-பத்மன்
மகாகவி பாரதியைப் பற்றி எழுதுவதே ஒரு ஆனந்தம். அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பதும் அவற்றைப் பற்றி பிரலாபிப்பதும் அதைவிட ஆனந்தம். இதோ இங்கு மீண்டும் ஒரு ஆனந்தக் குளியல்... நடத்துபவர்: மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன்....

“ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற தமது பாடல் வரிகளை விரிவுபடுத்தி, நாட்டுக்காக உழைப்பதை தமது இறுதிமூச்சு வரை கடைபிடித்து வாழ்ந்தவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார். “விதந்தறு கோடியின்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே” என்ற தமது பாடல் வரிகளுக்கு ஒப்ப, பாரத அன்னையின் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவதற்காகவும், விடுதலை பெற்ற பின்னர் தேச மக்கள் செழிப்புற வாழ்வதற்குமாகவே தமது சிந்தை முழுவதையும் செலவழித்ததோடு அதற்குச் செயல்வடிவமும் கொடுத்த செம்மல் அவர்.
“காலா என் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்” என்று அந்த ஞானி பாடியதால் கோபமுற்று காலன் அவரது உயிரை 40 வயது நிறைவதற்குள் பறித்துச் சென்றாலும், அவரது உணர்வு, கவிதைகளாலும், கருத்துகளாலும் காலனைக் காலடியில் போட்டு மிதித்து, காலத்தை விஞ்சி நிற்கின்றது. பாரதத்தின் தத்துவ ஞானம் அனைத்தும் ஓர் மனித உருவில் திரண்டதைப்போல் பூமியில் வந்துதித்து குறுகிய ஆயுட்காலமேயானாலும் வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவடைந்த தன்னிகரில்லாக் கர்மயோகி மகாகவி பாரதி.
தமது 16 வயதில் காசி மாநகரத்துக்கு இடம் பெயர்ந்த சுப்ரமண்ய பாரதி, அங்கே ஐந்தாண்டு காலம் அத்தை வீட்டில் தங்கி, தமது உயர்கல்விப் படிப்பைப் பயின்றுள்ளார். காசியில்தான் பாரதி தமது புகழ்பெற்ற மீசையை முதலில் வைத்தார். காசி மாநகரம் அவரது உருவத் தோற்றத்தில் மட்டுமல்ல, உணர்வோட்டத்திலும் எடுப்பான மாற்றத்தைத் தந்தது. பாரதியின் தேசிய, ஞானமரபு சார்ந்த சிந்தனை மற்றும் செயலாக்கத்துக்கு காசி மாநகரம்தான் விதையூன்றியது என்று சொன்னால் அது மிகையல்ல.
பாரதி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று கலைமகள் – அதாவது சரஸ்வதி. சிறுவயதிலேயே சொற்சுவை, பொருட்சுவை நிறைந்த பாக்கள் புனைந்து பாரதி என்ற பட்டம் பெற்றதுடன், அந்தக் கலைமகளே வந்துதித்தைப் போல மேதாவிலாசத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்த கவிதைகள், கட்டுரைகளை எழுதி தமிழருக்கு ஞானமூட்டிய அவர், ஆண் வடிவிலான சரஸ்வதி என்பதில் சந்தேகமில்லை. பாரதிக்கு மற்றொரு பொருள், போர்க்களத்திலே பேயாட்டம் போடும் காளி. ‘பேயவள் காணெங்கள் அன்னை’ என்று அன்னை பராசக்தியைத் தாம் பாடியதைப் போலவே, சமூக அவலங்களைக் கண்டதும் அதனைக் கொன்றழிக்கும் கொற்றவையைப் போன்ற ஆவேசம் கொள்பவர் பாரதியார். அவ்வகையில் தம் பெயருக்கேற்ப இரு விதங்களிலும் சுப்பிரமணிய பாரதியார், “பாரதி”யாகவே வாழ்ந்தார்.
பாரதிக்கு பன்முகங்கள் உண்டு. அவற்றில் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் (ஆறில் ஒரு பங்கு), முன்னோடி நாவலாசிரியர் (சந்திரிகையின் கதை), மிகச் சிறந்த கட்டுரையாளர், தலைசிறந்த பத்திரிகையாளர் என்பதோடு தமிழில் கேலிச் சித்திரத்தையும் (கார்ட்டூன்) நேரடிக் களச் செய்தியையும் (ஸ்பாட் ரிப்போர்டிங்) முதன்முறையாக அறிமுகப்படுத்தியவரும் மகாகவி பாரதிதான். பெண்களின் முன்னேற்றத்துக்காக சக்ரவர்த்தினி, விஜயா போன்ற பத்திரிகைகளைத் தொடங்கியவர். இளம் தலைமுறையினரை நல்வழிப் படுத்துவதற்காக பாலபாரதா என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் நடத்தியுள்ளார். அரவிந்தரின் கர்மயோகின் என்ற ஆங்கிலப் பத்திரிகையைப் பின்பற்றி, தமிழில் கர்மயோகி என்ற தமிழ் வாரப் பத்திரிகையையும் நடத்திய உண்மையான கர்மயோகி அவர்.
பெண் சுதந்திரத்தை வாய் வார்த்தையாகக் கூறாமல் தமது மனைவியான செல்லம்மாளின் கரத்தை தனது கரத்தோடு கோர்த்தபடி புதுவையில் வீதி வலம் வந்தவர். கணவன் முன்னே நடக்க, மனைவி எட்டடி தூரத்தில் பின்னே தலையைக் குனிந்தபடி பின்தொடர்ந்து சென்ற காலகட்டத்தில் இது மாபெரும் புரட்சி. தமக்கு வழங்கப்பட்ட பொன்னாடைகளையும், புத்தாடைகளையும் வீதியில் குளிரில் நடுங்கிய ஏழைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்த மனிதநேயவாதி. இதேபோல் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்ற தமது பாடல் வரிகளை, வீட்டில் இருந்த ஒருவேளை அரிசியையும் பறவையினங்கள் பசியாறுவதற்காகப் பரிமாறி, மெய்ப்பித்த தூய ஆத்மா பாரதி.
பாரதி உள்ளதை உள்ளபடி உரைப்பவர், போலித்தனங்களை அறவே வெறுப்பவர். ஆகையால் பாரதத்தின் பழம்பெருமைகளைப் புகழ்ந்து அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றுரைத்த பாரதி, மூடப் பழக்கங்களைச் சாடவும் தவறவில்லை. அதேநேரத்தில், புதுமை என்ற பெயரால் பாரதத்தின் பழமையையெல்லாம் அழிக்க வேண்டும் என்ற மூர்க்கத்தனமும் அவரிடமில்லை. எதையும் சரியாகப் பகுத்தாய்ந்து, ஏற்பதை ஏற்று, தள்ளுவதைத் தள்ளுவது அவரது இயல்பு.
சொல்லப்போனால் தமிழுக்குப் புரட்சி என்ற சொல்லைக் கொடுத்ததே பாரதிதான். ரஷியாவில் ஏற்பட்ட சமூக-அரசியல் மாற்றத்தைக் குறிப்பிடும்போது ‘ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி’ என்று, ரெவல்யூஷன் என்ற ஆங்கில வார்த்தைக்கு புரட்சி என்ற பதத்தை முதன்முறையாகப் பயன்படுத்தினார். அதில்கூட “மாகாளி கண்ணுற்றாள், ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என்றே பாடியிருப்பார். அதாவது, அதர்மத்தை அழிப்பதற்காக அன்னை பராசக்தியின் கோபப் பார்வையால் எழுந்தது அப்புரட்சி என்று பாரதீய தத்துவ மரபில் அதனைத் தெரிவித்திருப்பார்.
நாட்டை அடிமைப்படுத்திய அன்னிய ஆங்கிலேயர்களை விரட்டுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் மகாபாரத்தில் ஓர் சிறு பகுதியை ‘பாஞ்சாலி சபதம்’ என்ற பெயரில் தமிழின் புதிய காவியமாகப் படைத்தார். மரபைப் பேணி, புதுமை படைப்பதே பாரதியின் பாணி. தேச விடுதலை என்ற புதிய விஷயத்துக்கு, பாரதப் போருக்கு வழிவகுத்த பாஞ்சாலியின் சபதம் என்ற பழைமையைப் பாடுபொருளாகக் கொண்டு இலக்கியம் படைத்து, விடுதலை வேள்வித் தீயை வளர்த்தார்.
வீர சிவாஜி மொகலாயப் படைகளை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்துக்கும் சனாதன ஹிந்து தர்மத்தைக் காப்பதற்கும் பாடுபட்டதை நினைவுகூர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரைத் தூண்ட, சத்ரபதி சிவாஜி தம் சைன்னியத்துக்குக் கூறியது என்ற நெடும்பாடலை இயற்றினார். இதேபோல், விடுதலைப் போருக்கு வேகம் கொடுக்க, ஔரங்கசீபின் மதவெறி கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராகப் போராடிய சீக்கிய ஆன்மீகத் தலைவர் குரு கோவிந்தர் குறித்து அதே தலைப்பில் ஒரு நெடும்பாடல் எழுதியுள்ளார். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரப் பாடல்களின் மெட்டுகளில் தொண்டு செய்யும் அடிமை, நம்ம ஜாதிக்கு அடுக்குமோ போன்ற விடுதலைப் போராட்டப் பாடல்களையும் எழுதினார்.
வேதமும், சம்ஸ்கிருதமும் ஒரு பிரிவினருக்கே குறிப்பாக பிராமணருக்கு மட்டுமே உரியது என்ற நினைப்பைத் தகர்த்தவர் பாரதி. அனைத்து சாதியினருக்கும், ஏன் பெண்களுக்கும் வேதம் பயில்வதில் உரிமை உண்டு என்று குரல் கொடுத்தவர். பிராமணர் என்பது ஜாதி அல்ல, அது அடையக் கூடிய நிலை என்பதை நாற்குலம், பிராமணன் யார், ஜாதிக் குழப்பம் உள்ளிட்ட கட்டுரைகள் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறார். குறிப்பாக, ‘பிராமணன் யார்?’ என்ற கட்டுரையில், பிறப்பின் அடிப்படையில் பிராமணன் என்று பெருமைபட்டுக் கொள்வோரின் போலித்தனங்களை சாடியிருப்பதுடன், வஜ்ர ஸூசி (வைர ஊசி) என்ற உபநிஷதத்தில் பிராமணன் என்ற நிலைக்கு உரிய விளக்கம் கூறப்பட்டிருப்பதை விண்டுரைக்கிறார்.
“ஜீவனாலோ, தேகத்தாலோ, பிறப்பாலோ, அறிவாலோ, செய்கையாலோ, தர்ம குணத்தாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான்” என்று வஜ்ர ஸூசி உபநிஷதம் கூறுவதைக் குறிப்பிடுகிறார். அத்துடன், “எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம்போல கலந்திருப்பதும், அளவிடக் கூடாததும் (இயலாததும்), அனுபவத்தால் உணரத் தக்கதுமாகிய இறுதிப்பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்து காமம், ரோகம் முதலிய குற்றங்கள் இல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனாய், டம்பம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கிறானோ, இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும். மற்றப்படி ஒருவனுக்கு பிராமணத்துவம் சித்தியாகாது என்பது (என்கிறது) உபநிஷத்து” என்று எடுத்துரைக்கிறார். “பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையை முயற்சி செய்யக் கடவர்” என்று அக்கட்டுரையில் தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ளார் பாரதியார்.
வெறும் பேச்சளவில் கொள்கையை நிறுத்திக் கொள்ளாமல் கனகலிங்கம் என்ற அரிசன வகுப்பைச் சேர்ந்தவருக்கு பூணூல் அணிவித்து, வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து அந்தணர் ஆக்கியவர் பாரதியார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தின் மூலமும், ஸ்ரீ நாராயண குரு ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் மூலமும் அமைப்பு ரீதியாக மேற்கொண்ட சீர்திருத்தங்களை தமிழகத்தில் தனியொரு மனிதனாக முன்னெடுத்தவர் பாரதியார். அதேநேரத்தில் பிராமணரல்லாதோர் கிளர்ச்சி என்ற பெயரில் அக்காலத்தில் தொடங்கிய கூத்துகளையும் ‘ஜாதிபேத விநோதங்கள்’ என்ற கட்டுரை வாயிலாகக் கண்டித்திருக்கிறார்.
“இந்த ‘பிராமணரல்லாதார் கிளர்ச்சி’ காலகதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதிபேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலியவற்றில் கௌரவ ஸ்தானங்களையும் தாமே அடையவேண்டும் என்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்” என்று உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்துள்ளார்.
“எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்புச் சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய் விடுவார்கள்” என்று சரியான திசையை அக்காலத்திலேயே ‘ஜாதிக் குழப்பம்’ என்ற கட்டுரையில் தெளிவாகக் காட்டியிருக்கிறார். இதேபோல், ‘பறையர்’ என்ற கட்டுரையில் ‘பறையர் என்ற வார்த்தை மரியாதைக் குறைவல்ல’ என்றும், ‘அவர்களை மிருகத்தனமாக நடத்துவதே இழிவானது’ என்றும், “பறையரை, பரையின் (அதாவது ஆதிசக்தி முத்துமாரியின்) மக்களென்றும் பொருள் சொல்வதுண்டு” என்றும் விளக்கமாகக் கூறுகிறார் பாரதியார். தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவதரித்த வள்ளுவர் ஜாதி, பறையர்களில் ஓர் உட்பிரிவு என்பதைப் பெருமையுடன் குறிப்பிடும் பாரதியார், “வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மெய்சிலிர்க்க முரசறைகிறார்.
இதேபோல் பெண்ணடிமைத்தனத்தைச் சாடும் பாரதியார், நீதிநெறிகளையும், ஆன்மிகத்தையும் போதிக்கும் பெண்பாற்புலவர் ஔவையாரைக் கொண்டாடுகிறார்.
‘சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?’ என்று கேட்டு, ஞானத்தின் நிறைவே தெய்வீக நிலை என்பதை உணர்த்துகிறார். புதிய ஆத்திசூடியில் தெய்வம் நீயென்றுணர் என்று உபநிஷதத்தின் உட்கருத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறார். மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளும், இயற்கையும் ஆண்டவனே என்ற ஒப்பற்ற பாரதீய மெய்ஞானக் கருத்தை, “காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம் நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்” என்று வண்ணமுறப் பாடியுள்ளார். இதே கருத்தை “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் உன் தெய்வ லீலையன்றோ” என்ற பாடலில் கூறி, அனைத்திலும் இறைநிலையைக் காணும் அனுபூதியை போதிக்கிறார்.
ஹிந்து மதத்திலே ஒரே தெய்வத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும்போது, அதன் உட்கருத்தை உணராமல், இறை வடிவில் ஒன்றை மட்டுமே தெய்வம் என்று கருதுகின்ற போக்கை பாரதியார் சாடியுள்ளார். அறிவே தெய்வம் என்ற கவிதையில், “வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று வேதம் புகன்றிடுமே ஆங்கோர் வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென வேதம் அறியாதே” என்கிறார். உண்மைக் கருத்தைக் கூறாமல், மனிதர்களை மயக்க புதுப்புது மதங்களை உற்பத்தி செய்யும் மனிதரைப் பார்த்து அதே கவிதையில், “மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்து பல கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை காட்டவும் வல்லீரோ?” என்று வினவுகிறார்.
சரி, பின்னர் யாரைத் தொழுவது? இந்தக் கேள்விக்கு இதே தலைப்பில், அதாவது ‘யாரைத் தொழுவது?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் பாரதியார். “பல தேவராக (தெய்வங்களாக) வணங்காமல் ஒரே மூர்த்தியாக (உருவமாக) தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. ஆதலால் வீர சைவன், வீர வைஷ்ணவன் இவர்களுடைய உபஸானை வேத விரோதமில்லை. இதர தெய்வங்களை விஷயம் தெரியாமல் பழித்தால், அதுதான் வேத விரோதம்” என்கிறார் பாரதியார். இதே கட்டுரையில், “வேத புராணங்களில் சொல்லப்படும் மூர்த்திகளெல்லாம் ஒரே பரமாத்மாவின் கலைகள் (அம்சங்கள்) என்பதை ஹிந்துக்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது” என்றும் அறிவுறுத்துகிறார்.
இதேபோல் கோவில் எதற்காக என்பதை ‘இனி’ என்ற தலைப்பிலான கட்டுரையில் விளக்குகிறார். “கடவுள் எங்கும் இருக்கிறாரே, எல்லாம் கடவுள்தானே, ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ, செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் (ஒற்றுமை) ஏற்படுவதற்காக” என்கிறார் பாரதியார். அதே கட்டுரையில், “கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?” என்றும் கேள்வி கேட்கிறார்.
“கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது. இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து – ‘தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. உன்னுடைய ஆத்மாவும், உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை – எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக” என்கிறார் பாரதியார். இதனைவிட கோவில் வழிபாட்டுக்கான விளக்கத்தை எளிதாகவும், உறுதியாகவும் யாரேனும் சொல்ல இயலுமா?
ஆண்- பெண் பேதத்தை உடைக்கும் விதத்தில் இதே கட்டுரையில் அவர் கூறியுள்ள ஆன்மீகக் கருத்துகள், தினசரி பாலியல் பலாத்காரக் கொடுமை நிகழும் இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் படித்துப் பின்பற்றப்பட வேண்டியவை.
“கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்கிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் (வெளியே தெரியாமல்) இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
“ஆண் தெய்வமெல்லாம் நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ, சக்தி உன் மனைவி; விஷ்ணு நீ, லக்ஷ்மி உன் மனைவி; பிரம்மா நீ, ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையில் இருந்து மனிதரைத் தேவ நிலையில் கொண்டுசேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்களாம்”
-என்கிறார்.
இதை பூசாரிகள் மறைக்கிறார்கள் என்றும் “கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புபவரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பதைப் போல நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள்” என்று போலி ஆன்மீகவாதிகள் தொடர்பாக எச்சரிக்கிறார் பாரதியார்.
வேதமும், கோவில்களும் மனிதர்களை தெய்வீக நிலைக்கு உயர்த்துவதற்காக என்பதை விளக்கி, அவற்றை சிலர் தங்கள் வயிற்றுப் பிழைப்புகாகக் கெடுத்துவிட்டார்கள் என்பதையும் கூறி அந்த நிலையைத் திருத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற பாரதி மிகப் பெரிய கர்ம யோகி அல்லவா?
‘பாரத ஜாதி’ என்ற கட்டுரையில், “கிறிஸ்தவர்களாயினும் பார்ஸிகளாயினும் மகம்மதியராயினும், எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி, பிரிக்க முடியாதது, அழிவில்லாதது. இதற்கு ஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆரிய ஸம்பத்து அதாவது ஆரியரின் (நமது மூதாதையரின்) அறிவும் அந்த அறிவின் பலன்களும்” என்றுரைக்கும் பாரதியார், “அந்த ஆரிய ஸம்பத்திலே (செல்வத்திலே) துருப்பிடிக்க இடம் கொடுத்தால் பாரத ஜாதியை செல் அரித்துவிடும்” என்றும் எச்சரிக்கிறார்.
‘அனந்த சக்தி’ என்ற மற்றொரு கட்டுரையில், “புராதன ஸம்பிரதாயமென்பதால் மட்டுமே ஒன்று பொய்யாகிவிட மாட்டாது, புதியதென்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யாகக் கொண்டுவிடுதலும் பிழை. ஆராய்ந்து, அனுபவத்தால் பார்க்குமிடத்தேதான் ஒரு விஷயத்தின் மெய்ம்மையும் பொய்ம்மையும் விளங்கும்” என்கிறார் பாரதியார். இதுவன்றோ மெய்யான பகுத்தறிவு!
பாரதி மிகப் பெரிய கர்மயோகி என்பதுற்கு, அவர் எழுதியுள்ள பகவத் கீதை முன்னுரையே மிகப் பெரிய சான்று. கீதைக்கான அந்த முன்னுரையே தனியொரு நூல் போலத் திகழும் மகத்துவம் கொண்டது. அந்த முன்னுரையின் இரண்டாம் அத்தியாயத்தில், “வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ சூக்தம் சொல்கிறது இஃது எல்லாம் கடவுள் என்று. இந்தக் கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடைவன் என்கிறார்” என பாரதி மொழிகிறார். “மனிதன் சர்வ துக்கங்களில் இருந்தும் விடுபடும் வழியைப் போதிப்பதே பகவத் கீதை நூலின் முதல் கருத்து” என்றுரைக்கிறார். “தொழில் செய் (கடமையைச் செய்) என்று மட்டுமே கிருஷ்ணர் கூறவில்லை, பற்று நீக்கித் தொழில் செய்- இதுதான் கீதையின் முக்கிய பாடம்” என்றும் எடுத்துரைக்கிறார்.
முன்னுரையின் 9-ஆவது அத்தியாயத்தில் கீதையின் ரகசியத்தை விண்டுரைக்கிறார் பாரதியார். “துரியோதனாதிகள் (துரியோதனன் உள்ளிட்டோர்) காமம், குரோதம், சோம்பல், மடமை, மறதி, கவலை, துயரம், பயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா, ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்தப் பாவ சிந்தனைகளைக் கொன்றழிக்குமாறு ஜீவாத்மாவுக்கு பரமாத்மா போதிப்பதே கீதை” என்கிறார். முன்னுரையின் 12-ஆவது அத்தியாயத்தில் துறவு மாத்திரமே மோக்ஷத்துக்கு வழியில்லை. இல்லறமும் ஏற்றதே என்று கீதை கூறுகிறது என்பதை பல்வேறு வாதங்களைக் கூறி பாரதியார் நிறுவியிருப்பது அவரது ஞானத்துக்கும் மேதமைக்கும் சான்று.
“எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். ஸர்வமிதம் பிரஹ்ம – உலகமெல்லாம் கடவுள் மயம் என்பதே வேதத்தின் கொள்கை. இங்ஙனமாயின், வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் புஜித்துக்கொண்டு (நுகர்ந்துகொண்டு), கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு, ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழியா? அல்லது காட்டிலேபோய், உடலை விழலாக வற்றடித்து மடிந்தும், புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜந்துகளுக்கு இரையாய் மடிந்தும், கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா? சூரியனைக் காணவில்லையென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுதலை ஒக்குமன்றோ, ஒருவன் கடவுளைக் காண வேண்டி, காடுகளிலும் இருண்ட முழைகளிலும் புகுந்து வாழ்தல்? “வேதகாலத்திலே இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது. வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்துகொண்டு மனைவி, மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக அக்காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பல கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ள வழக்கமாக நடைபெற்று வந்தது”
– என்கிறார் பாரதியார். இதன்மூலம் ‘இல்லறமல்லது நல்லறமில்லை’ என்பதை எடுத்துச் சொல்லி, பகவத் கீதை அனைவரையும் துறவறம் பூணச் சொல்லவில்லை, இல்லறத்திலும் முறையாக வாழ்ந்து மோட்சம் அடையலாம் என்பதையே போதிக்கிறது என்று நிறுவுகிறார்.
இறுதியாக தமது பகவத் கீதையின் முன்னுரையை இவ்வாறு நிறைவு செய்கிறார் – “உலகமெலாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை, அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன. நன்மைகள் செய்தற்கும், எய்துதற்கும் உரியன. சரணாகதியால் – கடவுளிடம் தீராத, மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவன்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால் விடுதலை அடைவீர்கள். சத்திய வீரத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மையை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது” என்று அற்புதமாக எடுத்துரைக்கிறார் பாரதியார்.
ஆன்மாவுக்கு ஆண்- பெண் பேதமில்லை என்பதை அவரைப்போல புரட்சிகரமாக யாரும் சொன்னதில்லை. இறைவனை வணங்கும் அடியார்களும் ஆழ்வார்களும் தாம் வணங்கும் பரமாத்மாவாகிய கடவுளை ஆணாகவும், ஜீவாத்மாவாகிய தங்களைப் பெண்களாகவும் கருதி பாடல்களை இயற்றி வழிபட்டுள்ளனர். உயர்ந்த ஆன்மாவாகிய பரமாத்மா ஆண், தாழ்ந்த ஆன்மாவாகிய ஜீவாத்மா பெண் என்பது அவர்களை அறியாமல் ஊறிப்போன நினைப்பு. ஆனால், பாரதியோ தாழ்ந்த ஆன்மாவாகிய ஜீவாத்மாவை ஆணாகவும், உயர்ந்த ஆன்மாவாகிய பரமாத்மாவை பெண்ணாகவும் கொண்டு, தனது இஷ்ட தெய்வங்களில் ஒன்றாகிய கண்ணனை கண்ணம்மாவாக்கி பாடல்கள் புனைந்துள்ளார். ஆன்மாவுக்கு உயர்வு தாழ்வோ, பாலின பேதமோ இல்லை என்பதையும் அற்புதமாய் அறிவுறுத்தியுள்ளார். அவரது கண்ணன் பாட்டுகளைப் போலவே கண்ணம்மா பாட்டுகளும் சாகாவரம் பெற்றவை.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று தொடங்கி யேசு கிறிஸ்து குறித்து கவிதை பாடியும், யேசு கிறிஸ்துவின் வார்த்தை, சிலுவை என்று கட்டுரைகளை எழுதியும், இதேபோல் அல்லா அல்லா அல்லா என்று கவிதை பாடியும், இஸ்லாத்தின் மகிமை, முஹம்மது நபி குறித்து சொற்பொழிவாற்றியும் கட்டுரை வரைந்தும் ஹிந்து தர்மத்தின் அடிப்படைக் குணமாகிய சமதர்ம சமபாவம் என்கிற நல்லிணக்கத்தை வாழ்ந்து காட்டியர் பாரதி.
ஜாதி, மத வித்தியாசம் பாராட்டிய அக்காலத்தில், முகம்மதியர் ஒருவரின் டீக்கடைக்கு முன்பு இருக்கை போட்டு அமர்ந்து அக்கடையின் தேநீரை அருந்தி பட்டவர்த்தனமாக ஜாதி, மதப் பாகுபாடுகளை உடைத்தெறிந்தவர். அதேநேரத்தில் மனிதர்களை ஏமாற்றியோ, பலவந்தப்படுத்தியோ கட்டாய மதமாற்றம் செய்வதையும், மதத்தின் பெயரிலான அட்டூழியங்களையும் அவர் சாடுவதற்குத் தயங்கியதில்லை. இதற்கு ஓர் உதாரணம், கிறிஸ்தவராக மதம் மாறிய தமது நண்பன் சுரேந்திரநாத் ஆர்யாவுக்கு அவர் எழுதிய கடிதம்.
பாரதியின் மேதமைக்கும் ஞானத்துக்கும் மற்றோர் சிறந்த எடுத்துக்காட்டு, அவரது ‘ஞானரதம்’ என்ற குறுநாவல். இதில் ஆன்மிகத் தத்துவங்களை மட்டுமல்ல, மிகச் சிறந்த சமூக, வாழ்வியல் கருத்துகளையும் பாரதியார் நகைச்சுவையாகவும், நளினமாகவும் விளக்கியிருக்கிறார். அவரது ஞான ரதத்தில் நாமும் ஏறிப் பயணிப்பது சுகானுபவம், வாழ்வில் உய்வதற்கான உபாயம்.
பாரதி ஓர் தீர்க்கதரிசி. பாரதம் பிரிவினைக்கு ஆட்படும் என்பதை முன்பே உணர்ந்ததைப் போல “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதனை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என்று பாடியுள்ளார். இதேபோல் சீனர்கள் நமக்குத் தொல்லை கொடுக்கக் கூடியவர்கள் என்பதை மற்றொரு பாடலில், “சீனத்தரைப் போல்பல தீங்கிழைப் பாரோ?” என்ற கேள்வி வரிகளால் உணர்த்தியுள்ளார். “காசியில் புலவர் செப்பிடும் உரைதனை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று வானொலி குறித்தும், “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று வானவியல் ஆய்வு குறித்தும் அக்காலத்திலேயே பாடியுள்ளார். “வங்கத்துள் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”, “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”, “வெள்ளிப் பனிமலை மீது உலாவுவோம், அடிமேலைக் கடல் முழுவதும் கப்பல் விடுவோம்” என்பவையெல்லாம் பாரத தேசமென்று நாம் தோள் கொட்டுவதற்காக, நமது எதிர்காலத்துக்காக அவர் இட்டுள்ள கட்டளைகள்.
‘ஜனவகுப்பு’ என்ற கட்டுரையில் அவர் நமக்கு நேரடியாக இட்டுள்ள கட்டளையைக் காண்போம்…
“மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரிகம் வந்து சேர்ந்திருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும். முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சியிருக்க, பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும்.... அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு (தீர்வு). எல்லா மனிதருக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்து நீக்ரோவருக்கும் – சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித்தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு..... அன்புண்டானால் இன்பமுண்டு என்று புத்த பகவான் கண்டுபிடித்துச் சொன்னார்.... அன்பு கொள்கையில் இருந்தால் போதாது, செய்கையில் இருக்க வேண்டும்”
-என்கிறார் பாரதி.
பாரதியார் ஓர் வினோதக் கலவை. அவரிடம் பாரதீய மெய்யியல் தத்துவங்கள் அனைத்தும் இணைந்து சமரச ஓடையாகப் பிரவாகிப்பதைக் காணலாம். அவர் மாயையை ஏற்காத அத்வைதி, வழிபடு கடவுளை வலியுறுத்தாத விசிஷ்டாத்வைதி, சக்திக்கு சரிபாதி அளித்த சைவர், கண்ணனையை கண்ணம்மாவாக்கிய வைஷ்ணவர், தாந்திரீகம் பேசாத சாக்தர், பழைமையைப் பேணுகின்ற புரட்சிவாதி, புதுமையை வரவேற்கும் மரபியல்வாதி, இறைவனை உணர்த்தும் சோஷலிஸவாதி, உலகை வெறுக்காத சித்தர், இவற்றையெல்லாம் தாண்டி ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் யுகபுருஷர். ஆகையால் மகாகவி பாரதி, அன்னை பாரத நாடு அண்மைக்காலத்தில் நமக்காக ஈன்றெடுத்த மாபெரும் கர்மயோகி என்பதை உணர்ந்து, அவரது வழியில் நடப்போம்.
$$$