-டாக்டர் சசிகிரண் உமாகாந்த்
தர்மம் வெல்ல நீண்ட காலமாகலாம். ஏனெனில் அது கர்மா , காலம், சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுசரித்தாக வேண்டும். உடனடித் தீர்வு என்பது அதற்குக் கிடையாது … தர்மம் எப்போதும் தோற்பதில்லை. அதன் வலிமை வேகத்தில் இல்லை; உறுதியில் இருக்கிறது. எழும்போது அது நீதியை மட்டும் நிலை நாட்டுவதில்லை. மாறாக சமுதாயத்தின் ஆன்மாவை நிலை நிறுத்துகிறது.

அறம் / தர்மம் அல்லது எது சரியானதோ அது வெற்றி பெற காலதாமதம் ஆகிறது.. எல்லா கலாச்சாரத்திலும் தர்மம் மெதுவாகதான் வெற்றி பெறுவதாக இருக்கிறது. இது ஏன் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. இந்தத் தாமதம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அல்லது தாமதம் நியாயமற்றது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
மக்கள் கஷ்டப்படுகிறார்கள். தவறு செய்பவர்கள் வளமோடு வாழ்கிறார்கள். எட்டாக் கனியாக நீதி இருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா?
ஹிந்து தத்துவங்களும் மற்ற மரபுகளில் உள்ள கண்ணோட்டங்களும் இதைப்பற்றி வேறு விதமாகச் சொல்கின்றன. தாமதம் என்று தெரிவது பல நேரங்களில் சரியான காலமாகவும் மற்றும் தார்மீக சமநிலைக்கு அவசியமான வழியாகவும் பார்க்கப்படுகிறது.
தர்மம் காலத்திற்கும் சூழலுக்கும் கட்டுப்பட்டதே!
பகவத் கீதையில் (4.7-8 ) ஸ்ரீ கிருஷ்ணர் , ‘ஓ பாரதா , எப்போதெல்லாம் தர்மம் தளர்ந்து அதர்மம் வலுப் பெறுகிறதோ அப்போதெல்லாம் நான் பிறப்பெடுக்கிறேன். நல்லவர்களைப் பாதுகாத்து , தீமை செய்பவர்களை ஒடுக்கி, அறத்தை மீண்டும் மீண்டும் நிலை நாட்டுகிறேன்’ என்று உறுதிப்படத் தெரிவிக்கிறார்.
ஆனால் உடனடியாகச் செயல்படுவதாக அவர் சொல்லவில்லை. காரண காரியம் முறைமை போலவே காலத்திற்கும் ஏற்புடைய சூழலுக்கும் உட்பட்டே செயல்படுகிறார். ராமாயணத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றவுடன், ராமபிரான் அவனுடன் சண்டையிடவில்லை. மாறாக சூழல் பக்குவப்பட வேண்டி இருந்தது. கூட்டாளிகளைச் சேர்க்க வேண்டியிருந்தது. சில விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. தர்மம் உறுதியாகச் செயல்பட காலமும் கனிந்து வர வேண்டி இருந்தது.
அதுபோலவே மகாபாரதத்திலும், நீண்ட காலம் வனவாசம், தலைமறைவு வாழ்க்கை, அவமானங்கள், அறச்சோதனைகள் பலவற்றைக் கடந்த பிறகே பாண்டவர்கள் மாபெரும் போருக்குப் புறப்பட்டனர். இதெல்லாம் காலதாமதம் அல்ல. மாறாக தர்மம் உறுதியாகச் செயல்படுவதற்கு முன்பு தேவைப்படும் தயாரிப்புகள்.
இதுபோன்றே பிற மரபுகளிலும் நிகழ்வுகள் உள்ளன. விவிலியத்தில் இஸ்ரவேலர்கள் பல காலம் கட்டுப்பட்டுக் கிடந்த பிறகு விடுதலை பெற்றனர். அவர்களது பிரார்த்தனைகளுக்கு செவி கொடுக்கப்பட்டது . ஆனால் மக்கள் தயாராகவும், மோசஸ் தலைவராக உருவெடுக்கும் சூழல் வந்த பிறகுதான் அது நடந்தது. விரிவான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது காலதாமதம் அல்ல மாறாக சரியான காலம்.
மனித சுதந்திரமும் வினையும் வெளிப்பட வேண்டும்
ஹிந்து தத்துவம் வினைக் கொள்கையை வலியுறுத்துகிறது. அதன்படி நோக்கம், சொல், செயல், ஆகியவை இந்த பிறப்பிலோ அல்லது இனிவரும் பிறப்பிலோ அதற்குரிய விளைவுகளை ஏற்படுத்தும். தர்மமும் இந்த தார்மீக முறைமைக்குக் கட்டுப்பட்டே செயல்படுகிறது. தர்மம் மனித விருப்பங்களை / தேர்வுகளை மீறி செயல்படுவதில்லை. மாறாக அதற்கு ஒத்திசைந்தே வினையாற்றுகிறது.
பல்வேறு செயல்களின் தொடர்ச்சியாகவும் தொகுப்பாகவும் தான் அதர்மம் தலை தூக்குகிறது. ஆரம்பத்திலேயே அது ஒழிக்கப்படுமானால் ,அவ்வாறு செய்வது, செயல்களின் இயல்பான சங்கிலித் தொடர்ச்சியை தடை செய்வதாகி விடும்.
எடுத்துக்காட்டாக , கம்சனின் கொடுங்கோல் ஆட்சி மதுராவில் பற்பல ஆண்டுகள் நீடித்திருந்தது. அவனது முடிவு பற்றி முன்னறிவிப்பு இருந்த போதிலும் அவனது வீழ்ச்சி விரைவாக நிகழவில்லை. மக்கள் துன்பப் பட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பெடுத்து , அரண்மனையிலிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் வளர்க்கப்பட்டார். இரண்டு தசாப்தங்கள் கழிந்த பிறகுதான் கம்சன் எதிர்கொள்ளப்பட்டான் . இந்த நீண்ட காத்திருப்பு அலட்சியத்தினால் விளைந்தது அல்ல. கர்மா வெளிப்படுவதற்கான உரிய காலம் அது.
அதுபோலவே, ராவணனின் இலங்கை செல்வச் செழிப்பில் இருந்தது. ஆனால் ஆன்மிக ரீதியாக சமனற்ற நிலை நிலவியது . அதை சில திருத்தங்களால் சரி செய்ய முடியாது. ஒட்டுமொத்தமாக மறு நிர்மாணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ராமபிரான் வனவாசம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு படை திரட்டி, பெரும் போர் நிக்ழ்ந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு தர்மம் நிலைநாட்டப்பட்டது.
மகாபாரதத்தில் துரியோதனனின் சூழ்ச்சிகரமான, அநீதியான ஆட்சி பல ஆண்டுகள் நீடித்தது. திரௌபதிக்கு அவமானம் போன்ற செயல்கள் , பாண்டவர்கள் நாடு நீங்குதல் போன்றவை சமுதாயத்தின் தார்மீகத்தை அழித்துவிட்டன. அஸ்தினாபுரத்தின் மக்கள் தினந்தினம் அநீதியை அனுபவித்தனர். இருந்தாலும் சூழல் பக்குவப்பட்ட பிறகே அறம் செயல்பட்டது. அது தலைமையை மட்டுமே சரி செய்வதற்கு பதிலாக ஒட்டுமொத்த அதிகார அமைப்பையே மாற்றியது.
தர்மம் சோதிக்கப்படும், திணிக்கப் படாது
தர்மம் எப்போதும் தன்னை உடனடியாக நிறுவும் என்றால், தனி மனித முயற்சிகளுக்கும் , தார்மீக தைரியத்திற்கும், வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு நல்வழியைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிகத் துணிவுக்கும் இடமில்லாமல் போய்விடும். தர்மம் திணிக்கப்படலாகாது. அறிவுக் கூர்மையுடன் அறவழியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது அதர்மம் என்பது தர்மத்தை சோதிப்பதற்கான , அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகிறது.
இராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரானின் செயல்கள் மட்டுமில்லை. அதில் பரதனின் துறவு , லட்சுமணனின் விசுவாசம் , சீதா பிராட்டியின் பொறுமை, அனுமனின் அர்ப்பணிப்பு, விபீஷணரின் தார்மிகத் துணிவு ஆகியவையும் பதிவாகியுள்ளன. ஒவ்வொருவரும் கஷ்டமான சூழ்நிலையில் தர்மத்தை உறுதியாக வெளிப்படுத்தி, தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்களது கஷ்டங்களை சிறியதாகக் குறுக்கி விட்டால் கதையில் தர்மத்தின் கனம் காணாமல் போய்விடும்.
மற்ற மரபுகளிலும் இது எதிரொலிப்பதைப் பார்க்கலாம். கிறிஸ்தவத்தில் இயேசு துன்பங்களை ஏற்றார்; தானே போய் ஏற்றுக் கொண்டார். தியாகம், மன்னிப்பு , நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக அவர் இருந்தார். உடனடியாக நீதி நிலை நாட்டப்படும் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, பொறுமையாக அநீதியை எதிர்கொள்ளச் சொன்னார்.
இஸ்லாத்தில் முகமது நபியும் ஆரம்பகால முஸ்லிம்களும் ஒரு தசாப்தமாக மெக்காவில் துன்பங்களை ஏற்றுக் கொண்டனர் . அதன் பிறகு மதினாவில் நீதி நிலைநாட்டப்பட்டது. இதெல்லாம் அதே விஷயத்தைத் தான் வலியுறுத்துகின்றன. அதாவது , தர்மமானது மனித முயற்சிகளால் உணரப்பட வேண்டுமேயன்றி மேலிருந்து (இறை) திணிப்பாக இருக்கக் கூடாது.
துன்பங்கள் விழிப்புணர்வுகான வழி
துன்பங்கள் , அவை கஷ்டம் தருவதாக இருந்தாலும் , பல நேரங்களில் மாற்றத்துக்கு வழி வகுக்கின்றன. அவை தனி மனிதரிடத்திலும் சமுதாயத்திலும் தார்மிக விழிப்புணர்வை வேகமாக ஏற்படுத்துகின்றன. ஸ்ரீ ராமபிரான் வனவாசம் போகாமல் இருந்தால், அவரது வாழ்க்கை இளவரசரது கடமைகளைச் செய்வது என்ற வட்டத்துக்குள்ளேயே இருந்திருக்கும். வனத்தில் அரசவசதிகள் இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்ததால்தான் அவரது ஆன்மிக பலம் உறுதிப்பட்டது.
பகவத் கீதை, செயல் என்றால் என்ன, பற்றில்லாமல் எப்படிச் செயல்படுவது, பக்தி ஆகியவற்றை நமக்கு நன்கு விளக்கும் வழிகாட்டியாக இன்றும் விளங்குகிறது. ஆனால், துரியோதனனின் வரம்பற்ற ஆணவம், தொடர்ந்து செய்த அதர்மங்கள் இல்லாவிட்டால் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?. குருச்சேத்திரம் போர்க்களம் தானே பகவத் கீதை நமக்கு கிடைக்கக் காரணம்?
சீக்கிய மரபில் குரு அர்ஜுன் தேவரும் குரு தேஜ் பகதூரும் துன்பங்களை ஏற்றார்கள் . பலவீனமாக இருந்ததால் அதற்கு ஆட்படவில்லை. மாறாக உண்மைக்கு சாட்சியாக இருப்பதற்காக துன்பங்களை அனுபவித்தனர்.
அதுபோலவே , நீண்ட காலமாக அன்னியர் ஆட்சியில் இந்தியா திட்டமிட்ட ரீதியில் நசுக்கப்பட்டது. முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் மதரீதியாக ஒடுக்குதல்கள், கட்டாய மதமாற்றங்கள், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சங்கள், சுரண்டல்கள் ஆகியவை பற்றி பல ஆவணங்கள் பதிவாகி உள்ளன. 1947 இல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து திடீரென விடுதலை கிடைக்கவில்லை . பல நூற்றாண்டுகள் துன்பப்பட்டதால், தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ராணி லட்சுமி பாய் முதல் கோகலே, காந்தி, படேல் என எண்ணற்றோர் பல தலைமுறைகளாக தொடர்ந்து அன்னியர் ஆட்சியை எதிர்த்துப் போராடியதன் பிறகே சுதந்திரம் கிடைத்தது.
உலக அரங்கிலும் கூட , நாஜிக்களின் பேரழிவு ஆட்சிக்கு – ஹிட்லரின் ஆட்சியில் அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் – பிறகு வெறுப்புணர்வின் ஆபத்துக்கள் அம்பலமாகின. அது மனித உரிமை என்ற விஷயத்தை உலகம் ஒப்புக்கொள்ள காரணமாக அமைந்தது.
அண்மையில் , காஷ்மீரில் இருந்து பிராமணர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். திபெத்திய புத்த சமயத்தினரின் போராட்டங்கள், (ஈரானில்) யசீதி மக்களின் இனப்படுகொலை ஆகியவை எல்லாம் துன்பங்கள் தொடர்வதையும் அவை நம்முடைய ஒட்டுமொத்த மனசாட்சிக்கு சவால் விடுவதாக இருப்பதையும் பார்க்கிறோம்.
கம்சன், ராவணன் ,ஹிட்லர், முசோலினி போன்ற தனி மனிதர்கள் பற்றியும் ஆழ்ந்து பார்க்கலாம் . அவர்களது வாழ்க்கை அதர்மத்தின் அடையாளமாக இருந்ததால் தர்மம் வெளிப்பட தூண்டுதலாக அமைந்தன. ஒருவேளை, சமுதாயத்தை விழிப்புறச் செய்யவும் உறங்கிக் கொண்டிருந்த சமுதாயத்தின் தார்மிக சக்தியைத் தூண்டி விடவும் அவர்களது வாழ்க்கை பயன்பட்டதோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த வகையில் பார்த்தால், ஒரு முரண்பட்ட வகையில், அவர்கள் நேர்முறையாகப் பங்களித்துள்ளார்கள் என்றும் கருதலாம். அவர்கள் ஏற்படுத்திய துன்பங்கள் நோயை அடையாளம் காணவும் நோயைச் சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் வழி வகுத்தன.
நேரம் சீரானதல்ல
மனிதர்களின் பொறுமையின்மை என்ற கண் கொண்டு பார்க்கும் போது நீதி கால தாமதமாக வருவது போலத் தெரிகிறது. பிரபஞ்சப் பார்வையில் காலம் என்பது நேர்கோடாகவும் இல்லை, ஒரே போல் சீராகவும் இல்லை.
ஹிந்து பிரபஞ்சவியலின்படி, மனித கால அளவீடுகளில் இருந்து முற்றிலும் வேறானதொரு அளவீட்டின்படி வானுலக தேவர்கள் செயல்படுகிறார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவரின் ஒரு நாள் என்பது மனித காலக் கணக்கீட்டின்படி 4.32 பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு கோடி) ஆண்டுகள். தேவர்களின் ஒரு நாள் என்பது 360 மனித ஆண்டுகள். மனிதர்களின் வாழ்க்கைக் காலமே தேவ கணக்கில் ஒரு ஷணம்தான்.
சூரிய மண்டலத்தில் ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு கால அளவைக் கொண்டுள்ளன. புதன் கிரகத்தில் ஓராண்டு என்பது பூமியில் 88 நாட்கள். நெப்டியூன் கிரகத்தில் ஓராண்டு என்பது பூமியில் 165 ஆண்டுகள். சுக்கிரனில் ஒரு நாள் என்பது நமக்கு ஓராண்டை விட அதிகம். பூமியில் நாம் தசாப்தம் (பத்தாண்டுகள்) என்பது புதனில் ஒரு வாழ்நாளை விட அதிகம். அல்லது நெப்டியூனில் ஓராண்டின் சிறு பகுதி. இந்த வேறுபாடுகள் காலம் என்பது ஒரே சீரான அளவானது அல்ல என்பதை நினைவூட்டுகின்றன.
பூமியிலும் கூட வெவ்வேறு உயிரினங்கள் காலத்தை வெவ்வேறு விதமாக உணர்கின்றன. பறக்கும் எறும்பின் (பூச்சியின்) வாழ்நாள், ஒரு மனிதநாளில் பாதி கூட கிடையாது, வெறும் சில மணி நேரம்தான். ஆனால் அந்தப் பூச்சிக்கு அந்த சில மணி நேரங்கள் என்பது குறுகியதோ அல்லது முழுமையற்றதோ கிடையாது. மாறாக ஒரு முழுமையான வாழ்க்கைக் காலம்.
தாமதம் என்று நாம் கருதுவது , பிரபஞ்ச விதிகளின்படி , சரியான நேரமாக இருக்கலாம். காத்திருப்பதை நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும். காலம் வெவ்வேறு வேகத்தில் செயல்படும் உலகில் – ஆன்மிக காலம், உடலியல் / உயிரியல் காலம் , பிரபஞ்ச காலம் – நீதி எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பது முக்கியமல்ல; உண்மையில் அது எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. தர்மமானது நமது உடனடிப் புரிதலுக்கு அப்பாற்பட்ட கால கணக்கின்படி செயல்படுகிறது.
முடிவு : தாமதமாக இருக்கலாம் ஆனால் மறுக்கப்படவில்லை
தர்மம் வெல்ல நீண்ட காலமாகலாம். ஏனெனில் அது கர்மா , காலம், சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுசரித்தாக வேண்டும். உடனடித் தீர்வு என்பது அதற்குக் கிடையாது . தனிமனிதத் தேர்வுகளும் தெய்வீக ஒத்திசைவும் சேர்ந்து தர்மத்தை வெளிப்படுத்துகின்றன. இதற்கு பொருள், இன்றைய மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதல்ல.
மக்களை சிந்தித்துச் செயலாற்றும்படி, அநீதிக்கு எதிராகப் போராடும்படி , தாங்கள் உயர்வாகக் கருதும் மதிப்பீடுகளைப் பாதுகாக்கும்படி – அக்கறையற்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று – தர்மம் அறைகூவல் விடுக்கிறது. அர்ஜுனனை, ‘களத்தில் இருந்து ஓட வேண்டாம். நன்மை தீமைகளைப் பகுத்தாய்ந்து, அகக் கட்டுப்பாட்டுடன் எழுச்சி கொண்டு செயல்படு’ என்று ஸ்ரீ கிருஷ்ணன் நெறிப்படுத்தினார்.
தர்மம் தாமதமாகலாம் ஆனால் அது எப்போதும் தோற்பதில்லை. அதன் வலிமை வேகத்தில் இல்லை; உறுதியில் இருக்கிறது. எழும்போது அது நீதியை மட்டும் நிலை நாட்டுவதில்லை. மாறாக சமுதாயத்தின் ஆன்மாவை நிலை நிறுத்துகிறது.
குறிப்பு: கட்டுரையாளர், கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள டாக்டர் டிஎம்ஏ பை மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருக்கிறார். நன்றி: சன்டே கார்டியன் தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$