பாரதி புலவன் மட்டுமல்ல

-ச.சண்முகநாதன்

மகாகவி பாரதியின் நினைவுதின (செப். 11) பதிவு இது.

"வல்லமை தாராயோ 
இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே"

-பாரதியின் 39 வருட வாழ்க்கையை எடுத்துச் சொல்ல அவன் எழுதிய இந்த இரண்டு வரிகள் போதும். 

“நான்  கேட்ட வரங்களை அருள்வதில் உனக்கென்ன தடை?” என்று கடவுளிடம் தோழமையுடன் கேட்கும் பாரதி, ஆழ்வார்களின் நீட்சி.

படுத்த படுக்கையாக இருந்த பொழுதும், இறப்பதற்கு இரண்டு மணி நேரம் வரையிலும் தனக்கு அசெளகர்யம் என்று நம்பவில்லை பாரதி. விசாரிக்க வந்தவர்களிடம் “யாருக்கு உடம்பு சரியில்லை?” என்று கடிந்து கொண்டவன். அவன் சஞ்சரித்த ஞானவெளி நம்மில் இருந்து வெகு உயரத்தில்.

எல்லாவற்றிலும் மின்னல் வேகம் பாரதி. பூமியில் வாழ்ந்தது 38 வருடங்கள் 9 மாதங்கள். 

பூவுடல் நீங்கியது பின்னிரவு 1.30. 

உடல் சிதையேறியது 8 மணிக்கு. 

அவன் உயிர் இல்லாத உடல் இந்த பூமியில் இருந்தது வெறும் 6.30 மணிகள் மட்டும்.

இறைவன் தமிழருக்கு செய்த முக்கியமான இரண்டு வரங்கள்,  கம்பனையும் பாரதியையும் நமக்கு அளித்தது. 

எட்டயபுரத்தில் பிறந்தவன், தமிழை எட்டா உயரத்துக்கு எடுத்துச் சென்றவன். 

“செய்யுங்கவிதை பராசக்தியாலே செயப்படுங்காண்” என்று சக்தியால் எல்லாம் நடக்கிறது என்று பக்தியுடன் பேசுவான்.   “கண்ணன் திருவடி எண்ணுக மனமே” என்று மனதுக்கு கட்டளையிடுவான்.  “பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்”  என்று தன் நன்னெஞ்சுக்கு ஞானவழி காண்பிப்பான்.

அவன் நமக்கு குரு.

அவன் நினைத்திருந்தால் அரசகவியாய் இருந்து அரசனின் சிகையழகைப் பாடி சில்லறை பார்த்திருக்கலாம். அவன் பூமிக்கு வந்தது வயிறு நிரப்ப அல்ல,  தன் கவியால்  இந்தப் புவியை நிரப்பி ஞானம் அளிக்க வந்தவன்

சரஸ்வதி தன்னுடைய நாவில் குடிகொண்டதால்  நரஸ்துதி தவிர்த்தவன் பாரதி.

வறுமையில் வாடியவன் அல்லன் அவன். வறுமையை செழிப்போடு, தன்னுடன் வைத்துக் கொண்டவன் பாரதி. 

ஒட்டிய தேகத்தை வைத்துக்கொண்டு  ‘கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்’ என்று துணிவு கொண்டு  ‘காலனை காலால் உதைப்பேன்’ என்று நெஞ்சில் வீரம் கொண்டவன். காலன் பாரதியின் உயிர் பற்றும் முன் முதலில் அவன் கால் பற்றி இருப்பான்,  ‘உதைத்து விடாதே பாரதி’ என்று. 

உப்பு, புளி பற்றிய சின்னக் கவலைகள் தன்னை தின்னத்தகாதென்று அவற்றை இறைவனை பார்க்கச்சொல்லி விட்டு, பெரிதினும் பெரிது கேட்டவன் பாரதி. 

ஒருமுறை, கடையத்தில், ஏழைக் குழந்தைகள் பசியாற வேப்பங்காயை உண்ணுவது கண்டு “பகவான் சிருஷ்டி பொருட்கள் யாவும் அமிர்தம். வேப்பங்காயும் அப்படியே” என்று சொல்லி அன்று முதல் தன் நாவின்பத்தைத் துறந்தவன் பாரதி. 

தமிழ்ப்  பேச்சை வாள் வீச்சென்று மாற்றியவன் அவன். அதனால் தான் அவன் இறந்த பின்னும் அவன் எழுத்தை தடை செய்தது  பிரிட்டிஷ் அரசு.

இன்று தமிழில் செய்யப்படும் இலக்கியம், அறச்சீற்றம், காதல் கவிதை அனைத்திற்கும் ஆதார சுருதி பாரதி.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்  போல்,
வள்ளுவர் போல், இளங்கோவைப்  போல்,
எங்கள் எட்டயபுரத்து பாரதிபோல் 
பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை!
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

எங்கள் எட்டயபுரத்து பாரதிபோலும் பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை!

அவன் புலவன் மட்டும் அல்ல, புரட்சியாளன்.

$$$

Leave a comment