-அரவிந்தன் நீலகண்டன்
தமிழகத்தின் சமகால இந்துத்துவ சிந்தனையாளர்களில் முதன்மையானவர் திரு. அரவிந்தன் நீலகண்டன், அவரது முகநூல் பதிவு இங்கே முக்கியமான கட்டுரையாகப் பதிவாகிறது…

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகள் – பழைய விகடன் தலையங்கள்- அண்மையில் பழைய புத்தகங்கள் விற்பனையில் கிடைத்தது.
தலைவிதி என்னவென்றால் முதல் கட்டுரையே ‘இந்த ஹிந்து சமூகம்’ என்பதுதான். 1936 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆனந்த விகடன் தலையங்கம். அப்போது ஆனந்தவிகடன் தேச விரோத பத்திரிகை ஆகிவிடவில்லை; இந்து விரோத பத்திரிகையாகவும் ஆகிவிடவில்லை. ‘கல்கி’ தமது 55 ஆம் வயதில் அமரராகிவிட்டார். இதை எழுதிய போது அவரது வயது 37.
கோமுட்டி செட்டியார் ஒருவரை ஒரு திருடன் அடித்துக் கொண்டிருந்தானாம். அப்போது செட்டியாரின் கவலையெல்லாம் அவன் கை தன் மேல் படுகிறதே என்பதாக இருந்ததாம். அதே போலத்தான் இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. வருகிறவன் போகிறவனெல்லாம் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருக்கிறானே என்கிற வருத்தத்துடன் கட்டுரை ஆரம்பிக்கிறது. காரணம் என்ன என்று கேட்டு அதற்கு பதிலும் சொல்கிறார் ‘கல்கி’.
இந்த பத்தியைப் படியுங்கள்:
”உலகில் தற்சமயம் கிறிஸ்தவர்கள் சுதந்திரமாய் அரசாளும் அநேக ராஜ்யங்கள் இருக்கின்றன. முஸ்லிம்கள் சுதந்திரமாக ஆளும் ராஜ்யங்கள் பலவும் இருக்கின்றன. புத்த மதத்தார் கூட இரண்டு பெரிய தேசங்களை ஆள்கிறார்கள். ஆனால் ஹிந்துக்கள் சுதந்திரமாய் வாழும் ஒரு சாண் இடங்கூட இந்தப் பூவுலகில் இல்லை. ஹிந்து சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவனும் இந்த ஆச்சரியமான விஷயத்தைத் தினம் ஒரு தடவையாவது நினைத்துப் பார்க்க வேண்டுமென்று விகடன் விரும்புகிறான்.”
[அப்படியே இன்றைய ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகளையெல்லாம் நினைத்துக் கொண்டு ’நாடுகளையெல்லாம் விடுங்கள். தமிழ்நாட்டிலேயே ஹிந்துக்களுக்காக சுதந்திரமாகப் பேசும் வெகுஜன பத்திரிகை ஒன்று கூட இல்லையே’ என்றெல்லாம் தேவையில்லாமல் வருத்தப்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது].
‘கல்கி’ எழுதுகிறார்:
“ஹிந்து சமூகத்தின் இத்தகைய மகத்தான வீழ்ச்சிக்குக் காரணமான குறை என்னவாய்த்தான் இருக்கும்? ஹிந்து சமூகத்தின் சாதிப்பாகுப்பாட்டில்தான் அதனுடைய வீழ்ச்சியின் விதை இருந்ததென்பது விகடனுடைய தீர்மானமான அபிப்பிராயம்.”
தெளிவான எழுத்து. மூடி மறைக்காத எழுத்து. இன்று சாதியத்தை சமூக மூலதனம் என்றெல்லாம் பூசி மெழுகுகிற சங்கத்தாரெல்லாம் ‘கல்கி’அவர்களிடமிருந்து ஓரிரண்டு பாடங்களைப் படித்துக் கொள்ளலாம்.
இந்தக் காலகட்டத்தில் தலைவர் ஒருவர் ஆந்திர பிரதேசத்துக்கு வருகிறார். அவரது உரைகளைக் கேட்கிற கல்கிக்கு ‘அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று’ என்று எழுதுகிறார். யார் அந்த தலைவர்?
பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே அவர்கள்தாம் அந்தத் தலைவர். ‘கல்கி’ எழுதுகிறார்:
“முக்கியமாக அவர் ஹிந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்காகக் கூறும் யோசனைகளில் ஒன்றை விகடன் முழுமனதுடன் ஆதரிக்கிறான். அது வருமாறு: ‘இந்நாளில் ஒவ்வொரு ஹிந்துவும் சமயம் நேரும்போது பிராம்மணனாகவோ, க்ஷத்திரியனாகவோ, வைச்யனாகவோ, சூத்திரனாகவோ இருக்கச் சித்தமாயிருக்க வேண்டும்.”
‘கல்கி’ தொடர்கிறார்:
“அதாவது நமது பெரியோர்களால் மேற்படி நாலு ஜாதிகளுக்கு உரியனவையாகத் தனித்தனியே வகுக்கப்பட்ட தொழில்களை ஒவ்வொரு ஹிந்துவும் செய்யப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இது எவ்வளவு உசிதமான யோசனை என்பதை நினைக்க நினைக்க விகடனுக்கு சந்தோஷம் தாங்காமல் டாக்டர் மூஞ்சேயிடம் சென்று அவருடைய தாடியை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டு வர வேண்டுமென்று ஆவல் உண்டாகிறது.”
ஆனால் பிரச்சினை என்னவென்றால் மூஞ்சே கல்கியை ஏமாற்றிவிட்டார். இதோ வாசியுங்கள்…
“டாக்டர் மூஞ்சே ஏமாற்றும் வித்தையில் கைதேர்ந்தவர்களில் ஒருவர். அவருடைய பிரசங்கங்களைப் படிக்கும் போது அவருடைய உருவத்தோற்றம் மிக பயங்கரமாக நமது மனக்கண் முன் எழுதுகின்றது. கத்தியும் கபடாவும் துப்பாக்கியும் பீரங்கியுமாக மீசையை முறுக்கிக் கொண்டு ‘எங்கே சண்டை? யார் எதிரி?’ என்று போருக்குக் கிளம்புகிறவராகக் காட்சி அளிக்கிறார். மற்றும், விராதன் எனும் அரக்கனைப் பற்றி ‘எட்டொ டெட்டு மதமாகரி யிரட்டியரிமா வட்டவெங்கண் வரையாளி பதினாறு வகையின் கிட்ட விட்டிடை கிடந்தன செறிந்ததொருகை தொட்ட முத்தலையயிற்றொகை மிடற்குழுவோடே’ -என்று கம்பர் வருணித்திருப்பது போல, டாக்டர் மூஞ்சேயும் பல மிருகங்களைக் கொன்று, சூலாயுதத்தில் கோத்துப் பிடித்துக் கொண்டு வருவார் என்று நினைக்கிறோம். இத்தகைய கதிகலங்கக் கூடிய தோற்றத்தை மனதில் உருவகப்படுத்திக் கொண்டிருக்கும் நாம், கூனிக் குறுகி, கோல் பிடித்து நடக்கும் அசல் டாக்டர் மூஞ்சேயைப் பார்த்தால் ஒரு விதத்தில் ஏமாற்றம் அடைந்தாலும் ஒருவாறு ஆறுதலும் அடைகிறோம். அவர் கூறும் விஷயங்களை பீதியோ பயங்கரமோ இல்லாமல் ஆராய்ச்சி செய்து பார்க்கலாமென்று நம்பிக்கை உண்டாகிறது.”
இப்போது வாசிக்கும் போதும் சிறிய நகைச்சுவை உணர்வை எழுப்பும் வரிகள். கூடவே ஒரு சோகம். அந்த கூனிக்குறுகி கோல் பிடித்து நடக்கும் கிழவர், மாநிலங்களும் மாகாணங்களுமாக நாடு முழுவதும் சுற்றி வந்து ஹிந்துக்களை விழிப்புணர்வு அடையப் பேசியிருக்கிறார். அவருக்கு பிற தலைவர்களுக்குக் கிடைத்த எந்த வசதியும் பெரிய அளவில் கிடையாது. வசதியை விடுங்கள். அவருக்கு பெரிய வரவேற்பு கூட கிடையாது. ஆனால் ஹிந்து சமுதாயத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு விடயத்தையும் அந்த கிழவர் யோசித்து யோசித்து அதற்கு -மற்றவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ- தீர்வுகளை சிந்தித்து அவற்றை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றவாறே இருந்துள்ளார்.
மூஞ்சே அவர்களின் அனைத்து யோசனைகளுடனும் ‘கல்கி’ உடன்படவில்லை. இரண்டு விடயங்களில் முழுமையாக உடன்படுகிறார் ‘கல்கி’.
1. ஹிந்து சமூகத்தின் ஜனத்தொகை விகிதம் குறையாமலிருக்குமாறு ஹிந்துக்கள் பிறமதம் புகுவதைத் தடுப்பதற்கு ஏற்பாடு செய்தல்.
2. ஹிந்துக்களின் தேகவலிமையை வளர்த்து, ஆயுதப்பயிற்சி அளித்தல்.
‘கல்கி’ எழுதுகிறார்…
“இவ்விரண்டும் சர்வ சிலாக்யமான நோக்கங்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இப்போதுள்ள ஆயுதச் சட்டத்தின் கீழேயே துப்பாக்கிப் பயிற்சி பெறுவதற்கு இடமிருப்பதாக டாக்டர் மூஞ்சே தெரிவிக்கிறார். இதைக் கண்டுபிடித்துக் கூறியதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம். இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து ராணுவ முறைகளில் தேர்ச்சிபெறச் செய்வதின் பொருட்டு ஒரு கலாசாலை ஸ்தாபித்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சிக்கும் ‘விகடன்’ மனப்பூர்வமான ஆசி கூறுகிறான்”.
இப்படி எழுதிவிட்டு கல்கி கூறுகிறார். ஆனால் மூஞ்சேயின் தேனிலோ விஷம் கொஞ்சமல்ல தாராளமாகவே இருக்கிறது என்கிறார் கல்கி.
அந்த நச்சு என்னவென்பதை சொல்கிறார் கல்கி…
1. ஹிந்துக்கள் பலசாலிகளாவதற்கு மாமிசம் சாப்பிட வேண்டுமென்று பிரசாரம் செய்கிறார். 2. ஹிந்துக்கள் தங்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷாரைத் துணைக் கொள்ள வேண்டும் என்கிறார். அதாவது இப்போது வகுப்புவாத முஸ்லிம் தலைவர்கள் செய்வதை ஹிந்துக்களும் பின்பற்ற வேண்டும் என்கிறார்.
கல்கியின் அபிப்பிராயம்:
பெரும்பான்மை சமூகத்தாரான ஹிந்துக்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு விரோதமாக அந்நிய நாட்டாரிடம் சிநேகம் செய்ய முயலுவதென்பது தேசியத் தற்கொலையேயாகும். சுயராஜ்ய லக்ஷ்யத்திற்காக பெரும்பான்மையோரான ஹிந்துக்கள் ஓரளவு தியாகம் செய்தே ஆக வேண்டுமென்பதை இவர் உணரவில்லை. மேலும் இந்தியா சுயராஜ்யம் அடைந்த பின்னர் அரசியலில் சமூகப் பிரிவுகள் பெரும்பாலும் மறைந்து போய்விடுமென்றும், ஏழைகள்- பணக்காரர்கள், தொழிலாளிகள்-முதலாளிகள், குடியானவர்கள் - ஜமீந்தார்கள் என்பன போன்ற பிரிவுகள்தான் ஏற்படுமென்றும் இவர் தெரிந்து கொள்ளவில்லை.
இறுதியாக கல்கி சொல்லும் மிகப் பெரிய தவறு, ‘மூஞ்சேயின் தவறுகளிலெல்லாம் இதுவே மிகப் பெரியது’ என சொல்லும் தவறு இதுதான்: ‘மகாத்மா காந்தியின் அஹிம்ஸா தர்மப் பிரசாரத்தைப் பரிகாசம் செய்து அதனால் ஹிந்து சமூகம் தீமை அடைந்து வருவதாகச் சொல்கிறார்.’
இங்கு கல்கி சொல்லும் கருத்து கவனிக்கத்தக்கது (ஏற்கத்தக்கது என்று சொல்லவில்லை – அது அவரவர் பார்வையைப் பொறுத்து):
“உண்மையில் ஹிந்து சமூகத்தைப் பலமுடையதாகவும் வீரமுடையதாகவும் செய்ய வேண்டுமென்னும் ஆசையில் மகாத்மா காந்தி மூஞ்சேயைவிட எவ்விதத்திலும் குறைந்தவரல்ல. மகாத்மாவின் அகிம்சை கோழைகளின் அகிம்சை அல்லவென்பதை அவர் பலமுறையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். கோழைத்தனத்தினால் எதிராளிக்குப் பயந்திருப்பதைவிட திருப்பி பலாத்காரத்தைக் கைக்கொள்வதே மேலானதென்பது மகாத்மா பல முறையும் தெளிவாகச் சொல்லியிருக்கும் அபிப்பிராயம்.”
இறுதியாக ‘கல்கி’ இப்படி முடிக்கிறார்:
“நமது நாட்டில் ஹிந்து சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்க விரும்புகிறவர்களெல்லாம் லக்ஷ்யமாகக் கொள்ள வேண்டிய மகாபுருஷர்கள் இரண்டு பேர் உண்டு. ஒருவர் ஸ்வாமி விவேகானந்தர்; மற்றவர் ஸ்வாமி சிரத்தானந்தர். இவர்கள் இருவரும் தங்கள் தாய்நாட்டின் விடுதலையையே இரவும் பகலும் தியானித்துக் கொண்டிருந்தவர்கள். தேசபக்தியில் அவர்களுக்கு இணையானவர்கள் இல்லை. ஆனாலும் அவர்கள் நேர்முகமாக அரசியலில் ஈடுபடவில்லை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுடன் சிற்சில சட்ட சபை ஸ்தானங்களுக்காகப் போராடவில்லை. ஹிந்து சமயம், ஹிந்து சமூகம் இவைகளின் மேன்மைக்காக தங்கள் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, அந்தத் தொண்டிலேயே தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள். பெரும்பான்மை சமூகமான ஹிந்து சமூகத்துக்குத் தொண்டு செய்வதன் மூலம் தாய்நாட்டிற்குத் தொண்டாற்றுவதை அவர்கள் தங்கள் தர்மமாகக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு மகா புருஷர்களையும் லக்ஷ்யமாகக் கொண்டவர்களால்தான் ஹிந்து சமூகத்திற்குச் சிறந்த தொண்டு செய்யக் கூடுமென்பது விகடன் கருத்து. அத்தகைய சமூகத் தொண்டர்கள் நாட்டில் ஆயிரக்கணக்காக ஏற்பட வேண்டுமென்று விகடன் பிரார்த்திக்கிறான்.”
[ஆனந்த விகடன் 8-9-1935]
இப்போது 2025 இல் இருக்கிறோம். இந்தத் தலையங்கம் எழுதி 90 ஆண்டுகள் ஆகின்றன. இதை ‘கல்கி’ எழுதி 12 ஆண்டுகளில் தேசப்பிரிவினை நடைபெற்றுவிட்டது. மூஞ்சே பிரிட்டிஷ் ஆதரவு என்பதை எப்படி நோக்கினாரென்பது நம் அனைவருக்கும் தெரியும். ராணுவத்தில் இந்துக்கள் அதிக இடம் பெற வேண்டுமென்பதும், வைசிராயின் போர்க்கால சர்க்காரில் ஹிந்து உணர்வுடையோர் இருக்க வேண்டுமென்பதும் அவரது ‘பிரிட்டிஷ் ஆதரவு’ என்பதன் நீட்சி. கல்கி இதை காங்கிரஸின் அன்றைய அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிராக மட்டுமே காண்கிறார். ஆனால் அப்படி மூஞ்சே- சாவர்க்கர்- அம்பேத்கர் ஆகியோரால் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் போயிருந்தால் விடுதலை- பிரிவினையின் பின் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுத்திருக்க வேண்டியிருக்கும்.
கல்கி கட்டுரையை முதலில் ஹிந்துக்களுக்கென்று ஒரு தேசம் கூட பூவுலகில் இல்லை என ஆரம்பித்தார். எழுதி 12 ஆண்டுகளில் இந்தியாவிலேயே ஹிந்துக்கள் கிழக்கு, மேற்கு பாகிஸ்தான்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். ஒரே இரவில் பிறந்த தேசத்தில் அகதிகளாக்கி விரட்டப்பட்டனர். 1935 இல் ஹிந்துக்கள் தியாகம் பண்ணத்தான் வேண்டுமென்று கூறியதன் முழு பரிமாணமும் பிரிவினையில் கொடூரமாக வெளிப்பட்டது.
ஆனால் ஒன்றை கவனியுங்கள். ‘கல்கி’ இந்து சமுதாயம் வலிமையாக வேண்டுமென்பதில், அதற்கு ராணுவப் பயிற்சி கட்டாயமென்பதில், ஹிந்துக்களின் சாதி அடிப்படை வர்ண அமைப்பு சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென்பதில் மூஞ்சேயுடன் ஒத்துப் போகிறார். காந்தியை இவ்விதத்தில் ‘கல்கி’ மூஞ்சேயை ஒத்ததோர் ஹிந்து சமுதாயத் தலைவராகவே காண்கிறார்.
இறுதிப் பத்தியை படியுங்கள். முழுக்க முழுக்க ஹிந்துத்தன்மையுடன் ஹிந்துக்களின் நன்மையையும் தேசபக்தியையும் மட்டுமே மனதில் கொண்டு எழுதப்பட்டது. இது அன்று வெகுஜன பத்திரிகையில் எழுதப்பட்டது. இன்று அதே பத்திரிகையும் ஏன் ‘கல்கி’ என்பவரின் வாரிசுகளுமே கூட இப்படி ஒரு பத்தியை எழுதுவார்களா?
90 ஆண்டுகளில் எங்கு வந்துவிட்டோம் என்பது தெரிகிறதா?
$$$