-வ.மு.முரளி
எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு…
-என்று பாடுவார் மகாகவி பாரதி. மாபெரும் இலக்கியக் கருவூலம் கொண்ட நம் தாய்த்தமிழுக்கு மணிமகுடமாகத் திகழ்வது கம்ப ராமாயணம். அதை இயற்றிய ’புகழ்க் கம்பன்’ நமது மூதாதை என்பது என்றும் நமக்கு பெருமிதம் அளிப்பது.
பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடைய பெரும் காப்பியம், கம்ப ராமாயணம். இதில் 10,589 பாடல்கள் உள்ளன. இவை பெரும்பாலும் விருத்தப் பாக்களால் ஆனவை. கலித்துறை, வெண்பா போன்ற யாப்பு வடிவங்களும் உண்டு. படிக்க எளிய வடிவிலும், சிறப்பான எதுகை, மோனை, தாள லயத்துடனும் இருக்கும் இப்பாடல்கள் 800 ஆண்டுகள் கழிந்தும் தமிழின் இளமைக்கு அழகூட்டுகின்றன.
தமிழின் காப்பியக் காலம் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை ஐம்பெரும் காப்ப்யங்கள் எனப்படுகின்றன. இவற்றில் வளையாபதியும் குண்டலகேசியும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.
இதனை அடியொற்றி சமணப் புலவர்களால் இயற்றப்பட்ட உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவை ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படுகின்றன. ஆயினும் காப்பியச் சுவை இவற்றில் குறைவு.
மூவாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி கொண்ட தமிழிலக்கியப் பிரவாகத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் காப்பியச் சுவையை வழங்கியவர் கம்பர். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தை மூலநூலாகக் கொண்டு, அதனை தமிழ் நிலத்துக்கேற்ற வகையில் படைத்தது தான் கம்பரின் சாதனை.
இந்நூல் ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேறியபோது, தமிழ் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டது. சமயக் காப்பியங்கள் எனப்படும் சைவ, வைணவ காப்பியங்களும் பக்தி இயக்கப் பாடல்களும் தமிழகத்தில் பொ.யு. 800 முதல் பொ.யு. 1300 வரை தமிழுக்கு புதிய வரவாகின. அதில் ரத்தினமாக ஒளிர்வது கம்ப ராமாயணம் தான்.
அயோத்தி மன்னன் ராமனின் கதை இந்த நாடு முழுவதும் தொல் மூதாதையின் கதையாகவும் இதிகாசமாகவும் வழங்கி வந்தது. அதனை மக்கள் விரும்பும் காப்பியமாக வடிப்பதும், அதுவும் மிகுந்த கட்டுப்பாடு கொண்ட செய்யுள் நடையில் இயற்றுவதும் இமாலயப் பணி. எனவேதான் மகாகவி பாரதி, தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் கம்பனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன்போல, இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை! உண்மை- வெறும் புகழ்ச்சியில்லை!
தனது ஸ்வசரிதையில் (கனவு) கூட, பாரதப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நமது முன்னோர்களை அறியாமல் இருக்கிறார்களே என்ற கவலையைப் பதிவு செய்கிறார். அதிலும் கம்பனையே முதலில் வைத்து, மிகவும் உயர்வாகப் பதிவு செய்கிறார்.
கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்…
-என்று எழுதிச் செல்லும் பாரதியின் வரிகளில் நுண்மையாகக் குறிக்கப்படுவது, கம்பன் ஒரு மிகச் சிறந்த மானுடன் என்பது.
இதில் இன்னொரு செய்தியும் உண்டு. கம்பனும் காளிதாசனும் காப்பியப் புலவர்கள். காளிதாசனோ கம்பனுக்கு 1300 ஆண்டுகள் முற்பட்டவர்; சமஸ்கிருத மொழியில் காப்பியங்களின் தாதையாக வணங்கப்படுபவர். அவரது சாகுந்தலமும் மேகதூதமும் குமார சம்பவமும் பாரத இலக்கிய வானில் மின்னும் நட்சத்திரங்கள். எனினும் அவற்றை ‘உயர் கவிதை’ என்ற சட்டகத்திற்குள் மட்டுமே காணும் பாரதி, அவருக்கு முன்னதாக கம்பனை வைத்து, அதுவும் கம்பனின் மானுட சிந்தனையைப் பாராட்டும் விதமாக இப்பாடல் வரிகளை அமைத்திருப்பது கவனிக்கத் தக்கது.
கம்பன் கவிதைகளில் தோய்ந்த பாரதி, அவற்றிலுள்ள மானுடநேயம் மிக்க கருத்துகளால் ஆட்பட்டதன் வெளிப்பாடே இந்த வரிகள் எனில் மிகையல்ல. மானுடருக்கு வழிகாட்ட இறைவனே ராமனாக அவதரித்தான் என்பது நமது நம்பிக்கை. அவரது வாழ்க்கையை எழுத வந்த கவிஞரின் – ராமகாதையைக் கூற வந்த கம்பரின் – எழுத்தாணி வேறு வகையில் சென்றிருக்க இயலாது என்பது உண்மை. ஆயினும், சிறந்த ரத்தினமாயினும் அதை மிளிரச் செய்வது பொன்னாபரணம் தானே? அந்த வகையில் கம்ப ராமாயணம், “ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்” என்று வாழ்ந்தவராம் நடையில் நின்றுயர் நாயகனுக்கு புகழ் கூட்டியது; தமிழின் இலக்கியப் பொலிவுக்கு மேலும் மெருகூட்டியது; பக்தி இலக்கியத்தின் சிகரமாய் வழிகாட்டியது.
கம்பன் படைப்பில் எதிர் நாயகர்களான இராவணன், வாலி போன்றவர்களும் கூட அவர்களின் சிறந்த இயல்பை வெளிப்படுத்துவது ஒருபுறம்; இறைவனே மானுட அவதாரம் எடுத்தாலும் மானுடர்க்கே உரித்தான குணநலன்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்பதைக் காட்டுவதாக ராமனின் வாழ்வைக் காட்டுவது மறுபுறம். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக அயோத்தியைக் காட்டுவது ஒருபுறம்; எல்லா வளங்களும் இருந்தும் நல்லரசன் இல்லாத நாடு மண்ணாகும் என்று இலங்கையைக் காட்டுவது மறுபுறம்.
சொல்லின்பம், சுவையின்பம், பொருள் புதிது கொண்ட பாடல்களால் தமிழன்னைக்கு மாலை சூட்டியவர் கம்ப நாட்டாழ்வார். அவரது அடியொற்றி, ராமாயணக் காப்பியங்களை விளக்கியும் விரித்தும் பல நூல்கள் எழுந்த தமிழகம் இது.
எனினும் நூறாண்டுக்கு முன், பகுத்தறிவு என்ற பெயரில் வானை நோக்கிக் காறி உமிழும் ஒரு சிந்தனைப் போக்கு தமிழகத்தில் தலை தூக்கியது. நமது சமய நம்பிக்கைகளும் பக்தி இலக்கியங்களும் ஏளனம் செய்யப்பட்டன. மாயமான் மாரீசன் போன்ற அந்தக் கருத்தாக்கம் தமிழகத்தின் பண்பாட்டில் பெரும் சேதம் விளைவித்தது; இன்றும் நாசங்கள் தொடர்கின்றன.
தீரா விடமான இந்த சிந்தனைப் போக்கின் ஓர் அவலம்தான் திமுக நிறுவனரான சி.என்.அண்ணாதுரையின் கம்பரசம். அவரது மனதின் ஆழத்தில் படிந்திருந்த அழுக்கை வெளிப்படுத்தும் வடிகாலாகவே அந்நூலைக் காணலாம். அதைத் தொடர்ந்து தீரா விட அரசியல் மேடைகளில், ஆரிய ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்ற பெயர்களில் கம்ப ராமாயணம் அவதூறு செய்யப்பட்டது.
அப்போது, தமிழகத்தின் மனசாட்சியாக, கம்பனின் புகழை நாட்டவும் ராமனின் மாட்சியை தமிழகத்தில் மீட்கவும் ஒரு சான்றோர் முயன்றார். அவர்தான் கம்பன் அடிப்பொடி சா.கணேசன். அவர் உருவாக்கிய கம்பன் கழகம், கம்ப ராமாயணத்தின் சிறப்பையும் ராமபக்தியையும் மக்களிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டது. அதற்கு மக்கள் காட்டிய ஆதரவால் மாநிலமெங்கும் கம்பன் கழகங்கள் தோன்றின. அதன் பலனாக, தீரா விட அரசியல்வாதிகள் சற்றே பம்மினர்; அவர்களின் அவதூறு பிரசாரங்கள் வலுவிழந்தன. இது வரலாறு.
அப்படிப்பட்ட கம்பன் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில், ‘நானும் கூட’ (Me Too) பெருமைக்குரிய திரைக்கவிஞர் ஒருவர் அண்மையில் பேசிய பேச்சு, கம்பனின் அன்பர்களையும் ராமபக்தர்களையும் புண்படுத்தி இருக்கிறது. 08.08.2025 அன்று நிகழ்ந்த சென்னை கம்பன் கழக பொன்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அந்தக் கவிஞர் மனம் போன போக்கில் பேசியதுடன், ‘காசில் கொற்றத்து’ இராமனை சித்த சுவாதீனம் இல்லாதவர் என்று நகையாடினார். தீரா விடம் பாய்ந்த உள்ளத்தின் மாசு அங்கே வெளிப்பட்டது.
அப்போது மேடையிலும் அரங்கிலும் வீற்றிருந்த அறிஞர் பெருமக்களும், கம்பனின் அன்பர்களும் நாகரிகம் கருதியோ, வேறு காரணத்தாலோ அமைதி காத்தனர். எனினும் அந்த விழாவின் நிறைவு நாளில் இலங்கையைச் சார்ந்தவரும் கம்பன் புகழ் பரப்பும் பணியில் முன்னணியில் இருப்பவருமான கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் தகுந்த பதில் அளித்தார். என்ன செய்த போதும், ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞர் செய்த பெரும் பிழை மாயவில்லை.
இந்தக் கட்டுரை எழுதும் இன்றைய நாள் வரை, கடந்த 12 நாட்களில் தமிழகத்தில் இந்த வக்கிரப் பேச்சை கம்பன் கழக நிர்வாகிகள் எவரும் கண்டித்ததாகத் தெரியவில்லை. தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரியவர்கள் எவரிடமிருந்தும் கண்டனங்கள் எழும்பவில்லை. இது தீரா விடக் கயவரின் கொடுமையை விட வேதனை கொள்ளச் செய்கிறது.
இதனிடையே, ராமனையும் கம்பனையும் இழிவு படுத்திய அந்தக் கவிஞருக்கு மிகவும் நாகரிகமாக முகநூலில் பகிரங்கக் கடிதம் எழுதினார் கம்பவாரிதி. ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞர் அதைக் கண்ட பிறகு பெயரளவுக்கேனும் மன்னிப்பு கேட்பார் என்று அவர் எதிர்பார்த்திருத்தல் கூடும். ஆனால், பண்பாடு என்பது பதர்களுக்கு இல்லையே?,
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல்
-என்று கூறுகிறது திருக்குறளின் 196 வது குறட்பா. இதன் பொருள், பயனற்ற சொற்களைப் பேசித் திரிபவனை மனிதன் என்று சொல்லாமல், மக்களில் பதர் என்றே சொல்ல வேண்டும் என்பதுதான்.
எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.
‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞர் இன்றைய திமுக அரசின் அரசவைப் புலவர் போலக் கருதப்படுபவர் என்பதால்தான் இந்த மயான அமைதி என்று நினைத்து விடாதீர்கள். முந்தைய அதிமுக ஆட்சியின் போது (2018இல்) சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியாரை இதே கவிஞர் இச்சகம் பேசியபோதும் தமிழர் என்று பீற்றிக் கொள்ளும் பெரும்பாலோர் தலை கவிழ்ந்துதான் இருந்தனர். அப்போதேனும் எங்கோ ஒரு மூலையில் சிறு அதிருப்திக் குரல்கள் ஒலித்தன. இன்று அதையும் கேட்க முடியவில்லை. அதுதான் வேறுபாடு.
சுயமரியாதையும் பண்பாட்டுப் பெருமிதமும் அற்றவர்கள் மிகுந்திருக்கும் சூழல் காரணமாகவே நம் தாய்த்தமிழின் பயன்பாடு அருகி வருகிறது. சமூகத்தின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியவர்கள்- அரசின் சிறு வெகுமதிக்காகவோ, அல்லது கும்பல் வன்முறைக்கு அஞ்சியோ, தன்னம்பிக்கை இல்லாததனாலோ அமைதி காப்பது, அநீதி என்று தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது, பேரவலம். இதனால்தான் அற்பப் பதர்கள் இலக்கிய சிம்மாசனம் ஏறுகின்றன. இது தமிழுக்கோ, தமிழகத்திற்கோ நல்லதல்ல.
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,
ஏமாப்போம், பிணி அறியோம், பணிவோம் அல்லோம்,
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
-என்று பாடிய அப்பரின் பூமி இது.
‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதிட்ட நக்கீரரின் மண் இது.
எனவே, கம்பன் கழகங்கள் நன்கறிந்த கம்பனின் சிறு கதையை சுட்டிக்காட்டி நமது கட்டுரையை நிறைவு செய்கிறோம். புரிய வேண்டியவர்களுக்குப் புரியட்டும்! எழுத வேண்டியவர்கள் எழுதட்டும்!
கவிச்சக்கரவர்த்தி கம்பன் குலோத்துங்க சோழனின் ஆதரவில் வாழ்ந்த காலம். ஏதோ ஒரு காரணத்தால் மன்னன் கம்பனை அவமானப்படுத்தி விடுகிறான். ஆட்சியாளன் என்ற ஆணவத்தில் பேசிய மன்னனைக் கண்டு வெகுண்ட தமிழ்ப் புலவன் கம்பர் பாடிய பாடல் இன்றும் தனிப்பாடலாக நிலைத்திருக்கிறது. இதோ அந்தப் பாடல்:
மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதுவோ?
உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்? - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
$$$