-வ.மு.முரளி
கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 2) இது….

- காண்க: பகுதி- 1
நண்பர் சமஸ் விவகாரம் குறித்து எழுதத் தொடங்கியவுடன், அன்பர்கள் பலரிடமிருந்து விசாரிப்புகள். அவை இரு வகையிலானவை. ஒன்று “சமஸ் ஒரு சுயநலவாதி. அவரைப் பற்றி எழுதி பெரிய ஆளாக்கி விடாதீர்கள்” என்ற வேண்டுகோள்கள். இன்னொன்று, “சமஸ் எப்படியும் இறுதியில் திமுகவில் சரணாகதி அடைந்துவிடுவார். உங்கள் சக்தியை ஏன் இதுபோன்ற பதிவுகளில் வீணடிக்கிறீர்கள்?” என்ற வகையிலானது. இவை இரண்டிற்கும் பதில் சொல்லிவிட்டுத் தொடர்வதுதான் உத்தமம்.
முதலாவதாக, சமஸைப் பற்றி நான் எழுதித் தான் அவர் பெரிய ஆள் ஆக வேண்டிய நிலையில் இல்லை. அவர் ஏற்கனவே பெரிய ஆள் தான். கலைஞர் பொற்கிழியை எனக்கோ, உங்களுக்கோ எவரும் கொடுக்கவில்லை. அவரே கூறிக்கொள்வது போல, அவரைப் போல எழுதும் பத்திரிகையாளர்கள் எவரும் தமிழில் இப்போது இல்லை. ஆனால், அவர் எப்படி பெரிய ஆள் ஆனார் என்பதை அவர் சொல்லப் போவதில்லை. அதில் சில புள்ளிகளை ‘ஜென் இஸட்’ மக்களுக்கு தொட்டுக் காட்ட உத்தேசம். அவர்களும் முன்னேற வேண்டாமா?
இரண்டாவதாக, சமஸ் இந்த விவகாரத்தின் இறுதியில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற ஆரூடம் சொல்ல நான் விரும்பவில்லை. அவர் ‘புதிய தலைமுறை’ பணியிலிருந்து விலகுமாறு நிர்பந்திக்கப்படலாம். இதைவிட வளமையான ஊடகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் உண்டு. பாஜக ஆதரவு ஊடகங்களில் (?) கூட அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்க யாரேனும் தயாராக இருக்கலாம். முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினே (அவர் சார்பாக பேசக் கூடிய வகையில் ‘மத்திய நிதியமைச்சருக்கு ஊறுகாய் மாமி பட்டம் கொடுத்த’ சந்துரு, கிண்டு ராம் போன்றவர்கள் இருக்கிறார்கள்.) இதில் தலையிட்டு சமரசம் செய்யும் வாய்ப்பும் உண்டு. அது அவர் பாடு. திமுக ஆதரவு கோஷ்டிகள் இருகூறாகப் பிரிந்துகொண்டு அடித்துக் கொள்ளும்போது ஏற்படும் துர்வாடை இதழியல் துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியை அம்பலப்படுத்துவதால், அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகிறேன்.
இன்னொரு முக்கியமான கருத்து, ‘சமஸாயணம்’ என்ற தலைப்பு சரியில்லை என்பது. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், முதல்நாள் முகநூல் பதிவில் அதை உடனே மாற்ற முடியவில்லை. இந்தப் பதிவில் இருந்து அதனை ‘சமஸ்டோரி’ என்று மாற்றி விடுகிறேன்.
இன்னொரு முக்கியமான சுயவிளக்கம்…
சமஸின் முன்னேற்றத்தால் ஏற்பட்ட பொறாமையால் நான் இதை எழுதவில்லை. சொல்லப்போனால், அவரது முன்னேற்றம் கண்டு மகிழ்ந்தவன் நான். அவரது கட்டுரைகளைப் பாராட்டி இருக்கிறேன். தினமணியில் இருந்து அவர் பணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டபோது (அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்) ஆறுதலாக அவரிடமே பேசியிருக்கிறேன். ஹிண்டுவில் இருந்து விலகி ‘அருஞ்சொல்’ இணையதளம் தொடங்கியபோது அவரை வாழ்த்தி இருக்கிறேன். அவரது திராவிடச் சாய்வு எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். ஆனால் அவரது எழுத்துகளில் மக்கள்நலம் குறித்த கவலை தென்பட்டதே, அவரை நான் மதிக்கக் காரணம். ஆனால்…
தனது எழுத்துகளை தேச நலனுக்கு எதிராக அவர் பயன்படுத்தத் தொடங்கியபோது அவரது கட்டுரைகளைப் படிப்பதைக் குறைத்து, விலகத் தொடங்கினேன். கிட்டத்தட்ட எழுத்து ராட்சதர் ஜெயமோகனின் பத்திரிகையாளர் வடிவம்தான் சமஸ். இருவருமே தங்களுக்கு உகந்த பாதையைத் தீர்மானித்துவிட்டு, அதை நியாயப்படுத்த நூறு பக்கங்கள் எழுதக் கூடியவர்கள். தங்கள் பாதையைத் தவிர்த்து மற்றெல்லாப் பாதைகளும் மோசமானவை என்று வம்பு வளர்க்கவும், வசை பாடவும் இவர்கள் தயங்குவதில்லை. பாஜக எதிர்ப்பு தான் இவர்களின் பலம்; மட்டுமல்ல, பாதுகாப்பு. எழுத்தாளனின் அரசியல் பார்வை அவரது கருத்துரிமை. அதேசமயம், எல்லாவற்றிலும் தானே ‘அத்தாரிட்டி’ என்ற எண்ணம் இவர்களிடமிருந்து வெளிப்படும்போது, அதை மௌனமாகக் கடக்க முடியவில்லை.
இப்போதும்கூட, திமுக ஜோம்பிகளில் இன்றையநிலையில் இடதுசாரியாக இருக்கும் விஜயசங்கர், கரிகாலன் போன்றவர்களுக்கு எதிராக, திமுக ஜோம்பிகளில் இன்றையநிலையில் வலதுசாரியாகக் கருதப்படும் சமஸ் தொடர் பதிவுகளை எழுதாமல் இருந்திருந்தால், நானுண்டு, என் வேலையுண்டு என்று நானும் இருந்திருப்பேன்.
சமஸின் ‘ஈகோயிஸம்’ திமுகவின் ‘எக்கோயிஸம்’ முன்பு கதறிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்கவில்லை. இரு தரப்பும் என்ன தவறு செய்கிறார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இவர்கள் இரு தரப்புமே தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானவர்கள் என்பதை பொதுமக்களுக்கும் சொல்லியாக வேண்டி இருக்கிறது.
***
இதை எழுதும்போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தின் கீற்றை எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். “நேர்படப் பேசு” தலைப்பு – அரசியல் களத்திற்கு நகர்கிறதா கரூர்? திராவிட மாடல் அரசுக்கு சாமரம் வீசும் தலைப்பு. விவாதத்தில் பங்கேற்ற நால்வரில் மூவர் திமுக ஜோம்பிகள். (பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர், பொருளாதார நிபுணர், சிந்தனையாளர் என்ற பெயர்களில் விவாதங்களை ஆக்கிரமிப்பவர்கள் திமுக நலம் விரும்பிகள் மட்டுமே. அதற்குத்தான் கார்த்திகேயனுக்கும் கார்த்திகைச்செல்வனுக்கும் இன்னபிற நெறியாளர்களுக்கும் அந்தந்த செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கின்றன). ஒருவர் மட்டுமே அதிமுக. போதாக்குறைக்கு நரியாளரும் தன் பங்கிற்கு திமுக ஆலாபனை செய்தார். அதாவது விவாதகளத்தில் 4:1 என்ற விகிதாசாரம். இப்படித்தான் இருக்கிறது இவர்களின் தராதரம்.
இந்த சேனலில்தான் நடிகர் விஜய்க்கு ஆதரவாக சமஸ் இயங்கினார் என்று திமுக பே-லிஸ்டில் இருக்கும் சிலர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதில்தான் திமுகவுக்காக இடையிடையே நுழைந்து போராடிக் கொண்டிருந்தார் நரியாளர் கார்த்திகேயன். எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்தும் சேனல் இது. இந்தக் குழுமத்தின் தலைவர் திரு. பச்சமுத்து. ஆனால், ஊடகத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார். இவர் வேறு, பாஜக கூட்டணியில் இருக்கும் பாரிவேந்தர் வேறு என்று நினைக்கிறேன் . பாஜக தலைவர்கள் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருடன் கூட்டணி தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே, ‘புதிய தலைமுறை’ சேனலில் நரியாளர் பாஜகவுக்கு பாடம் நடத்திக் கொண்டிருப்பார்.
இந்த செய்தி சேனலின் தலைமை ஆசிரியர் தான் சமஸ். அவர் செய்த தவறு, கில்லி நடிகர் விஜயின் சனிக்கிழமை சந்திப்புகளுக்கு அதிக ‘ஹைப்’ கொடுத்து ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார் என்பது. இதில் சன், கலைஞர், ஜெயா தவிர்த்த எந்த செய்தி தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல என்பதுதான் உண்மை. டி.ஆர்.பி. ரேட்டிங் கூட்டுவதற்காக ஒரு நடிகரின் ஊர்வலத்தை திகட்டத் திகட்ட அள்ளி வழங்கியதுதான் இவர்களின் தவறு. புதிய தலைமுறை இதில் கொஞ்சம் கூடுதலாகப் பொங்கியதும் உண்மை. அதற்குக் காரணம் என்னவென்பது கஸ்பாருக்குத் தெரிந்திருக்கலாம்.
அதேசமயம், பொதுவான நிகழ்வுகளை தொல்லை தரும் நேரடி வர்ணனைக் காட்சிகளாக தொடர்ந்து அளித்து தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு ஒரு நடைபாதை அமைத்ததே சன் டி.வி. தானே? போர்வெல்லில் தவறி விழுந்த குழந்தையை மீட்க நடந்த முயற்சிகளை ஒரு தீபாவளி நாளில் எப்படி உருக்கமாகக் காட்டினார்கள் என்பதை நாம் கண்டிருக்கிறோம். நடிகர், நடிகை போன்றவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் வீட்டின் முன்பு காத்துக் கிடந்து புளகாங்கிதம் அடையச் செய்யும் செய்திகளை வாய் வலிக்க வழங்குபவர்களும் இவர்கள் தானே?
ஜெயமோகனுக்கும் சமஸுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை போலவே, விசய்க்கும் சமஸுக்குக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது, தான் மட்டுமே அறிவாளி என்ற எண்ணம் வந்திருப்பது. இது அவரது அண்மைய எழுத்துகளில் அதிகமாகவே தெறிக்கிறது. சொல்லப் போனால், ஸ்டாலின் அய்யாவிடம் கூட இதன் கூறு உண்டு. அதன் விளைவாக, சமஸ் அத்து மீறி விட்டாரா? பாம்பின் கால் பாம்பறியும். உடனிருந்த உடன்பிறப்புகளுக்குத் தான் எல்லாம் தெரியும்.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் அரசியல் பத்திரிகையின் பெயர் ‘ஃபிரன்ட்லைன்’. 1958இல் இருந்து இது வெளிவருகிறது. சீன அரசின் சாதனைகளை மெச்சுவதற்கான மாத இதழ் இது. அதே பெயரில் இந்தியாவில், அதுவும் சென்னையிலிருந்து ஹிண்டு குழுமம் மாத இதழை 1984 முதல் வெளியிடுகிறது. இது முழுவதும் இந்திய அரசுக்கு எதிரான செய்திகளின் தொகுப்பாக இருக்கும். ‘ஃபிரன்ட்லைன்’ என்று சீனப் பெயரிட்டவர்களிடம் வேறென்ன எதிர்பார்ப்பது? காக்காய் பிரியாணி சாப்பிட்டால் குயில் குரலா வரும்? இதன் ஆசிரியராக இருந்த ஒரு பெரியவர் தான் இப்போது சமஸுக்கு எதிராக களமாடி வருகிறார் (இது சமஸின் குற்றச்சாட்டு). அதை திராவிட, கம்யூனிஸ்ட் ‘தோளர்’கள் கடமையாக ஷேர் செய்து மகிழ்கிறார்கள். பதிலுக்கு ‘தோளர்’ சமஸ் தனது முகநூல் பக்கத்தில் அளிக்கும் தன்னிலை விளக்கம், தனக்குத் தானே மெச்சும் ரகம். இதனையும் சிலர் பகிர்ந்து மயிர்க்கூச்செரிகிறார்கள்.
இந்த இரண்டு பிரிவினரும் வெளிப்படுத்தும் கருத்துகளிலிருந்து தெரிய வருவது, இதழியலாளனுக்கு நடுநிலைமை இருக்கக் கூடாது என்பதாகவே இருக்கிறது. திமுக அரசின் ஆகச் சிறந்த ஜால்ரா யார் என்பதில் தான் இவர்களிடையே போட்டி.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், சுப்பிரமணிய அய்யர், மகரிஷி அரவிந்தர், சித்தரஞ்சன் தாஸ், வீர சாவர்க்கர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, வ.வே.சு. அய்யர், சுப்பிரமணிய சிவா போன்ற தேசபக்தர்கள் பணி புரிந்த துறை பத்திரிகை துறை. அவர்கள் தேசநலனுக்காக அரசை எதிர்த்து இதழியல் மூலமாக குரல் கொடுத்தார்கள். அந்தத் துறையில்தான் இப்போது கரையான்கள் கோலோச்சுகின்றன. இதனை மாற்றத் துடிக்கும் தேசியப் பார்வை கொண்ட பத்திரிகையாளர்களுக்காகவும் எழுத்தாளர்களுக்காகவும் தான் இதை எழுதுகிறேன். இந்த இதழியல் உலகில் முகமூடி கிழிபட வேண்டிய இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான நேரம் வரும்போது எழுதுவோம். இப்போதைக்கு திமுக ஜோம்பிகளிடையிலான மோதலின் உக்கிரத்தில் ஒளிந்திருக்கும் உண்மைகளை அம்பலப்படுத்துவோம்…
(தொடரும்)
$$$
2 thoughts on “சமஸ்டோரி -2”