-கருவாபுரிச் சிறுவன்
‘திரு’ என்றால் செல்வம். அந்தத் திருவை நமது அருளாளர்கள் எவ்வாறு பாவித்தனர் என்று இக்கட்டுரையில் சுருக்கமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...

அறிவே! அருட்செல்வமே நிறைவே! அரசே அடியார்
உறவே! என்னாருயிரே! மணியே! உருகாத நெஞ்சின்
பிரிவே! துரியம் கடந்த சிவானந்தப் பேரமுதச்
செறிவே! கருணைப்பிழம்பே பஞ்சாக்கர தேசிகனே.
-ஸ்ரீமத் சிவஞான யோகிகள்
தேசத்தின் சிறப்பு:
பாரத தேசத்தின் புகழை பார்போற்றச் செய்யும் பரம்பொருளின் மதம், என்றுமே அழிவில்லா மதம், அருளாளர்கள் பலர் அவதரித்து அற்புதங்கள் நிகழ்த்திய மதம், நியாய தர்மங்களை எளிமையாக எடுத்துரைக்கும் நிரந்தரமான மதம், தலையான கருத்துக்களை வாழ்வியலோடு விதைத்து நிலையான இன்ப வாழ்விற்கு அடித்தளமான மதம், வந்தாரையும் வாழ வைத்து தன் கொள்கைப் பிடிப்பில் நின்று தளராது பீடுநடை போடும் மதம். எந்நாட்டவர்களும் கொண்டாடும் நம்நாட்டவரின் நன் நம்பிக்கைக்குரிய மதம் ஈடு இணையில்லா மதம் ஹிந்து மதம். இம் மதத்தில் பல ஞானிகள் தோன்றி பாரத தேசத்தினை வலுப்படுத்தியும், வளமையாக்கியும் உள்ளார்கள்.
இக்கருத்தினைத் தான் தண்டமிழில் “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் வந்த நானும் ஒருவன் அன்றோ” என்கிறார் வடலுார் ராமலிங்க சுவாமிகள்.
சங்கீத மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜ பிரம்மம் “எனக்கு முன்பு தோன்றிய அத்துணை மகான்களுக்கும் நமஸ்காரம்” என்கிறார்.
இவர்களுக்கு முன்பே சிவனடியார்களின் வரலாற்றை கூறும் மூல நுாலான திருத்தொண்டத் தொகையில் “அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்” எனச் சொல்லிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் .
‘திரு’ என்ற சொல்லுக்கு செல்வம், அழகு, அறிவு, தெளிவு, சிறப்பு, மரியாதை, பாக்கியம், பொலிவு, நல்வினை என்று பொருள். இருப்பினும், இவ்விடத்தில் திரு என்ற சொல்லுக்கு மேன்மை, உயர்வு என பொருள் கொள்வதே சாலச் சிறந்தனவாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்பாரத தேசத்தில் தோன்றிய மகான் எண்ணற்றவர்கள். அவர்கள் அத்துணை பேரையும் பட்டியல் இட்டுக்காட்ட இந்த ஜென்மம் ஒன்று போதாது. இருப்பினும் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு இணங்க ஒரு சில அருளாளர்களின் வாழ்வில் அவர்கள் நிகழ்த்திய அருள் செயல்களை கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மீண்டும் திருவருளையும் குருவருளையும் நினைந்து போற்றுவோமாக.
குருநாதர்களின் நோக்கம்:
ஞானம், அறிவு, தெளிவு, பூரணத்தின் வாயிலாக முக்காலத்தினையும் உணர்ந்தவர்கள் நம் அருட் குருநாதர்கள்.
இம்மண்ணில் உதித்த அவர்கள் அத்துணை பேரும் ஆன்மாக்களாகிய நம்மை மேலான வழியில் நல்வழிப்படுத்தியுள்ளார்கள்; நல்வழிப்படுத்துகிறார்கள்; நல்வழிப் படுத்துவார்கள். அதுவே அவர்களின் உயரிய நோக்கம்.
இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த ஒரு காரணமும் இருக்க முடியாது. அப்படி வேறு காரணம் ஏதேனும் இருந்தால் அவர்கள் நற்குருநாதர் என்ற இலக்கணத்திற்குள் வர மாட்டார்கள்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள், சமயாச்சாரியர்கள், சந்தானாச்சாரியர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், ஆச்சாரிய பீடங்கள், ஆதின முதல்வர்கள்… என பல பெயர்களில் இருப்பவர்கள் சற்குருநாதர்கள், லோக குருநாதர்கள் ஆவார்கள். இவர்களை அடியொற்றி வாழ்ந்து காட்டியவர்கள் வித்யாகுரு நாதர்கள்.
பொதுவாகவே, குருநாதர்கள் என்போர் எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். எந்த வம்புக்கும் போக மாட்டார்கள்; தனது பிறவிப்பயனை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு இப்பிரபஞ்சத்தில் எல்லாமே சிவமாகவும் கண்ணணாகவும் தெரியும். அனைத்தும் அவன் செயலே என அமைதி கொள்வார்கள். அப்படிப் பட்டவர்களை மகாஞானிகள் என தேசம் கொண்டாடும்.
அம்மகான்கள் பொருளாசைகளை அறவே அறுத்து இம்மண்ணில் வாழ்ந்து காட்டியவர்கள். அவர்களால் இவ்வுலகிற்கு வழங்கப்பட்ட பொக்கிஷ விஷயங்கள் ஏராளம். அவற்றைப் பெற நாம் தகுதியாக இருக்கிறோமா… என்பது தான் தற்போது மனதில் எழும் கேள்வி. தகுதிப்படுத்திக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களின் அருகில் செல்லலாம்..
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
-தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்
ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு
ஞானத்தால் உனை நானும் தொழுவேனே.
-திருநாவுக்கரசு நாயனார் சுவாமிகள்
திருநாவுக்கரசர்:

நமக்கு இவ்வாறு ஞானிகளை அடையாளம் காண்பித்தவர் அப்பர் சுவாமிகள். அவரும் ஒரு ஞானியாக இருந்தால் தானே அவரால் உண்மை ஞானிக்கு இலக்கணம் கற்பிக்க முடிந்தது.
திருப்புகழுரில் ஒரு நாள் அக்னீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உழவாரப்பணி செய்து கொண்டு இருக்கிறார். அச்சமயம் உழவாரப்புல், பூண்டு, செடிகளோடு பொன்னும், நவமணியும் கண்ணில் படுகிறது. அதை கையில் எடுக்காமல் அதை அப்படியே தூக்கி அங்குள்ள குளத்தில் எறிகிறார். அந்த சமயத்தில், திடீர் என தேவலோகப் பெண்களும் அப்பர் சுவாமிகள் முன் நடனமாடுகிறார்கள். அவர்களின் மாயைக்கு அடிபணியாமல் சிவபெருமான் திருவடியில் இரண்டறக் கலக்கிறார்.
மண், பொன், பெண்ணாசை கொள்ளாமல் எம்பிரான் நாவுக்கரசு சுவாமிகள் இப்பார் வாழ, இந்த உலகம் வாழ ‘திருத்தொண்டு’ என்னும் திருப்பணி செய்து நாம் எல்லாம் உய்வு அடையும் பொருட்டு வழிகாட்டி அருளி இருக்கிறார்.
அப்பர் சுவாமிகள் காலத்திற்குப் பிறகு பின்னாளில் தோன்றியவர்கள் அவர்களது அருள்மொழிகளை மனதில் பதித்து சொல்லாலும் செயலாலும் உழவாரப்படையாளரின் அடியொற்றி வாழ்ந்து காட்டினார்கள்.
அப்படிப்பட்டவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் கடைப்பிடித்தால் நம் வாழ்வு சிறக்கும். குருநாதர்கள் காட்டும் ‛திரு’ என்ன என்பது நமக்குப் புரியும். அதை ஒருவாறு சிந்திப்பதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்கடன் பணி செய்து கிடப்பதே அஞ்சுவதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை
-என்ற திருவாக்குகள் திருநாவுக்கரசு நாயனாரின் புகழ் பெற்ற அருள்மொழிகள்.
இதே சிந்தனையுடன், எத்தனையோ அடியார்கள் நம்மிடையே வாழ்ந்து காட்டி மகான்களாக மாறியுள்ளார்கள். அவர்களில் பெரியாழ்வார், பட்டினத்து சுவாமிகள், சிவஞானயோகிகள், கச்சியப்ப முனிவர், நல்லூர் ஆறுமுகநாவலர், வடலுார் ராமலிங்க சுவாமிகள், சி.கே. சுப்பிரமணிய முதலியார், தவத்திரு வாரியார் சுவாமிகள், பேட்டை ஈஸ்வர மூர்த்தி பிள்ளையவர்கள், சுவாமி சித்பவானந்தர் என்போர் நம் தலைமுறைக்கு முன்னர் அருள் திறனோடு வாழ்ந்தவர்கள்.
நமக்காக வாழ்ந்தும் காட்டியவர்கள்.
“குருநாதர்கள் மீது வாழ்நாளில் அன்பர் ஒருவருக்கு பக்தி ஏற்பட்டு விட்டால் அது இமயமலையை விட உயர்ந்தது. கடலின் ஆழத்தை விட ஆழமானது” என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
அந்த குருவினால் கிடைக்கும் பேறு நிலைத்த பேறு. “ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப சிவபெருமானே குருவாக வருவார்” என்பது திருமூல தேவ நாயனாரின் திருவாக்கு.
இவர்கள் நிகழ்த்திக் காட்டிய வாழ்வியல் செய்திகள் ஒவ்வொன்றும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அழகிய படிப்பினை. ஆமாம் அது தான் என்ன..
பெரியாழ்வார்

கோதை பிறந்த ஊர். கோவிந்தன் வாழும் ஊர் என்ற வாடாத சொல் மாலையைப் பெற்று திகழ்வது ஸ்ரீவில்லிபுத்துார் என்னும் திவ்யதேசமாகும். இந்தக் கோயிலின் திருக்கோபுரமே தமிழக அரசின் சின்னமாக திகழ்கிறது. இச்சிறப்பினைக் கொண்ட திவ்ய தேசத்தில் முன்பு வாழ்ந்தவர் பெரியாழ்வார்.
மகாவிஷ்ணுவை தன் சித்தத்தில் எப்போதும் கொண்டதாலும், மகாவிஷ்ணுவின் சிந்தையில் இவர் இருந்தாலும் இவருக்கு ‘விஷ்ணு சித்தர்’ என்னும் பெயர் வந்தது என்பார்கள் பாகவதப் பிரியர்கள்.
ஆண்டாளின் தந்தையான இவர், பரம்பொருளின் மீது ‘திருப்பல்லாண்டு’ பாடிய சிறப்புக்குரியவர். மதுரை ஸ்ரீ வல்லப தேவ பாண்டிய மன்னனிடம், “ஸ்ரீ மன் நாராயணனே பரம்பொருள்” என்னும் உறுதிப்பொருளை நிலைநிறுத்தி, அவனால் ஸ்தாபிக்கப் பொற்கிழியைப் பெற்றவர்.
அப்பொற்கிழியைக் தாமே வைத்துக் கொள்ளாமல் அதனைக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி பெருமாளுக்கு பல திருப்பணிகளை செய்த பெருமைக்கும் சிறப்புக்கும் உரியவர் ஆவார். இதிலிருந்து விஷ்ணு சித்தரின் உயரிய அன்பு புலனாகிறது.
பட்டினத்து சுவாமிகள்

காவிரிப்பூம்பட்டினத்தில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் வாழ்ந்தார். இன்றைய டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் சொத்துக்கள் காவிரிப்பூம்பட்டின செல்வந்தரான திருவெண்காடரின் வீட்டு முற்றத்திற்கு நிகரானதாகும்.
கோடிகோடியாக செல்வம் இருந்தாலும், தனது வளர்ப்பு மகனால் “காதற்ற ஊசியும் கடை வீதிக்கு வாராதே” என்ற வார்த்தையைக் கேட்டு மெய்ஞானம் பெற்றார். பெரும் ஞானியாகவே வாழ்ந்து காட்டினார். அவர் தான் உண்மையான முதல் சுயமரியாதைக்காரரான நம் பட்டினத்து சுவாமிகள்.
“இருக்கும் இடம் தேடி என் பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் ” என்றாரே… இவரல்லவோ உண்மையான சுயமரியாதைக்காரர்!
ராமநாதபுரம் மாவட்டம், லட்சுமிபுரத்தில் கோயில் கொண்டு திகழும் தாயுமான சுவாமிகளே பெருந்துறவி. அவர் “பட்டினத்துபிள்ளையைப் போல் பிறத்தல் அரிது” என்பார்.
ஆனால் பட்டினத்துப் பிள்ளையோ, “திருநீலகண்டர், சிறுத்தொண்டர், கண்ணப்பர் என மூவரைப் போல யாரும் செயற்கரிய அரும் செயல் செய்து ஞானத்துறவியாக வாழ்ந்து காட்ட முடியாது” என உண்மை நாயன்மார்களுக்கு புகழாரம் சூட்டுவார்.
சிவஞானயோகிகள்:

சீரும் சிறப்பும் அருமையும் பெருமையும் கொண்டது திருவாவடுதுறை ஆதினம். இங்கு தம்பிரான் சுவாமியாக இருந்து தொண்டாற்றியவர்கள் ஸ்ரீ மத் சிவஞான யோகிகள். இவரை சைவர்களின் குல தெய்வமென இவ்வுலகம் கொண்டாடி மகிழும்.
இப்பெருமானுடைய சைவத்தமிழ் தொண்டுகள் இன்றைய சைவ சமயத்தாருக்கும் மட்டும் இன்றி தமிழ் இலக்கியவாதிகளுக்கும் கிடைத்த தேவாமிர்தம்.
யோகிகளின் கல்வி, கேள்வி, திறமை, புலமை யாவற்றையும் பாராட்டிய அன்றைய ஆதினகர்த்தர, யோகிகளை தலைமைப் பட்டம் ஏற்க வேண்டுமென பணித்துள்ளார்கள்.
அதற்கு யோகிகள் மெய் நடுங்க…தாம் வணங்கப் பிறந்ததாகவும், வணங்கப்படுவதற்குப் பிறக்கவில்லை என கூறி ஆதினத் தலைவர் பதவியை மறுத்ததாக கர்ண பரம்பரை செய்தி ஒன்று நிலவுகிறது.
கட்டுரையாளர், உரைநடையாசிரியர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், அரசியலாளர், சுதந்திரப் போராட்டவீரர் என பன்முகத் தோற்றம் கொண்டவர். சைவ சித்தாந்த நூற்களை எளிதில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தவர்.
வழக்கறிஞரான திருமயிலை கபாலீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவும், சித்தாந்த இதழின் ஆசிரியராக பணியாற்றிய ம.பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய ‘சிவஞானயோகிகள் வரலாறு’ என்ற கட்டுரையில் இச்செய்தி காணக்கிடக்கிறது.
ஒரு சமயம் திருப்பாதிரிபுலியூரில் வாழ்ந்த அந்தணர் ஒருவருக்கு பொற்கிழி கிடைக்க வேண்டும் என்ற நிலையில் முற்றுப்பெறாத செய்யுளை முற்றச் செய்து அவருக்கு அப்பொற்கிழியை முழுதும் கிடைக்கச் செய்தவர் நம் திராவிட பாஷ்ய கர்த்தா சிவஞானயோகிகள்.
கச்சியப்ப முனிவர்

சிவஞான யோகிகளின் முதன்மைச் சீடர்களில் ஒருவர் கச்சியப்ப முனிவர். இப்பிரபு தன் குருநாதரின் அடியொட்டி வாழ்ந்து காட்டிய வள்ளல் பெருமானார் ஆவார். சைவ சித்தாந்தத்தின் ஞான சாகரமாகத் திகழ்ந்தவர். இப்பெருமானர் இயற்றிய அருள் நூற்களில் ஒன்று விநாயக புராணம்.
ஒரு சமயம் சென்னையில் அரங்கேற்றம் செய்யப்பட்ட இப்புராணத்திற்கு இரண்டாயிரம் வராகன் வெகுமதியாகக் கிடைத்தது. அதைக் கொண்டு சற்குருவான நமச்சிவாய தேசிகரின் சன்னிதி மண்டபத்தை கற்கோயிலாக எழுந்தருளச்செய்து திருப்பணி செய்த பெரும் புண்ணியத்தைப் பெற்றவர் நம் கவிரட்சகராம் கச்சியப்ப முனிவர் ஆவார்.
வாழும் காலத்தில் பொன், பொருள், பெயர், புகழ், பதவிக்கு ஆசைப்படாமல் வாழ்ந்தவர்கள் தான் நம் அருளாளர்கள். அவர்களுள், குருவும், சீடரும் முதன்மை வகிக்கிறார்கள் என்பதை அறிந்துணர்வோமாக.
ஆறுமுக நாவலர்

“சைவமும் தமிழும் எனது இரு கண்கள். எனக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்… தமிழை நன்றாகப் படியுங்கள். நன்றாகப் பேசுங்கள். சைவத்தை நிலைக்க செய்ய அரும்பாடு படுங்கள்” என்று சொன்னவர் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள்.
அல்லும் பகலும் யாவரும் பின்பற்றும்படி அருந்தொண்டாற்றும் அவரது புலமை, கல்வித்திறமையை கேள்விப்பட்ட அன்றைய துறைசை ஆதின கர்த்தர் அவர்கள் திருமடத்திற்கு வரவழைத்து, நாவலருக்கு பட்டம் அளித்து பொன்னாடை போர்த்தி பொற்கிழியும் கொடுத்து ஆசி வழங்கி சிறப்பித்து வழியனுப்பி வைத்தார்கள்.
எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட பெருமானார் தன் இருப்பிடம் வந்து, துறைசை ஆதினத்திற்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். அதில்,
“என்றும் ஆதினத்தின் பால் அன்பினை கொண்ட தமியேனின் விண்ணப்பத்தினை ஏற்றருள வேண்டும். அடியேனுக்கு வழங்கிய பொற்கிழியை இத்துடன் அனுப்பி வைக்கிறேன். இதைக் கொண்டு திருக்களர் சேரியில் எழுந்தருளி இருக்கும் மறைஞான சம்பந்தரின் அதிஷ்டானத் திருப்பணி செய்து புதுப்பிக்க வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம்” என எழுதி இருந்தார் என்றால், அவரின் உயரிய குருபக்தியை என்வென்று சொல்லுவது…
வடலுார் ராமலிங்க சுவாமிகள்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... கொல்லா விரதம் குவலயம் எல்லாம் விளங்குக... அருள் நெறி எங்கும் தழைத்தோங்குக... அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்
-என இத்தரணியில் புகழ் பெற்று விளங்கும் தாரக மந்திரங்களுக்கு சொந்தக்காரர் கருங்குழிப் பிள்ளையான வடலுார் ராமலிங்க சுவாமிகள்.

ஒரு சமயம் பெருமானார் திருவொற்றியூர் திருக்கோயிலில் நடைபெற்ற பெருந்திருவிழாவினை தரிசித்து விட்டு ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திருடன் ஒருவன் அவர் காதில் அணிந்திருந்த கடுக்கணை மிகவும் சிரம்பட்டு கழட்டினார். அவன் யோசித்தபடி நிற்க மறுமுறை திரும்பிப் படுத்து மற்றொரு கடுக்கணையும் கழற்றிக் கொள்ள உதவி செய்தார் நம் ராமலிங்க சுவாமிகள்.
திருடனின் கல் மனம் இளகியது. பெருமானாரின் தயவினை எண்ணிய திருடன் காலில் விழுந்து “வயிற்றுப்பிழைப்பிற்காகவே, இவ்வாறு செய்தேன். என்னை மன்னியுங்கள்” என்றான்.
அதற்கு “அப்பா, பொன்மீது பற்று இருக்கக் கூடாது என்பதற்காக, பொன்னம்பலத்தான் உன்னில் இருந்து எனக்கு உணர்த்தியுள்ளார். நீ இது போன்ற செயல்களில் ஈடுபடாதே. இதை வைத்து வாழ்வினை செம்மையாக்கிக் கொள்” என்று உபதேசம் செய்தார் உத்தமரான வள்ளலார் என அன்பர்கள் பெருமக்கள் அவருடைய சிறப்பு நிகழ்வுகளை எழுதியும் சொல்லியும் மகிழ்வதுண்டு.
ஆ.ஈஸ்வர மூர்த்தி பிள்ளை

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த செந்நெறிக்கழகம், சங்கரன்கோவிலில் சைவ சித்தாந்த சபை போன்ற அமைப்புகளை நிறுவி சித்தாந்த சைவத்திற்கு பூஷணமாக விளங்கியவர் பேட்டை ஆ.ஈஸ்வர மூர்த்தி பிள்ளை அவர்கள்.
இப்பெருமானார் சிவபெருமானைத்தவிர மறந்தும் புறந்தொழா மாந்தர். கொண்ட கொள்கைக்காக வாழ்ந்தவர். எடுத்துக் கொண்ட உறுதியில் இருந்து எள்ளளவு கூட பின்வாங்காதவர். அன்னாரைப் போன்ற ஆத்மார்த்தமாக சைவத்திற்கு பணி செய்பவர்களை தற்போது மட்டுமல்ல… எப்போதுமே காண்பது அரிது.
ஆசிரியர் பணியில் இருந்து நிறைவு பெற்ற பின் தன் முழு நேரத்தையும் சைவசித்தாந்தத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். இவருடைய பணிகளைக் கண்ணுற்ற அன்றைய திருவாவடுதுறை ஆதின கர்த்தர் ஆதின வித்துவானாக ஆக்கி அருளினார்.
சிறப்புற பணி செய்த பிள்ளையவர்களுக்கு வயது தளர்வினால் முன் போல சிவப்பணி ஆற்ற முடியவில்லை என்பதை எண்ணிய பிள்ளையவர்கள், ஆதின திருமடத்தில் இருந்து மாதந்தோறும் வந்த (200 ரூபாய் ) சம்பாவணைத் தொகையை வேண்டாம் என திருப்பி அனுப்பி வைத்து விட்டார் என, அவருக்கு நெருக்கமாக பணி செய்தவர்கள் சொல்வதை அடியேன் கேட்டு இருக்கிறேன்.
பாருங்கள் எவ்வளவு உயரிய நோக்கம். பணி செய்தால் மட்டுமே சம்பாவணை பெறுவேன் என்ற கொள்கை இக்காலத்தில் யாருக்கும் இருக்கும்!
சுவாமி சித்பவானந்தர்
இன்று வெளிநாடு மட்டும் இன்றி தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் திருவாசகம் முற்றோதல் நடக்கிறது என்றால், அதற்குக் காரணம் திருவாசகத்தில் ஊறித் திளைத்த நம் முன்னோர்கள் தான். அவர்கள் நமக்கு திருவாசகத்தின் அருமையையும் பெருமையை எடுத்துச் சொல்லி போதிக்கவில்லை என்றால் திருவாசகத்தின் உயரிய மதிப்பு நமக்கு தெரியாமலே போயிருக்கும்.
தேனை விட இனியது. கல்மனதினையும் கனிவிக்கும் ஆற்றல் கொண்டது திருவாசகம். இத்திருவாசகத்திற்கு பலரும் பல கோணங்களில் உரை எழுதியுள்ளார்கள். அது அவர்களுக்கு இருந்த தனித்திறனைக் காட்டுகிறது.
ஹிந்து மதத்தின் உயரிய நூற்களில் ஒன்றான வேதத்தின் சாரமான உபநிடதக் கருத்துக்களை வைத்து திருவாசகத்திற்கு உரை எழுதி அது ஒரு ஒப்பற்ற நுால் என தமிழக சைவப் பெருமக்களிடம் வெளிக்கொணர்ந்தவர் சுவாமி சித்பவானந்தர் ஆவார்.
தமிழ் உபநிடத கர்த்தாவான தாயுமானவர் அதிஷ்டானத்தை திருப்பணி செய்வதற்காக ‘தர்மச்சக்கரம்’ மாத இதழில் ஒரு அறிவிப்பினை வெளியீடு செய்தார். அதனைப் படித்த எண்ணற்ற ஆஸ்தீக அன்பர்கள் அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு நிதியை அனுப்பி வைத்தார்கள்.
அதன் பிறகு மீண்டும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் சுவாமி சித்பவானந்தர் அவர்கள்.
அதில் “அதிஷ்டானம் கட்டுவதற்குத் தேவையான நிதி வந்து சேர்ந்து விட்டது. தொடர்ந்து நிதியை அனுப்பிக் கொண்டே இருக்கிறீர்கள். இனியாரும் நிதி அனுப்ப வேண்டாம். அப்படி மீறி யாராவது அனுப்பினீர்கள் என்றால் உங்களுடைய முகவரிக்கு மீண்டும் அந்நிதி அனுப்பி வைக்கப்படும்” என்று அறிவிப்பு செய்தார்.
சித்பவவானந்தரின் உறுதிப்பாட்டினையும் கொள்கையையும் எவ்வளவு விலை கொடுத்தாலும் இவ்வுலகில் வாங்க முடியாது என்பதை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
நிறைவாக,
சைவர்களுக்கு சட்ட நூலாகத் திகழ்வது பெரிய புராணம். இது தேசிய நூல் என்ற பெருமையினை உடையது. இதற்கு மாபெரும் விரிவுரை ஒன்றை எழுதி உபகரித்தவர் கோவை. சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள். அப்பிரபு தன் சரித்திரத்தை ‘ஒரு பித்தனின் சுய சரிதம்’ என்று எழுதி நமக்குத் தந்துள்ளார்கள். அதில், தன் தர்ம பத்தினியார் சிவபதம் அடைந்த பிறகு அவருடைய நகைகளையெல்லாம் பேரூர் பட்டீஸ்வரப் பெருமான் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விடுவார். பின்னர் துறவற வாழ்விற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை அறியாதவர் யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது. இப்பெருமானார் தன் சொற்பொழிவில் கிடைத்த அத்துணை செல்வங்களையும் இல்லாதவர்களுக்குக் கொடுத்தும், பாழடைந்த கோயில்களை புதிப்பித்தும், திருப்பணிகள் செய்தும் சற்குருவாக வாழ்ந்து காட்டினார் என்பதை இவ்வுலகம் நன்கு அறியும்.
“மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும்” என்ற கூற்றினை அறத்தின் படி தர்மத்தின் வழியில் வாழ்பவர்கள் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
இம்மகான்கள் வாழ்ந்த இம்மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நமக்கு பெருமை.
முடிந்த வரை அவர்கள் காட்டிய நன்னெறியை கடைப்பிடித்து அவர்களது அடியொற்றி வாழ முயற்சிப்போம்.
திரிகரணத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாழ்ந்து காட்டிய மேற்கண்ட குருநாதர்கள் அனைவரும் நமக்கு சொல்லும் சேதி ஒன்றே ஒன்று தான்.
அவர்கள் காட்டும் உண்மையான ‛திரு’ என்ன என்பதை நாம் வாழ்வில் அறிந்துணர வேண்டும் என்பதே அவர்கள் ஓதாமல் உணர்த்தும், சொல்லாமல் சொல்லும் மிகப்பெரிய உபதேசமாகும்.
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
-திருமூல தேவ நாயனார்.
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார்.
-தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்
திருச்சிற்றம்பலம்.
வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு
$$$