சமஸ்டோரி – 3

-வ.மு.முரளி

கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 3) இது….

நன்றி: தினத்தந்தி (20.04.2020)

2011 சென்னை புத்தகக் கண்காட்சியின் போது நடந்த நிகழ்வு இது. அந்தக் கண்காட்சியை தினமணியில் ரிப்போர்ட் செய்ய திருச்சியிலிருந்து உதவி ஆசிரியர் சமஸ் சென்னை வந்திருந்தார். தினமணி சென்னை பதிப்பில் அப்போது ஒரு முழுப் பக்கம் சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய செய்திகள் வெளிவந்தன. அதில் ஒருநாள், கண்காட்சி வளாகத்தில் உள்ள குறைபாடுகளை கட்டுரையாக சமஸ் எழுதி இருந்தார். கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் படும் சிரமங்களைக் குறைக்க பபாசி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான செய்தி அது.

அந்தச் செய்தியை என்ன காரணத்தாலோ நிறுத்திவைக்குமாறு ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் சொல்லி இருந்திருக்கிறார். ஆனால், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியால், அந்தக் கட்டுரை எப்படியோ தினமணியில் வெளியாகிவிட்டது. உடனே பபாசியில் இருந்து எதிர்ப்பு வந்தது; செய்திப்பிரிவில் பெரும் சங்கடம் ஏற்பட்டது. சமஸ் ஆசிரியரின் கோபத்திற்கு ஆளானார்.

இத்தனைக்கும் ஆசிரியரின் மிகவும் நெருங்கிய வட்டத்தில்தான் சமஸ் இருந்தார். (அவர் எங்கு பணிபுரிந்தாலும் தலைமையுடன் மிகவும் நெருக்கமாகி விடுவார். சமஸின் சிறப்பு அது). அவரது தனிக் கட்டுரைகள், சாப்பாட்டுப் புராணம் தொடர் ஆகியவை முக்கியத்துவம் பெற்றதற்கு, ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதனின் பலமான ஆதரவே காரணம். அதே காரணத்தால்தான் திருச்சியில் இருந்த அவர், புத்தகக் கண்காட்சி குறித்த சிறப்புச் செய்தி சேகரிப்புக்காக வரவழைக்கப்பட்டிருந்தார். ஆனால், பபாசியின் குறைபாடுகளை எழுதியதும் ‘ஆசிரியர் வேண்டாமென்று கூறியும்’ தினமணியில் அது வெளியானதும், சமஸுக்கு சிக்கலை ஏற்படுத்தின.

அப்போது கோவையிலிருந்து சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த நான் அவரைச் சந்தித்தேன். அலுவலகச் சூழலை அறிந்திருந்த நான், அவருக்கு ஆறுதல் கூறினேன். கொஞ்சம் கவலையாக இருந்தார்; அதேசமயம் தன்னம்பிக்கையுடன் பேசினார். அவர் எழுதிய செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருந்த ஒவ்வொரு குறைகளும் உண்மை. அவை வெளிவந்தது ஏன் என்று வருந்துவதை விட, அவற்றைச் சரிசெய்வதுதான் சரியாக இருக்கும். ஆனால் பபாசி வருந்தியது; தினமணியும் வருந்தியது.

இது நடந்து முடிந்து சில வாரங்களில் ஆனந்த விகடனில் சமஸ் இணைந்தார். சென்னை புத்தகக் கண்காட்சியில் விகடன் நிர்வாகிகளைச் சந்தித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதுதான், பபாசி குறித்த செய்தியை தினமணியில் அவர் எழுதினார் என்பது பிற்பாடு எங்களுக்குத் தெரியவந்தது.

இந்த நிகழ்வை இங்கு நினைவுகூர காரணம் இருக்கிறது. எந்த ஒரு செய்தி நிறுவனத்திலும் அதன் பணியாளர்கள் எவரும், நிறுவன உரிமையாளர்கள் அல்லது தலைமை ஆசிரியரின் கட்டளைப்படி மட்டுமே இயங்க முடியும். ஊடக நிறுவனத்திற்கோ, பத்திரிகைக்கோ சங்கடம் தரும் வகையில் ஏதேனும் செய்தால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே, இப்போது மெர்சல் நடிகர் விஜயின் அரசியல் பிரசாரப் பயணத்தை புதிய தலைமுறையில் லைவ் நிகழ்வாக வெளியிட்டதெல்லாம் சமஸ் மட்டுமே எடுத்த முடிவாக இருக்காது. இது அந்த செய்தி நிறுவனத்தில் நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாகத்தான் இருக்கும். இது தெரிந்தும், இப்போது சமஸ் மீது திமுக அடிவருடிகளால் குற்றம் சாட்டப்படுகிறது.

இதில் சிக்கல் என்னவென்றால், சமஸே ஒரு திமுக ஆதரவாளர் என்பதுதான். அதாவது, ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக தாங்கள் மட்டுமே இருப்பதாக யாரிடமோ வெளிக்காட்டிக்கொள்ள விரும்பிய திரு. விஜயசங்கர் உள்ளிட்ட சிலர் சமஸை சமூக ஊடகங்களில் ஒருங்கிணைந்து குதறினர். இதில் திமுக தலைமையின் ஆசி இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்பது வல்லூறார் சொல்லும் கருத்து. முதல்வரின் தோஸ்த் சமஸுக்கே இந்த நிலை என்றால், திருவாளர் சத்தியநாராயணாவின் நிலையை நினைத்துப் பாருங்கள்!

இப்போது நமக்கு எழும் கேள்விகள்:

1. ஒரு நிகழ்வை முக்கியமான செய்தியாக வெளியிடலாமா, வேண்டாமா என்பதை ஒரு செய்தி நிறுவனம் தீர்மானிப்பதா, அல்லது ஆளும்கட்சி தீர்மானிப்பதா?

2. நடிகர் விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு புதிய தலைமுறையில் அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது திமுக சார்பு பத்திரிகையாளர்களின் குற்றச்சாட்டு. டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரிக்க இதனைச் செய்ய அந்த செய்தி சேனலுக்கு உரிமை இல்லையா? வேறெந்த செய்தி சேனலும் இந்தக் ‘குற்றத்தை’ச் செய்யவில்லையா?

3. திமுக நடத்தும் நிகழ்வுகளை மட்டுமே பிரதானச் செய்தியாகக் காட்ட வேண்டும் என்பதுதான் சமஸைக் குறை கூறும் ஜோம்பிகளின் கருத்தா? இதனை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஏற்கிறாரா?

4. திரு. மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு, தமிழக அரசின் நூலகக் குழுவில் அங்கம் வகித்து, நூலகங்களுக்கு என்னென்ன பத்திரிகைகளை வாங்கலாம் என்று தீர்மானித்த சமஸுக்கு, தான் பணியாற்றும் செய்தி நிறுவனத்தில் என்னென்ன செய்திகளை வெளியிட வேண்டும் என்று தீர்மானிக்க உரிமை கிடையாதா?

5. இந்த விவகாரத்தில் திரு. விஜயசங்கரை நேரடியாக குற்றம் சாட்டிய சமஸ், அவருக்குப் பின்னணியில் இருக்கும் பெரும்புள்ளியைக் குறிப்பிடத் தயங்குவது ஏன்?

6. சமஸை மிரட்டுவதன் மூலமாக, இந்த ஜோம்பிக் கூட்டம், பிற பத்திரிகையாளர்களுக்குச் சொல்ல வருவது என்ன? எங்களை மீறினால் “நாலு தட்டு தட்டுவோம்” என்று காட்டுகிறார்களா?

7. திரு, சமஸ் திமுக ஆதரவாளராகவே அறியப்பட்டபோதும், ‘கலைஞர் பொற்கிழி’ (இது பபாசி கலைஞர் பெயரில் வழங்கும் விருது) வாங்கிவிட்டதனால் அவர் எல்லாக் காலத்திலும் திமுகவுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்று சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறாரா?

தமிழக அரசின் அரசவைப் புலவர் திருவாளர் வைரமுத்து, “கேள்விகளால் வேள்விகள் செய்வோம்” என்று எழுதி இருக்கிறார். நாமும் இந்தக் கேள்விகளைக் கேட்டு வைக்கிறோம்.

இப்போது இரு நாட்களாக திடீர் மயான அமைதி. திமுக கோஷ்டிகளிடையே சமூக ஊடகங்களில் நிலவிவந்த குத்துவெட்டு நின்றிருக்கிறது. நமக்கு சில தகவல்கள் கிடைப்பது இதனால் நின்றுபோய்விட்டது. அநேகமாக புரவலர்கள் தலையீடு இருக்கும் என்பது அனுமானம். பருந்தார் மாயமாகிவிட்டதால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இனி இந்த திமுக கோஷ்டிகள் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. சமஸோ, விஜயசங்கரோ, குணசேகரனோ, ஜென்ராமோ, நெல்சன் சேவியரோ, கார்த்திகைச்செல்வனோ, ஹரிஹரனோ யாராயினும், திமுகவின் தாளத்துக்குத் தகுந்தாற்போல ஆடும் வரை மட்டுமே தங்களுக்கு மதிப்பு என்ற எச்சரிக்கையை அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். ‘புதிய தலைமுறை’யும் மீண்டும் பழைய தலைமுறையாகி விடும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 25.8.2025 அன்று, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், …, சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் என். ரவி (தி ஹிண்டு), தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் (தி ஹிண்டு), தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் இமையம், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத் துறையை சார்ந்த நக்கீரன் கோபால், திருமாவேலன் (கலைஞர் டிவி), கார்த்திகைசெல்வன் (நியூஸ்18), சுரேஷ் குமார், மு.குணசேகரன் (சன் டிவி), சமஸ் (புதிய தலைமுறை), லட்சுமி சுப்பிரமணியன், காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

நமது வேதனை என்னவென்றால், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை துறை இதுபோல ஒருசார்புடன் செயல்படலாமா என்பதுதான். அதிமுக ஆட்சியின் போது இந்த நரியாளர்கள் அனைவரும் அரசை எவ்வாறு தினசரி விவாதங்களில் கும்மினார்கள் என்பதை அனைவரும் அறிவோம்; இப்போதும்கூட மத்திய பாஜக அரசை எப்படியெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்பதையும் நாம் காண்கிறோம்.

வெளிப்படையாக திமுகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் இந்தப் பத்திரிகையாளர்கள் எவ்வாறு நடுநிலையுடன் செய்தி நிறுவனத்தில் செயல்பட்டிருக்க முடியும்? இதை ஏன் எந்த செய்தி நிறுவனமும் கண்டிப்பதில்லை? அல்லது கண்டுகொள்ளாமல் தவிர்க்கின்றன?

தினத்தந்தியில் (20.04.2020) கார்ட்டூனிஸ்டாக இருந்த திரு. மதி, அண்ணாதுரை சிலை போல ஒரு கார்ட்டூன் போட்டதற்காக அவரது கார்ட்டூன் நிறுத்தப்படதே, அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்போது மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே இருந்தார் என்பதும், அவரது கருத்துக்கு இணங்கி கார்ட்டூனிஸ்டின் பணி பறிக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியுமா? இதுதான் பத்திரிகை சுதந்திரமா? கருத்து சுதந்திரம் கார்ட்டூனிஸ்டுக்கு இல்லையா?

எதிர்க்கட்சியாக இருந்தபோதே, ஊடகத்தைக் கட்டுக்குள் வைத்த ஒருவர், ஆளும்கட்சியானால் என்ன நடக்கும்? சமஸுக்கு நடந்தது தான் நடக்கும்.

எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் தனிப்பட்ட கொள்கையும் அரசியல் சார்பும் இருப்பது இயல்பு. அதில் குறைகாண ஏதுமில்லை. எந்த அரசியல் பார்வையும் இல்லாத மண்ணுருண்டைகள் மிகுந்தால் பத்திரிகைத் துறை மந்தமாகிப் போகும். தனிப்பட்ட கொள்கைக்கும், ஊடக நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் இடையே ஒரு சமண்பாடு அவசியம். அதற்கு நடுநிலையான பார்வை தேவை.

எனக்கும் ஓர் அரசியல் பார்வை உண்டு. நான் ஒரு சித்தாந்தத்தை ஆதரிக்கிறேன். அதேசமயம் அது என் பணியில் குறுக்கிட நான் அனுமதித்ததில்லை. இது எனது உறுதிப்பாடு மட்டுமல்ல, கடமையும் கூட. இங்குதான் தமிழகப் பத்திரிகையாளர்கள் தடுமாறுகிறார்கள்.

இங்கு ஒருவிதமான இறுக்கமான சூழல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்டு, திராவிட சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களே பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்திருக்கின்றனர். இது 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பத்திரிகைகளில் ஆதிக்கம் செலுத்தியதற்கு ஒப்பானது. ஆனால், காங்கிரஸ் சிந்தனை கொண்டவர்கள் பிறரது கருத்துகளை வழிமறித்ததில்லை. அப்படி நடந்திருந்தால், பல முக்கியமான இடதுசாரி எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் உருவாகி இருக்க முடியாது.

இன்றைய தமிழக இதழியல் சூழல் மிகவும் ஒருசார்பாக மாற்றப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளின் நீண்டகால உழைப்பும், திராவிட சிந்தனைகளின் செல்வாக்கும் இதற்கு காரணிகளாக இருந்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தனது அரசியல் செல்வாக்கை தமிழக பத்திரிகைத் துறையில் இழந்து விட்டதும் அதற்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. அதற்கு மாறாக இப்போதுதான் ஹிந்துத்துவ சித்தாந்தம் வலுப்பெற்று வருகிறது. இது ஊடகத்திலும் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது.

ஆனால், கம்யூனிஸ்டு கட்சிகளோ, திமுகவோ ஊடகத்தில் கொடுக்கும் கவனத்தில் பத்து சதவிகிதம் கூட, மத்திய ஆளும்கட்சியான பாஜக கொடுப்பதில்லை. அது தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு. ஆனால், நடிகர் விஜயையும் பத்திரிகையாளர் சமஸையும் பாஜக பின்னணியில் இருந்து இயக்குவதாக ஜோம்பிகள் எழுதுகின்றனர். இதுதான் நகைமுரணாக இருக்கிறது.

(இறுதிப் பகுதி நாளை…)

$$$

கீழுள்ள படங்களின் விளக்கம்:

1. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.8.2025 அன்று, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், …, சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் என். ரவி (தி ஹிண்டு), தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் (தி ஹிண்டு), தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் இமையம், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத் துறையை சார்ந்த நக்கீரன் கோபால், திருமாவேலன் (கலைஞர் டிவி), கார்த்திகைசெல்வன் (நியூஸ்18), சுரேஷ் குமார், மு.குணசேகரன் (சன் டிவி), சமஸ் (புதிய தலைமுறை), லட்சுமி சுப்பிரமணியன், காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

2. தினத்தந்தி மதி கார்ட்டூன் – 20.04.2020

$$$

One thought on “சமஸ்டோரி – 3

Leave a comment