விடுதலைப் போரில் அரவிந்தர்- நூல் அறிமுகம்

-வ.மு.முரளி

‘பொருள் புதிது’ இணையதளத்தில் திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதிய வரலாற்றுத் தொடர் அற்புதமான நூலாகி உள்ளது. அதுகுறித்த அறிமுகம் இங்கே...

சுதந்திர இந்தியா உருவாகப் பாடுபட்ட விடுதலை வீரர்களுள் வங்கத்தைச் சார்ந்த மகரிஷி அரவிந்தர்  (1872 – 1950) முக்கியமானவர். புரட்சிவீரராக வாழ்வைத் தொடங்கி, குறுகிய காலத்தில் நாடு முழுவதும் விடுதலை வேட்கையை தீப்போலப் பரப்பியவர் அவர். ஆனால், பின்னாளில் போராட்ட வாழ்விலிருந்து விலகி, ஆன்ம விடுதலைக்கான பயணத்தையும் உலக ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளையும் பாண்டிசேரியில் இருந்தபடி தொடர்ந்தார்.

சிறந்த இயக்க நிர்வாகி, விடுதலைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகவாதி எனப் பன்முகம் கொண்டு இலங்கியவர் மகரிஷி அரவிந்தர். திலகருக்குப் பின் இந்திய சுதந்திரப் போரை வழிநடத்தி இருக்க வேண்டிய மகத்தான ஆளுமையான அரவிந்தர் ஆன்மிக விடுதலை நோக்கி நகர்ந்தது, இறைவன் சித்தம் போலும்.

விடுதலைப் போராட்டக் காலத்தில், தீவிர தேசியவாதிகள் ஒவ்வொருவரும் ஆங்கிலேய அரசால் கொடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். நாட்டு மக்களின் மனம் கவர்ந்த அந்த நாயகர்களை அரசியல்வெளியில் இருந்து அகற்ற அவர்கள் மீது ராஜதுரோகக் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தனர். குறிப்பாக 1905 முதல் 1910 வரையிலான காலகட்டம் ஆங்கிலேய அரசின் மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றிருந்தது.

மிதவாதம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஆங்கிலேய அரசால் மென்மையாகக் கையாளப்பட்ட அதே காலகட்டத்தில் தீவிர தேசியவாதிகள் பலரும் சொல்லொனாக் கொடுமைகளுக்கு ஆளாயினர். பஞ்சாபில் லாலா லஜபதி ராய், மராட்டியத்தில் வீர சாவர்க்கர், பால கங்காதர திலகர், தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, வங்கத்தில் பிபின் சந்திர பால், அரவிந்த கோஷ், பூபேந்திரநாத் தத்தா உள்ளிட்டோர் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளான தலைவர்களுள் முதன்மையானவர்கள்.

அவர்களுள் ரத்தினமாக ஜொலித்தவர் அரவிந்த கோஷ். எனவே அவரை பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கவோ, நாடு கடத்தவோ ஆங்கிலேய அரசு விரும்பியது. எனவே தான். அரவிந்தர் பிரிட்டிஷ் ஆளுகைப் பகுதியான வங்கத்திலிருந்து தப்பி, ஃபிரெஞ்ச் ஆளுகைப் பகுதியான பாண்டிசேரிக்கு தப்பி வந்தார். 1910இல் பாண்டிசேரி சென்ற பிறகான மகரிஷி அரவிந்தரின் வாழ்க்கை முற்றிலும் அகவயத் தேடல் கொண்டதாக மாறிவிட்டது.

அதன் பிறகான அரவிந்தர் ஆன்மிக விடுதலைக்கான மகரிஷியாக உருமாற்றம் அடைந்துவிட்டார். எனவே தான் 1872 முதல் 1910 வரையிலான காலகட்டத்தின் நிகழ்வுகள் மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

அரவிந்தரின் இளமைப்பருவம், சுதந்திரப் போரில் பங்களிப்பு, சிறைவாசம், குடும்பச்சூழல், ஆன்மிகவாதியாக மாற்றம் ஆகியவற்றை இந்நூலில் திருநின்றவூர் ரவிகுமார் நிரல்பட எழுதி இருக்கிறார். ‘பொருள் புதிது’ இணையதளத்தில் அவர் எழுதிய தொடரின் நூல் வடிவம் இது.

அரவிந்தர் தனது பிரிய மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதம், அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை, மகாகவி பாரதி நடத்திய ‘விஜயா’ இதழில் வெளியான அரவிந்தரின் நேர்காணல், அவரது சுதந்திர தின உரை ஆகியனவும், தேவை கருதி இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

“எந்த நாட்டின் இளைஞர்கள் மனதில் கடந்தகாலம் குறித்த பெருமிதம், நிகழ்காலம் குறித்த துக்கம், எதிர்காலம் குறித்த பொற்கனவுகள் உள்ளனவோ, அந்த தேசமே எழுச்சி பெறும்” என்பது மகரிஷி அரவிந்தரின் வாக்கு.

இந்த தேசம் உயர்ந்தோங்குவதற்காக தனது இளமையையும் வாழ்வையும் அர்ப்பணித்த மகத்தான இறைத்தூதர் மகரிஷி அரவிந்தர். அவரது வாக்கு பலிக்க வேண்டுமானால், இந்த தேசம் அவர் கனவு கண்டதுபோல உயர்வடைய வேண்டுமானால், அவரது வரலாறை முதலில் நமது இளைஞர்களும் யுவதிகளும் படிக்க வேண்டும். அதற்கான சிறப்பான முயற்சியே இந்நூல்.

***

நூல் விவரம்:

விடுதலைப் போரில் அரவிந்தர்

-திருநின்றவூர் ரவிகுமார்

224 பக்கங்கள்; விலை: ரூ. 200-

வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், சென்னை.

தொடர்புக்கு: +91 89391 49466

இணையத்தில் வாங்கலாம்…

$$$

Leave a comment