இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 

-கருவாபுரிச் சிறுவன் 

‘இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற வரிகளை மையக்கருத்தாக வைத்து பல அருளாளர்கள் பாடல்கள் பல புனைந்து நம் பரம்பொருளின் திருவடிக்கு சாற்றி மகிழ்ந்துள்ளார்கள். அத்தகைய பாடல்கள் ஒரு சிலவற்றை கோடிட்டுக் காட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது. 

எப்போதும் இறையும் மறவாது நீர் 
முப்போதும் பிரமன் தொழ நின்றவன் 
செப்போதும் பொன்னின் மேனிச் சிவனவன் 
அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆருரனே!

   -திருநாவுக்கரசு சுவாமிகள்

மாணிக்க வாசகரின் மணி வாக்கு: 

மாணிக்கவாசக சுவாமிகள்  சைவ சமயக்குரவர்களில் ஒருவரும், திருவாசகம் தந்த திருவாளரும், திருவாதவூரில் அவதரித்தவர் என்ற சிறப்புக்குரியவரும் ஆவார். 

இப்பெருமான் அருளிச் செய்த திருநூல்களில் ஒன்று திருவாசகம், மற்றொன்று திருக்கோவையார். இவை இரண்டும் சிவபெருமான் திருக்கரம் வழுத்த எழுதிய தெய்வ நூல்கள் என்ற பெருமையினை உடையவை. 

திருவாசகத்தில் முதலாவதாக இடம் பெற்ற சிவபுராணத்தில் இரண்டாவதாக வரும் வரி, “இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க”  என்பதாகும். 

இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாமல் ஆனந்தக்கண்ணீர் வடித்தார் வெளிநாட்டவரான போப் என சொல்லுவார் பாரதியன்பர் தஞ்சை டி.என்.ஆர் அவர்கள். 

‘இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற வரிகளை மையக்கருத்தாக வைத்து பல அருளாளர்கள் பாடல்கள் பல புனைந்து நம் பரம்பொருளின் திருவடிக்கு சாற்றி மகிழ்ந்துள்ளார்கள். அத்தகைய பாடல்கள் ஒரு சிலவற்றை கோடிட்டுக் காட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது. 

சமரசம் தந்த பாடல்: 

திருநெல்வேலியில்  சைவக்குடும்பத்தில் பிறந்தவரும், வழக்கறிஞருமான கா.சு.பிள்ளையவர்கள் தனது எழுத்து, சொல்லாற்றலாலும்  ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் ‘திருநான்மறை ஆராய்ச்சி’ என்னும் தலைப்பில் தனித்தமிழை ஏற்றியும் போற்றியும் வந்தார்கள். அதை ஒன்றும் யாவரும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் வட மொழியில் உள்ள வேதாகமங்கள் யாவும் போலியனவை. சமயக்குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகராகிய  நால்வர் பெருமக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்ற கருத்துக்களை உள்ளமைத்து கட்டுரைகளை தீட்டி வந்தார் கா.சு.பிள்ளையவர்கள்.

இதனால் வேத, ஆகம, திருமுறை, சாஸ்திர, பிரபந்த, புராண, நீதி இலக்கியங்கள் வழியே ஒழுகி வாழும் அன்றைய காலகட்ட அன்பர்கள் பலருக்கும்  மனம் வெதும்பியது. இருப்பினும் அவர் நம்மவர் என்ற முறையில்  சன்மார்க்க வழியில்   கா.சு.பிள்ளையவர்கள் எழுதிய கட்டுரைக்கு முறையாக மறுப்பு தெரிவித்தார்கள். அது பின்னாளில் தனி நுாலாக வெளிவந்தது.

 வாழ்வில் இன்பம்-துன்பம், இரவு-பகல், ஏற்றம்-இறக்கம், உயர்வு-தாழ்வு போன்ற எந்த நிலையில் வந்தாலும், எப்போதும் இறைவன் மீது சிந்தை இருக்க வேண்டும் என்பது அருளாளர்கள் கண்ட துணிபு.  அக்கருத்தை வலியுறுத்தும், திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதியில் இருந்து ஒரு பாடலை எடுத்தாண்டு,  நிறைவுரைப் பகுதியில் தந்து இரு தரப்பினரையும் அமைதி கொள்ளச் செய்கிறார். திருச்சிராப்பள்ளி மா.சாம்பசிவன் பிள்ளையவர்கள்.  இதோ அப்பாடல்…

இருக்கினும் நிற்கும் போதும் 
    இரவு கண் துயிலும் போதும் 
பொருக்கென நடக்கும் போதும் 
    பொருந்தியே ஊண் துய்க்கும் போதும் 
முருக்கிதழ் கனிவாயாரை 
   முயங்கி நெஞ்சழியும் போதும் 
திருக்களா வுடைய நம்பா 
    சிந்தையுன் பாலா தாமே. 

புவியரசராக இருந்தாலும் கவியரசராகவும் விளங்கியவர் எங்கள் மன்னர். அப்பிரபு துறவறத்தில் இல்லறம் கண்டவர். இல்லறத்தில் துறவறம் வென்றவர். சற்குரு நாதராக திகழும்  வரதுங்க ராம பாண்டிய மன்னரின் ஞான குல குருநாதர்கள் சொல்லிக் கொடுத்த வேத ஆகம உபநிடதக் கருத்துக்களை யெல்லாம் ஒன்றாக திரட்டி கரிவலம் வந்த நல்லுார் மக்களுக்கு மட்டும் அல்லாது சைவ உலகிற்கு வழங்கிய அருள் கொடையே கருவையந்தாதிகள் என்பனவாகும். 

இத்திருக்கருத்தை அப்படியே அச்சரம் பிசகாமல் அம்பிகையின் அருள் வெள்ளத்தில் முழ்கிய  திருக்கடையூர் சுப்பிரமணியம் என்னும் அபிராமிபட்டர் பின்னாளில் எடுத்தாளுகிறார் . அதை நாமும் படித்து அன்னையின் அருள் மழையில் நனைவோமா…

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் 
  நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; 
 எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! 
 உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா 
  முத்தி ஆனந்தமே!

சிவக்குடும்பத்தின் கடைக்குட்டி செல்லப்பிள்ளையாம்  முருகப்பெருமானின் அதிதீவிர பக்தராம் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் அவர்கள் ஒரு பாடலைப் பாடி மேற்கண்ட அருளாளர் பாடலின் கருத்துச் சாரத்தை  அவரது பாணியில்  மாறாமல் பாடி, புத்தொளி விளக்கம் தருகிறார். படித்துத் தான் பாருங்களேன். 

எழும் போது வேலும் மயிலும் என்பேன், எழுந்தே மகிழ்ந்து 
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன், தொழுது உருகி 
அழும் போதும் வேலும் மயிலும் என்பேன், அடியேன் உடலம் 
விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

சதா நேரமும் அதாவது காலையில் இருந்து இரவு வரை எந்தச் செயலை செய்தாலும் எண்ணம், சொல், செயல் யாவும்  இறைவன் மீது இருக்க வேண்டும் என்பதே அருளாளர்கள் நமக்கு சொல்லும் அழகிய படிப்பினையாகும். 

ஒவ்வொரு அன்பர்களும் திரிகரண சுத்தியுடன் இறைவனை கர்ம அனுஷ்டான நியமத்துடன் வழிபட்டால் என்ன கிடைக்கும் என்பதை கிராமத்தான் சொன்னால் கேட்க மாட்டார்கள்; பட்டினத்துக்காரர் சொன்னால் கேட்பார்கள். அவரும் என்ன சொல்லுகிறார் என்று தான் பாருங்களேன்.

காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி 
ஒடே எடுத்தென்ன உள்ளன்பில்லாதவர்க் கோங்குவிண்ணோர் 
நாடே யிடை மருதீசருக்கு நல்லன்பர் நாரியர் பால் 
வீடேயிருப்பினும் மெய்ஞான வீட்டின்பம் மேவுவரே. 

அருளாளர்களின் அமுத மொழி:

ஹிந்து மதத்தின் இரு பெரும் சமயங்களில் ஒன்றான வைணவ ஆச்சாரியர்களான ஆழ்வார் பெருமக்களில் ஒருவர் திருமழிசையாழ்வார். இப்பெருமான் அருளிய பிரபந்தங்களில் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் இரண்டும் குறிப்பிடத்தக்கன.அதில்,  

மகாலட்சுமியை மார்பில் தாங்கிய ஸ்ரீமன் நாராயணனை அடியேன் தாயின் வயிற்றில் கருக்கொண்டு உருவான காலம் முதல் எம்மை காத்து ரட்சித்துக் கொண்டு இருக்கிறான். அவன் நின்றும் இருந்தும் கிடந்தும் அருள் நிலையை என்னெஞ்சில் வைத்து மறவாது அவனுக்கு அடிமை பூண்டு இருக்கிறேன் எங்ஙனம் யான் அவனை மறவேன் என்கிறார். என்னே ஆழ்வாரின் அமுத மொழி! நாமும் பருகினால் நலம் பெறலாம். 

என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத்தே வைத்து 
நின்றும் இருந்தும் நெடுமாலை - என்றும் 
திருவிருந்த மார்பன் சீர்தரனுக்களாய் 
கருவிருந்த நாள் முதலாகக் காப்பு.

ஆழ்வார் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அப்பரடிகளும் , கருவுற்று இருந்து உன்கழலே நினைந்தேன், கருப்புவியில் தெருவில் புகுந்தேன் என்றும், கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு  உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன் என்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய தேவார வரிகள் நம் சிந்தனைக்குரியவை.  

மேலும், இதே கருத்தினை நம் மாணிக்க வாசக சுவாமிகளும் ‛உருத்தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னிக் கருத்து இருத்தி’ என்று பாடுகிறார்.  

திருமழிசையாழ்வாருக்கு முன்னோடியான பூத்தாழ்வார் தனது இரண்டாம் திருவந்தாதியில் கணப்பொழுது கூட உன்னை மறக்க மாட்டேன். இப்பிறவி மட்டுமல்ல, எப்பிறவி எடுத்தாலும் நீயே என் வெற்றி நாயகன் என்கிறார். 

என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும் 
நின்று நினைப்பொழியா நீர்மையால் - வென்றி 
அடலாழி கொண்ட அறிவனே இன்பக் 
கடலாழி நீயருளிக் காண்.

நல்ல அறநெறி நன்னெறி கருத்துக்களை யார் சொன்னாலும் அதை அப்படியே கேட்டுக் கொள்ளுங்கள்.  நமது  முதலமைச்சர் பெருமகனார் சொல்லிய விதத்தோடு ஏற்புடையதா… என்று  எண்ணிப் பாருங்கள். அதில் சற்றேனும் ஏறுக்கு மாறாக இருந்தால் அதை எள்ளளவு கூட ஏற்றுக் கொள்ள வேண்டாம். 

ஆனால் அது நமது  முதலமைச்சர் வாக்கிற்கு இணங்க இருக்குமாயின் அக் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். அதை சிரத்தின் மீது வைத்து கொண்டாடுங்கள். 

நமது சற்குருவில் ஒருவராகிய முதலமைச்சர் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் சாக்கிய நாயனார் புராணத்தில் பாடும் பாடலில் மேற்கண்ட அருளாளர்களின் கருத்துக்கள் யாவும் பொதிந்து காணப்படுகிறது.    

எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர்ச்சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே
துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்.

நிறைவாக, 

வரதுங்கராம பாண்டியர், அபிராமிப்பட்டர், பாம்பன் சுவாமிகள், பட்டினத்து அடிகளார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், திருநாவுக்கரசு நாயனார் , மாணிக்கவாசக சுவாமிகள், தெய்வச்சேக்கிழார் ஆகியோரின் அருள் வாக்கில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது…

வாழ்வில் இடைவிடாது  இறைநாமத்தினை நினைக்க வேண்டும், சொல்ல வேண்டும், எழுத வேண்டும். அதனால் அவர்களும் அவர்களது சந்ததிகளும் அபிரிவிதமான நற்பலன் கிடைக்கும் என்பதே அவர்கள் நமக்கு அறிவுறுத்தும் அருளுரையாகும். 

அவ்வாறு  ஒருவர் தோய்ந்தால்… 

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் 
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் 

-காரைக்கால் அம்மையார் விரும்பி பெற்ற வரங்களைப் பெறும் நிலைக்கு உயருவார்கள் என்று கூறி இச்சிந்தனையை நிறைவு செய்கிறோம். 

அஞ்சலி 

எழும் போதும் ராம ராம என்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும் போதும் ராம ராம என்பேன்  தொழுதே உருகி 
அழும் போதும் ராம ராம என்பேன் அடியேன உடலம் 
விழும் பொழுதும் ராம ராம என்பேன் சேவை விரைந்தருளே!

அடிக்கினும் ராம ராம என்பேன் அரவம் துரத்திக் 
கடிக்கினும் ராம ராம என்பேன் கருங்காலன் எனைப் 
பிடிக்கினும் ராம ராம என்பேன் பெருந்தீயில் மண்டை 
வெடிக்கினும் ராம ராம என்பேன் என்முன் வந்தருளே!

திருச்சிற்றம்பலம் 

பாரத மாதாவிற்கு ஜே

வாழ்க பாரதம்… வளர்க மணித்திரு நாடு!

$$$ 

Leave a comment