ் சொல்கிறது. அப்படி இருக்க ஹிந்து பெண்கள் முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்வதில் ஏன் பிரச்சினை எழுகிறது ?
பதில்: மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போல இங்கு இல்லை. அங்கு முஸ்லிம்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். இங்குள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களில் 99.9 சதவீதம் பேர்கள் இந்திய இனத்தினர். ஏதோ ஒரு காலகட்டத்தில் மதம் மாறியவர்கள். எனவேதான் நாங்கள் “நீங்கள் கடவுளை பின்பற்றும் வழியை மாற்றிக் கொண்டீர்களே தவிர, உங்கள் வரலாற்றையோ கலாச்சார வேர்களையோ மாற்ற முடியாது” என்று சொல்கிறோம்.
கேள்வி: ஹிந்துவாக பிறக்கத்தான் முடியும் என்று தானே சொல்கிறார்கள்…….
பதில்: தாய் மதம் திரும்ப எங்களிடம் செயல்திட்டம் உள்ளது. ஆனால் அதை ஆசை காட்டியோ அச்சுறுத்தியோ செய்வதில்லை. விலகிச் சென்ற ஒருவர் விருப்பப்பட்டு தொன்மையான நம்பிக்கைக்கு மீண்டும் வர வேண்டுமென்றால் அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.
இது இரு வழிப்பாதை. ஆனால் இங்குள்ள சிறுபான்மையினத் தலைவர்கள் அதை ஏற்பதில்லை. அவர்கள் ஹிந்துக்கள் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவும் மாற வேண்டும் என்கிறார்கள் . திரும்பிப் போவதை ஏற்பதில்லை. எந்த வகையில் போனாலும் அது ஆசைக்கோ அச்சுறுத்தலுக்கோ ஆட்பட்டு இருக்கக் கூடாது.
இதை நீங்கள் ஏற்பதில்லை. எனவேதான் நாம் அனைவரும் ஒரே கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. நாங்கள் ‘ஹிந்து’ என்கிறோம். நீங்கள் ‘பாரதிய’ என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்தியா பல்வேறு வகைப்பட்ட சமுதாயங்களைக் கொண்டது. வெவ்வேறு மதங்களிடையே நடக்கும் திருமணம் ‘லவ் ஜிஹாத்’தாகி உள்ளது. வேறு ஜாதி திருமணம் சமுதாயத்தில் கொத்தளிப்பை ஏற்படுத்தவில்லையா?
கேள்வி: உங்கள் புத்தகத்தில் உள்ள ஒரு உரையில் ஜாதி கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க வேண்டுமென கூறுகிறதே?
பதில்: இந்த விஷயங்களை கவனமாக அணுக வேண்டும். மக்கள் சதித் திட்டம் என்று கருதி எதிர்வினையாற்றலாம். கேரளத்தில் ‘லவ் ஜிஹாத்’ விஷயத்தை எழுப்பியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? அதை முதலில் எழுப்பியவர்கள் கிறிஸ்தவ அமைப்பினர். பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமண ஆசை காட்டி எங்கள் மதத்தைச் சேர்ந்த பெண்களைக் கவர்கிறார்கள் என்றனர். நாங்கள் உண்மையான மதக்கலப்பு மற்றும் ஜாதிக் கலப்பு திருமணத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கிறோம். அதேசமயம், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென திறந்த மனத்துடன் கூறுகிறோம்.
கேள்வி: ஆர்எஸ்எஸ்ஸில் பெண்களின் பங்கு என்ன?
பதில்: இரு வேறு பகுதிகளாக இதைப் பார்க்க வேண்டும். ஒன்று, அமைப்பின் செயல்பாடுகள் என்ற வகையில் ஆர்எஸ்எஸ் ஷாகாக்கள் காலை ஆறு மணிக்குத் தொடங்குகின்றன. பெண்களுக்கு தனியான ஷாகாகள் உள்ளன. இதை ஏற்றத்தாழ்வாக கருதக் கூடாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களது இயல்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இன்றைய ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தனை மற்றும் சமூகச் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் ஆண்டுக் கூட்டங்களில் 15 % இல் இருந்து 20 % பேர் பெண்கள். சமீப ஆண்டுகளில் இது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஆர்எஸ்எஸ்ஸுக்கு நல்லது. இதனால் பெண்களைப் பற்றிய பார்வை மிகவும் முற்போக்கானதாக மாறி வருகிறது.
கேள்வி: பாலினத்தைப் பற்றிய ஆர்எஸ்எஸ்ஸின் பார்வை பழமையானது. இன்றைய மேற்கத்திய பெண்ணிய முன்மாதிரிகள் அதற்கு சவால் அளிப்பதாக உள்ளது. அது இந்தியாவில் எடுபடாது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா?
பதில்: மேற்கத்திய பெண்ணிய அமைப்புகள் மேற்கத்திய அனுபவத்தின் அடிப்படையில் எழுந்தவை. இந்தியாவில் அதே போன்ற அனுபவங்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் பெண்கள் எப்போதும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டு, மதிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.
நம்முடைய சமுதாயத்தில் சில தீமைகள் நுழைந்து விட்டன என்பது உண்மைதான். அதனால் பெண்கள் சில நேரங்களில் நெருக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சில தசாப்தங்களாக அல்லது சில நூற்றாண்டுகளாக நம்மிடையே ஆணாதிக்க மனப்பான்மை வளர்ந்துள்ளது……..
கேள்வி: இங்குதான் மனு ஸ்மிருதி வருகிறது……
பதில்: நான்கு சூழ்நிலைகளில் பெண்கள் கணவனை விவாகரத்து செய்யலாம் என்று மனு ஸ்மிருதி கூறுவது உங்களுக்குத் தெரியுமா? இதை வேறெந்த மதம் அனுமதிக்கிறது என்று நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். புராதன இந்திய நூல்களை இன்று எளிதாக விமர்சிக்கிறார்கள்.
ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பெண்கள் சுதந்திரமாகவும் வலிமையாகவும் இருந்துள்ளார்கள். சீதையையும் திரௌபதியையும் பாருங்கள். அவர்களை நாம் மதிப்புடனே காட்டியுள்ளோம். காலப்போக்கில் சில தீமைகள் நுழைந்து விட்டன என்பது உண்மைதான். இங்குதான் மனு ஸ்மிருதி பற்றிய பிரச்சினை எழுகிறது. அதில் உள்ள ஒரு ஸ்லோகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
‘கஷ்டமான சூழ்நிலையில் தேவைப்பட்டால் ஆண்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்று அது சொல்கிறது. இதை நாம் விவாதிக்கலாம். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை விலக்கி விடலாம். சில சாரமான நம்பிக்கைகளைத் தவிர இந்திய வரலாற்றில், இந்திய கலாச்சாரத்தில் எந்த நூலும் சாஸ்வதமானது அல்ல. அவை மாற்றப்படலாம். நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் உள்ள போதிலும், நிர்பயா சட்டத்தினால், பெண்கள் மீதான தாக்குதல்கள் நின்று விட்டதா? பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை சமுதாயத்திற்கு சொல்லித் தராததால் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.
கேள்வி: இது பற்றி ஆர்எஸ்எஸ் என்ன செய்யப் போகிறது? பெண்கள் விஷயமாக அதிகமான அழுத்தம் எழுந்துள்ளது. அவர்களும் தீவிரமாகச் செயல்படுகிறார்கள்.
பதில்: பாலினத்தில் உயர்வு- தாழ்வு கிடையாது. பெண்களை தங்கள் செயல்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அதிகமாக ஈடுபடுத்தி வருகிறது. எங்களுடைய சகோதர அமைப்புகளில் ஏராளமான பெண்கள் பங்கேற்கிறார்கள். நாங்களும் பெண்களை பெரிய அளவில் பங்கேற்குமாறு அழைக்கிறோம். தேசத்தை மறு உருவாக்கம் செய்வதிலும் சமுதாயத்தை மீள்கட்டமைப்பதிலும் பெண்களுக்கு சரிசமமான பங்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
கேள்வி: மறு உருவாக்கம் பற்றிப் பேசும்போது இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக நீங்கள் எப்படி உருவகிக்கிறீர்கள்?
பதில்: சுதந்திரத்திற்குப் பிறகு மதசார்பின்மை என்பதைப் பற்றி தவறாக விளக்க ஆரம்பித்தோம். நேருவும் இடதுசாரிகளும் இதற்கு காரணம். பல மேற்கத்திய நாடுகள் தங்களை கிறிஸ்தவ நாடுகளாக அரசமைப்பு சட்டத்திலேயே அறிவித்து விட்டன. நம்முடைய அரசமைப்பு சட்டத்தில் நாம் மதசார்பற்றவர்கள் என்றும் சோஷலிஸ்ட்கள் என்றும் அறிவித்துள்ளோம். சோஷலிச நாடுகள் மதவாத நாடுகளா, அல்லது மதச்சார்பின்மைக்கு எதிரான நாடுகளா? அப்படி இல்லை. எல்லா நாடுகளும் தங்கள் தங்கள் நாட்டு கலாச்சாரத்தை, நாகரிகத்தின் வேர்களை மதிக்கின்றன. சில நேரங்களில் அவை தங்கள் மதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
ஆனால் இந்தியாவில், விடுதலைக்குப் பிறகு ஹிந்துவுடன் தொடர்புடைய எல்லாம் எதிர்மறையாகப் பார்க்கப் பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் அப்படி இல்லை. அரவிந்த கோஷ் , லோகமான்ய திலகர், சாவர்க்கர், காந்திஜி, ஏன் அம்பேத்கரைக் கூட பாருங்கள். ‘ஹிந்து மதத்தை சீர்திருத்தவில்லை என்றால் இந்திய சமுதாயத்துக்கு விடிவே இல்லை’ என்று அவர் சொன்னார்.
இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்த சீர்திருத்தம் அவசியம் என்று அவர்கள் அனைவரும் கருதினார்கள். ஆர்எஸ்எஸ் அதே வழியில் பயணித்தபோது ஆரம்பத்தில் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் விடுதலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டது. அதனால்தான் “ஹிந்து என்ற சொல்லைப் பயன்படுத்த உங்களுக்கு மனத்தடைகள் இருக்குமானால் பாரதிய என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்” என்று இப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் சொன்னார்.
கேள்வி: ஆனால் ஆர்எஸ்எஸ்ஸின் செயல்பாடுகள் மிகவும் பிராமணியத் தன்மையுடன் இருக்கின்றனவே…….
பதில்: மாவோயிஸ்டுகளின் தலைவர்கள் எப்போதும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கம்யூனிஸ்டு கட்சி பொலிட்பீரோவில் எப்போதும் ஒரு முஸ்லிம் இருந்ததேயில்லை…..
கேள்வி: ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் ஹிந்து என்றே ஆர்எஸ்எஸ் நம்புகிறதில்லையா…..
பதில்: எங்களுடன் பல்வேறு சமூக நிலைகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டதனால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவர் பிராமணர் இல்லாதவர். எங்கள் அமைப்பில் சமுதாயத்தின் எல்லா பிரிவினரும் பொறுப்பில் வருவதை உறுதி செய்கிறோம். ஆர்எஸ்எஸ்ஸை பிராமண அமைப்பு என்று கூறுவது அற்பத்தனமானது.
ஹிந்துத்துவா அல்லது ஹிந்து ராஷ்டிரம் பற்றிய எமது கண்ணோட்டம் நல்லிணக்கம் உள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். உங்கள் குடும்பப் பண்புகளைப் பாதுகாப்பது பற்றி நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கேள்வி: ஆர் எஸ் எஸ் அரசமைப்பு சட்டத்தை மதிப்பதில்லை என்ற விமர்சனம் உள்ளது. அது பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
பதில்: இது தவறான கருத்து. 1950 இல் அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்தபோது, “தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன கருத்து இருந்தாலும் உறுப்பினர் என்ற வகையில் எல்லா ஆர்எஸ்எஸ் காரர்களும் அரசமைப்பு சட்டத்தை மதித்தாக வேண்டும்” என்று கோல்வல்கர் சொன்னார். இதுதான் ஆரம்பத்தில் இருந்தே எங்கள் நிலைப்பாடு. நூறு முறை அரசமைப்பு சட்டத்தை மாற்றியவர்கள் ஆர்எஸ்எஸ்ஸைப் பார்த்து “ரசமைப்பு சட்டத்தை மாற்றுகிறார்கள்” என்று கூறுவது கேலிக்குரியது.
கேள்வி: நாம் ஏன் அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்?
பதில்: மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை அரசமைப்பு சட்டமே வழங்கி உள்ளது. நாட்டிற்கு நன்மை என்று இன்று நாம் கருதும் விஷயத்தை வருங்காலத் தலைமுறையினர் மீது திணிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்களே முடிவு செய்யட்டும். இந்த விஷயத்தில் அம்பேத்கரும் நேருவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார்கள். தேசத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொள்ளும் வசதியை அரசமைப்பு சட்டமே வழங்குகிறது. அதனால் தான் 107 முறை அது மாற்றப்பட்டுள்ளது. அவற்றை ஆர்எஸ்எஸ் மாற்றவில்லை…..
கேள்வி: ஆனால் ஆர்எஸ்எஸ்ஸின் செல்வாக்கு மாற்றத்திற்கு காரணமாகி உள்ளதே……
பதில்: ஆர்எஸ்எஸ் ஆட்சி நிர்வாகத்தில் எப்போதும் தலையிடுவதில்லை. எங்கள் ஸ்வயம்சேவகர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கூட அரசமைப்பில் மாற்றம் செய்ய வேண்டுமென நினைத்தால் உரிய கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தி, அதன் பிறகே மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்.
கேள்வி: ஆர்எஸ்எஸ் – பாஜக உறவு எப்படிப்பட்டது?
பதில்: அரசியலுடன் ஆர்எஸ்எஸுக்கு உள்ள தொடர்பு மிகவும் சுவாரசியமான விஷயம். ஆரம்பிக்கப்பட்ட முதல் 25 ஆண்டு காலம் பிரிட்டிஷ் அரசினால் பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்திஜி கொலை தொடர்பான தவறான குற்றச்சாட்டினால் அரசிடம் இருந்து மிகப்பெரிய சவால் எழுந்தது.
1948இல் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டபோது நமக்கு அரசியல் குரலும் தேவை என்ற எண்ணம் முதன்முதலாக ஆர்எஸ்எஸ்ஸுக்குள் எழுந்தது.
50 ஆண்டுகள் ஆகிய நிலையில், ஆர்எஸ்எஸ்ஸும் ஜன சங்கமும் வலிமையாக இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் மீண்டும் (1975) தடை செய்யப்பட்டது. அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜனதா கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆர்எஸ்எஸ் முடிவெடுத்தது. ஆனால் அந்த அனுபவம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதன்பிறகு பாஜக தொடங்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு 2000 இல் ஆர்எஸ்எஸ் தனது 75 வது ஆண்டைக் கொண்டாடும்போது அதன் அரசியல் களப்பணியில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியாயினர். வாஜ்பாய் பிரதமரானார் . உறுதியான ஆர்எஸ்எஸ் காரர் ஒருவர் இப்போது உலகத் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பயணத்தைப் பார்க்கும் போது 1925 இல் தொடங்கி 2025 வரை அது தினசரி அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகியே இருக்கிறது.
கேள்வி: ஆனால் ஆர்எஸ்எஸ் இப்போது எல்லா இடங்களிலும் இருப்பதாகவே தெரிகிறதே?
பதில்: ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். ஆனால் அமைப்புகள் சுதந்திரமானவை. அதன் மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் வயதில் மூத்தவர்களாக உள்ளார்கள். அவர்கள் எங்களை வழிநடத்தி வருகிறார்கள். எங்களிடம் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.
கேள்வி: ஒரு பெண் ஆர்எஸ்எஸ் தலைவராக எப்போது வருவார்? அல்லது ஒரு முஸ்லிம் எப்போது ஆர்எஸ்எஸ் தலைமைக்கு வர முடியும்?
பதில்: எதிர்காலத்தைப் பற்றி என்னால் அனுமானமாகக் கூற முடியாது. ஆனால் நாங்கள் அந்தக் கண்ணாடி வழியாகப் பார்ப்பதில்லை. நீங்கள் முஸ்லிமா அல்லது ஹிந்துவா என்பது விஷயம் அல்ல. அதற்கான தகுதி உங்களுக்கு இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
கேள்வி: அதற்கான தகுதி என்ன?
பதில்: முழுமையான அர்ப்பணம். ஆர்எஸ்எஸ் தத்துவம் பற்றியும் இந்திய சமுதாயம் பற்றியும் முழுமையான புரிதல் இருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் சொல்லும் வார்த்தைகள் அதன் அங்கத்தினர்கள் மற்றுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தினராலும் கவனமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நிலையில் அது இன்றிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்ஸை ஆதரிப்போரில் 90 சதவீதத்தினர் ஷாகாவுக்கு வெளியே இருக்கிறார்கள். எங்கள் தத்துவத்தைப் புரிந்து கொண்டவர்கள் தேவை. அப்படி புரிந்து கொண்டவர்கள் அமைப்பின் படிநிலைகளில் உயர்ந்து வருவார்கள்.
கேள்வி: ஹிந்து ராஷ்டிரம் எப்படி இருக்கும்?
பதில்: இந்த நாடு ஹிந்து நாடு என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு இல்லையென்றால் காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடலைப் பாடி இருக்க மாட்டார். திலகர், கணபதி உற்சவத்தையும் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவையும் கொண்டாடி இருக்க மாட்டார்.
அரசமைப்பு சட்டத்தின் மூலமாகவே இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக ஏன் அறிவிக்கக் கூடாது? என்று சிலர் என்னிடத்தில் கேட்கிறார்கள். அரசமைப்பு சட்டத்தின்படி இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதற்கு காரணமே இது ஹிந்து ராஷ்டிரமாக இருப்பதால்தான்.
ஹிந்து ராஷ்டிரத்தில் எல்லா மதங்களுக்கும் சமமான மதிப்பும் மரியாதையும் இருக்கும். முழு மத சுதந்திரம் இருக்கும். பிரிவினையற்ற, ஒத்திசைவு கொண்ட, உறுதியான அரசியல் நிர்வாகம் இங்கிருக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. மக்களுக்கு சுதேசி உணர்வு தேவை. தற்சார்புள்ள பொருளாதாரத்தை நாம் கட்டமைக்க வேண்டும். நல்ல குடும்பப் பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்.
கேள்வி: ஹிந்து ராஷ்டிரத்தில் ஆதிவாசிகள் எங்கு பொருந்துகிறார்கள்?
பதில்: அவர்கள் ஹிந்து ராஷ்டிரத்தின் ஒருங்கிணைந்த ஓர் அங்கம். நாம் ஆதிவாசி என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ளவில்லை. இங்கு வாழ்பவர்கள் எல்லோரும் ஆதிவாசிகள் தான். மேற்கத்திய புரிதலின்படி மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. அது அவர்களது புரிதல்.
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
- மூலம்: RSS Has Not Imprisoned Itself With A Fixed Ideology: Ram Madhav
$$$
One thought on “முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?”