-கருவாபுரிச் சிறுவன்

கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு தேடி மால் செய்த கோயில் திருவிராமேச்சுரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே.
சமயக்குரவர்களில் ஒருவராம், எங்கள் தலைவனாம், தவயோகியாம், பொதுவுடமையின் நாயகராம் நம் திருநாவுக்கரசு சுவாமிகள் என்கிற அப்பர் பிரான், “ராமபிரான் பூஜித்த ராமநாதனை நாடு. நல்வழியைத் தேடு” என்கிறார்.
அப்பிரபு காட்டிய வழியைப் பின்பற்றினால் நாத்திகர்கள் உட்பட யாவரே ஆயினும் உய்வு என்னும் நற்கதி பெறலாம்.
மேலும், ஹிந்து மதத்திலுள்ள எல்லா சமய உட்பிரிவுகளையும் இணைக்கும் ஒரு ஒப்பற்ற தேசிய காப்பியம் ராமாயணம் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
அனைத்து தர்மங்களையும் வலியுறுத்தும் ராமாயணமும் மகாபாரதமும் இத்தேசத்தின் இதிகாசங்களாகத் திகழ்கின்றன. இவை இரண்டும் தர்மநெறியை போதிப்பன; நல்லறத்தை வலியுறுத்துவன; ஆன்மாக்களை இறைபக்தியில் நிலைத்து நிற்கச் செய்வன என்பதை சிந்தையில் இருத்துவோம்.
ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு, ராமபிரான் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை உண்டு. இனியும் அது தொடரும். இதனை அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இச்சிறிய சிந்தனை தொடர்கிறது.
ஸ்ரீ ராமபிரான் கோயில்கள்
எங்கெல்லாம் சிவபெருமானுக்கு ஆலயங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் அக்கோயிலுக்கு நிருதி திக்கில் பெருமாளுக்கு கோயில் கண்டிப்பாக இருக்கும்.
இப்படி தென்னிந்தியாவின் பல்வேறு நதிக்கரையோரங்களிலும், ஊரின் மையப்பகுதிகளிலும் உள்ள சிவாலயங்களுக்கு வலப்புற தென்மேற்கு மூலையில் வைணவக்கோயில் அமைந்திருப்பதை பெரும்பாலும் கிராமங்கள் தோறும் காணலாம்.
அவை யாவும் மங்களாசாசனம் பெற்ற தலமாகவோ, அபிமானத் தலமாகவோ, ஆச்சாரிய மூர்த்தியால் சிறப்பு பெற்றதாக கொள்வதற்கானது அல்ல. அவை யாவும் அவ்வூர் மக்களின் ஈஸ்வர ராம பக்தியினால் மன்னர்கள் உதவியுடன் எழுந்த கோயில்கள் ஆகும். அப்படிப்பட்ட கோயில்களை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை.
108 வைணவ திருத்தலங்களில் பல தலங்கள் ராமாயணம் தொடர்புடையவை: அவற்றுள் முக்கியமானதை மட்டும் இங்கு நினைவு கூர்வதை சிந்தையில் கொள்வோமாக.
ஹிந்து மதத்தின் இரு பெரும் சமயங்களில் ஒன்றான வைணவத்தின் முதல் திருப்பதியாம் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீராமபிரான் உள்ளிட்ட இஷ்வாகு குலத்தினர் வழிபட்ட திருவுருவம் என்பதை யாவரும் மறந்து விடக்கூடாது.
விபீஷணாழ்வருக்கு அன்பளிப்பாக ராமபிரான் தந்த ஸ்ரீ ரங்கநாதர் விக்கிரகத்தை கணபதியின் திருவருளால் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார் என்பது புராண வரலாறு.
9 வது திருப்பதி என்னும் திருக்கவித்தலம். வாயு மைந்தனாகிய அனுமனால் பூஜிக்கப்பட்ட ராமபிரான் கோயில்.
10 வது திருப்பதி என்னும் திருப்புள்ளம் பூதங்குடி ஸ்ரீராமபிரான் ஜடாயுவுக்கு மோட்சம் கொடுத்த பின் ஓய்வு எடுக்கும் திருத்தலம்.
17 வது திருப்பதி என்னும் திருக்கண்ணபுரத்தில் குலசேகர ஆழ்வார் ராமபிரானைப் போற்றிப் பணிகிறார்.
23 வது திருப்பதியாம் திருப்பதியாம் திருவழுந்துாரை தொழுது வணங்கியே கம்பநாட்டாழ்வார் கம்ப ராமாயணம் பாடுகிறார்.
31 வது திருப்பதியாம் திருசெம்பொன் திருக்கோயில், ஸ்ரீராமபிரான் தானம் கொடுத்த பொன்னைக் கொண்டு ஒரு அந்தணர் கட்டிய கோயில்.
57 வது திருப்பதியாம் திருப்புட்குழி, ஸ்ரீராமபிரான் ஜடாயுவுக்கு அருள்புரிந்த திருத்தலம்.
59 வது திருப்பதியாம் திருவள்ளூரில் வீரராகவன் கிடந்த கோலத்தில் அமைந்த திருத்தலம்.
60 வது திருப்பதியாம் திருவல்லிக்கேணியில் ஸ்ரீராமபிரானுக்கு சிறப்பான சந்நிதி உண்டு.
61 வது திருப்பதியாம் திருநீர்மலை, வால்மீகி ஸ்ரீராமபிரானைத் தொழுது வணங்கி திருத்தலமாகும்.
65 வது திருப்பதி, ஸ்ரீராமபிரானின் பூர்வாச்சிரம தலமானஅயோத்தி.
79 வது திருப்பதியாம் திருமூழிக்களம், ஸ்ரீராமபிரான் கோயிலே ஆகும்.
105 வது திருப்பதியாம் திருப்புல்லாணி, ஸ்ரீராமபிரான் கடலின் குறுக்கே பாலம் கட்ட விரும்பி தர்ப்பைப்புல்லின் மீது தவம் இருந்த திருத்தலமாகும்.
இவற்றைத் தவிர ஸ்ரீ ராமபிரான் பெயரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற சிவலிங்கங்கள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தலங்களில் இடம் பெற்ற தலவரலாறுகள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
ராமபிரானின் உற்சவத்திருமேனி
சிலை என்றாலே கொள்ளை அழகு தான். அதிலும் ராமபிரானின் உற்சவத் திருமேனி என்றால் சொல்லவும் வேண்டுமோ?
தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்ச ஷேத்திர தலத்தில் உள்ள ராமபிரானின் சிலைகள் உலகப்புகழ் பெற்றவை.
அவை யாவற்றை நாம் ஒரு முறையாவது அவரவர் வாழ்வில் தரிசனம் செய்ய வேண்டும் என சங்கல்பம் செய்து கொள்வது ஒவ்வொரு ஹிந்து பக்தரின் குறிக்கோளாகும்.
- திருவாரூர்- திருதுறைப்பூண்டி தில்லை விளாகம் கோதண்டராமர் சுவாமி கோயில்
- திருவாரூர்- வடுவூர் கோதண்டராம சுவாமி கோயில்
- திருவாரூர்- குடவாசல் பருத்தியூர் ராமநாதர் கோயில்
- திருவாரூர்- நன்னிலம் முடிகொண்டான் ராமர் கோயில்
- திருவாரூர்- நன்னிலம் அதம்பார் கோதண்டராமர் கோயில்
(தாடகாந்தபுரம், நல்லமான்குடி, வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாடகச்சேரி ஆகிய கிராமங்கள் அதம்பார் தலத்தோடு வரலாற்றுத் தொடர்புடையவை).
கூடுதல் செய்திகள்:
கும்பகோணம் ராமசாமி கோயிலின் ராமாயணச் சித்திரங்கள் மிகவும் புகழ் பெற்றவை என்பது யாவரும் அறிந்ததே.
நாம சங்கீர்த்த மும்மூர்த்திகளான போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மருதநல்லுார் சத்குரு சுவாமிகள், திருவிசநல்லுார் ஸ்ரீதர் அய்யாவாள்; சங்கீத மும்மூர்த்திகளான தியாராஜ பிரம்ம சொரூபம், சியாமளா சாஸ்திரிகள், நாதஜோதி முத்துசாமி தீட்சிதர்; பாபநாசம் சிவன், சீர்காழி அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாகவதர் மற்றும் பல பாவலர்களுடைய இசைப்புலமைகளையும், அவர்களது உண்மையான பக்தி உணர்வினையும் மக்களிடம் வெளிப்படுத்துவதற்கு ராமாயண நிகழ்வுகள் உதவின என்றால் அது மிகையல்ல…
நிறைவாக, எந்த அளவு ராமாயணம் தமிழ்நாட்டில் பரவியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு வடக்கில் இருந்து ஒரு மாராட்டிய எழுத்தாளர் வந்தார்.
பிரசவ வேதனையால் துன்புற்ற ஒரு ஹிந்துப் பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் மூதாட்டி ராமாயணக் கதைகளைச் சொல்லி மனோபலத்தை ஊட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அந்தக் காட்சியைக் கண்டு பிரமித்து நின்றார் அந்த எழுத்தாளர். தன்னுடைய பத்திரிகைகளில் இச்சம்பவத்தை எழுதி ராமாயணத்தின் புகழினை மென்மேலும் பரவச் செய்தார் என சுவாமி ஓங்காரனந்தா அவர்கள் ஒரு சமயம் சொற்பொழிவில் கூறியதை அடியேன் கேட்டிருக்கிறேன்.
கம்ப ராமாயணச் சொற்பொழிவு ஆற்றிய திரு. மு.மு.இஸ்மாயிலுக்கு காஞ்சிப் பெரியவர் பட்டம் வழங்கிப் பாராட்டியதை இத்தமிழகம் மறக்குமோ?
ஸ்ரீராமபிரானின் சிறப்புகளை மற்றொரு தலைப்பில் தொடர்ந்து சிந்திப்போம்….
ஸ்ரீராம ஜெயம்.
ஸ்ரீஆழ்வாராதிகள் திருவடிகளே சரணம்!
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
$$$